ஆட்டம்: இச்சைகளின் பெரும் கபடி

சு. வேணுகோபாலின் சமீபத்திய குறுநாவலான ஆட்டம் வாசித்தேன். ஒரு நல்ல நாவல் நான்கைந்து நாட்களுக்கு வேறெந்த புத்தகத்தையும் தொட விடாது. மனதை மீண்டும் மீண்டும் கதை மாந்தர்களின் மீதே லயிக்கச் செய்து விடும். தினசரி வாழ்வின் வேறொரு தருணத்துடன் நாவலின் தருணங்கள் மோதி மோதியே புதிய திறப்புகளை உருவாக்கும். சமயங்களில் வாசகனின் அப்ஷர்வேஸன் எழுத்தாளனே எதிர்பாராத கோணங்களில் முட்டி நிற்கும். நினைக்கும்தோறும் புதிய கோணங்களில் பீறிட்டெழக்கூடிய வாழ்தலின் கணக்கற்ற சாத்தியங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்நாவல்.

இச்சைகளின் பெரும்கபடியாட்டமே இந்நாவல். விளையாட்டிற்குத்தான் விதிகள் உண்டு. மானுட இச்சைகளுக்கு இல்லை. காலை வாறி விட கைகோர்த்து காத்திருக்கும் காமத்தின் மாய அரணைத் தாண்டி உப்புக்கோட்டைத் தொட்டுத் திரும்புவது சாமான்யம் அல்ல.

கதையின் நாயகன் வடிவேல், வீரபாண்டி வட்டாரத்திலேயே புகழ்மிக்க கபடி வீரன். எதிர்ப்புகளுக்கிடையே காதல்மணம் செய்து கொண்டு பிழைப்பிற்காக திருப்பூரில் குடித்தனம் செய்கிறான். இரண்டு பிள்ளைகள். கணவனும் மனைவியுமாக வேலைக்குப் போகிறார்கள். மனைவிக்கு இன்னொருவரிடம் தொடுப்பு உருவாகிறது. கதாநாயகன் சுதாரிப்பதற்குள் அவள் தன் காதலனுடன் காணாமல் போய்விடுகிறாள். வேறு வழியில்லாமல் பிள்ளைகளோடு கிராமத்திற்கு திரும்புகிறான். தனக்கு ஏற்பட்ட சரிவை, அவமானத்தை கபடியில் மீண்டும் சாதித்து புகழடைவதன் மூலம் மீட்க முடியுமென நம்புகிறான். கல்லையும் பந்தடித்த இளமை போய் முதுமை முன்னுரை எழுதத் துவங்கிய நாற்பதின் மத்தியில் அவனது முயற்சிகள் மீண்டும் மீண்டும் பொய்த்துப் போகின்றன. அவனது பயிற்சிகளுக்கும், முயற்சிகளுக்கும் நடுவிலான மன ஓட்டமே நாவலாக விரிவடைகிறது.

வேணுகோபாலின் மொழி பிடிபடுவதில்லை என சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் தனிப்பட்ட அபிப்ராயத்தில் வேணுவின் புனைவு மொழி மிக மிகக் கச்சிதமானது. நேரடியானது. விரித்து விரித்து அல்ல வாழ்வோடு ஒட்டிச் செல்லக்கூடிய ஓரிரு வரிகளிலே மனதிற்கு நெருக்கமாகி வரக்கூடியது. வேணு எனும் மகத்தான கலைஞனை உள்வாங்கிக்கொள்ள இலக்கியப் பயிற்சியோ, நுண்ணுணர்வோ எதுவும் தேவையில்லை. வாழ்க்கையைத் தெரிந்திருந்தாலே, அதன் பாடுகளைப் புரிந்திருந்தாலே போதுமானது என்பதென் துணிபு.

சித்தியின் காமத்திற்குப் பொலிகாளையாய் பலியாகிப் போகும் காளையன்; ஒற்றைத் தண்டவாளத்தில் சைக்கிள் ஓட்டும் சாகஸக்காரன் பிரேம்குமாருக்கு சாலையில் நேரிடும் கோர மரணம்; தன் வளர்ச்சியைத் தடுக்க நினைத்த, தன்னை ஒருபோதும் கபடி வீரனாக மனம் ஒப்பி ஏற்றுக்கொள்ளாத வடிவேலையும் ஒரு மகத்தான கபடி வீரனாக தன் முன்னோடியாக மனதில் ஆராதிக்கும் வைரமணி; ஆண்களைத் தன் தினவைத் தீர்க்கும் ஒரு பொருளாக மட்டுமே கருதும் நாகமணி; கோட்டூர்க்காரியின் கள்ளுக்கடை வாழ்க்கைச்சூழல்; முந்தைய கணவனுக்குப் பிறந்த தன் மகளை வருடத்திற்கு ஒருமுறை திருவிழாவில் மட்டுமே காண முடிகிற வடிவேலின் ஆத்தாளின் பரிதவிப்பு; தன் தகப்பனின் நிலையறிந்து அவனை ஒருபோதும் தொந்தரவு செய்யாத குழந்தைகள்; மனைவி ஓடிப்போனதைக் கேலி பேசாத நண்பர்கள், அவமதிக்காத உறவினர்கள், கரும்பு தூளியை தூக்கிக்கொண்டு ஓடும் குறத்தி, மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஓட்டப்பந்தயம் - நாவலெங்கும் விதம் விதமான பாத்திரங்கள், கிளைக்கதைகள்.

எந்த கதாபாத்திரத்தின் மீதும் கோபம் கொள்ள முடியாத கையறு நிலைதான் வாசகனுக்கு. வாழ்வின் விசித்திரங்களுக்குக் காரணமே கிடையாது. எல்லோரும் சூழலின் கைதிகளே. பிள்ளைகளைத் துள்ளத் துடிக்க விட்டு, ஊரே எதிர்க்க தன்னைக் கைப்பிடித்த காதலனையும் பரிதவிக்க விட்டு விட்டு ஓடிய கனகத்தின் மீது கூட எரிச்சல் வரவில்லை. மாறாக வடிவேலின் அம்மா தன் முதற் கணவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் சேர்த்து மாவிளக்குப் போடுவதைப் போல உலகின் எங்கோ ஒரு மூலையில் நெஞ்சு கனத்து விழிகளில் கண்ணீர் கோர்க்க தன் பிள்ளைகளுக்காக கனகமும் மாவிளக்கு போட்டுக்கொண்டோ, முழந்தாழிட்டு ஜெபித்துக்கொண்டோதானே இருப்பாள்?! நாவலெங்கும் ஒரு நாய் தன் குட்டிகளைத் தேடி காடு மேடேங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது. அப்போதுதான் ஈன்ற குட்டிகளை யாரோ ஒரு குட்டி கூட விடாமல் தூக்கிச் சென்றிருப்பர். நாவலெங்கும் கிளைபரப்பியிருக்கிற தாய்மையின் பரிதவிப்பை இந்த நாய் ஊமைவலியாக வாசகனுக்குக் கடத்துகிறது.

நம் சமூக அமைப்பில் ஒரு ஆண்மகன் அடையக்கூடிய அதிகபட்ச அவமதிப்பு அவன் மனைவி இன்னொருவனோடு சென்று விடுவதுதான். அவன் தரப்பு குற்றமென ஒன்று இல்லாத போதும் உலகம் உடனடியாக அவனது ஆண்மையையே சந்தேகிக்கும். வைத்து வாழ வக்கற்ற பேடி என கேலி பேசும். குழந்தைகளின் பிறப்பை சந்தேகிக்கும். அவர்களை முடிந்த மட்டும் சீண்டி ஊனப்படுத்தும். மனைவியைப் பறிகொடுத்த ஒருவன் மீளவே வழியில்லை. இது ஒருவகையென்றால், ஓடிப்போன மனைவி திரும்ப வந்து விட்டால் அது இன்னும் உச்சபட்ச கொடுமை. அவளோடு இன்னொரு வாழ்க்கையும் சாத்தியமில்லை. அதே சமயம் பிள்ளைகளுக்காக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டிய கட்டாயம். ஒருவேளை அப்படி ஏற்றுக்கொண்டால் ஊர்க்காரர்களின் சீண்டல்கள் இன்னும் அதிகமாக இருக்கும். மேலதிகமாக, தனக்கும் கிடைக்குமாவென முயற்சித்தும் பார்ப்பார்கள். ஏங்கே கனகம் திரும்பி வந்து விடுவாளோ என்கிற பதட்டமும் உருவாகிறது. நல்லவேளையாக கனகம் இரண்டாவது முறையாக வடிவேலைக் கொல்லவில்லை.

நாவலில் உக்கிரமான ஒரு கபடிப் போட்டி நடக்கிறது. வடிவேல் ரகசியமாக எடுத்துக்கொண்ட அர்த்த ராத்திரிப் பயிற்சிகள் அவனுக்கு உதவுமா? மகத்தான கபடி வீரனான அவனுடைய அனுபவங்கள் கைகொடுக்குமா? கபடியில் ஜெயித்து தன்னை மறுமணம் செய்ய மறுத்த பெண்ணையும், இழந்த புகழையும் மீட்டுவானா? இறுதிக்காட்சியில் சீட்டின் நுனிக்கு வரும் திரைப்பார்வையாளன் போல. மைதானப் புழுதி கிளம்பி நாசியை அடைய கைகளை உதறிக்கொண்டு வாசகனும் பதட்டத்தோடு பங்கேற்கும் சித்தரிப்பு வல்லமை வேணுகோபாலின் மொழிக்கு இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் நானே பாடிச்சென்றேன். நானே உப்புக்கோட்டைத் தொட்டேன். நானே பாயிண்டுகள் எடுத்தேன். நானே எதிரணியால் சுற்றி வளைக்கப்பட்டு, பார்வையாளர்கள் மத்தியில் தூக்கியெறியப்பட்டேன். "அவரவருக்குத் தெரிந்த விதத்தில் ஆடுகின்றனர்; தெரியாமல் ஆடித் தெரிந்தும் கொள்கின்றனர். ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம்!” எனும் வரிகளோடு அந்த அத்தியாயம் முடிகிறது. மொத்த நாவலையுமே சில வரிகளில் சுருக்குவதென்றால் மேற்கண்ட வரிகள்தாம் நாவல்.

அத்தனைத் தோல்விகளுக்குப் பிறகும், காமத்தின் அலைக்கழிப்புகளுக்குப் பிறகும் வடிவேல் பயிற்சியையும், முயற்சியையும் கைவிடுவதில்லை. இறுதி அத்தியாயத்தின் கடைசி வரிகளில் அவனுக்கு சிறிய பொறி தட்டுகிறது. சோள வியாபாரம் துவக்கினால் என்ன என்று. நாம் நடந்தால் வாழ்வு நம்மோடு நடக்குமெனும் பாதசாரியின் வரிகளைப் போல. அதிர்கின்ற வீணையில் தூசு குந்தாது எனும் பிரமிளின் வரிகளைப் போல. ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை.

நூல்: ஆட்டம்
ஆசிரியர்: சு. வேணுகோபால்
விலை: ரூ.100/-
பதிப்பகம்: தமிழினி

Comments

ஆவலாய் இருக்கிறது...வாங்கி விடுகிறேன்...