Sunday, July 13, 2014

ராமானுஜன்

ஜானகிராமனின் மோகமுள்ளை படமாக்கினேன். படத்தில் நடித்தவர்களுக்கு விருது கிடைத்தது. படம் ஓடவில்லை. அடுத்து எடுத்த பாரதி பலத்த பாராட்டுகளைப் பெற்றது என்றபோதும் மொத்த தமிழ்நாடே அதை சன் டி.வியில்தான் பார்த்தது. இப்போ பெரியார். நல்ல சினிமா எடுக்கவேண்டும் என நினைக்கும் என் போன்றவர்கள் கோடம்பாக்கம் தெருக்களில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா?” 2007-ல் கோவையில் ஒரு புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் ஞானராஜசேகரன் ஆதங்கம் கொப்பளிக்க பேசியபோது வருத்தமாகத்தான் இருந்தது. இப்போது ராமானுஜன் திரைக்கு வந்திருக்கிறது. முந்தையப் படங்களோடு ஒப்பிடுகையில் மிக அதிகம் செலவு பிடித்திருக்கும் என்பது தெரிகிறது.

படம் ரிலீஸான நேற்றைய தினம் என்னோடு சேர்த்து அரங்கத்தில் இருந்தவர்கள் 17 பேர். அதில் சிலர் கல்லூரி மாணவர்கள் என்பது மென்ஆறுதல். ஆனால், இந்நிலைக்கு பார்வையாளர்கள் மட்டும் காரணமல்ல என்பதும் புரிகிறது. நான்கு படங்களை இயக்கி முடித்திருக்கும் ஞானராஜசேகரன் ஆவண படங்களின் திரைமொழியையே இன்னமும் பின்பற்றுகிறார். வரலாற்று நாயகர்களின் மொத்த வாழ்வையே இரண்டரை மணிநேரத்தில் சொல்ல வேண்டியதன் அவசியம்தான் என்ன? அவர்களது வாழ்வின் நாடகீயமான சில தருணங்களை வைத்துக்கொண்டே வணிக திரைப்படங்களுக்கு இணையான சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கி விட முடியுமென்றுதான் நான் நம்புகிறேன். மிக நிதானமாக நகரும் திரைக்கதை; புராதனமான காட்சி சட்டகங்கள்; வலுவில்லாத வசனங்கள்; சராசரிக்கும் குறைவான நடிப்பு; பலவீனமான பின்னணி இசை; அலுப்பூட்டும் எடிட்டிங் ஆகியன ராமானுஜன் திரைப்படத்தின் பலவீனங்கள்.

நான்லீனியர் கூறுமுறையும், கவித்துவமான தருணங்களை உருவாக்கக் கூடிய அழகான வசனங்களும், அழகுணர்ச்சியுடன் கூடிய காட்சிக்கோணங்களும், நேர்த்தியான பின்னணி இசையும், கனகச்சிதமான நடிப்பும் அட்டன்பரோவின் காந்தியை மாபெரும் கலைப்படைப்பாக மாற்றியது. அட்டன்பரோ படத்தின் பட்ஜெட்டும், பங்காற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் ஞானராஜசேகரன் போன்றவர்களுக்கு வாய்க்காத ஒன்று என்பது புரிந்தாலும், ஒரு படத்தின் எல்லா விஷயங்களும் சோபையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மிகுந்த அவநம்பிக்கையூட்டும் துயர்மிகு வாழ்வு ராமானுஜத்தினுடையது. இளமையில் வறுமை, சுகவீனம், அங்கீகாரமின்மை, அவமானங்கள் பலவற்றையும் கடந்து வாழ்வு வசப்படுகையில் வானுலகம் சென்றுவிட்டவர். தற்செயல்களின் மகத்தான அதிசயங்களின் மூலமே வெளியுலகம் அறியவந்தவர். அவரது கணித மேதைமையை ஏற்றுக்கொள்ளாத ஒரு வலுவான தரப்பு இன்றுவரை உண்டு. பிற்போக்கு நம்பிக்கைகள், முன்கோபம், தற்கொலை எண்ணம் போன்ற பலகீனங்களும் அவரிடத்தில் இருந்தன. அவை அனைத்தையும் காட்சிப்படுத்தியதில் ஞானராஜசேகரன் தான் ஒரு நேர்மையான படைப்பாளி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், நேர்மையையும் கலையையும் குழப்பிக்கொள்ள கூடாது. 

இந்தக் குறைபாடுகளையெல்லாம் கடந்தும் இத்திரைப்படம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும். எத்தகைய எதிர்ப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் மத்தியிலும் தன் கணித ஆராய்ச்சியை கைவிடாத ராமானுஜத்தின் தன்முனைப்பே அவரை உலகறியச் செய்தது. நோய் என் உடலுக்குத்தான் மூளைக்கல்ல என மரணப்படுக்கையிலும் புதிய சமன்பாடுகளைக் கண்டுபிடித்தவர். அதிர்கின்ற வீணையில் தூசு குந்தாது எனும் பிரமிளின் வரிகளும், நாம் நடந்தால் வாழ்வு நம்மோடு நடக்கும் எனும் பாதசாரியின் வரிகளும் எனக்கு எப்போதும் பிடித்த மேற்கோள்கள். ராமானுஜம் அதை மெய்ப்பித்தவர்.  1 comment:

ஜடாயு said...

// ஒரு படத்தின் எல்லா விஷயங்களும் சோபையாக இருப்பதை // "சோடையாக" என்று சொல்ல வந்ததாக நினைக்கிறேன். சோபை என்றால் அழகு.