வெல்லும்சொல் இன்மை அறிந்து

சமீபத்தில் நாளிதழ்களில் வந்த இரு வெவ்வேறு செய்திகளின் தலைப்புகள் என்னை துணுக்குறச் செய்தன. திம்பம் வனப்பகுதியில் நள்ளிரவில் லாரியை நிறுத்தி இயற்கை உபாதையை கழிக்க புதருக்குள் இறங்கிய ஓட்டுநர் மீது சிறுத்தை பாய்ந்தது. மறுநாள் காலையில் பாதி உடலாகத்தான் அவரை மீட்க முடிந்த செய்தி “டிரைவரை வேட்டையாடிய சிறுத்தை” என வெளியாகி இருந்தது. மற்றொரு செய்தி “அரியவகை மண்ணுள்ளி பாம்பு பிடிபட்டது”

நடுக்காட்டில் எதன்பொருட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டாம். வாகனங்களின் ஜன்னல்களை இறுக்கமாக மூடியபடி பயணிக்கவும் போன்ற எச்சரிக்கைகள் வனப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. அவற்றை சட்டை செய்யாது இதுபோன்ற விபரீதங்களுக்கு நாமே காரணமாகிறோம். பிறகு சிறுத்தை டிரைவரை காத்திருந்து வேட்டையாடியது போன்ற சித்திரத்தை உருவாக்கிவிடுகிறோம்.

உயிரினங்களில் அரியவகை என ஒன்றிருப்பதாக தெரியவில்லை. அழியும் வகைதான் இருக்கிறது. மிகையான சித்தரிப்புகளால் தகவல்களால் அழிந்த வகையும் உண்டு. மண்ணுள்ளிப் பாம்புகள் ஏனைய பாம்புகளைப் போலவே மிக மிக சாதாரணமாக கண்ணில் படக்கூடிய ஒன்று.

சூழலியல் சொல்லாடல்கள்

ஏன் சூழலியல் சொல்லாடல்களில் கவனம் செலுத்த வேண்டியதாகிறது? சிறிய உதாரணம் ஒன்றை சொல்லுகிறேன். திருச்செந்தூருக்கு அருகேயுள்ள பரமன்குறிச்சி கிராமத்தில் புகழ்மிக்க ஒரு ஆலமரம் இருந்தது. அதுவே அவ்வூரின் பேருந்து நிறுத்தமும் கூட. ஏராளமான பழந்தின்னி வவ்வால்களின் புகலிடமாக அம்மரம் இருந்தது. வவ்வால்கள் அடைவது ஊருக்கு நல்லதல்ல என்றும் வவ்வால்கள் தரித்தரித்தின் குறியீடு என்றும்  சில உள்ளூர் வாசிகள் வலியுறுத்தியதால் அம்மரம் தரிக்கப்பட்டது.

வாழ்விடம் அழிக்கப்பட்டதால் திகைத்துப்போன வவ்வால்கள் அருகேயுள்ள சாத்தான்குளத்தில் உள்ள ஒரு கோவில் அரசமரத்துக்கு குடிபெயர்ந்தன. ஒட்டு மொத்தமாக நூற்றுக்கணக்கான வவ்வால்களைப் பார்த்த மக்களுக்கு பீதி உண்டாயிற்று . அவை எழுப்பும் ஒலியால் அச்சமடைந்தனர். வவ்வால்களின் எச்சம் அவர்களை எரிச்சலைடையச் செய்தன. மேலதிகமாக அமானுஷ்யத்தின் குறியீடாக நம்பப்படும் வவ்வால் ஊர்கோவிலில் அடைவது நல்ல சகுணம் அல்ல என்று உறுதியாக நம்பப்பட்டது.

வவ்வால்களை விரட்டுவது என ஏகமனதாக முடிவெடுத்து வெடிகள் வீசப்பட்டன.  காதைப் பிளக்கும் வாத்தியங்கள் முழங்கப்பட்டன. வவ்வால்களைப் பிடித்து உண்ணும் நரிக்குறவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கும் வாழ்வுரிமை இழந்து கள்ளத்தோணியில் வந்து கச்சத்தீவில் கைவிடப்பட்டு நிற்கும் ஈழத்தழிழர்களைப் போல திசையறியாமல் திகைத்து நிற்கின்றன இந்த வவ்வால்கள்.

எங்கே நேர்ந்தது தவறு?

இந்திய ஆன்மிக மரபில் வவ்வால்கள் ஐஸ்வர்யத்தின் அடையாளமாகவே கருதப்படுகின்றன. வவ்வாலை வாகனமாகக் கொண்ட கடவுளர்கள் இந்து சமயத்தில் உண்டு. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வவ்வால் மகாலெஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது (சீனாவிலும், அப்பாச்சி, கெரோக்கி இண்டியன்ஸ் வகைப் பழங்குடியினரும் வவ்வாலை அதிர்ஷ்டத்தின் வருகையாக கருதுகின்றனர்). எல்லாவற்றிற்கும் மேலாக எலிகளைப் பெருமளவில் வேட்டையாடி, காற்றில் சாடி வெட்டுக் கிளிகளை அழித்து. நெற்பயிரை அழிக்கும் ஒருவகை தண்டுப்புழுக்களை உண்டு விவசாயிகளின் பெரும் தோழனாகவும் விளங்குவது வவ்வால். காடுகளில் சிலவகை தாவரங்கள் பூச்சிகளால் அழியாமல் இருக்க வவ்வால்கள் உதவுகின்றன. வவ்வால்களின் எச்சங்கள் மூலம் மட்டுமே பரவக்கூடிய தாவரங்களும் நிறைய்ய உண்டு. சிலவகை வவ்வால்கள் கொசுக்களைக் கூட கட்டுப்படுத்துகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இப்படியிருக்க நம் ஜனங்களின் மத்தியில் வவ்வால் ஏன் இவ்வளவு வெறுக்கப்படுகிறது? மேற்கத்திய படைப்புகளில் வவ்வால் தீமையின் வடிவமாக உருவகிப்பது உண்டு(ஷேக்ஸ்பியர் இதை துவக்கி வைத்தவர்). இத்தகு உருவகத்தின் பின்புலத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மேற்கில் வாழும் பல்வேறு வவ்வால்கள் வேட்டையுண்ணிகள். பெரிய மிருகங்களைக் கூட கூட்டாக சூழ்ந்து ரத்தம் உறிஞ்சுபவை. மனித ரத்தத்தையே உறிஞ்சக்கூடிய வவ்வால்களும் அங்குண்டு. இதன் தாக்கத்தாலே அங்கு டிராகுலா, வேம்பயர் போன்ற ரத்தக்காட்டேரி புனைக்கதைகள் உருவாகின. எதையும் அப்படியேதழுவும்நம் மகோன்னத படைப்பாளிகள் திகில் கதைகளை எழுதும் போதும் பேய் படங்களை இயக்கும் போதும் இந்த மேற்கத்திய கதைகளை கூச்சம் இல்லாமல் காப்பியடித்தனர். விவசாயிகளின் தோழனான இந்திய பழந்தின்னி வவ்வால்கள் அமானுஷ்யத் தன்மையை அடைந்தன. டி.வியில் வரும் திகில் நாடகங்கள் முற்றிலும் வவ்வால்களுக்கு எதிரான மனப்போக்கை விதைத்தன.

சாரை எனும் நிரபராதி


நாஞ்சில் நாட்டு வயல்களில் குச்சிக் கிழங்கு சாகுபடியின் போது சாரைப் பாம்பின் குட்டிகளை / முட்டைகளை சேகரித்து வயல்வெளிகளில் விடும் வழக்கம் இருந்தது. கரையான்புற்றுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சாரைப்பாம்பின் குட்டிகளை இதற்கென விற்கும் வழக்கம் கூட நாகர்கோவில் பக்கம் இருந்ததாக ஒருமுறை ஜெயமோகன் நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார். குச்சிக் கிழங்குகளை வேரோடு சூரையாடும் எலிகளை உண்டு விவசாயிகளுக்கு உதவும் என்பதால் இந்த ஏற்பாடு. விஷமற்ற சாரைப் பாம்புகள் இயல்பில் குழந்தையைப் போன்றது. வீட்டில் பதுங்கியிருக்கும் சாரைப் பாம்பை குடும்ப உறுப்பினரைப் போல கருதிய காலம் ஒன்றிருந்தது. இன்று பொதுச்சனங்களின் கண்களில் பட்ட ஒரு சாரைப் பாம்பும் உயிர் பிழைக்க ஏலாது.

பாம்புகள் கொடிய விஷமுடையன. பழிவாங்கும் இயல்புடையது. ஒரு பாம்பை கொன்று விட்டால் அதன் இணையை தேடி அழித்தாக வேண்டும் போன்ற மூட கருத்தாக்கங்கள் தமிழ்ச்சூழலில் திரைப்படங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன. தமிழில் நீயா திரைப்படம், இந்த முட்டாள்தனத்தை வெற்றிகரமாக துவக்கிவைத்தது. உண்மையில் 99% பாம்புகளுக்கு விடமில்லை என்பதே அறிவியல்.

சூழலியல் சார்ந்த எந்த பிரக்ஞையும் இல்லாத இது போன்ற அசட்டு வணிகர்கள் ஊடகங்களைக் கைப்பற்றிய காரணத்தால் இம்மண்ணின் சக உயிரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை, வாழ்விடத்தை வாழ்வுரிமையை இழந்து நிற்கின்றன.

என்ன செய்ய வேண்டும்


ஏற்கனவே மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், காட்டுயானைகள் அட்டகாசம், வேங்கைப்புலியின் வெறிச் செயல், சிறுவர்களைக் குறிவைக்கும் சிறுத்தை, குரங்குகளால் தொல்லை போன்ற பொறுப்பற்ற சொல்லாடல்களை ஊடகவியலாளர்கள் கவனமாகத் தவிர்க்க வேண்டும். அரிய வகை தேவாங்கு, அரிய வகை புனுகுப்பூனை, அரிய வகை நட்சத்திர ஆமை என உயிர்கள் அரிய பட்டியலில் சேர்க்கப்படுவதால் அதன் மீதான வர்த்தக ஈர்ப்பை அதிகரிப்பதை உணர்ந்து ‘அரிய’ வார்த்தையினைக் கறாராக கைவிட வேண்டும். கடவுளின் படைப்பில் அமானுஷ்யமானது என்றோ தீமையின் வடிவம் என்றோ எந்த உயிரும் இல்லை. படைப்புச் சுவைக்காக படைப்பாளிகள் மேற்கொள்ளும் இத்தகு தந்திரங்கள் கைவிடப்பட்டே ஆக வேண்டும்

Comments

Naanjil Peter said…
அருமையான காலத்திற்கேற்ற ஒரு எடுத்துக்காட்டு. நன்றிகள்.

//அங்கும் வாழ்வுரிமை இழந்து கள்ளத்தோணியில் வந்து கச்சத்தீவில் கைவிடப்பட்டு நிற்கும் ஈழத்தழிழர்களைப் போல திசையறியாமல் திகைத்து நிற்கின்றன இந்த வவ்வால்கள்.//
அருமையான கட்டுரை , இதைப் படிக்க வேண்டியோர் படித்துணரவேண்டும்.
தாய்லாந்து, வியட்நாம், கம்பூச்சிய மலைக்குகைகளில் வாழும் கோடிக்கணக்கான வௌவால்கள் இடும் எச்சத்தை சேகரித்து தோட்டம் செய்வோருக்கு இயற்கை உரமாக விற்று கோடிக்கணக்கில் பணம் சேர்ப்போர் பற்றி ஒரு விபரணச் சித்திரம் பார்த்தேன்.
நாம் எதைத்தான் புரிந்து வைத்துள்ளோம். நம் நாடுகளிலும் நசனல் ஜீயோகிறபி தமிழ் சேவை உண்டு.
நம்மை மெகாதொடர்கள் கட்டிப்போடுவதால் , பார்க்க நேரமில்லை.உண்மைகளை உணரவிடுவதில்லை.
சுறா, அனகொண்டா பழிவாங்குவது போல் மேற்கத்தையப் படங்கள் வந்தன. ஆனால் மக்கள் படத்தைப் பார்த்தார்கள். நம்பவில்லை.
ஆனால் நம் மக்கள் படத்தில் கொஞ்சம் பக்தி சேர்த்து எதைச் சொன்னாலும் நம்புகிறார்கள்.
கதா நாயகர்களைச் சூராதி சூரரென நம்புவது போல்.
crjayaprakash said…
perspective from the animal side reveals the truth.