கடவுள் தொடங்கிய இடம்

முத்துலிங்கத்தின் ஓவ்வொரு வரிகளின் கீழேயும் வரலாறு நிழலாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான மனங்களின் விசும்பலை மென்அங்கதத்தால் மறைக்க முயன்று முயன்று தோற்பதே இவரது கலை. தமிழர்க்கொர் நாடில்லை எனும் தனிக்கவலையுடன் அழியும் மொழிகள் சிதறும் இனங்கள் குறித்த பொதுக்கவலை இவரை உலக எழுத்தாளராக்குகிறது. அமுவின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் வரலாற்றுணர்வு மிக்கவர்கள். வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றின் சரித்திரமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். வலசை போகும் பறவைகளைப் பற்றி, ஒவ்வொரு சீதோஷ்ணத்திலும் பூக்கும் பூக்களைப் பற்றி, மாற்றி மாற்றி எழுதப்படும் நாடுகளின் குடிவரவு விதிகளைப் பற்றி, ஆதியின் முதல் மனிதனின் கல்லறையைப் பற்றி, குறுந்தொகையின் காதல் காட்சிகளுக்கு இணையான உலகச் சிறுகதைகளைப் பற்றி, வானில் தோன்றும் நட்சத்திர கூட்டங்களைப் பற்றி, கடலுக்கடியில் பாலைப் பீய்ச்சியடிக்கும் திமிங்கலங்களைப் பற்றி, ஆட்டு நாக்கினை அறுத்துப் போட்டு செய்யும் கோர்பா சூப் பற்றி, ஜேனஸ் கடவுளின் இரண்டு தலைகளைப் பற்றி, நாகரீகமடைவதற்கு முன் ஜெர்மானியர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது பற்றி, என்னை த் தலைகீழாக சிலுவையில் அறையுங்களென கதறிய புனிதர் பீட்டரைப் பற்றி, நாட்டிற்கு நாடு மாறுபடும் உயிரின் உண்மையான மதிப்பு பற்றி, கடவுள் தொடங்கிய இடம் பற்றி அவர்கள் அறிவார்கள். ஒவ்வொன்றின் பின்னாலும் உள்ள சரித்திரம் அவர்களுக்கு மிக மிக முக்கியம். அவர்கள் ஒருமுறை படித்த எதையும் மறப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிகழ்காலமென ஒன்றில்லை. அவர்கள் கடந்த காலத்தின் நினைவுகளைச் சுமந்து கொண்டு எதிர்காலத்தை நோக்கி விரைபவர்கள். அவர்கள் மாபெரும் வரலாற்றுத் துயரத்தின் ரத்தசாட்சியங்களாக நின்று தங்கள் தலைமுறைகளுக்காக புதிய வசந்தத்தை வரைபவர்கள். 

‘கடவுள் தொடங்கிய இடம்’ அமுவின் ஏனைய நூல்களைப் போலவே அதிசுவாரஸ்யமானதும் அதிநுண்மையானதுமான நாவல். வாரப்பத்திரிகையின் இண்டர்வெல் ப்ளாக் சங்கடங்களுக்கு மத்தியிலும் ஒரு நல்ல நாவலை தமிழுக்குத் தந்திருக்கிறார். கொழும்பில் துவங்கும் நாவல் ஆறு கண்டங்களின் நிலப்பரப்புகளின் வழியாகப் பயணித்து கனடாவை வந்தடைகிறது. நிஷாந்தின் அலைதல்களின் வழியாக ஒரு மில்லியன் தமிழர்கள் உலகெங்கும் இடம் பெயர்ந்த கதையைச் சொல்கிறார். பல்வேறு நாடுகள், மொழிகள், வாழ்க்கை முறைகள், மனிதர்கள், அரசாங்கங்கள் என இருநூற்றி சொச்ச பக்கங்களில் உலகைச் சுற்றி வந்த அனுபவம் வாசகனுக்கு கிடைக்கிறது. பிழைத்துக் கிடப்பதே பெரும்தற்செயலெனும் எனும் நெருக்கடியில் மானுட மனங்கள் கொள்ளும் ரசமாற்றங்கள் விசித்திரமானவை. ஆறாத் துயரத்தையும், வெடிச்சிரிப்பையும், மெள்ளிய குற்றவுணர்வையும், காதலின் பரவசத்தையும் மாற்றி மாற்றி வாசகனுக்குத் தரும் அமுத்துவின் எழுத்துக்களைப் போல.

Comments