கித்தார் முன் மன்றாடுபவன்

குழியிலிருந்து தூக்கி வீசப்பட்டவனே
உன் துயரம் எதுவாயினும்
என் வரிகளை நின் வலியின் மீது படர விடு..
வா.. வந்து கைகுலுக்கு.. சேர்ந்து குடி..
தாகமடங்கும் மட்டும் குடி..
என்னோடு சேர்ந்து பாடு..
இந்த இரவு சிதறும் வரை பாடு..
கித்தார்கள் நம்மோடு பேசப் பிறந்தவை
நாமும் யாருடைய நினைவிலாவது
இருந்து தொலைக்க வேண்டாமா
பாடு.. இந்த இரவு சிதறும் வரை பாடு..
அழகைச் சுமந்தலையும் அவளை இறுக்கிப்பிடித்த ஆடைகள்
கொடியில் காய்கின்றன..
அவை காயும் மட்டும் பாடு..
அவள் மீதம் வைத்த பாலில்
செத்து மிதக்கும் எறும்புகளின்
ஆன்மா நனையும் மட்டும் பாடு..
வா வந்து பாடித் தொலை..
கித்தார்கள் நம்மோடு பேசப் பிறந்தவை.

Comments

Popular Posts