தொட்டவரை தொடர வைக்கும் நூல் - கடலூர் சீனு

முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்தியாவில் இன்றைய காலம், நடுத்தர வர்க்கம் விடுமுறைகளில் பயணங்களை விரும்பும் காலமாக மாறி இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள்,அவர்களின் பணி அழுத்தத்தில் இருந்து விடுபட, நிறுவனங்களே ஹெரிடேஜ் ஆப் போன்றவற்றை உருவாக்கி, தனித் தனி பாகேஜ்களில் இந்தியாவின் எந்த பகுதிக்கும் தங்களது ஊழியர்கள் ,மூன்று நாள் முதல் முப்பது நாள் பயணம் செய்ய வழிவகை செய்ய, அந்த வழிவகை கிளர்த்திய தடங்கள்,வசதிகள் வழியே நடுத்தர வர்க்கமும் பயணங்களை மேற்கொள்ளுகிறது. குறிப்பிட்ட நிரலி வழியே, வழித்தடங்கள்,  வாகனங்கள், தங்கும் வசதி அனைத்தயும் பயனர்கள் ஆலோசனையுடன் தேர்ந்து,முன்பதிவு செய்து சர்வ வசதியும் பாதுகாப்புடனும் குடும்பங்கள் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. 

இவை போக இன்றைய மத்திய அரசு, விடுமுறை சுற்றுலாவாக அன்றி கலாச்சாரத்தையும் நிலத்தையும் அறிய,இந்தியாவை சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியர்களுக்கு, பயணப் படி சலுகைகள் அறிவித்திருக்கிறது.  இத்தகு சூழலில்  'சீனிக்'கான காட்சிகள் கொண்ட நிலப்பரப்பு, திரையில் காணும் ஆடல் கேளிக்கைகள் நேரில் அசையும் வசதி இப்படியான வரிசை கொண்ட பயணமே 'பெரும்பான்மையான' மத்திய வர்க்கத்தின் தேர்வாக இருப்பது இயல்பே. 

ஆன்றோர்களின் நடைவெளிப் பயணங்களால் உருவான இந்தியப் பண்பாட்டின் மீது, நெடிய உதாசீனம் கடந்து இத்தகு பயணங்கள் துவங்கி இருப்பதே ஒரு நேர்மறை அம்சம்தான். இந்த நிகழ்வுக்கு நிரலிகள், யு ட்யுப் பதிவுகள், 'ஹைய்யோ சான்சே இல்லன்னா பாத்த இடம் வேற லெவல்ன்னா' போன்ற முன்னோடிகளின் அபிப்ராயங்களுக்கு வெளியே, இந்திய நிலத்தின் மீதான பயணம், எந்த தனித்துவத்தின் மீது நிகழ்கிறதோ, எந்த தனித்துவம் வழியே இந்தியாவின் ஆன்மாவை சற்றே நெருங்கி உணர முடியுமோ, அதை உணர்ந்த பயணக் கட்டுரைகளே,இந்த நேர்மறை அம்சத்தின் இயக்கத்தை ஆக்கபூர்வமான ஒரு 'கலாச்சார' அசைவாக மாற்ற முடியும். 


'கலாச்சார அசைவு' அதனுடன் தொடர்பு கொண்ட இந்தியப் பயணத்தின் தன்மை என்ன? முதல் மற்றும் முழுமையான வேறுபாடு, இத்தகு பயணம்  காசைக் கொடுத்து அதற்க்கு ஈடாக 'நுகரும்' ஒன்றல்ல என்பதே. உதாரணமாக இந்த நூலின் சாம் மணல்வெளி இரவின் நிலவை சொல்லலாம். அந்த எழில் 'நுகரும்' வகைமையை சேர்ந்த  ஒன்றல்ல. நமது ஆழுள்ள தூய மிருகத்துடன்,அல்லது தெய்வத்துடன் நம்மைக் கண்டு கொள்வதற்கான தருணம் அது. அதற்கான அழைப்பு செல்வேந்திரனின் இந்தப் பாலை நிலப் பயணம் நூல்.

இந்திய நிலத்தின் பண்பாட்டை கட்டி எழுப்பிய, வரலாறு,கலைகள், இலக்கியம், கோவில்கள்,சிற்பங்கள், அனைத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் ஒன்றின்  இணை விவரிப்புடன் இந்திய நிலத்தின் குறிப்பிட்ட பாலைப் பகுதியை ஊடுருவி நிகழும் பயணம் மீதான கட்டுரைகள். பெரும் கலைச் செல்வத்தை கட்டி எழுப்பிய பயனாய் தலை இழந்த சிற்பிகள், அக் கலையின் பொருட்டு மட்டுமே வாழ்ந்து அக் கலை மேன்மை நிறையும் நாளில் தற்கொலை செய்து கொள்ளும் ராணி, படையெடுப்புகளில் சிதைந்த கலைப் பொக்கிஷங்கள், இடையே நிகழும் பயணத்தில் 'மானாவாரியாக' சுட்டுத் தள்ளும் பறவை வேட்டையர்கள், இவற்றின் மேல் விண் வலசை வரும் அபூர்வ பறவைகள்,  மண்ணில் துளைத்து வாழும் வண்டுகள்,மண்ணுள்ளிப் பாம்புகள், பாயும் கலை மான்கள், கானமயில் கூட்டம், குழந்தை யாசகர்கள், பின்தங்கிய பழங்குடிகள் நுட்பமான அவதானிப்புகள் என முற்ற முழுதான உயிர் சூழல் ஒன்றினை வாசிக்கையில் புன்னகை எழ விவரித்துச் செல்லும் மொழி. இலக்கியம் இசை கவிதை சினிமா என எவற்றஎல்லாம் தொட்டுத் திறப்பதன் வழியே இந்த நிலத்தின் சாரத்தை நோக்கி பயணிக்க முடியுமோ அத்தனையையும் தொட்டுத் திறக்கிறது இந்தப் பயண நூல்.  இந்த நூலில் திகழும் நகைச்சுவை இந்த நூலை தமிழ் அறிந்த எவரும் எளிதாக உள்ளே நுழையும் ஒரு தூண்டில் மாறுமே. தொட்டவரை தொடரவைக்கும்  இந்த நூலை  வாசித்த எவரும் அதன்பின்  இத்தகு பயணம் ஒன்றை நிகழ்த்தாமல்  தரிக்க இயலாது. நிகழ்த்தியபின் இத்தகு நூல் ஒன்றினை எழுதாமல் அமைய இயலாது. அத்தகு கிரியா ஊக்கி என்பதே இந்தப் பயண நூலின் தனித் தன்மை. நண்பர் செல்வேந்திரனுக்கு ஒரு இனிய வாசிப்பின்பம் நல்கியமைக்கு நன்றி. :)   

நூலினை வாங்க: amazon.in/dp/B0855GH66F


Comments

Popular Posts