வாசிப்பது எப்படி? - பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி நூல்
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ,
மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குறைந்துபோனதன் தரவீழ்ச்சியை நாம் வாழ்க்கைத்தரத்தில்,
சிந்தனைத்துறையில்,
அறிவியலில்,
தொழில்துறையில்,
கல்வித்துறையில்,
சினிமாவில்,
அரசியலில்,
நிர்வாகத்தில்,
கலைகளில் அன்றாடம் எதிர்கொள்கிறோம்.
அந்த வகையில் இஃதொரு தேசிய பிரச்சனை.
அனைவருமே சேர்ந்து இதன் வேர்களை ஆராய வேண்டுமென்று விரும்புகிறேன். அனுபவத்தின் வழியாக கண்டடைந்த சில கோணங்களை இங்கு முன்வைக்கிறேன்.
எனக்குப் பலனளித்த சில வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். இதை வாசிக்கிற ஒருவர் என்னோடு முரண்படும் புள்ளிகள் சிறந்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
இந்த நூலில் இளைஞன்,
மாணவன் என்று குறிப்பிடப்படுவது பெண்களையும் உள்ளடக்கிய பலவின்பால் அர்த்தத்தில்தான்.
வாசிப்பு தொடர்பான விரிவான சித்திரத்தை அளிக்கும் பொருட்டு இந்தப் புத்தகம் விரித்து எழுதப்பட்டுள்ளது.
அது என் இயல்பிற்கே முரணானது. தவிர நூல் முழுவதும் ஒரே விஷயத்தைப் பேசுவதால் கூறுவது கூறல் எனும் மனத்தோற்றத்தை உருவாக்கக்கூடும். வாசிக்கையில் சலிப்பு தட்டும்.
‘ஜாலி’யான நடையில் எழுதப்படக்கூடாத விஷயங்கள். முழுதாகப் படிக்கும் பொறுமை இல்லாதவர்கள் குறைந்தபட்சம் ‘வாசிப்பதால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்கள்’ மற்றும் ‘மேம்படுத்த சில வழிகள்’
ஆகிய இரு அத்தியாயங்களையாவது முழுதாகப் படிக்க வேண்டுமெனக் கோருகிறேன்.
இந்த நூல் கண்டுகொள்ளப்படாமல் போவதற்குரிய அத்தனைச் சாத்தியங்களும் உண்டு. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள்.
தங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம்.
மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
கொரோனா தினங்களில் ஊரே பதைப்பில் கிடக்க நான் இப்புத்தகத்தை எவ்வித சஞ்சலமும் இடையூறுகளும் இன்றி எழுதக் காரணமாக இருந்த திருக்குறளரசிக்கும்,
நூலினை மெய்ப்புப் பார்த்து திருத்திய நண்பர் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும், அட்டைப்படத்தால் நூலுக்கு அணி செய்த சந்தோஷ் நாராயணனுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி.
நவீன தமிழிலக்கியத்தின் வளமிக்க படைப்புகளை வெகுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் இலக்கிய அப்போஸ்தலர் பவா. செல்லத்துரைக்கு இந்நூல் சமர்ப்பணம்.
புத்தகத்தை வாங்க: https://www.amazon.in/dp/B086HPBW13
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்
x
Comments