இளம்ஸ் சகோதரிகளின் ஒருநாள்
பலருக்கும் பிள்ளைகளைச் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறதென்பதை
அறிகிறேன். பெங்களூரு நண்பன் சுதர்ஸன் மனைவியை ரீட்டெய்ன் செய்துகொண்டு பிள்ளைகளை டைவர்ஸ்
பண்ண சட்டத்துல இடம் இருக்குதா என்று கேட்கும் அளவிற்கு. அவன் பாவம் ஐட்டிபுள்ள. அவ்ளோதான்
அறிவு இருக்கும். எங்கள் வீட்டில் நாட்டியப்பேர்வழி இளவெயினி தனது அன்றாடங்களை எப்படிச்
செலவு செய்கிறார் என்பதைப் பற்றி சிறுகுறிப்பு எழுதினால், எனது நூல்களை கிண்டிலில்
வாங்கி ஆறாயிரம் ராயல்டி கிடைக்கச் செய்த நல்லுள்ளங்கள் – இவர்களை கொரனா அண்டாது; சத்தியம்
– பயன்பெறுமே என்று பகிர்கிறேன்.
காலை 7:00 – 7:30
25 தோப்புக்கரணம். அதில் 15 காதுகளை முறையாகப் பிடித்துக்கொள்ளாமல்
போங்கு & யோகா (பாருங்கம்மா.. இளம்பிறை யோகா மேட்டுலயும் உச்சா போயி வச்சிருக்கா..)
காலை 7:30 – 8:30
காலைக்கடன், குளியல். இளம்பிறை பல் தேய்த்தாளா என்பது
இரண்டு கட்ட சோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்ட பின் காலை உணவு வழங்கப்படும். கூடவே அந்த நாளைப் பொறுப்புடன்
செலவழிக்கச் சொல்லும் அம்மாவின் அரிய கருத்துக்கள்.
காலை 8:30 – 9:00
செடிகளுக்கு நீருற்றுதல், முந்தைய நாள் விளையாடி வீசிவிட்டுச்
சென்ற விளையாட்டு சாமான்களை ஒதுங்க வைத்தல்.
காலை 9:00 – 10:00
தங்கை இளம்பிறையுடன் விளையாட்டு. கிச்சன் செட், டாக்டர்
பேஷண்ட், டீச்சர் கேம், அப்பா ஆபிஸ் கேம். இந்த கேமில் மேலாளர் இளவெயினி செல்வேந்திரனாக
நடிக்கு இளம்பிறையைப் பார்த்து மாடு மாதிரி வளர்ந்துருக்கியே ஒரு கூராச்சும் இருக்கா..
என மனம் போனபடி வைவார். வாஸ்தவம்தான் என்பார் இளம்பிறை.
காலை 10:00 – 10:15
பொதுவாக மேற்கண்ட விளையாட்டுகள் ‘நீ எனக்கு அக்கா இல்ல
/ நான் உனக்கு தங்கச்சி இல்ல’ எனும் அளவிற்கு போரில்தான் முடியும். இராஜமாதா தலா இரண்டு அடிகள் முதுகில் கொடுப்பார்.
காலை 10:15 – 11:30
ஆங்கிலப் புத்தகங்கள் வாசிப்பு. ரஸ்கின் பாண்ட், டாக்டர்
சூயஸ், ஜெஃப் கின்னி, விவேக் தேசாய் ஆகியோர் பிரியத்திற்குரிய – மன்னிக்கவும் – வழிபாட்டுக்குரிய
எழுத்தாளர்கள்.
காலை 11:30 – 12:30
நடனம். முதல் 15 நிமிடங்களுக்கு சாஸ்திரீய சங்கீதத்திற்கு
பரதப் பயிற்சி என்றுதான் நிகழும். பக்கத்து ரூமில் இருக்கும் அமெச்சூர் எழுத்தாளன்
உள்ளே புகுந்ததும் கிராமியப் பாடலுக்கு வெஸ்டர்ன், விஜய் ஓபனிங் சாங்குகளுக்கு குரங்குகள்,
காருக்குறிச்சியாரின் இங்கிலீஷ் நோட்ஸூக்கு கவுண்டமணி நடனம், கட்டடம் கட்டிடும் சிற்பிகள்
நாம் பாடலுக்கு பரதநாட்டியம், மூட் ஃபார் லவ் இசைக்கோர்வைக்கு தேவராட்டம், குத்துப்பாடல்களுக்கு
முயல், சிங்கம், கரடி, மலைப்பாம்பு மான்கள் சேர்ந்து ஆடுவது என நிலவரம் கலவரம் ஆகும்.
நம்ப மறுப்பவர்களுக்காக ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
கலை அள்ளியள்ளிப் பருகவேண்டிய அமுதமென அறியாத திருப்பூர்காரி
மீண்டும் வந்து பூசை வைத்ததும் நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.
மதியம் 12:30 – 1:00
கொப்புடையம்மனின் கோபத்திற்கு ஆளான இளம்பிறை படுக்கையறையில்
அமைக்கப்பட்டிருக்கும் புலிக்குகைக்கும், இளவெயினியார் ஹாலில் அமைக்கப்பட்டுள்ள ஆதிவாசி
குடிலுக்குள்ளும் தஞ்சமடைவார்கள்.
மதியம் 1:00 – 1:30
மதிய உணவு. சோற்றின் மீது குழம்பு, கூட்டு, ரசம், மோர்
என ஒவ்வொன்றாகக் கேட்டு வாங்கி ஊற்றிய பின் எனக்கு இது வேண்டாமென நைஸாக கிளம்பும் இளம்பிறைக்கு
சிறிய நன்னெறி வகுப்பு. “எத்தியோப்பியாவில்..”
மதியம் 1:30 – 2:30
கிறுக்கி வரைவது. வரைந்து கிறுக்குவது. முந்தைய இரவில்
அப்பா சொன்ன கதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை வரையும் ஸ்டோரி இல்லஸ்ட்ரேசன் முயற்சிகள்.
ஓவியதாகம் அடங்கிய பின் கிராஃப்ட் தாகம். ரூபாய் நோட்டுக்கள், சான்றிதழ்கள், இலக்கிய
ஆக்கங்கள் தவிர்த்த பிற அனைத்து அசையும் அசையாத சொத்துக்களும் ஒட்டி வெட்டுதல் மற்றும்
வெட்டி வெட்டுதல். அம்மாவின் ஷால், பெட் கவர், அக்காவின் தலைமுடிவரை நீளும்போது வீட்டம்மன்
அவதரிப்பார்.
மதியம் 2:30 – 4:00
பல்வேறு ஐடியாக்களை செய்து ஓய்ந்துவிட்ட இளம்பிறையவர்கள்
சற்று கண்ணயர்வார். வெண்முரசு வாசிக்கிறேன் பேர்வழியென்று திருக்குலத்தரசியும் மைல்டாக
விழிமயக்கு கொள்வார்.
அந்நேரத்தில் இளவெயினியார் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவார்.
யூரோகிட்ஸ், புஷ்பலதா துவங்கி சிஎஸ் அகாடமி வரை அம்மையாரோடு படித்து வெளியூர்களுக்கு
மாற்றலாகிப்போன நண்பர்கள், மேனாள் ஆசிரியர்கள், தாத்தாவின் மாண்பு, அப்பாவின் அறியாமை,
தங்கையின் குறும்பு போன்றன பாடுபொருட்கள்.
நல்ல கதைகள் எழுதுவார். ஆங்கிலத்தில். தமிழில் எழுதிக்கொண்டிருக்கும்
பலரை விட சிறந்த கதைகள். கதையின் நீதியல்ல, கதாபாத்திரங்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதில்
உறுதியாக இருப்பார். சூழியல் போராளி என்பதால் இயற்கைச் சித்தரிப்புகள் மிகுந்திருக்கும்.
மாலை 4:00 – 5:00
ஆன்லைனில் பாட்டு க்ளாஸ். பாட்டு க்ளாஸ் இல்லாத நாட்களில்
தூய சங்கீதம் கேட்டல். அருகிலேயே அமர்ந்து நக்கல் செய்யும் இளம்பிறை தொடையில் அவ்வப்போது
கிள்ளி வைத்தல். அம்மா கடை கண்ணிக்குப் போயிருந்தால் நைஸாக அப்பாவின் மொபைலை லவட்டி
ஏபிசி கிட்ஸ் டிவி, கோக்கோமெலன், டயானாஸ் டிவி போன்ற திராபை கார்ட்டூன் வீடியோக்களைப்
பார்ப்பார்.
மாலை 5:00 – 6:00
அப்பாவுடன் இறகுப்பந்து. சைக்கிளில் வூகான் நகரம் போல்
இருக்கும் சுடுகுஞ்சி இல்லாத அடுக்ககத்துக்குள் சில ரவுண்டுகள். கட்டம் கட்டி தொடுதல்
விளையாட்டு. இளம்பிறை, அப்பா, அம்மா, கண்ணன் மச்சான் ஆகியோர் எட்டுக்கு எட்டு சதுர
கட்டத்திற்குள் ஓட வேண்டும். கட்டத்தின் விளிம்பைத் தாண்டாமல் ஓடுவோரைத் தொடுதல்.
மாலை 6:00 – 7:00
தொலைக்காட்சி பார்த்தல். டிஸ்கவரி, ஃபுட் சஃபாரி, குழந்தைகள்
திரைப்படம், ரைம்ஸ். இடைக்கிடை செய்திச் சானல்களில் கொரானா நிலவரங்கள், மாமியாருக்கு
விஷம் வைப்பது குறித்த சீரியல் சதியாலோசனைகள்.
இரவு 7:00 – 7:30
கிண்டி டிராமா - லிட்டிங் சிங்கமும் திருடனும், கரடியும்
நண்பனும், குகைமனிதர்கள், முரடன் முத்து, இளம் சகோதரிகள் துப்பறியும் கெளபாய் சாகஸங்கள்,
வீணாய்ப் போன ஓநாய்ப் பயல், எல்லோரும் இந்நாட்டு மன்னர், வீரமங்கை வேலுநாச்சியார் இன்ன
பிற.
தனியாள் நடிப்பு – யூசுப் மலாலா, கிரேட்டா துன்பர்க்,
காந்தியடிகள், பாரதியார், விவேகானந்தர், மேரி கியூரி போன்ற ஃபேவரிட் ஆளுமைகளைப் பற்றி
தேடி வாசித்து சிறிய உரை எழுதி நடித்துக் காண்பித்தல்.
இரவு 7:30 – 8:30
இரவு விருந்து. அம்மாச்சி, பூட்டி, அத்தை, பெரியம்மாக்களுடன்
போனில் குசலம் விசாரித்தல்.
இரவு 8:30 – 9:00
தமிழ் சிறார் புத்தகத்தை வாய் விட்டு சத்தமாக அப்பாவுக்கு
வாசித்துக் காண்பித்தல். பிழையற தடையற வாசிப்பதற்கான பயிற்சி. வாசித்த கதையை சுருக்கி
இளம்பிறைக்கு சொல்லுதல்.
ட்யூன் விளையாட்டு (கண்டுபிடித்தவர்: சித்தார்த், பேரன்
ஆஃப் நாஞ்சில் நாடன்) – பாடலின் சரணத்தின் தத்தகாரம் (ட்யூனை அப்படித்தானே சொல்லவேண்டும்)
ஹம் செய்யப்படும். சரியான பாடல் வரிகளைக் கண்டுபிடித்து
பாட வேண்டும். 10 மதிப்பெண்கள். தவறாகப் பாடினால், மைனஸ் 10.
இரவு 9:00 மணி முதல் உறங்கும் வரை
அப்பாவின் கதை சொல்லல் நிகழ்ச்சி. மூன்று வகையான கதைகள்
சொல்லப்படும். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள உலகளாவிய
சிறுவர் கதைகளை சற்று கற்பனையில் விரித்து சீனுக்கு சீன் வெடிச்சிரிப்பு கலந்து சொல்லப்படும்.
கதையின் இறுதியில் கதை மாந்தர்கள் ஒன்றிணைந்து ‘சந்தோசம் பொங்குதே.. சந்தோசம் பொங்குதே..’
என ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
இரண்டாவது, இளம்ஸ் சகோதரிகள் துப்பறியும் சாகஸ கதைகள்.
அவர்களுக்கு உதவி செய்ய முருகேசன் அண்ணாச்சி எனும் ஒரு கேரக்டர் உண்டு. அவருக்கும்
அறிவுக்கும் 500 கிலோ மீட்டர் தூரம். அவ்வப்போது
நாஞ்சில் நாடனின் நண்பர் பண்டாரம் கெளரவ வேடம் ஏற்பார். அதிரடி சாகஸங்களும், அறிவியல்
கருத்துக்களும், நகைச்சுவைக் காட்சிகளும் நிரம்பியவை. கதையில் உற்சாகம் அதிகமானால்,
இளம்பிறையவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி தலைக்கு மேல் சுழற்றி கட்டிலின் மேல்
கூத்தாடுவார். சினம் வளர்த்த நாயகி சீற்றம் காட்டியதும் அடங்குவார்.
மூன்றாவதாக அவசியம் செய்வது ஏதேனும் ஒரு நவீன சிறுகதையை
சிறார்களுக்கு ஏற்றார் போல சுருக்கிச் சொல்வது. பிரமிளின் குழந்தைக் கை திருடன், ஜெயமோகனின்
யானை டாக்டர், கோட்டி, அசோகமித்திரனின் புலிக்கலைஞன், ஷோபாவின் கண்டி வீரன், பஷீர்
தலைமறைவாக இருந்தபோது அம்மாவை சந்தித்தது, சலீம் அலி பறவை ஆய்வாளரானது, டாப் ஸ்லிப்
வூட் ஹவுஸின் கதை, சுந்தராமசாமி பாய் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்டது, சர்ச்சிலுக்கும்
அவரது அப்பாவிற்குமான உறவு. ஓநாய் குலச் சின்னம் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம். மண்ணும்
மனிதரும் சுருக்கிய வடிவம். சொன்னால் நம்பமாட்டீர்கள், என் பெயர் சிவப்பு நாவலைக் கூட
அதன் சித்திர-வதைகளை நீக்கிவிட்டு மர்மக்கதை போல சொல்ல முயன்றிருக்கிறேன். என்னுடைய
நோக்கில் ஒன்பது வயது குழந்தைக்கு ஜூஜூலிபா கதைகளை விட உயர்ந்தவை இக்கதைகள். இதன் வழியாக
நவீனச் சிந்தனைகள், அக்காலத்தைய அறம், இன்றைய விழுமியங்கள், சூழியல், வரலாறு என பல
விஷயங்கள் உள்ளே செல்கிறது.
கதைகள் சொல்லி முடித்தவுடன் அப்பாவின் பாடல் நிகழ்ச்சி.
கட்டைக்குரலில் அம்மா பாடி வளர்த்த பாட்டுகளில் இருந்து துவங்கும். காசுக்கு ரெண்டு
குருவி வாங்கினேன், அருகம்புல்லின் நுனியிலே, நாட்டுக்கு சேவை செய்ய, காந்தி அண்ணல்
காவியத்தில் கவிதை ஆன காமராஜ், அன்புள்ளம்
கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம், மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா, ராஜா சின்ன
ரோஜோவோட காட்டுப்பக்கம், கல்யாண சமையல் சாதம், குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே,
ஆத்தா உன் சேலை, ஆரோரா ஆரிரோ நீ வேறோ நான் வேறோ, வேலுண்டு வினையில்லை, சலங்கை கட்டி
ஓடி ஓடி வாயோ, வாதை உந்தன் கூடாரத்தை, செந்தமிழே மைந்தர்களே சிந்தனை செய்க, நாங்க சும்மா
கெடந்தாலும் கெடப்போம், சின்னக்குட்டி நாத்தனா.
பாடல்கள் மெள்ள ‘திரு’ப்புகழ் பாடத் துவங்கும். ‘பொண்டாட்டி
தேடி நானும் ஓடோடி வந்தேன்’, ‘அம்மான்னா சும்மா
இல்லேடா’, ‘பைத்தியம் பலவகை.. ஒவ்வொன்றும் ஒருவகை’ ’நேரில் நின்று ஏசும் தெய்வம்’
‘வீட்டுக்கு வீடு ஹேய் பாப்ரோச்.. பாப்ரோச்..’ போதும் படுங்க.. போதும் படுங்க. போதும்
படுங்க என்று வீரர்களுக்கு பாட்டுடைத் தலைவியால் மூன்று முறை எச்சரிக்கை விடப்படும்.
உற்சாக மிகுதியால் நிகழ்ச்சி தறிகெட்டு ஓடும்போது கட்டிய வேட்டியுடன் வந்த கணவன் என்றும்
பாராமல் கட்டுரையாளர் எட்டி மிதிக்கப்படுவார். ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி…’ மீண்டும் ஒரு மிதி. அத்துடன்
நிலையத்தில் ஒலிபரப்புச் சேவைகள் நிறுத்தப்படும்.
Comments