உள்ளத்தால் உள்ளலும் தீதே


 


 

ரொரு பேரதிர்ஷ்டத்திற்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது என்கிற மரியோ பூஸோவின் வரிகள் திரைப்பட ரசிகர்களுக்குப் பரிச்சயமானது. பூஸோவின் தி காட்ஃபாதர் நாவல் எழுதப்படுவதற்கு 138 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான ‘தந்தை கோரியோ’ நாவலில் பால்சாக் எழுதிய வரிகள் இவை. ரத்தத்தில் ஈட்டிய செல்வத்தை ஏற்றுக்கொள்வதன் தத்தளிப்பு பால்சாக்கின் பல கதைகளில் இடம்பெறுகிறது. செந்நிற விடுதி அத்தகைய கதைகளுள் ஒன்று. 

 

1831-ல் ஃப்ரெஞ்சு மொழியில் பால்சாக் எழுதிய சிறுகதை L'Auberge rouge - ஆங்கிலத்தில் ‘The Red Inn’ -தமிழில் ராஜேந்திரன் செந்நிற விடுதி (தமிழினி பதிப்பகம்) எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கதைசொல்லி ஒரு விருந்தில் இருக்கிறான். உண்டு களித்தபின்னர் விருந்தாளிகளுக்கு ஒரு ஜெர்மானியன் கதை சொல்லத் துவங்குகிறான். மருத்துவ மாணவர்கள் இருவர் கட்டாய ராணுவ சேவையாற்ற ஃப்ரான்ஸிலிருந்து ஜெர்மனியின் ஆண்டர்நாக் நகருக்கு வருகிறார்கள். வழியில் செந்நிற வர்ணம் பூசப்பட்ட விடுதி ஒன்றில் தங்க நேரிடுகிறது. விடுதியில் இடநெருக்கடி. விடுதியடைக்கும் நேரத்தில் வந்த ஒரு ஜெர்மானிய வியாபாரியோடு இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. உணவையும் படுக்கையையும் பகிர்கிறார்கள். வியாபாரியின் பையில் இருக்கும் கணக்குஞ்செல்வம் இளைஞர்களுள் ஒருவனான ஃப்ராஸ்பர் மேக்னனுக்குப் பேராசையை உண்டாக்குகிறது. வணிகனைக் கொலை செய்ய திட்டமிடுகிறான். அறுவை சிகிட்சை கத்தியை எடுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் வணிகனைக்  கொலை செய்யப்போகையில் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு தன் மீதே வெறுப்பு உண்டாகிறது. கத்தியை வீசிவிட்டு ரைன் நதிக்கரையோரம் நள்ளிரவில் அங்குமிங்கும் நடக்கிறான். மனம் தெளிவடைந்ததும் மீண்டும் விடுதிக்கு  திரும்பி உறங்கிப் போய்விடுகிறான். விடியல் அவனுக்கானதாய் இல்லை. வணிகன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். உயிர் நண்பனைக் காணவில்லை. ஃபராஸ்பர் மேக்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அவனது தத்தளிப்புகளும், சிறையில் சந்திக்கும் புதிய நண்பனுமாக கதை செல்கிறது. காணாமல் போன நண்பன் யார்? இந்த விருந்திற்கும் செந்நிற விடுதிக்கும் என்ன சம்பந்தம்? கதை சொல்லிக்கும் கொலையாளிக்குமான உறவு எத்தகையது? ஒரு மர்மக்கதையைப் போலத் துவங்கி மானுட மனங்களின் முடிவுறா மர்மங்களை அறிந்துகொள்ள முயல்கிறது செந்நிற விடுதி. குற்றமே தண்டனை எனும் தரிசனத்திலிருந்து முன்னகர்ந்து குற்ற விழைவுமே தண்டனை எனும் புள்ளியை அடைகிறது. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கல்வேம் எனப்பாடிய வள்ளுவனும் பால்சாக்கும் கைகோர்த்துக்கொள்ளும் புள்ளி இது.

 

நவீன இலக்கியம் என்பது தொப்புளுக்கு மேல் கஞ்சியினருக்கு எனும் எண்ணமே மேற்குலகில் அன்றிருந்தது. பெருவிருந்துகளிலும் உறவுக் கூடுகையிலும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக, உயர்ந்த கேளிக்கையாக கதைகள் சொல்லப்பட்டன. அக்காலகட்டத்தின் முகமாகத் திகழ்ந்தவர் ஹொனேரே டி பால்ஸாக் (1799-1850). பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சு வாழ்வியலைக் கதைகளாக எழுதிக் குவித்தார். படம் பிடிப்பதைப் போன்ற துல்லிய சித்தரிப்புகளால் யதார்த்தவாத அழகியலின் தந்தை என கருதப்பட்டார். அவர் தீவிரமாக இயங்கியது வெறும் 18 ஆண்டுகள்தான். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். நாளொன்றுக்குப் பதினைந்து மணிநேரங்கள் தொடர்ச்சியாக எழுதினார். தி ஹ்யூமன் காமெடி எனும் அவரது நாவல் வரிசை 90 நாவல்களை உள்ளடக்கியது. ஏங்கெல்ஸ் இவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸூக்கு இவரைப் பற்றி கடிதம் எழுதினார். மூலதனத்தின் பல இடங்களில் பால்சாக்கின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியால் பால்சாக்கின் தாக்கத்தை உணரமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டை நான் பால்சாக்கின் கண்களின் வழியாகத்தான் பார்க்கிறேன் என்றார் ஆஸ்கார் வைல்டு.  உலகெங்கிலுமுள்ள சிந்தனையாளர்களை படைப்பாளர்களை பால்சாக் பாதித்தார். தமிழில் புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா துவங்கி சுஜாதா வரை பால்சாக் பலரையும் ஈர்த்தார்.

 

செந்நிற விடுதி சிறுகதைக்கான தூண்டுதலை பால்சாக் ஒரு ஃப்ரெஞ்ச் ராணுவ அதிகாரி சொன்ன நிஜ சம்பவத்திலிருந்து பெற்றுக்கொண்டார். கதை நெப்போலியன் முற்று முழுதாக ஃப்ரான்ஸை கைப்பற்றிக்கொள்வதற்கு முந்தைய மாதத்தில் நிகழ்கிறது. அரசு, நிர்வாகம், பொருளாதாரம், எதிர்காலம், பொதுஒழுங்கு குறித்த நிச்சயமற்ற நெருக்கடியான சூழல். ஒவ்வொருவரும் எதையேனும் செய்து தங்களை வளம்மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் யத்தணிப்பு நிலவிய காலகட்டம். பொருளியல் லாபங்களை உத்தேசித்தே உறவுகள் உருவாகிக்கொண்டிருந்தன. கதையில் வரும் விடுதிக்காரன் தான் நெடுநாள் உத்தேசித்த திராட்சை தோட்டத்தை சமீபத்தில்தான் வாங்கினேன் என்கிறான். மருத்துவ மாணவர்கள் தங்கள் அறுவைச் சிகிட்சை கத்திகள் பெருவணிகனுக்கு நிகரான பொருளை ஈட்டித்தருமா என அங்கலாய்க்கிறார்கள். நீண்டகால ஆசையான முப்பது ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும் எனும் திட்டமே ஃப்ராஸ்பர் மனதில் கொலைத்திட்டத்தை உருவாக்குகிறது. வனத்தில் மிருகங்கள் கைக்கொண்டிருந்த சட்டங்களையே நாட்டில் மனிதர்களும் பின்பற்றத் துவங்கியிருந்தார்கள் என்கிறார் பால்சாக். ஊரடங்கு நாட்களில் நம் வணிகர்கள் வெளிக்காட்டிய அறத்தின் அதிர்ச்சியை உணர்ந்தவர்கள் இச்சுழலை மேலும் நெருங்கியறிய முடியும்.

 

வாழ்விடத்தின் நெருக்கடிகள் குற்ற விழைவைத் தூண்டுவதையும், இயற்கையின் அருகாமை மனதின் கசடுகளை நீக்கிவிடுவதையும் பால்சாக் துல்லியமாகச் சித்தரிக்கிறார். உரிய அறைகள் இல்லாமல் நெருக்கடியில் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு வெக்கையிலும் பூச்சிக்கடியிலும் தூக்கம் வராமல் புரண்ட மனதிற்குள் கொலைச்சிந்தனை உருவாகி விடுகிறது. ஒரு நொடியில் மனம் மாறி ரைன் நதிக்கரையோரம் நடைபோடுகையில் ஆன்மா ஒளிபெறுகிறது. கோர எண்ணங்கள் மறைகின்றன. இயற்கையின் பேருரு  மனிதனின் சிறுமைகளைக் களைகிறது. மனிதர்கள் வீடடங்கிக் கிடக்கும் நாட்களில் உலகெங்கும் ‘குடும்ப வன்முறைகள்’ பீறிட்டுக் கிளம்புவதை இத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது.

 

எழுதப்பட்டு இருநூறாண்டுகளான பின்னும் பால்சாக் மேதைமையால் சிருஷ்டிகரத்தால் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். துல்லியமான சித்தரிப்புகள், அபாரமான நகைச்சுவை, ஆன்மீகமான கேள்விகள் இவரது படைப்புலகின் அடிநாதமாக விளங்குகின்றன. பால்சாக்கின் பல கதைகளில் விருந்துகளும் உணவுகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. உணவின் மீதான ரசனையையும் உண்ணும் முறையையும் கொண்டு கதாபாத்திரங்களின் இயல்பையும் வாழ்க்கைச் சூழலையும் வாசகனுக்கு உணர்த்தி விடுவார். மிகப்பெரிய சாப்பாட்டுப் பிரியரான பால்சாக்கின் உணவு முறையைப் பற்றியே தனிநூல் எழுதப்பட்டுள்ளது. பத்துப் பதினைந்து பேருக்குரிய உணவை அவர் ஒற்றையாளாக வெளுத்துக்கட்டுவார்.  பன்றி போல தின்றால் பன்றிக்குணம் வரும் என்கிறார் ப.சிங்காரம். பால்சாக் தேனீ போல உழைத்தவர். ஒவ்வொரு நாளும் பகல் ஒருமணிக்குத் துவங்கி மறுநாள் காலை 5 மணிவரை எழுதியவர் அவர். நாளொன்றுக்கு 30 முதல் 50 கோப்பைகளுக்குக் குறையாமல் கருப்பு காபி அருந்துவார். எழுதும்போது ஒரு மதகுருவைப் போல உடையணிந்துகொள்வார். இவையெல்லாம் தன் படைப்பின் ஊற்றுக்கண்கள் எனும் நம்பிக்கை அவருக்கு இருந்தது.

 

இன்னொருவனின் ரத்தத்தில் ஈட்டிய செல்வத்தை ஏற்றுக்கொள்வதா எனும் அறக்கேள்வியை பலதரப்பட்ட கதைமாந்தர்களின் வழியாக முன்வைக்கும் இச்சிறுகதை இருமுறை திரைப்படங்களாக்கப்பட்டுள்ளது. வணிகனைக் கொன்று தன் வாழ்வை வளமாக்கிக் கொண்டவன் டெட்டனஸ் நோயால் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறான். தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு முன் உலகையே அச்சுறுத்திய ஒருவகை நரம்பு நோய். நோய்த்தாக்குதல் அடைந்தவனின் உடல் வில்போல வளைத்துக்கொள்ளும். பார்ப்பதற்கு சக்கராசனம் செய்வது போல இருக்கும். வலியால் கதறுவார்கள். அலறல் சத்தம் கேட்பவர்களை உறையச் செய்யும். கழுத்தில் உயிருள்ள அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சுவதே அன்றைக்கு இருந்த தற்காலிக நிவாரணி. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை என வள்ளுவன் பாடுவதைப் போலவே இதுவும் ஒருவகை ஃப்ரெஞ்ச் அறம்பாடல்.

 

ஒரு கொசுறு செய்தி. கதையில் குறிப்பிடப்படும் L'Auberge rouge என்பது நிஜத்தில் செயல்பட்ட  விடுதி.  ஃப்ரெஞ்சு குற்றப்பின்னணியாளர்கள் அதிகமும் நடமாடிய பகுதி. இந்த விடுதியின் உரிமையாளர்களான கணவனும் மனைவியும் தன் ஊழியர்களின் துணை கொண்டு குறைந்தது ஐம்பது விருந்தினர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்தார்கள். தங்களால் கொல்லப்பட்டவர்களை சமைத்து உண்டார்கள். சில சமயம் விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கும் பரிமாறினார்கள். அங்கு கற்பழிப்புகள் நிகழ்ந்தன. நெடுங்காலத்திற்குப் பின் அவர்களது குற்றங்கள் கண்டறியப்பட்டு விடுதியின் முன் ஊரார் திரண்டு நிற்க கில்லட்டின் இயந்திரத்தில் நால்வரும் தலைவெட்டி கொல்லப்பட்டார்கள். இன்று அந்த விடுதி புகழ்மிக்க சுற்றுலா கவர்ச்சியாக பிரான்ஸ் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என வாதிடும் வரலாற்றாசிரியர்கள் உண்டு. நெப்போலியன் கால சட்ட நடைமுறைகளில் குற்றத்தை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் வேண்டுமென்பது அவசியம் இல்லை. செவிவழிச் செய்திகள் அல்லது மக்களின் மத்தியில் உலவும் வதந்திகள் போதுமானது.


I need your support so I can keep delivering good content. Every contribution, however big or small, is so valuable for my literary attempts. Thanks. Support Good Content

 

 

Comments

Popular Posts