அமேஸிங் அனுபவங்கள்


ன் நெடுநாள் விருப்பமெல்லாம் நாவல் எழுதுவது. அதை எனக்குப் பிடித்தமாதிரி எழுதுவது. அதற்குரிய தன்னம்பிக்கை இன்றும் வந்துவிடவில்லை. தமிழில் டைப்படிக்கத் தெரியும் ஒரே தகுதியுடன் வலைப்பூ ஆரம்பித்து தளராத தன்னம்பிக்கையுடன் எழுதிக்கொண்டிருந்ததெல்லாம் ஓர் ஆசிரியனை எதிர்கொள்ளும் வரைதான். பிறகு நீங்கள் எதை எழுதினாலும் மானசீகமாக உங்கள் ஆசிரியனை நோக்கித்தான் எழுதுவீர்கள். அவர் கீழ் உதட்டைப் பிதுக்கிவிட்டு அடுத்த சோலியை பார்க்கப்போய்விடுவார் எனும் கலக்கம் இருந்துகொண்டே இருக்கும். அது நல்லது. கேவலப்படாமல் காப்பாற்றுவது.

ரொம்ப நாட்கள் எழுதாமலிருந்தது ஒருவகையான சூனித்தனமாகப் பட்டதால், பாலைநிலப்பயண அனுபவத்தை ஒரு சிறு கட்டுரையாக எழுத ஆரம்பித்து எழுத எழுத பெருகிப்போனது. குழுமத்தில் தொடராகப் போட்டால் ஆறு பேர் படிப்பார்கள். கிண்டிலில் போட்டு ஆழம் பார்ப்போமே என நினைத்தபோது கைவிளக்காக இருந்தது விமலாதித்த மாமல்லன் எழுதிய ‘அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?’ புத்தகம். எவ்வித தடுமாற்றமும் இன்றி நூலை வெளியிட முடிந்தது. ஜெயமோகன், நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, பா.ராகவன் உள்ளிட்ட என் ஆதர்சங்களின் பாராட்டுகள் அளித்த உத்வேகத்தில் அடுத்தடுத்து நூல்களை வெளியிட்டேன். ஒவ்வொரு நூலையும் எழுதி முடித்ததும் என் மனதிற்குகந்த நரேன், வெண்பா, கடலூர் சீனு, ஸ்ரீனிவாச கோபாலன் ஆகியோருக்கு அனுப்புவேன். அவர்கள் சொல்லும் கருத்துகளை அப்படியே ஏற்பேன். நிற்க, இக்கட்டுரையின் மையப்பொருள் நான் எப்படி நூல்கள் எழுதினேன் என்பதல்ல. எப்படி விற்றேன் என்பதைப் பற்றி.

இதை எழுதும் நிமிடத்தில் நான்கு நூல்களும் சேர்ந்து 612 பிரதிகள் விற்றுள்ளன. 50,183 பக்கங்கள் பேஜ் ரீடில் வாசிக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற அட்ரஸ் இல்லாத ஒருவனின் நூல்கள் சமகால நடைமுறைப்படி பிரிண்ட் ஆன் டிமாண்டில் தலா 50 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கும். சென்னை புத்தகத் திருவிழாவில் 10, ஈரோட்டில் 8, மதுரையில் 4. மிச்சம் மீதியை கோவை புத்தகத் திருவிழாவில் நானே வாங்கி வினியோகித்திருக்க வேண்டியிருந்திருக்கும். பேஜ்ரீடையும் வகுத்துப் பார்த்தால் தோராயமாக 1000 பிரதிகள் விற்பனை என்பது கனவிலும் சாத்தியம் இல்லை.
            இதை விட இனிய ஆச்சர்யம் மதிப்புரைகள். நான்கு நூல்களுக்கும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட மதிப்புரைகள். வாசிப்பது எப்படியால் ஊக்கம் பெற்ற ஒருவர் அதன் மதிப்புரைகளுக்கென்றே தனி இணையதளம் துவங்கி தொகுத்து வருகிறார். இன்னொரு வாசகதோழி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இத்தனைக்கும் எந்த சமகாலப் பெருஊடகத்திலும் என் நூல்களைப் பற்றி ஒருவரி எழுதப்படவில்லை.

நான் செய்த புத்திசாலித்தனமான காரியம் மனைவியின் பாதாரவிந்தங்களில் சரணடைந்ததுதான். திருக்குறளரசியின் அர்த்தமண்டபம் ஒரு மக்கள் தொடர்பு நிறுவனம். கொங்கு மண்டலத்தின் முதன்மையான பிராண்டுகள் என நீங்கள் ஐம்பதைப் பட்டியலிட்டால் அதில் சரிபாதி நிறுவனங்களுக்கு அர்த்தமண்டபம் சேவையளித்து வருகிறது. தவிர, கலை பண்பாடு தொழில்துறை சார்ந்த இன்ஃபோடெய்ண்மெண்ட் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

திருக்குறள் ஒரு செயல்திட்டம் வகுத்தாள். டிவைஸ்களில் மட்டுமே படிக்கக் கூடிய நூல்களுக்கு டிவைஸ்களில் மட்டும்தான் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்கிற தெளிவுடன். அச்சு நூல்களை மட்டுமே வாசிக்கும் மரபான வாசகர்கள் கிண்டிலுக்கு வர ரொம்ப காலம் ஆகும். பயங்கரமான டெக்னாலஜி ஜித்தன்களெல்லாம் கூட இன்னமும் கிண்டில் செயலி பற்றி அறியாதிருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காகத்  திரட்டிய வாசிப்பவர்களின் டேட்டாபேஸ் முறையாகப் பராமரிக்கப்பட்டு அர்த்தமண்டபம் வசம் இருந்தது. நூல்கள் வெளியாகையில் வாசகர்களுக்கு வாட்ஸாப், எஸ்ஸெம்மெஸ், மின்னஞ்சல்கள் பறந்தன. தமிழ் எழுத்தாளர்களின் பார்வை வளையத்திற்குள்ளேயே இதுவரை வராத ‘புக்ஸ்டாகிராமர்கள்’ எனும் இனத்தைக் கண்டுபிடித்தாள். அவர்கள் முப்பது வயதிற்கு மிகாதவர்களாகவும், திருட்டு பிடிஎஃப்களுக்கு அலையாதவர்களாகவும், நூல்களைக் காசு கொடுத்து வாங்கி வாசிப்பவர்களாகவும், வாசித்த அபிப்ராயத்தை நேர்மையாகப் பகிர்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் தனிப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் இப்போது சூடு பிடித்திருக்கிறது. வாசிப்பது எப்படி நூலை அச்சடித்துக் கொடுத்தால், வருடத்திற்கு லட்சம் பிரதிகள் விற்குமளவிற்கு சந்தைத் தேவை இருக்கிறதென்கிறாள்.

இந்தக் காட்டடியின் விளைவுகள் ஆச்சரியமானவை. இயக்குனர்கள், நடிகைகள், பாகவதர்கள், விதூஷிகள், நர்த்தகிகள், விளையாட்டு வீரர்கள், மந்திரிகள், மாவட்டங்கள், கவுன்சிலர்கள் எனப் பலரும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் மறந்தும் பொதுவெளியில் ஒரு தமிழ் எழுத்தாளனைப் பற்றியோ, தமிழ் நூல்களைப் பற்றியோ பேசுவதில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கேட்டே விட்டேன். தோணலை என்றார் ஒரு வீரர். அப்படியெல்லாம் பேசுனா சீன் போடறது மாதிரி ஆயிடுதுல்ல என்றார் ஒரு உஸ்தாத். (நகுமோ லேய் பயலே கருநாடக சங்கீதத்தைக் கிண்டல் செய்யும் நூல் எனக் கருதி பதறியடித்து சில இசைவாணர்கள் நூலை வாசித்து பின் சிரித்து சஹவித்வான்களுக்கும் பகிர்ந்துள்ளார்கள்). அணில், ஆமை, கிளி, எலிகள் சூழலை நிறைத்துள்ளன, நீங்களாவது எழுதுகிறவர்களுக்கு வெளிச்சம் தாருங்களய்யா.

பிரஸ்தாபங்கள் எனக்கே போரடிக்கிறது. கிண்டிலில் புத்தகம் போட விழைபவர்களுக்கு என் அனுபவத்தில் இருந்து சில டிப்ஸூகள்:

1)    ஆரம்பத்தில் உங்கள் சுற்றத்தைத் தவிர வேறு யாரும் உங்கள் நூல்களை வாங்க மாட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நூல் வெளியான விபரத்தைத் தெரியப்படுத்தத்  தவறாதீர்கள். எழுதுகிறவனே நூலை கூவி விற்பது நிச்சயம் கூச்சமளிக்கக் கூடியது. அந்தப் பொறுப்பை மிக வேண்டிய மற்றொருவரிடம் ஒப்படையுங்கள்.

2)    அட்டைப்படத்தை நீங்களே வடிவமைத்துக்கொள்ளும் வசதியை கிண்டில் தருகிறது என்றாலும் அதைச் செய்யாதீர்கள். அட்டைப்பட வடிவமைப்பாளரிடம் பொறுப்பைக்  கொடுங்கள். என் நூல்களின் வெற்றியில் பாதி சந்தோஷ் நாராயணனுக்கு இருக்கிறது. அட்டையைப் பார்த்துத்தான் புத்தகத்தை வாங்கினேன் என இன்ஸ்டாகிராமில் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.


3)    எழுதியவனே பிழைதிருத்தம் செய்வதும், எடிட் செய்வதும் ஓர் எல்லைவரைதான் பயனளிக்கும். தொழில்முறை பிழைதிருத்துனர்கள் அல்லது நண்பர்களின் துணையை நாடுக. நூல் தப்பும் தவறுமாக இருக்கிறதென்று வாசகர்கள் புகார் செய்தால் அமேஸான்காரன் அப்படியே கேட்பான். மானம் போகும்.

4)    இணையத்தில் ஏற்கனவே எழுதியவற்றைத் தொகுப்பதை விட நேரடி நூல்களை எழுதி வெளியிடுவதே நல்லது. நம்மைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர்களுக்கு அது அயற்சியளிக்கிறது என்பதைத் தாமதமாகவே புரிந்துகொண்டேன். இந்த அறிவுரை தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுக்குப் பொருந்தாது. அவர்களுடைய ஆக்கங்கள் மீண்டும் மீண்டும் வாசிப்பிற்குரியவை.


5)    நான் பத்தாண்டுகளாக அச்சு ஊடகங்களில் எழுதி வருபவன். விகடனும் குங்குமமும்தான் ரெமுனரேசன் அளித்த இதழ்கள். மற்றவை ‘வாய்ப்பு’ நல்கியவை. நான் ஆண்டிற்கு முப்பதாயிரம் ரூபாய்களுக்குப் புத்தகங்கள் வாங்குபவன். லட்சம் ரூபாய்க்குப் பயணம் செல்பவன். இனி என் நூல்களின் ராயல்டி அச்செலவுகளைப் பார்த்துக்கொள்ளும். ஆனால், இந்த ராயல்டி மயக்கத்தில் தெருமுனைக்கு வந்து  ‘இனி ஞான் எழுதட்டே’ என அறிவித்துவிடுவது லிவருக்கு நல்லதல்ல. ஏன் என்பது அடுத்த பாராவில்.

6)    உங்கள் நூலைப் பற்றி நான்கு பேர் பாராட்டியதும் கீழ்மகன்கள் அதைத் திருடி பிடிஎஃப் நூலாக்கி டெலிகிராமிலும், வாட்ஸாப்பிலும் ஊர் மேய விடுவார்கள். அந்தத் திருட்டுகுமரன்களைப் பற்றி பா.ராகவன் முதல் பாலகுமாரன் புதல்வர் வரை விட்ட சாபங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனது புத்தகமும் திருடப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டது. வெளியாகி சில நாட்களில் இப்படிச் செய்கிறீர்களே நியாயமா என நான் கேட்டபோது, நேரடியாக சவால் விடப்பட்டது – “ங்கோத்தா அப்படித்தான்டா செய்வோம்… நீதான் எழுதினேங்கிறதுக்கு என்னடா ஆதாரம் இருக்கு” -   அடுத்தடுத்த நூல்கள் திருடப்பட்டு வெளியானது. எழுத்தாளர்களின் ஈரலையறுத்து உண்ணுபவர்களுக்காகவே உருவானது டெலிகிராம். நீங்கள் எவ்வளவு முறை ரிப்போர்ட் செய்தாலும் பயன் இருக்காது. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, பா.ராகவன்  போன்ற முழுநேர எழுத்தாளர்களின் 75 சதமான நூல்கள் திருடப்பட்டு விட்டன. இவர்களில் சிலருக்காவது சினிமா, சீரியல் வருவாய் உள்ளது. சாருவிற்கு அதற்கும் வாய்ப்பில்லை. நூல்களின் ராயல்டியை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம் சென்ற எழுத்தாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டன. இந்த டிவிடிபுத்திரர்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதே நிதர்சனம். 100 கோடி ரூபாய் செலவில் வரும் சினிமாவையே காப்பாற்ற முடியவில்லை என்பதை இத்துடன் இணைத்துச் சிந்திக்கலாம். திருட்டு பிடிஎஃப்பில் வாசிப்பது, திருட்டு பிடிஎஃப்பை பகிர்வது எழுத்தாளனின் இரத்தத்தைக் குடிப்பது என்பதை வாசகன் உணர்ந்தாலன்றி பலனில்லை. இதற்கு முன்பு வாசித்திருந்தால் கூட அந்த எழுத்தாளனுக்கோ அவன் குடும்பத்திற்கோ உரிய தொகையை அனுப்பிவைப்பதொன்றே பாவத்திற்கானப் பிராயச்சித்தம்.

7)    இலவசம் ஒருபோதும் அறிவிக்காதீர்கள். இரண்டு காரணங்கள். இலவசத்தில் வாங்குபவர்களில் 99% பேர் படிப்பதில்லை. மீத 1% திருட்டு பிடிஎஃப் கோஷ்டி. அவர்கள் வாயில் நாமே ஹல்வாவை உருட்டி ஊட்டுவதைப் போல.

8)    அமேஸானின் ராயல்டி அணுகுமுறை ஒரு பகல் கொள்ளை. நியாயமற்றது. பேஜ்ரீடுக்கு வழங்கும் பைசா கணக்குகளும் எனக்கு உவப்பில்லாதவை. ஆனால், இப்போதைக்கு வேறு வழியில்லை. அன்லிமிடெட் ஆப்ஸன் நூலின் வாசகப்பரப்பை அதிகப்படுத்தினாலும், ராயல்டியை மட்டுப்படுத்துகிறதோ எனும் சந்தேகம் எனக்குண்டு. ஒரு நூலை விற்பனைக்கு மட்டும் என்று வெளியிட்டு ஆய்ந்து பார்க்க வேண்டும்.


9)    ஏற்கனவே அச்சில் நூல்களை வெளியிட்டவர்கள் கிண்டில் ராயல்டியைப் பார்த்துவிட்டு தத்தம் பதிப்பாளரைத் திருடன் என திட்டாதீர்கள். தரமான இலக்கிய ஆக்கங்களைப் பிரசுரிக்கும் பெரும்பாலான பதிப்பகங்கள் கடனில் தத்தளிக்கின்றன. பதிப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் நம் அலுவலகங்களின் கடைநிலை ஊழியனின் வாழ்க்கைத் தரத்தை விட பரிதாபகரமானது. 50 பிரதிகள் அச்சு நூலை 10 வருடங்களுக்குத் தூக்கிச் சுமக்கவேண்டும். நமது நாட்டின் பெரும்பாலான புத்தகக் கடைகள் திருடர்களால் நடத்தப்படுகிறது. சுத்தமாக கணக்கு முடிப்பவர்கள் ஓரிருவர்தான். எந்தப் புத்தகத் திருவிழாவிலும் கடை வாடகை, ஆள் சம்பளம், உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு, திருடு போகும் புத்தகங்கள் என கணக்கு போட்டுப்பார்த்தால் குன்மம் வந்துவிடும். நட்டம் வந்தால் இந்தத் தொழிலைச் செய்வானா என்று மூக்கு புடைக்கக் கூடாது. இதெல்லாம் ஒரு கோட்டி. அவ்வளவுதான்.

10) நீங்கள் மதிப்புரைக்காக ஒருவருக்கு நூலை அனுப்புகிறீர்கள். படித்து விட்டீர்களா என மீண்டும் அழைத்து நினைவூட்டாதீர்கள். சங்கடங்கள் வந்து சேரும். போலவே பிரபலஸ்தர்களின் முன்னுரைகளுக்காகக் காத்திருக்காதீர்கள். நயா பைசா பிரயோசனம் கிடையாது. ஒரு வாசகனாக அறியப்பட்டவனின் சிறு குறிப்பு கூட உங்கள் நூலின் விற்பனைக்குப் பெருமளவில் பயன்படும். ஆனால், முன்னுரை. பச். போலவே அமேஸானில் ரேட்டிங் போடச் சொல்லி நண்பர்களை வற்புறுத்தாதீர்கள். அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லை.

11) வீடடங்கு தற்சிறைவாசத்திற்குப் பிறகு டிஜிட்டல் ரீடிங் அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் வாசகப்பரப்பிற்குத் தீனி போட நல்ல நூல்களின் தேவை அதிகரித்துள்ளது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


12) என்னுடைய டிப்ஸூகளால் பலனடைந்தவர்கள் அன்பை பணமாகவோ பொருளாகவோ கொடுக்கலாம். மறுக்காமல் ஏற்றுக்கொள்வேன். வருவாய்க்கு வழியற்ற கொரானா நாட்களில் ஏழை எழுத்தாளர்களின் நிலையை நான் தனிப்பட்டு  விளக்க வேண்டியதில்லை.


I need your support so I can keep delivering good content. Every contribution, however big or small, is so valuable for my literary attempts. Thanks. Support Good Content


-       © செல்வேந்திரன்



Comments