பணி நீக்கம்
அப்பா
சொன்னார் ‘டேய் ஒருத்தர வேலைக்கு எடுக்கறது… கல்யாணம் பண்ணிக்கற மாதிரி. எடுக்கதுக்கு
முன்னாடி நூறு வாட்டி யோசி. ஆயிரம் கேள்வி கேளு. பத்து எடத்துல விசாரி. ஆனா ஒருதடவ வேலைக்கின்னு எடுத்துட்டா, அவனா போற வரைக்கும்
வச்சி காப்பாத்து’ அப்பா மரணிக்கும் வரை எங்கள் தீப்பெட்டி கம்பெனி ஐம்பதாண்டுகள் நீடித்தது.
கடைசி ஊழியரும் கிளம்பிய பின்னர்தான் லைஸென்ஸை சரண்டர் செய்தோம். கணேசன் மேச்சஸின்
மேனாள் ஊழியர்களுள் சிலர் ஃபேஸ்புக்கில் என்னைப் பின் தொடர்கிறார்கள். அவர்கள் இதை
உறுதி செய்வார்கள்.
அப்படியானால்
எப்படியாப்பட்டவனையும் கடைசி வரை கட்டி மேய்க்க வேண்டுமா? மூன்று விதிவிலக்குகள். பணம்
கையாடல், பாலியல் தொல்லை, நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகள்.
தீர விசாரித்து குற்றம் நிரூபணமானால், கைச்செலவுக்குப் பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடு.
சரி.
பெர்பார்மன்ஸ்? ஒருவன் ஒரு வேலையை செய்யவில்லையென்றால், அதற்கு இரண்டே காரணங்கள்தான்.
1) அவனுக்கு வேலை செய்யத் தெரியவில்லை – உனது தேர்வு தவறானது. 2) அவன் வேலை செய்ய விரும்பவில்லை
– உனது தேர்வு தவறானது. ஆராயாமல் நீ செய்த
தவறுக்கு அவன் எப்படி பொறுப்பாவான். வச்சு வாழு. செயல்திறனற்ற மனிதன் என்று ஒருவன்
உலகிலேயே இல்லை. ஒருவனின் பலத்தை வைத்து விளையாடு. பலவீனத்தைச் சுட்டி சுட்டி அடிக்காதே.
அவனுக்கு என்ன வருமோ எதைச் செய்ய விரும்புகிறானோ அதைச் செய்யச் சொல். அப்படியொரு பணி
உன் கம்பெனியில் இல்லை என்றால் அவனாக வெளிக்கிடும் வரை சம்பளம் கொடு. அது உன் தலையெழுத்து.
உள்ளே
வரும்போது எல்லோரும் உலக உத்தமர்கள் போலத்தானே வருகிறார்கள். பிறகுதானே சுயரூபம் தெரிகிறது?
‘தம்பி.. ஒருத்தனின் மனப்போக்கு (ஆட்யூட்யூட்) மாறிப் போய்விடுவதற்கு அவன் மட்டும்தான்
காரணமாக இருக்கமுடியுமா?’ என்ன விவாதித்தாலும் ஒரு ஊழியனை வீட்டுக்கு அனுப்புவதை அவரிடம்
வாதாடி வெல்ல முடியாது. குருணையை குத்தித் தின்று வளர்ந்தவர். நெஞ்சறிந்து பிறிதொருவன்
பசித்திருக்கப் பொறுக்காதவர். ஒரு சமூகத்தில் உபரி என்பது குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமானது
எனச் சொன்ன இயேசுவை இதயத்தின் ஒரு பக்கத்திலும், பழவர்க்கங்கள் நோயாளிகளுக்குரியவை
பணக்காரர்கள் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சொன்ன காந்தியை மறுபக்கத்திலும்
சுமந்தவர். லாபம் என்பதை ஒருவித பாபம் என்று கருதிய லட்சியவாத தலைமுறையைச் சேர்ந்தவர்.
பொருளாதார
மந்தநிலை காலகட்டத்தில் வாகன உற்பத்தியாளர்களும், மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பியதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ‘செல்வா.. ஒரு மாசம் வருமானம்
இல்லைன்னா கூட சம்பளம் போட முடியாதுன்னா இவன் நடத்துனதுக்குப் பேரு தொழிலா… (இதற்கு
மேல் அவர் சொல்லும் வசவுச் சொல்லை எழுத எனக்கே கூசுகிறது)’
தனது
தயாரிப்பை, சந்தை மதிப்பை, வாடிக்கையாளர்களை, முதலீட்டாளர்களையெல்லாம் விட தன் ஊழியர்களையே
பெரும்சொத்தாய் கருதுகிறவனே செழிப்பான். முன் சொன்னவை புறக்காரணிகளால் எளிதில் வீழ்ந்துவிடக்
கூடியவை. திறமை மிக்க ஊழியர்களைக் கொண்டு மீண்டும் சாம்ராஜ்யங்களைக் கட்டி எழுப்பிவிட
முடியும். இந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தை வரும் ஆண்டில் சரிக்கட்டி விட முடியும். ஆயிரம்
முன்னுதாரணங்களைத் தரமுடியும். உடனடியாக ஒன்றைச் சொல்வதானால், நாடடங்கினால் உலகம் முழுக்க
தீப்பெட்டிகளுக்குத் தட்டுப்பாடு உருவானது. வட இந்தியாவில் ஐம்பது பைசா தீப்பெட்டி
மூன்று ரூபாய்க்கு விற்றது. கோவில்பட்டி சிவகாசி பகுதிகளில் பல்லாண்டுகளாக தேங்கிய
பண்டல்கள் அத்தனையும் காசானது. புதுரத்தம் ஏற்றிய உடல் போல ஆகிவிட்டது தீப்பெட்டித்
தொழில். கையுறைகள், பிபி கிட்டுகள், முக கவசங்கள் இன்னபிற மருத்துவ ஆடைகளுக்கான ஆர்டர்கள்
உலகெங்கிலுமிருந்து வந்து குவிய திருப்பூர் துள்ளாட்டம் போடுகிறது. ஓசூரின் பார்மா
நிறுவனங்கள் இரட்டைச்சம்பளத்தில் ராப்பகலாய் காய்ச்சல் மாத்திரை அடித்துக்கொண்டிருக்கின்றன.
அனைத்துத் தொழிலுக்கும் ஏற்றமும் உண்டு. இறக்கமும் உண்டு. லாபத்தைச் சுகிப்பேன். நட்டம்
வரும் நிழல் தெரிந்தாலும் அடுத்தவன் சோற்றில் மண்ணள்ளிப் போடுவேன் என்பவர்கள் பொருளாதார
மந்தநிலை இல்லையென்றாலும் அழிவார்கள்.
இன்று
ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் துறைகளுள் பெரும்பாலானவற்றின் அந்திமம் பத்தாண்டுகளுக்கு
முன்னரே தெரிந்துவிட்டது. ஆயினும் ஆட்களை வேலைக்கு எடுப்பதையோ, அநியாயச் சம்பளம் கொடுப்பதையோ,
தொழிலை விரிவுபடுத்துவதையோ, ஆடம்பரத்தைக் குறைப்பதிலோ இந்நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை.
கடன் வாங்கி கடன் வாங்கி முக்குளித்தார்கள். நாங்கள் விற்பனையில் முதலிடம் என்றார்கள்.
நல்ல இலாபத்தில் இயங்குகிறோம் என்று பொய்ச்சித்திரம் காட்டினார்கள். முதலீட்டாளர்களின்
மனமகிழ் மன்றம் போல கம்பெனியை நடத்தினார்கள். இயக்குனர்களின் பட்டியல் நீள்வதும் அவர்களது
சம்பளம் வீங்குவதும் நிகழ்ந்தது. இந்தக் குற்றங்களுக்குப்
பொறுப்பேற்றுக் கொள்ளாதவர்கள் அதன் தண்டனையை ஊழியர்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல.
முதலீடு
செய்தவனின் நோக்கம் இலாபம் மட்டுமே. இங்கே அறவுணர்ச்சி பஜனைகள் செல்லுபடியாகாது என்பவர்களின்
குரல் கேட்கிறது. ஆம் திடீர் நட்டத்தின் முழுச் சுமையையும் முதலாளிகளே ஏற்கவேண்டுமென்பது
ஏற்புடையதல்ல. ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒருபாதியை விட்டுக்கொடுக்கலாம். சலுகைகளின்
சில பகுதிகளை விட்டுக்கொடுக்கலாம். வேலை நேரத்தை அதிகரிக்கலாம். செலவுகளைக் குறைக்கலாம்.
குடும்பத்திற்கு வேறு வருமானம் உண்டு, சம்பளம் இல்லாமலும் சமாளிக்க முடியும் என்பவர்கள்
தங்களது சம்பளத்தை நிலைமை சரியானதும் வாங்கிக் கொள்கிறேன் என பொருத்துக்கொள்ளலாம்.
அப்படி விட்டுக் கொடுப்பவர்களுக்கு பிற்பாடு சிறிது வட்டியோ / இலாபமோ சேர்த்து தொகையை
நிறுவனங்கள் கொடுக்கலாம். வங்கிகளிடமோ அல்லது முதலீட்டாளர்களிடமோதான் ஒரு நிறுவனம்
கடன் வாங்க வேண்டுமென்பதில்லை. இதெல்லாவற்றையும் தாண்டியும் நிறுவனம் மூழ்கும் நிலைமை
வந்தால் மனமுவந்து வெளியேற முன்வருபவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கலாம். வெளியேறிய
பின்னரும் நிறுவனத்திற்கான சேவைகளை அளிக்கும் வெண்டாராக சிலருக்கு வாய்ப்பளிக்கலாம்.
இவையனைத்தும் வெளிப்படைத்தன்மையான உரையாடல்களின் வழியே மட்டுமே சாத்தியம்.
இந்த
இடத்தில் பொருத்தப்பாடு கருதி ஒன்றைச் சொல்கிறேன். அக்காலத்தில், நக்கீரன் இதழ் நெருக்கடியை
சந்திக்கும்போது சில முகவர்கள் அடுத்தடுத்த மாதங்களுக்குரிய தொகையை கூட முன்கூட்டியே
செலுத்தி விடுவார்கள். போலவே முகவர்கள் எதிர்பாராத இழப்பைச் சந்தித்து நெருக்கடியில்
இருக்கும்போது நக்கீரன் இதழ் அவர்களைப் பில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
நக்கீரன் கோபால் கடைப்பிடித்த விழுமியம் அது. தொழில் என்பது ஒருவரையொருவர் கைத்தாங்கி
விடுவது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமணர்களும் பீதர்களும் யவனர்களும் காப்பிரியர்களும் கடைப்பிடித்த வணிக அறம்
அதுதான். தொழிலிலும் நிர்வாக அமைப்பிலும் மேலாண்மையிலும் அமெரிக்காவின் கோமணத்தையே
நாமும் கட்டிக்கொண்டு ஆடியதன் காட்சிகள்தான் நாம் இன்று காண்பது. ஐஐஎம் கக்கிய இத்தனை
ஜெனரல் மானேஜர்களாளும், துணைத்தலைவர்களாளும், சி.இ.ஓக்களாலும், கன்சல்டுகளாலும் ஒரு
இரண்டு மாதங்கள் தாக்குப்பிடிக்க முடியாதென்றால் இந்த ஆர்கனோகிராமின் பொருள் என்ன?
கூட்டம்
கூட்டமாய் தங்கள் ஊருக்குக் கிளம்பும் வட இந்தியத் தொழிலாளர்களுக்குப் பிஸ்கட்டும்
நீரும் தந்து ரயிலில் அனுப்புகையில் ஒன்றைக் கேட்டேன் ‘உங்கள் ஊரில் பாலாறும் தேனாறுமா
ஓடுகிறது.. அங்கு சென்று என்ன செய்வீர்கள்?’
‘ஐயா
எங்கள் ஊரில் பிழைக்க வழியில்லாமல்தான் இங்கு வந்தோம். சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, வேலைநேரத்தில்
ஏற்றத்தாழ்வு, தங்குமிடம் தகரக்கொட்டாய், உண்ணும் உணவு பன்றிக்குரியது எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்டோம். நன்றியோடுதான் உழைத்தோம். வீடடங்கால் நாங்கள் பசித்திருந்தோம்.
உணவுக்காக தட்டியபோது முதலாளிகளின் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவர்கள் காதில் பஞ்சை
அடைத்துக்கொண்டு பஞ்சணையில் புரண்டு படுத்துக்கொண்டார்கள். பசியென கதறும் ஒருவனைக்
கடந்துபோக முடியுமென்றால், கண்டுகொள்ளாமலிருக்க முடியுமென்றால் அங்கே நீதியுணர்ச்சி
செத்துவிட்டது என்று பொருள். நான் உணவில்லாமல் இன்றோ நாளையோ நாளை மறுநாளோ இறக்கக் கூடுமெனில்,
இவர்கள் என்னை எடுத்து அடக்கம் செய்யமாட்டார்கள். என் உடல் ரோட்டில் வீசப்படும். அநாதையாகச்
செத்துப் போவதற்குப் பதிலாக ஊரில் என் அன்னையின் மடியில் சாவேன். ஒரு மனிதனுக்குச்
சோறு போட சமூகத்திற்கு வக்கில்லையெனில் உலகையே தீயிட்டு கொளுத்து என ஒரு கவிஞன் அறம்பாடுவது
இதனால்தான். ஒருவனின் பசி கண்டுகொள்ளப்படாதென்றால் அதுதான் அறவீழ்ச்சியின் எல்லை. அதற்கு
அப்பால் கீழிறங்குவதற்கு எதுவுமில்லை. ‘தருமம்’ எனும் ஒரே காரணத்திற்காக நான் பிறந்த
மண்ணிலும் அதிகமாய் நேசித்த ‘கோவையும்’ இதற்கு விதிவிலக்கல்ல எனும் உண்மையால் என் கும்பி
எரிந்தது. இன்று இது என் ஊரல்ல.
இந்தியாவில்
கூலிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் இப்போது ஊழியர்கள் வீழ்த்தப்படும் சீசன் துவங்கியிருக்கிறது.
அவர்களுக்கு இத்தருணத்தில் சொல்வதற்கு என்னிடம் இரண்டே சொற்கள்தான் இருக்கின்றன. இந்த
வேலை தந்த சம்பளத்தில்தால் குடும்பம் பசியாற்றியது. வாடகை கொடுத்தீர்கள். பிள்ளைகள்
படித்தார்கள். முதலாளிகளுக்கு நன்றி சொல்வோம். அவர்கள் நெருக்கடியிலிருந்து மீள மனதார
வாழ்த்துவோம்.
இரண்டாவது,
உலகமே இருள் மண்டி எங்கும் மரண ஓலமும் பசியின் கூக்குரலும் ஒலிக்கும் நாட்களில் நீங்கள்
வெளியேற்றப்பட்டிருக்கிறீர்கள். எளிதாக இன்னொரு பிழைப்பைத் தேடிக்கொள்ள வழியற்ற சூழலில்
ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்டிருக்கிறீர்கள். இப்படியொரு தலைவனுக்குக் கீழ்தான் நீங்கள்
இத்தனை நாட்கள் களமாடியிருக்கிறீர்கள். இதை காட்டிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ஒரு மாட்டிற்குப் பதிலாக நுகத்தில் தன் கழுத்தைக் கொடுத்தவனை விட, ஊனமுற்ற மனைவியை
தோளில் தூக்கிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் காலுக்குச் செருப்பில்லாமல் நடப்பவனை விட,
தண்டவாளத்தில் படுத்துச் செத்தவனை விட, தன் தகப்பனை சைக்கிளோடு சேர்த்துக்கட்டி ஆயிரக்கணக்கான
கிலோமீட்டர்கள் மிதித்துச் சென்ற சிறுமியை விட சற்று மேலான வாழ்க்கை உங்களுடையது. அச்சம்
கொள்ளாதீர்கள். கொரானாவிலும் கொடியது அச்சம். பதட்டமடையாதீர்கள். இன்னொரு அடிமைச் சங்கிலியை
அவசர அவசரமாக அணிந்துகொள்வதற்குப் பறக்காதீர்கள். வீட்டில் இருப்பவர்களையும் பதட்டப்படுத்தாதீர்கள்.
நீங்கள் பிறந்ததே இந்த நிறுவனத்தில் இதே வேலையை மட்டுமே பார்க்க வேண்டுமென்பதற்காக
அல்ல. இந்த வேலை மறுக்கப்பட்டதால் திருவண்ணாமலை கோவில் வாசலில் நின்று பிச்சை எடுக்கப்போவதில்லை.
நிலைமை நிச்சயம் மாறும். அதிகபட்சம் சில மாதங்களுக்கு செளகர்ய குறைகள் ஏற்படலாம். பெட்ரோல்,
கல்வி, விருந்து வேக்காடுகள் போன்ற அதிகச் செலவினங்கள் தேவைப்படாத காலம். முடிந்தவரை
தாக்குப் பிடியுங்கள். குடும்பமாகக் காந்தியின் கால்களைப் பற்றிக்கொள்ளுங்கள். நம்
இன்றையப் பிரச்சனைகளுள் பெரும்பாலானவற்றுக்கு அந்தக் கிழவனிடம் தீர்வு இருக்கிறது.
‘ஆனது ஆகட்டும் அடிச்சு நொறுக்கு அடுத்தது என்ன?’
எனும் மந்திரத்தை கற்றுத் தருகிறேன். உச்சாடனம் செய்யுங்கள். நெருக்கடியான காலகட்டம்
என்பது உண்மையில் மிகப்பெரிய வாய்ப்பு. உங்களுக்கு கண் என ஒன்றிருந்தால் போதும். உதாரணம்:
திருக்குறளரசியின் நிறுவனம் இதுநாள் வரை மக்கள்தொடர்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஆகிய
சேவைகளை அளித்து வந்தது. இந்த இரண்டிற்கும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு வாய்ப்பே இல்லை.
உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. ஊழியர்களைத் துரத்தவில்லை. ‘எங்கள் தின்பண்டங்கள்
பாதுகாப்பாகத்தான் தயாரிக்கப்படுகின்றன என்பதை விளக்கும் குறும்படங்களை’ உணவுத் தொழிலில்
இருப்பவர்களுக்காக இயக்க ஆரம்பித்து விட்டாள்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற இத்தகு விழிப்புணர்வு வீடியோக்கள் இன்று அவசியமானவை.
இந்த இடத்தில் ஒரு சிறிய எச்சரிக்கை. எந்தத் தொழிலும் அதற்குரிய வருவாயைத்தான் தரும்
(எலி புழுக்கை போடும்; யானை சாணி தரும் – அப்பா) உங்களது அனைத்துத் தேவைகளையும் ஆசைகளையும்
அது பூர்த்தி செய்யவேண்டுமென எதிர்பார்ப்பது நம்மைத் தெருவில்தான் கொண்டு போய் நிறுத்தும்.
உங்கள் முதலாளியின் கோளாறும் அதுதான்.
வாசித்துக்
கொண்டே இருங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள். முயற்சித்துக் கொண்டே இருங்கள். புதிய
வெளிச்சத்தின் சிறிய கீற்று தட்டுப்பட்டாலும் ‘ங்கொப்பன் மவனே சிங்கம்டா’ எனும் மந்திரத்தை
சொல்லிக்கொண்டு வெளிக்கிடுங்கள். நினைவிருக்கட்டும் பத்தாம் வகுப்பின் ‘சைன் தீட்டா, காஸ் தீட்டா’ போன்ற கொடூரங்களையே
சமாளித்து வென்றவர் நீங்கள்.
அப்பாவின்
மந்திரச் சொற்களோடே முடிக்கிறேன் ‘அழுதுக்கிட்டு இருக்காதடா… உழுதுக்கிட்டு இரு’
I need your support so I can keep delivering good content.
Every contribution, however big or small, is so valuable for my literary
attempts. Thanks. Support Good Content
- © செல்வேந்திரன்
Comments
தரிசிக்கும் பட்டது...
அருமை
ம்....
என்ன சொல்ல என்னால் உணர்வு பூர்வமாக பாராட்ட மட்டுமே முடிகிறது. செல்வா
ம்....
என்ன சொல்ல என்னால் உணர்வு பூர்வமாக பாராட்ட மட்டுமே முடிகிறது. செல்வா
ம்....
என்ன சொல்ல என்னால் உணர்வு பூர்வமாக பாராட்ட மட்டுமே முடிகிறது. செல்வா