எது விமர்சனம்?
சுரேஷ் வெங்கடாத்திரியின் பக்கத்தில் சில ஃபேக் ஐடிக்கள் அவரை வெளுக்கிறார்கள்; நீங்களா அது? இந்தக் கேள்வி கடந்த சில வாரங்களாக என்னிடம் போனிலும் நேரிலும் கேட்கப்படுகிறது. அவர்களிடம் சொன்ன பதிலை இங்கே தொகுத்தளிக்கிறேன்.
அது நான் இல்லை. எனக்கு எதையும் நேரடியாகச் சொல்வதே வசதி. சுரேஷ் பழகுவதற்கு இனியவர். நல்ல நகைச்சுவையுணர்ச்சி கொண்ட பாடகர். நோக்கமற்ற வாசிப்பு உருவாக்குகிற சிக்கல்களுக்கு ஆட்பட்டவர். வாசிப்பின் அகங்காரத்தைக் கொஞ்சம் கழற்றிவிட்டு கலையின் முன் பணியக் கற்றிருந்தாரேயானால் முக்கியமானவராக ஆகியிருக்கச் சாத்தியம் உள்ளவர். வாசிப்பதற்கு ஏற்ற வசதியான வாழ்க்கை அவருக்குத் தற்செயலாக அமைந்தது. ஆயிரத்தில் ஒருவருக்கே அப்படி வாய்க்கும். அதை வீணடித்துவிட்டார். இங்கே எழுதியவற்றை அவரிடம் நேரில் சொல்வதற்கோ, பெயர் குறிப்பிட்டு எழுதுவதற்கோ எனக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை.
நான் சுரேஷை முகநூலில் பின்தொடர்வதில்லை. காரணம் பகையல்ல. அவரை வாசிப்பதால் எஞ்சுவது என எதுவும் இல்லை. புதிய சிந்தனையோ, சுயமான கண்டடைதலோ எதுவுமிலாத வெற்று ‘தரவு சோதனை’ மட்டுமே செய்யும் அவரது குறிப்புகளால் எவருக்கும் பயன் இல்லை. தன் தர்க்கத்தையும் கூட ‘என்றே நினைக்கிறேன், இருக்கலாம்தான் என்றாலும் கூட, என்னதான் இருந்தாலும்’ என விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வதக்கியது போல கொழகொழத்துச் சொல்லும் பாணி ஓங்கரிக்க வைக்கும். நண்பர்கள் சுட்டியதால், அவரது பக்கத்திற்குச் சென்று விடுபட்ட பதிவுகளை வாசித்தேன். மாற்றம் ஒன்றே மாறாதது எனும் தேற்றம் படு பயங்கரமாக தோற்றிருந்தது.
அவர் ஒரு சதிகாரர் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு நிறைய திறமையும் ஆற்றலும் உழைப்பும் வேண்டும். இந்தக் கட்டுரையின் நோக்கம் அவரைச் சிறுமை செய்வதல்ல. அதை தனக்குத்தானே அன்றாடம் செய்துகொள்கிறவர் அவர். சுரேஷ் வெங்கடாத்திரியால் இலக்கியத்திற்கு நிகழ்ந்த தீ விளைவுகள் நிறைய உண்டு. அதைச் சுட்டுவது மட்டுமே இந்தக் குறிப்பின் நோக்கம்.
நூல் அறிமுகம், மதிப்புரை, விமர்சனம், திறனாய்வு, ரீடர் ஆகியவை அடிப்படையில் வெவ்வேறானவை. ஒருவர் செய்வது இலக்கிய விமர்சனம் என்றால், தனது ரசனையை வரையறுக்கும் காரணிகளையும், நம்பும் விழுமியங்களையும், விமர்சனக் கருவிகளையும் வெளிப்படையாக முன் வைக்க வேண்டும்.
தான் விமர்சிக்கத் தேர்ந்து கொண்ட நூலின் இலக்கிய வகைமையைத் துல்லியமாக வரையறை செய்தாக வேண்டும். ஏன் இது அவசியம்? என்ன ஜானர் என்பது தெரிந்தால்தான் அதில் என்ன எதிர்பார்க்கலாம், என்ன எதிர்பார்க்கக் கூடாது என்கிற விவஸ்தை உண்டாகும். இயல்புவாத நாவலில் கறாரான வரலாற்று விமர்சனத்தை எதிர்பார்க்கக் கூடாது; யதார்த்தவாத நாவலில் பலகுரல் தன்மை இல்லையே என கேட்கக் கூடாது; டிரான்ஸ்கிரஸிவ் ரைட்டிங்கில் இறுதியான நீதியைத் தேடிக்கொண்டிருத்தல் பிழை.
புனைவை விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் வாசிப்பது தேர்ந்த வாசகனின் இயல்பு. படைப்பாளரின் பின்புலம், வாழ்க்கைச் சூழல், அரசியல் நெருக்கடி, தத்துவச் சாய்வு, பண்பாட்டுச் சூழல் போன்றவையும் நூலின் மீதும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை. தமிழின் நெடிய படைப்பு வரலாற்றில் தான் மதிப்பிடும் நூலின் இடம் என்ன, தனித்துவம் என்ன, அந்த வகைமையின் மிகச்சிறந்த நூல்களோடு ஒப்பிட்டு போதாமைகள் என்ன என்பதைக் குறிப்பிடலாம். தன் வாசிப்பின் வழியாகக் கண்டடைந்த நுட்பங்கள், நாடகீய தருணங்களின் வழியாகச் சென்றடைந்த உச்சங்களைச் சுட்டி அந்நாவலின் தகுதியை இறுதி செய்யலாம். இவையெல்லாம் ஒரு நூல் விமர்சனத்தில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள்.
இவை கலையின் முன் பணிந்து உழைத்து கற்றுக்கொள்ள வேண்டியவை. நான் வாசித்துவிட்டேன். ஆகவே எழுதியவனின் புட்டத்தில் பிரம்பால் அடிக்கும் அதிகாரம் எனக்கு வாய்த்துவிட்டது என நம்புவது மடத்தனம். ஒரு நூலின் சிருஷ்டிகரத்தைப் பற்றியோ, அதன் ஆழங்களைப் பற்றியோ, கலாப்பூர்வமான வெற்றி தோல்விகளைப் பற்றியோ தீர்மானிக்க ஏழ்வை இல்லாதவர், மஞ்சள் துண்டை வைத்து மளிகைக்கடை வைக்க முயற்சிப்பதுதான் ‘தரவு சோதனைகள்’.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரமணிச்சந்திரனுக்கும் கண்மணிகுணசேகரனுக்கும் சு. வேணுகோபாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று வாதிட்டுக்கொண்டிருந்தார். கேட்கும்போதே மலக்குழிக்குள் விழுந்தது போல இருக்கும். இன்று சுவே அவரது நண்பராகிவிட்டதால், அவருக்கு விதி விலக்களித்திருக்கிறார். கண்மணியை இன்னமும் அவர் ரமணிச்சந்திரன், விமலா ரமணி ஆகியோருடன்தான் ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார். ‘எல்லாமே இலக்கியந்தேங்’ நிலைப்பாடு ஒரு கேவலம் என்றால், மறுபக்கம் எழுதியவர்கள் சாருநிவேதிதாவோ அராத்துவோ என்றால் குபீரென்று உயர்ந்த நீர் நிலைகளில் மட்டுமே நீர் அருந்தும் அன்னப்பறவை போல முகத்தைச் சுளிப்பது படு கேவலம்.
அவர் பிராமணரல்லாத எழுத்தாளர்களை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்கிறார்கள். நான் அவருக்கு அந்தளவுக்குச் சாதி வெறி இருக்கும் என்று நம்பவில்லை. ஆனால், சர்வநிச்சயமாக சாதியுணர்ச்சி இருக்கிறது. இல்லையென்றால் விட்டல்ராவுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுக்க வேண்டுமென்று எழுத முடியுமா என்ன? ஜபல்பூர் சாமிநாத சர்மாவை ஏன் விட்டுவிட்டார்? அவர் கூட நம்மவர்தானே?
அவர் போடும் இலக்கியப் பட்டியலில் எப்போதும் பிராமணர் அல்லாதவர்களுக்கான உள் ஒதுக்கீடு 9:1 எனும் வீதத்தில் கருணையோடு இருப்பதை அவரது கடந்தகாலப் பதிவுகளின் வழி எவரும் உணரலாம். நண்பர்கள் இன்னொரு விஷயம் சொன்னார்கள். சமீபத்தில் பா.ராகவன் இவருக்கு தன் நாவலை அனுப்பி வைத்திருந்தாராம். இவருக்கு நாவல் பிடிக்கவில்லை. ‘நம்மவா’ ஆச்சே என்று கிழித்துத் தோரணம் கட்டும் வேலையைக் கைவிட்டுவிட்டார். இன்னொரு ‘நம்மவா’வின் நாவல் ‘அக்னி நதி’ சாயலில் உள்ளது எனும் முணுமுணுப்பு ஆங்காங்கே எழுகிறது. இவருக்கு வேண்டியவர். ஆகவே அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மென் தடவல் விமர்சனம்.
சரி இந்த கிழித்துத் தோரணம் கட்டும் ஆட்டத்தில் தவறியும் மாமல்லனையோ, புலியூர் முருகேசனையோ, மனுஷ்யபுத்திரனையோ, லீணா மணிமேகலையையோ, பெருந்தேவியையோ, வெண்பா கீதாயனையோ தெரிவு செய்ய மாட்டார். பதிலுக்கு எத்து மரண எத்தாக விழும் என்பது அறியாதவராவல்ல. பெற்ற போர்ப் பயிற்சி அப்படி.
சரி, வாசிக்கிறவன் தகவல் பிழை இருந்தால் சுட்டக் கூடாதா? சுட்டலாம். அதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். 1) அடிப்படை அறிவு 2) தான் சுட்டுவது உண்மையாகவே தவறுதானா என்பதை ஆணவமின்றி சரிபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். 3) படைப்பாளியின் புனைவுச் சுதந்திரம். ஒரு சிறிய சாத்தியத்தை வைத்துக்கொண்டு கற்பனையில் விரிவதன் பெயரே புனைவு. வடவள்ளி பிஎன்புதூரில் முருகேசநயினார் வீதியில் இப்படி கிடையாதே என்று கையில் வாய்ப்பாடு நோட்டை வைத்துக்கொண்டு இருக்கக் கூடாது. 4) எழுதியவனின் மெரிட். தன் ஆயுளில் கணிசத்தை ஒதுக்கி அந்தப் படைப்பிற்காகவே வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவழித்தவன் இந்த பப்பிம்மா எரர்களை விடுவானா என்று யோசிக்க வேண்டும். தான் வாசிக்கிற தந்தி பேப்பரைத் தாண்டியும் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்லும் பகலும் ஆய்வுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நம்பிக்கைகள் உள்ளன. ஒரு தரவுக்கு இன்னொரு கோணமும் இருக்கக் கூடும். அதைத் தேடிப் பார்க்கலாம். படைப்பாளி இதைச் சொல்வதற்கான சாத்தியம் என்னவென்று சிந்திக்கலாம். ஆசிரியரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடிய சாத்தியமும் இந்நாட்களில் இருக்கிறது.
நமது இலக்கிய ஷெர்லாக் ஹோம்ஸின் பிழை அறியும் அபாரமான ஞானத்திற்கு, இரண்டே இரண்டு உதாரணங்களைத் தரலாம் என்று நினைக்கிறேன். பட்டியலிட்டால், பல கிலோமீட்டர்கள் நீளும் என்றாலும், நான் ஏன் வேலை சோலிகளை விட்டுவிட்டு சுடுகாட்டில் சுள்ளி பொறுக்க வேண்டும்? ஆதாரம் இணைக்க வேண்டும் ஆதாரம் இணைக்க வேண்டும் என்று கோர்ட்டார் போல படைப்பாளர்களை நோக்கி கேட்பது அவரது வழக்கம். ஏனெனில், கேட்பதற்கு முதல் ஒன்றும் போடவேண்டியதில்லையே?
தீம்புனல் நாவலில் கதாபாத்திரங்களின் பெயர்களே மாறுகின்றன… இதெல்லாம் ஒரு நாவலா ஹைய்யோ… ஹைய்யோ...என்றார். நூலாசிரியரே வந்து ‘ஐயா இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள்; சரியாக வாசியுங்கள்’ என்றார். ‘ஒஹ் அப்படியா… சரிபார்க்கிறேன்..’ இந்த சரிபார்ப்பு பஜனை ஒருபோதும் நிகழாது. திருத்திக்கொள்ளும் பண்பு, மன்னிப்பு கேட்கும் மாண்பு, அறம் எல்லாவற்றையும் அவர் ஜெயமோகன், குணசேகரன் போன்றவர்களிடம்தான் எதிர்பார்ப்பார். தன் சொந்தவாழ்வில் சராசரி மனிதனைப் போல அட்ஜஸ்ட்மெண்டுகளை மேற்கொள்வார். அதையெல்லாம் சுட்டினால், பதட்டம் கொள்வார். அன்பு கருதி அவற்றைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்.
நரேன் இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த அமெரிக்க எழுத்தாளர்களில் புலம் பெயரிகள் எழுதிய கதைகளுள் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து ‘இந்தக் கதையைச் சரியாக சொல்வோம்’ என்றொரு தொகுப்பு கொண்டுவந்தார். அனைத்துக் கதைகளும் நியுயார்க்கரில் வெளியானவை. இந்த விபரங்கள் எல்லாம் நூலின் அட்டையில் இருக்கிறது, முன்னுரையில் இருக்கிறது, நண்பர்கள் எழுதிய குறிப்புகளில் இருக்கிறது. நம்ம பீஷ்மர் என்ன செய்தார்? தனக்குத் தெரிந்த உதிரி அமெரிக்க எழுத்தாளர்களை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பட்டியலிட்டு இவர்களெல்லாம் விடுபட்டிருக்கிறார் அஷடே அஷடே என வான் நோக்கிச் சிரித்துக்கொண்டார். ஃபேஸ்புக் திண்ணைக் கிழத்தில் வாசிக்கிற வழக்கம் உள்ள ஒருவனாவது ‘அட்டையிலேயே போட்டிருக்கே சார்’ என்று கேட்டார்களா? அதற்கு எதையாவது வாசிக்க வேண்டுமே?
ஊரெல்லாம் ஃப்ரூப் பார்க்கிற டேட்டா ஆடிட்டருக்கே இப்படிப்பட்ட எல்கேஜி பிழைகள் எதனால் நிகழ்கின்றன? பதட்டம், வெறி, ஆங்காரம், பொறாமை. ஏன்? இவர்கள் ஜெயமோகனின் நண்பர்கள். ஜெயமோகனால் சுட்டப்பட்டவர்கள். ஜெயமோகன் இவர்களைப் பற்றி பொருட்படுத்தும்படி சில சொற்களைச் சொல்லிவிட்டார். சும்மா விட முடியுமா என்ன? இவருக்கு ஜெயமோகன் மீதுள்ள காழ்ப்பு ஊரறிந்தது.
சுபிட்ச முருகன், தீம்புனல், சுளுந்தீ துவங்கி இப்போது கங்காபுரம் வரை இவரால் பல நாவல்கள் குதறப்படுகின்றன. இந்தப் பட்டியலில் கங்காபுரம் மட்டும் நான் வாசிக்கவில்லை. ஏனையவற்றை வாசித்த அடிப்படையில் சொல்கிறேன். நிச்சயம் இவர் சுட்டுகின்ற பிழைகள் ஒன்று பிழைகளாகவே இருக்காது அல்லது படைப்பாளி விரித்துக்கொண்ட புனைவுச் சாத்தியமாக இருக்க வேண்டும். வெண்ணிலா யார்? குறிப்பிடத்தக்க பங்களிப்பை வரலாற்றிற்கும் இலக்கியத்திற்கும் செய்திருக்கிறார். நமக்கே தெரிந்தவை அவருக்குத் தெரிந்திருக்காதா என்றாவது யோசித்திருக்கலாம். ஆனால், முடியாதே. ஜெயமோகன் தலைமையில் அனந்தரங்கம்பிள்ளை நூலை வெளியிட்டவராயிற்றே. போதாக்குறைக்கு கருவிலே திருவுடையவரும் இல்லை. போடு அடியை. அவரே வந்து மன்றாடினால், இருக்கவே இருக்கிறது ‘ஒஹ்.. சரி பார்க்கிறேன் பஜனை’. கீழே ‘பின்னிட்டீங்க தோழர்’ கமெண்ட் போடும் திண்ணைக் கிழம்கள் வந்து ‘என்ன ஓய் சரி பார்த்துட்டீரா..’ என்று கேட்கவா போகிறார்கள்?
சரிங்க அவர் பாட்டுக்கு அவர் எழுதிக்கிட்டு போகட்டும்ங்க. எவனுமே படிக்கிறதில்ல. இவராச்சும் உடனே ஓடி ஓடி படிக்கிறாரே என்பார்கள் சிலர். இதன் தீவிளைவுகள் என்னவென்பதில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
1) தமிழில் இயங்கி வரும் சில விருது அமைப்புகள் ஒரு வாசகன் எனும் அடிப்படையில் என்னிடம் சமீபத்தில் படித்ததில் குறிப்பிடத்தகுந்த நூல் எவை என கேட்பார்கள். என்னுடைய மதிப்பீட்டில் முக்கியம் என கருதும் நூல்களைச் சொல்வேன்.
சில விருதுகள் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் எழுதப்பட்டவை. நூல்களைச் சொன்னதும் உடனே நடுவர் குழுவில் ஒருவர் ‘அய்ய… அது நாவலே இல்லைன்னு சுரேஷ் ஃபேஸ்புக்கில் எழுதிருக்காப்ல’ என்பார். ஒன்றும் செய்ய முடியாது. அந்த மண்டூகம் ஃபேஸ்புக் திண்ணைக் கிழங்களுள் ஒன்றாக இருக்கும். ஆகவே பரிந்துரைக்கும்போதே அந்நூலின் தலையில் சம்மட்டி அடி விழும். கடந்த இரண்டாண்டுகளில் இந்தச் சம்மட்டி அடி பல இளம் எழுத்தாளர்களின் தலையில் விழுந்திருக்கிறது.
விருதுக்காக எவரும் எழுதுவதில்லை. ஆனால், எழுத்தின் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் மட்டுமே வாழும் ஜாகீர் ராஜா, எஸ். செந்தில்குமார் போன்ற எழுத்தாளர்கள் நம் சூழலில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீது எப்போதோ விழும் மெல்லிய கவனம் கூட இந்தத் தடாலடி பிழை நோக்கு விமர்சனங்களால் விலகிப்போய் விடுகின்றன.
2) சமயங்களில் நல்ல வாசகர்களே இந்த ‘கிழித்துத் தொங்க விடும் தோரணத்தில்’ ஏமாந்து விடுவார்கள். உதாரணம்: ஜஸ்டின் லியோன். தமிழின் மிகச்சிறந்த வாசகர். ஒவ்வொரு நூலையுன் உடனுக்குடன் வாசிக்கிற வழக்கம் உடையவர். கங்காபுரம் பதிவிற்கு அவரது கமெண்ட்: ‘நாவலை வாங்கிவிட்டேன். உங்கள் விமர்சனத்திற்குப் பின் வாசிக்க யோசனையாக இருக்கிறது’
ஆறரை கோடி தமிழர் வாழும் நாட்டில் அந்த நாவல் அதிகபட்சம் 100 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கும். நம் பீஷ்மர் அதன் சாத்தியமான ஒரு வாசகனைக் கண்ணுக்கு எதிரே கொன்று விட்டார்.
3) சமீபத்தில் இணைய சிற்றிதழுக்குக் கதை எழுதின இளம் எழுத்தாளர் உசாத்துணைப் பட்டியல், புகைப்பட வீடியோ ஆதாரங்களை எல்லாம் இணைத்து அனுப்பி இருந்தாராம். அழைத்துக் கேட்டதற்கு எப்படியும் சுரேஷ் வெங்கடாத்திரி அவருக்குத் தெரியாதவற்றைப் பிழை என்று சுட்டுவார். நீங்கள் என் கதையை தயவு செய்து உசாத்துணைப் பட்டியலுடனே பிரசுரியுங்கள் என்றாராம். படைப்புச் செயல்பாட்டையே நசுக்கும் வேலை இது. எழுத அமர்கிறவனின் மனக்கண்ணில் ஒரு கன்ஃப்யூஸ்டு முகம் வந்து நின்று தடுக்குமென்றால் அதைக்காட்டிலும் கேடு என்ன?
4) இவரை எதிர்த்து சண்டையிடத் திராணியற்ற பல எழுத்தாளர்கள் என்னிடம் போனில் குமுறியிருக்கிறார்கள். அவர் எழுதுவதைப் பார்க்கையில் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம், ரயிலில் பாய்ந்து விடலாம் எனத் தோன்றும் எனச் சொன்னவர்கள் உண்டு. அவை இன்னொரு கட்டுரைக்கான சமாச்சாரங்கள்.
இந்தக் கட்டுரை சுரேஷ் வெங்கடாத்திரிக்கான எதிர்வினை அல்ல. ஆளானப்பட்ட ஜெயமோகனே தோற்றுப் போய்விட்ட மெடிக்கல் மிராக்கிள் அவர். குழுமத்தில் சல்பித்தனமான கேள்விகளைக் கேட்பார். அவர் பக்கம் பக்கமாக வந்து விளக்கம் கொடுப்பார். அதே விஷயத்தை ஃபேஸ்புக்கில் வந்து புதிது போல எழுதுவார். நீங்கள் பிழையென சுட்டியிருப்பதே பிழை என்பார்கள் நண்பர்கள். ஒஹ் சரி பார்க்கிறேன் பஜனையைப் பாடி ஜகா வாங்கி விடுவார். சில காலம் கழித்து அதையே எழுதுவார். எங்கள் ஊர்ப் பக்கம் இதை ‘அழுததையே அழுறது’ என்பார்கள். இது ஒரு நோய். நான் நக்கீரனாக்கும் எனும் பாவனை. ஒருவகை மூக்குப்புடைப்பு. தன் கருத்துக்களுக்குச் சில மூர்க்கமான எதிர்வினைகள் வந்தபோது பின்னங்கால் பிடறிபட ஓடத் தயங்காத வீரர்கள்தான் என்றபோதும் கஞ்சிக்கு வழியற்ற எழுத்தாளர்கள் மீது ‘பார்த்து நடந்துக்க.. சுப்புடுவாக்கும்’ என்கிற ஜபர்தஸ்த்.
உண்ணும் தயிர்சாதத்தில் எப்போதாவது முடி கிடக்கலாம். எடுத்துப் போட்டு விட்டு சாப்பிடலாம். அல்லது வேறு ஏதாவது சாப்பிட்டு வயிற்றை நிரப்பலாம். தயிர்சாதம் என்பது முழுக்கவே மயிரால் ஆனது என வாழ்நாள் முழுக்க தயிர்சாதத்தில் மயிர் தேடிக்கொண்டிருப்பது ஒரு மனநோய். இதைச் சுட்டிய பல நண்பர்கள் அவரிடமிருந்து மெளனமாக விலகிக்கொண்டார்கள். பேராளுமைகளைச் சீண்டுவதால் உருவாகும் சில்லறை வெளிச்சமும், தங்களது தனிப்பட்ட காழ்ப்புக்குக் கிடைக்கும் இதத்திற்காக அவரைச் சூழ்ந்து கொண்ட திண்ணைக் கிழங்கள் மட்டுமே நிரம்பிய மடத்தில் மடாதிபதியாகத் திகழ்கிறார்.
நான் பக்கம் பக்கமாக இதை எழுதுவது சுரேஷ் வெங்கடாத்திரிக்காக அல்ல. தலைவர்களே தோற்ற தொகுதி அது. என்னால் ஏலாது. எவராலும் ஏலாது. பிராமணர்கள் மீதான காழ்ப்பினாலும் அல்ல. பதினெட்டு வருடங்களாகப் பிராமணர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறேன். எங்கும் எந்த உரிமையும் தட்டிப் பறிக்கப்படவில்லை. ஒதுக்கப்படவில்லை. பாரபட்சம் பாராட்டப்படவில்லை. அவர்களிடம் கிடைத்த நேசம் போல பிறிதொரிடத்தில் கிடைத்ததில்லை. என் அண்டை வீட்டார்கள் பிராமணர்கள். எந்தப் பாகுபாடும் கல்மிஷமும் இல்லாத உறவு எங்களுடையது. எச்சாதியினர் மீதும் வெறுப்பு கொண்டவனல்ல நான்.
மூச்சடைக்க எழுதுவது தமிழில் இலக்கியம் என ஒன்றிருப்பதை நம்புகிற அசலான வாசகர்களுக்காக. நட்ட நடுக்கடலில் வாழும்போதும் தன் நிலத்தோடு தன்னை இலக்கியத்தால் பிணைத்துக்கொள்கிற ஜஸ்டின் லியோன்களுக்காக. உங்கள் அபிப்ராயங்களை வம்பர்களின் வாய்ச்சொல் வழியாக உருவாக்கிக் கொள்ளாதீர்கள் என தாழ்பணிந்து கேட்டுக்கொள்வதற்காக. இங்கே ‘நம்மவர் / மற்றவர்’ எனும் கணக்கைத் தாண்டி கலைச்செயல்பாடுகள் கண்டுகொள்ளப்படாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என மன்றாடுவதற்காக. அடுத்தமுறை டேட்டா ஆடிட்டிங்கில் ஒரு புனைவிலக்கியம் சிதைக்கப்படுமானால் ‘முறையல்லாதன செய்கிறாய் அண்ணா’ என்றேனும் சொல்லுங்கள் என்பதற்காக. நீங்கள் கொடுத்த பணம் எழுதியவனின் கனவை நீங்களும் சில நேரம் காணலாம் என்பதற்காகத்தான். அவன் கனவிலேயே நீங்கள் வருவதற்கல்ல என்பதற்காகத்தான்.
மற்றபடி, ஒரு உறவோ பகையோ கிடையாது.
Comments