உருகும் நினைவுகள்

 

திரு தன் தோழிகளுடன் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செல்கிறாள். நானோ ஒப்புக்கொண்ட திரைப்பட, தொலைக்காட்சிப் பணிகளுக்காக சென்னையில் இருக்கிறேன்.

இருவரும் வீடு திரும்பும்வரை பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காக என் மூத்த அக்காள் கோவில்பட்டியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். மிகச்சரியாக 39 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிறந்த அன்று என்னைப் பார்த்துக்கொள்ளும் பொருட்டு ஏழாம் வகுப்போடு நிறுத்தப்பட்டவள். அன்றிலிருந்து இன்றுவரை அன்னையாய் என்னை போஷித்து வருபவள், பிறகு என் பிள்ளைகளுக்கும் அன்னையானாள்.

அருண்மொழி நங்கையின் யசோதை கட்டுரையை வாசிக்கையில் மனம் தன்னியல்பாக அக்காவை நினைத்துக்கொண்டது. மாத்திரை அலர்ஜியாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தம்பியைப் பற்றிய சிறுமியின் நனைவோடை இந்தக் கட்டுரை. அருணாவின் தம்பி லெனின் அகால மரணமடைந்த நாட்களில் எழுதப்பட்டது. ஆனால், துயரார்ந்த தடயம் ஏதுமில்லாமல், ஊமை வலியை உள்ளே புதைத்து வைத்திருப்பது ஒருவகையான மாஜிக்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பி வாங்கிய நூல்களுள் ஒன்று அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’. நோஸ்டால்ஜியாவிற்கு இலக்கியத்தில் மதிப்பில்லை. அதிலும் சாகஸ அம்சங்கள் இல்லாத பெண்களின் நோஸ்டால்ஜியாவை வாசிப்பது அசுவாரஸ்யமளிப்பது. ஆனால், இலக்கியமும், தத்துவமும், இசையும், வரலாறும், நுட்பமான அவதானிப்புகளும், நகைச்சுவையும், கவித்துவமான உருவகங்களும் ஊடாடும் ஒரு அபூர்வமான சேர்மானத்தால் தனிப்பட்ட அனுபவங்களை நற்சிறுகதை நல்கும் நிறைவுக்கு இணையாக மாற்றுகிறார் அருண்மொழி. தமிழில் இதற்கு முன் உரைநடை எழுதிய எந்த எழுத்தாளரின் சிறு சாயலும் இல்லாத தனித்துவம்தான் இந்நூலின் முழுமுதற்சிறப்பு.

திருவையாறு ஆராதனை பின்னணியில் நாயர்வாளின் இசை ஐவேசை உரசியபடியே செல்லும் ‘மலையில் பிறப்பது’ எனக்கு மிகப்பிடித்த இன்னொரு கட்டுரை. பாலை நிலப் பயணத்தில் ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ பாடலை எழுத்தாளர் ஒராயிரம் முறை கேட்டார். இந்த எழுபது வயதில் இவருக்குக் காதல் தோல்வியா என்று டிரைவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பரிதாபப்பட்டான். ‘அசோகன் என்னமா பாடுறாப்ல..’ என்று கேட்டபோது உண்மையில் நானும் ஜெயமோகன் மீது பரிதாபம் கொண்டேன். ஜோக்ஸ் அபார்ட், மலையமாருதத்தையும் மலைமகளையும் கிருதிகளால் கோர்க்கும் இக்கட்டுரை இன்னொரு மேஜிக்.

பால் ஊற்றப் போகும் வீட்டில் அருணாவுக்கு சங்கீதம் அறிமுகமாகிறது. புள்ளமங்கலம் குஞ்சிதையர் எனும் மகத்தான பாடகர் வழியாக. அவருடனான உரையாடல், வெவ்வெறு இடங்களில் அவரது இசை கேட்ட தருணங்கள் பிரத்யேக வாத்ஸல்யத்துடன் துலங்குகிறது. மரபிசையும் காவிரியும் கட்டுரை எழுதப்பட்ட காலத்திலேயே தஞ்சை மண்டலத்தில் அருண்மொழி வாசகர் வட்டம் ஒன்று மலர்ந்துவிட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு கட்டுரை பற்றியும் நான் எழுதிக்கொண்டிருந்தால் புத்தகக் கண்காட்சி முடிந்துவிடும். தனித்தனி கட்டுரைகளாகவும், பிறந்து வளர்ந்து மணமுடித்து பிள்ளை பெற்று இலக்கியத்திற்குத் திரும்பி வந்த ஒரு பெண்ணின் சரிதையாகவும், ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய வரலாற்றின் வழியே நகரும் நாவலாகவும் வாசிக்க சாத்தியமுள்ள ‘பனி உருகுவதில்லை’ இந்தப் புத்தகக் கண்காட்சியின் குறிப்பிடத்தக்க நூல்களுள் ஒன்று. மகிழ்ச்சியுடன் இந்நூலை சிபாரிசிக்கிறேன்.

Comments