இருளைப் பிளத்தல்
பொழுதுபோக்கு இலக்கியங்களைத் தமிழ்ச் சமூகம் ஓடி ஓடி தேடி தேடி வாசித்த காலம் ஒன்றிருந்தது. இதழியல் ஓங்கியிருந்த காலமது. வணிக எழுத்தாளர்களின் வானளாவிய புகழ் ஒளியில் தீவிர இலக்கியங்கள் மங்கின.
காட்சி ஊடகங்கள் பெருகிய பின் பொழுதுபோக்கு இலக்கியத்திற்கான ரசிக திரளும் இல்லாமலாகிற்று. சமூக வலைதளங்கள் விரிந்தபின் சூழல் மேலும் மோசமானது. இன்று எவரும் எதையும் வாசிக்க வேண்டியதில்லை. தேவைக்குத் துளாவினால் போதும். கையில் புத்தகத்தோடு சிலைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன. எழுத்துக்களை உற்றுப் பார்த்தாலே உறக்கம் வரும் எனுமளவிற்குத் தமிழ்ச் சமூகம் கெட்டிதட்டிப் போயிருக்கிறது. ஓரிரு பக்கங்களைக் கூட ஊன்றி வாசிக்கமுடியாத அறிவுக்குறைபாடுகளுடன் ஒரு தலைமுறையே உருவாகிவிட்டது.
இதுபோன்ற இருள் மண்டிய சூழலில்தான் விஜி போன்ற இலக்கியச் செயற்பாட்டாளர்கள் இலக்கிய ஆக்கங்களுக்கு அருகே சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறார்கள். தான் வாசித்த நூல்களைப் பற்றி எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். கூட்டம் நடத்துகிறார்கள். கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்.. உங்கள் ஒன்றரையணா வாழ்க்கையை மேலும் கொஞ்சம் பெருக்கிக்கொள்ளுங்களேன்.. என மன்றாடுகிறார்கள்.
தான் வாசித்த இலக்கிய ஆக்கங்களின் பின்னணி, எழுத்தாளரைப் பற்றிய சிறு அறிமுகம், கதைச்சுருக்கம், நூலின் சில பகுதிகள் என ஒரு புதிய கலவையில் புத்தகங்களை அறிமுகம் செய்கிறார் விஜி. லைக்ஸூகளுக்காக இவர் இதைச் செய்யவில்லை என்பது நூல்களின் தேர்விலேயே தெரிகிறது. அதிகம் பிரபலமடையாத நூல்களைக் கூட முன்முடிவுகள் ஏதுமின்றி வாசித்து இந்நூலில் அறிமுகம் செய்திருக்கிறார்.
தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் நுழைந்து வாசிக்க ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே ரசனை அடிப்படையில் தேர்வும், ஒரு முதன்மை ஆசிரியரும், சிந்தனைப் பள்ளியும் உருவாகிவிடும். விஜி ஒரு விதிவிலக்கு. எல்லா இலக்கிய வகைமைகளையும் வாசிக்கிறார். நாடும் மொழியும் தடையாக இல்லை. பன்முக வாசிப்பு இந்நூலின் மிகப்பெரிய பலம். பலவீனமும்.
எலிப்பொறியில் தேங்காயைச் சுட்டு வைப்பது போல ஒரு கதையைப் பற்றி எவ்வளவு சொன்னால் எப்படிச் சொன்னால் மூல நூலைத் தேடிப்பிடித்து வாசிப்பார்களோ அவ்வளவுதான் சொல்கிறார். அவருடைய நடையும் 'பழகி நீர்க்கும் சித்திரவதை’ போன்ற அபூர்வமான சொல்லாட்சியும் நம்முடைய வாசிப்பை ஊக்குவிக்கின்றன.
வாசிப்பிற்குள் புதிதாக நுழைபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியின் வேலையைச் செய்யக்கூடும். அதுதான் இந்தப் புத்தகத்தின் அவதார நோக்கமாகவும் இருக்கமுடியும்.
விஜிக்கு என்
வாழ்த்துக்கள்
!
Comments