கேஸனோவா



1) கூட்டிக்கழித்துப் பார்த்தால் பெண் நண்பர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதில் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை என்றபோதும் ஆஃபாயில் கேசுகள் நம்மை 'கேஸனோவோ' என்று சொல்லித் திரிகையில் சங்கடமாகத்தானே இருக்கிறது. ஆதலால் தோழியரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் தோழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

2) யாராவது ஒரு நடிகைக்கு ஸ்கேண்டல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியானால் ஆடி மாசத்து நாய் போல் அலைந்து திரிந்து பார்த்து, பத்து பேருக்காவது பரப்பி 'ஸ்கேண்டலிஸ்டாகி விட்டேன். சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒருபோதும் காணாதிருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே உறுதிமொழி எடுத்திருந்தேன். ஆனாலும் சுப்ரமண்யபுரம் சுவாதி, நயன் தாரா என்று ஊடகங்கள் கிளப்பி விட்டதில் விரதம் முறிந்து விட்டது. இந்த ஆண்டு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

3) திருமணம் குறித்தும் கணவன் மனைவி உறவுச்சிக்கல்கள் குறித்தும் சிறுவயதிலேயே உற்று நோக்க ஆரம்பித்ததில் கல்யாணம் என்றாலே 'ஷிவரிங்' வருகிறது. திருமணம் ஆகியும் வாழ்வைப் பழிக்காத ஒரேயொரு ஆடவனையாவது கண்டுபிடித்தாக வேண்டும் என கணகாலமாய் தேடிவருகிறேன். அப்படியொருத்தர் சிக்கினால் அவரிடம் 'இனிய இல்லறத்திற்கான' சூத்திரங்களைக் கற்றுத்தேர்ந்துவிட்டு கல்யாணத்திற்குத் தயாராக வேண்டும்.

4) வயிறு வகைதொகை இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பார்க்க அசப்பில் லதானந்திற்கு சித்தப்பா மாதிரி இருக்கிறாய் என்கிறாள் கேண்டி. ஓடியோ ஆடியோ சாடியோ குறைத்தே ஆக வேண்டும்.

5) ஒரு குடும்பமே தின்றுவிட முடிகிற கோழியை ஒரு வேளைக்கு சாப்பிட்டு விடுகிறேன். தமிழ்நாட்டில் தினமும் வறுபடுகிற கோழிகளுள் ஒன்று எனக்கானது என்ற புள்ளிவிபரத்திற்கு இந்த வருடம் மூட்டைக் கட்டிவிடலாம் என்று தீவிரமாக இருந்தேன். ஆனாலும் வளர்சிக்கனுக்கு வம்படியாக இழுத்துப்போனார் சிவசங்கர். சற்று நேரத்திற்கு முன் தான் ஒரு இளம்கோழியைத் தின்றுத் தீர்த்தேன். ஆனாலும் தினசரி என்ற எண்ணிக்கையை வாரம் ஒரு முறை என்று ஆக்கினாலே சேது சமுத்திர திட்டமே நிறைவேறியதற்கு சமமான சாதனை.

6) பெட்ரோல் விலை எக்குத்தப்பாய் எகிறியபோதும், பொருளாதாரச்சரிவு ஏற்பட்டபோதும் அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி யூனிகார்ன் வாங்கினேன். மைலேஜா அப்படின்னா என்னான்னு கேக்குற ஜாதியில் பொறந்த வண்டி அது. ஒரு நாளைக்கு ரூ.100/-க்கு பெட்ரோல் போட துப்பு இல்லாதவன் என்னைத் தொடாதேங்குது. ஆத்திர அவசரத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தி சவூதி நாடுகளுக்கு சவாலாக இருக்கப்போகிறேன்.

7) என்னிடம் இருக்கிற தமிழ் புத்தகங்களை (சுமார் ஐந்தாயிரம்) படித்து முடிக்க இன்னும் ஒரு ஆயுள் வேண்டும். தமிழின் க்ளாசிக்குகளில் பல இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கிறது என்றாலும் மாதத்திற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு புதிய புத்தகங்கள் வாங்கி விடுகிறேன். வாங்குவதைக் குறைத்து வாசிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

8) ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்கும் மானேஜருக்கு ஆவதை விட பதினைந்து மடங்கு அதிகமாக வருகிறது செல்போன் பில். போதாக்குறைக்கு இண்டர்நெட் பில், லேண்ட் லைன் போன். கம்யூனிகேஷன் தேவைதான். ஆனால், இவ்வளவு தேவை இல்லை. எனவே இனி நடுராத்திரிவரை நீளும் கடலைகள் 'கட்'

9) ஒரு கெட்டப் பழக்கம் கூட இல்லாமல் வாழ்வது அலுப்பூட்டுவதாக இருக்கிறது. (அதான் பதிவு போடுகிறாயே என்கிறாள் கேண்டி) குறைந்தது **** ஆவது பழகிக்கொள்ள வேண்டும்.

10) நாளிதழ்கள் தவிர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பத்திரிகைகளாவது படிக்கிறேன். என்னதான் ஓஸியில் கிடைக்கிறது என்றாலும், கிசுகிசுக்கள், மொக்கை பேட்டிகள் படித்து படித்து வெறியேறுகிறது. முதல் கட்டமாக , அவள் விகடன், குங்குமம், மங்கையர்மலர், துக்ளக், கல்கி போன்றவற்றை துறக்கலாம் என்றிருக்கிறேன்.

11) தூக்கம் குறைந்ததால் ஏற்படுகின்ற எல்லாவிதமான தொல்லைகளும் வந்துவிட்டது. வேலைகளை வள்ளுவன் கற்றுத்தந்திருக்கும் நிர்வாக முறைகளின்படி 'அதனை அவன் கை விட்டுவிட்டு' மேஜையிலேயே கால் நீட்டி தூங்கும் வித்தையைக் கற்க போகிறேன்.

12) பணம் ஒரு பொருட்டல்ல என்று விட்டேத்தியாக வாழ்ந்துவிட்டேன். கையிருப்பாய் நான்கைந்து கவிதைகளும் கவலைகளும் மட்டுமே இருக்கிறது. கொஞ்சம் சேமித்தே ஆக வேண்டும்.

13) ரமேஷ் வைத்யாவிடம் போன ஜென்மத்தில் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டையைக் கொடுத்துவிட்டேன். இந்தப் பதிவை அவர் படிக்கும் முன்னரே அதை அவரது வங்கிக்கணக்கில் வரவு வைத்தாக வேண்டும்.

14) வட்டியில்லாமல் கிடைத்தால் உடனடியாக லேப்-டாப் வாங்கி தீவிரமான எழுத்துப்பயிற்சியில் ஈடுபடவேண்டும். பின்னே தமிழை எப்படிக் காப்பாற்றுவதாம்?!

15) உண்மையோ பொய்யோ எல்லாரும் என்னை 'ரொம்பவும் கன்னிங் பெஃல்லோ' என்கிறார்கள். இந்த ஆண்டை பிரதிஉபகாரம் கருதாமல் பிறருக்கு உதவும் ஆண்டாக அறிவிக்கிறேன்.

16) ஆசிப் அண்ணாவின் இந்திய வருகைக்காகவும், லதானந்த் சாரோடு காடு பதுங்கவும், ரமேஷ் அண்ணாவோடு சில நாட்கள் தங்கி இருக்கவும் கடந்த எழு மாதங்களாய் ஒரு மணி நேரம் கூட விடுப்பு எடுக்காமல் உழைக்கிறேன். மூன்று இவ்வாண்டு நிகழ்ந்துவிட்டால் மகிழ்வேன்.

17) பதிவுலகில் இரண்டாண்டுகளாய் இயங்கியபோதும், ஓன்றிரண்டு பதிவர்களைத் தவிர வேறுயாரையும் தெரியாது. எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்துகொண்டதே இல்லை. இதை மாற்றி நம் சாதிசனங்களோடு உறவாட துடிக்கிறேன்.

18) யாராவது தண்ணீர் குழாயை நிறுத்தாமல் சென்றுவிட்டால், கழிப்பறை விளக்கை அணைக்காமல் சென்றுவிட்டால், வெள்ளைத்தாளில் வெறுமனே கிறுக்கினால், கனரக வாகனங்களின் எஞ்சீனை ஆஃப் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்தால், சிக்னலில் நிற்காமல் போனால் ரத்தம் கொதித்து, கொதித்து அடங்குகிறது. நாமே பல்வேறு சமயங்களில் பல்வேறு விதங்களில் சமூகத்திற்குக் கேடாக நடந்துகொள்கிறோம் என்றபோதும் அடுத்தவன் மீது பெரிய புடுங்கி மாதிரி ஆத்திரப்படுவது அபத்தம் என்று உணர்ந்துகொள்வது.

19) குடும்ப அரசியலை, ஏதேச்சதிகாரத்தை, அலட்சியத்தை, திமிர்த்தனத்தைக் கூடுமானவரை ரோஷத்துடன் எதிர்ப்பது. கலைஞரைன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதானேங்கிறீங்களா?

20) குத்துப்பாட்டு குலதெய்வம் பேரரசுவின் அருளாசியோடு குறைந்தபட்சம் நான் மட்டுமாவது பாட முடிகிற ஒரு குத்துப்பாட்டு எழுத வேண்டும்.

இன்னும் நிறைய்ய்ய்ய இருக்கிறது. தூக்கம் வந்துவிட்டது. மிச்சம் பொறவு.

Comments

செல்வா!
அப்பப்ப லேசா ரிலாக்ஸ் பண்ணிக்கோ! அதான் பெஸ்டு
Anbu said…
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தால் உங்கள் திருமண தடுமாற்றத்துக்கு விடை கிடைத்திருக்கும். போன சந்திப்பில் 'திருமணமே' என்று ஏக மனதாக அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.

மற்ற விவரங்களுக்கு நீங்கள் கண்டிப்பாக ஈஷா யோக வகுப்புகள் ஒரு வாரம் சென்று வாருங்கள் , நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

அன்புடன்,
அன்பு
ilavanji said…
செல்வு,

// ஆதலால் தோழியரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் //

இருக்கற உருப்படில பாதிய என்னிய மாதிரி காஞ்சுபோன காண்டு கடுவன்ங்களுக்கு தள்ளி விட்டா 2009 ல பேச்சிலருக்கு எல்லாம் நல்லது நடக்குமாம்.. பார்த்துக்கிடுங்க...

// திருமணம் ஆகியும் வாழ்வைப் பழிக்காத ஒரேயொரு ஆடவனையாவது கண்டுபிடித்தாக வேண்டும் //

தம்பி என்னக்கேட்டாலும் சொல்லிக்குடுக்க தயாரா இருக்கேன்... நாந்தாம்ல அது.. ( எங்கூட்டம்மா யாருகேட்டாலும் இப்படித்தான் சொல்லசொல்லீருக்கய்ங்க! இது தலையாட்ட கத்துக்க உமக்கு எம்புட்டு நேரமாகப்போடுது?! :) )

2010ல 20வது 200 ஆக வாழ்த்துகள்...
Ganesan said…
செல்வா,

எல்லா ஆசையும் நிரைவேற வாழ்த்துக்கள்.

அன்புடன்
காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com
//திருமணம் ஆகியும் வாழ்வைப் பழிக்காத ஒரேயொரு ஆடவனையாவது கண்டுபிடித்தாக வேண்டும் என கணகாலமாய் தேடிவருகிறேன். //

இங்க ஒருத்தன் இருக்கேன்!
இங்கே ஒரு சிறு மாற்றம் மட்டுமே!
இங்கே அவள் வாழ்க்கையை பழித்து கொண்டிருக்கிறாள்
//நீங்கள் கண்டிப்பாக ஈஷா யோக வகுப்புகள் ஒரு வாரம் சென்று வாருங்கள் , நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.//

அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என நினைத்தால் நடக்குமா?
selventhiran said…
வருகைக்கு நன்றி பாஸ்டன் பாலா...

லதானந்த் சார், ரிலாக்ஸூங்கறது 'ஓர்மிச்சால்...' வகையறா இல்லையே...?!

அன்பு, தங்கள் அன்பிற்கு நன்றி :)

இளவஞ்சி அண்ணாச்சி, நீங்களும் இல்லற சாகரத்தில் விழுந்திட்டீங்களா?!

காவேரி கணேஷ், தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!

வால் பையன், மணிமேகலையில் மனைவியை மகிழ்விப்பது எப்படின்னு ஒரு புத்தகம் இருக்குது?!

அமெரிக்க ஜனாதிபதியாகனுமா... அவனவன் பத்தான் நம்பர் செருப்பும் கையுமா அலையுதானுவோ.... மறந்துடாதீங்க வால் :)
//வால் பையன், மணிமேகலையில் மனைவியை மகிழ்விப்பது எப்படின்னு ஒரு புத்தகம் இருக்குது?! //

போய் கேட்டேன்
“உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி”ன்னு புக் இருக்காம்ல கொடுங்கன்னு!

அப்புறமென்ன டிஸ்யூம் டிஸ்யூம் தான்
King... said…
என்னிடமும் நிறைய இருக்கிறது ஆனால் எழுத முடியாதவை...
புத்தாண்டு வாழ்த்துகள்
selventhiran said…
ஹா... ஹா இதுதான் வால் பையன் 'டச்'... ஜூப்பரு

கிங், அப்படின்னா தனிச்சுற்றுக்கு மட்டும் எழுதுங்க...

பாலராஜன்கீதா வாழ்த்துக்களுக்கு நன்றி..
///
20) குத்துப்பாட்டு குலதெய்வம் பேரரசுவின் அருளாசியோடு குறைந்தபட்சம் நான் மட்டுமாவது பாட முடிகிற ஒரு குத்துப்பாட்டு எழுத வேண்டும்.
///

இங்க ஒரு குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்டு ஐட்ராபாட்ல உக்காந்திருக்கேனே, என் ஞாபகம் வரலியா... செலவே இல்லாம ஒரு குத்துப் பாட்டு எழுதித் தற்றேன், சுச்சுவேஷன மட்டும் ஈ-மெயில் அனுப்புங்க செல்வா...
Karthikeyan G said…
//சுப்ரமண்யபுரம் சுவாதி, நயன் தாரா என்று ஊடகங்கள் கிளப்பி விட்டதில் விரதம் முறிந்து விட்டது. //

link pls ;-)
Anonymous said…
// எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்துகொண்டதே இல்லை. இதை மாற்றி நம் சாதிசனங்களோடு உறவாட துடிக்கிறேன். //

அதே துடிப்போடு என்னை தனிமடலில் தொடர்பு கொள்க.

Popular Posts