சிம்பாட்டமும் சில யோசனைகளும்

கோவை மாநகர கமிஷனராக மஹாலி பதிவியேற்றதில் இருந்தே சாலைப்போக்குவரத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள். சாலை விபத்துகளற்ற போக்குவரத்திற்காகப் பிரயத்தனப்படுகிறார் (அதற்காக பத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் வேண்டுமா?! முடியலை). ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணி என பைக் ஓட்ட ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியாக இருக்கின்றனர். முக்குக்கு முக்கு நின்று சோதனை இடுகிறார்கள். ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு அபாரதமும் அதைவிடக் கொடுமையான உபதேசங்களும்.

நண்பர் சுரேஷிற்கு லைசென்ஸ் இல்லை. பைக் இன்ஸூரன்ஸ் ரினிவல் செய்யவில்லை. ஹெல்மெட் இல்லை. புகை சர்டிபிகட் இல்லை. இப்படியாக ஏக இல்லைகள். 'ஏம்யா இப்படி?! ஒரு லேனர் அப்ளை பண்ண வேண்டியதுதானே...' என்றேன். நேரம் போதவில்லை என்றார். எனக்கு மெடிக்ளைம் ரினீவல் செய்யப் போகும்போது 'வண்டியை எடுத்துக்கொண்டு இன்ஸூரன்ஸ் ஆபிஸூக்கு வாங்க' என தொலைபேசியில் அழைத்தேன். நேரமே போதவில்லை இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்றார். ஆதித்யா ஸ்டோர்ஸ் செல்வகுமார் நமக்கு நெருங்கிய நண்பர். சகாய விலையில் ஹெல்மெட் தருவார் என்றேன். 'ப்ளீஸ் நேரம் போதலை... நெக்ஸ்ட் வீக் பார்க்கலாமே' என்றார். இப்படியெல்லாம் இருந்தால் நேரம் போதவில்லையென்றா அர்த்தம்?! போதாத நேரமென்று அர்த்தம்.

***

ஊருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸில் மைசூர் பா வாங்கிப் போயிருந்தேன். 'இப்படி அநியாய விலை கொடுத்து வாங்கனுமாப்பா... நம்மூர்ல கிலோ எழுவது ரூவாய்க்கி வாங்க ஆளில்லாம இருக்கானுவ..' என்று அங்கலாய்த்தார் அப்பா. அவரிடம் சொன்னேன் "அப்பா... கோயம்புத்தூர்ல வருஷம் முழுக்க உபன்யாசம், சொற்பொழிவுகள், நாமசங்கீர்த்தனம், இசைவிழா, இலக்கியக்கூட்டங்கள், விளையாட்டுப்போட்டிகள், சாதனையாளர்களுக்கு பாராட்டு விழாக்கள், சினிமா திரையிடல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடங்களிலெல்லாம் முன்வரிசையில் உட்கார்ந்து அனுபவிக்கிறேன். வாரத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு பேச்சாளன் என் செவிக்கு உணவளித்துக்கொண்டே இருக்கிறான். இதற்கெல்லாம் கோயம்புத்தூரில் இருக்கிற ஒரே புரவலர் திரு. கிருஷ்ணன்தான். பைசா செலவில்லாமல் எனக்கு அறிவைக் கடத்துகிற கிருஷ்ணா ஸ்வீட்ஸின் விலை எனக்குக் கட்டுப்படியாகும்" என்றேன்.

***

சிம்பு மீது எனக்கு எப்போதும் ப்ரியம் உண்டு. பிரமாதமாக ஆடுவார், அற்புதமாய் பாடுவார். பாடல்கள் எழுதுவார். சண்டைக்காட்சிகளில் தூள் பரத்துவார். படத்திற்கு படம், காட்சிக்கு காட்சி விதம் விதமான ஸ்டைல்களில் வந்து அசத்துவார். இந்தச் சிறிய வயதிற்குள் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். பிரமாதமாக திரைக்கதை அமைக்கப்பட்ட அவ்விருபடங்களுள் ஒன்று இமாலய வெற்றி. தன்னையும் சரி, தன் படங்களையும் சரி பிரமாதமாக மார்க்கட்டிங் செய்வார். மேற்படி உத்திகள்தான் தமிழ்நாட்டில் நயன் - தாராவிற்கு பெரிய மார்க்கட்டினை உருவாக்கியது. இவையெல்லாவற்றையும் விட அவர் ஒரு அற்புதமான ஒருங்கிணைப்பாளர். யுவன்சங்கர்ராஜா, பாலகுமாரன், அண்டனி, வாலி மாதிரி மெகா ஸ்டார்களையெல்லாம் ஒருங்கிணைத்து பிரமாதமான ரிசல்ட் கொடுப்பார். சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் தேர்ந்த நூட்பம் உண்டு. தோல்விகளில் துவளாதவர். சர்ச்சைகள் வட்டம் கட்டி அடித்தாலும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்பவர்.

ஆனால் இந்தத் திறமைகளெல்லாம் சிலம்பாட்டம் மாதிரியான மட்டரகமான படங்களில் வீணாவதைத்தான் பொறுக்கமுடியவில்லை. பலகோடி ரூபாயை வீணடித்து தன்னையும் வருத்தி, பார்வையாளனையும் வருத்தி... இறுதி முடிவு படம் தோல்வி என்றாகிறது. சிம்பு படங்களின் பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது மேற்கத்திய துள்ளிசைப் பாடல்களோடு போட்டியிடும் நேர்த்தி ஒலி, ஒளி இரண்டிலுமே இருக்கிறது. சிம்பு தன் சகாக்களின் துணையோடு தமிழ் ரசிகர்கள் எனும் சிறிய சந்தையை விட்டு சர்வதேச சந்தைக்கு ஒரு ஆல்பம் தயாரிக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். அவரே பாட்டெழுதுவார், பாடுவார், ஆடுவார். துணைக்கு யுவனையும் வைத்துக்கொண்டு உலகை வலம் வரலாம். ஒருபடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வாங்குகிறார் என்கிறார்கள். ஒரு ஆல்பம் ஹிட்டடித்தால் டாலர்களில் குளிக்கலாம். நானும் ஏனைய நல்ல சினிமா ரசிகர்களும் தப்பிப்போம்.

Comments

Boston Bala said…
---சர்வதேச சந்தைக்கு ஒரு ஆல்பம் தயாரிக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்---

:) :))
Kumky said…
சாரி...நோ காமெண்ட்ஸ்.
selventhiran said…
பாலா சார், சிம்புவோட மெயில் ஐ.டி கிடைக்குமா?!
Kumky said…
எதுக்கு டைரெக்ட் பண்ணவா..?
பாபு said…
எனக்கும் சிம்புவை பிடிக்கும்,ஆனால் திறமை இருந்தும் இப்படி படங்களை எடுக்கிறானே என்று தோன்றும்.ஆனால் இன்னொருவரும் சிம்புவை பிடிக்கும் என்று சொல்வதை இப்பதான் கேக்கிறேன், sorry படிக்கிறேன்
//இப்படியெல்லாம் இருந்தால் நேரம் போதவில்லையென்றா அர்த்தம்?! போதாத நேரமென்று அர்த்தம். //

:-))

Popular Posts