அறிவு ஜீவி

'ரமேஷ் வைத்யா' பதிவினைப் படித்து விட்டு பலரும் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தனர். அவரது தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். மருத்துவமனையில் செல்போனை பகிரங்கமாகப் பயன்படுத்த இயலாது. கவுன்சிலிங் வகுப்புகளின் போது பெரும்பாலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். தவிர, தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்பது சிகிச்சையில் இருப்போர்க்கு கூடுதல் உபத்திரவம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அவரது எண்கள் 9566270092. வெளியூர் நண்பர்கள் அவரை உற்சாகமூட்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பலாம் என்பது அடியேனின் யோசனை.

நைஜீரியாவிலிருந்து நேசமித்திரன் அழைத்திருந்தார். எழுத்து அல்லது சினிமாக் கனவுகளை நெஞ்சில் சுமந்து சென்னைக்கு ரயிலேறும் இளைஞர்களுக்கு அபிபுல்லா சாலை வீட்டில் அறிவுமதி அடைக்கலம் கொடுத்ததைப் போல... பல பாட்டுப் பறவைகளின் வேடந்தாங்கலாக ரமேஷின் வீடு இருந்ததை நினைவுப் படுத்தினார். எவ்வித முன்னறிவிப்புமின்றி கிளம்பி, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்க முடிகிற வீடாக ரமேஷின் வீடு இருந்தது. அற்றைத் திங்கள் அந்நிலவில்... பாடல் நினைவுக்கு வருகிறது.
***
குங்குமத்தில் இருபது கவிதைகளும், தினகரன் தீபாவளி மலரில் இரண்டு கவிதைகளும் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் வெகுஜனப்பத்திரிகைகளில் நூறு கவிதைகள் (ஆம்... பத்திரிகை ஆசிரியர்கள் இதை கவிதைகள் என்றுதான் கிளாஸிபை பண்ணுகிறார்கள்!) என்கிற எண்ணிக்கையை எட்டிப் பிடித்திருக்கிறேன். ஸ்கோர் 101*
தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுத வேண்டுமென்கிற என் கனவு சுயமதிப்பீட்டுக் காரணங்களால் தள்ளிப் போகிறது.
***
ஆனந்த விகடனில் ராஜூ முருகன் எழுதிய 'ஹேப்பி தீபாவலி' என்கிற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை மிகச் சாதாரணமான ஒன்லைன் தான். ஆனால் ராஜூவின் அக்மார்க் கேலியும், பிரத்யேக நரேட்டிவும் கதையோடு லயிக்கச் செய்கிறது. ராஜூ தன் மொழியை இளமையாக மிக இளமையாக வைத்திருக்கிறார். உதிரி உதிரியாய், கன்னி கன்னியாய் எழுதி அவற்றைக் கதையின் ஒரு சுவாரஸ்ய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைப்பது அவரது பாணி. ராஜூவின் கதைகள் பொது வாசகனுக்கும், அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கும் வேறு வேறான உணர்வைத் தருபவை.
***
தமிழ்நதியின் 'ஒரு குடிமகனின் சரித்திரம்' அற்புதமான கட்டுரை அல்லது கதை. சிரிக்க, சிரிக்க படித்து விட்டு வந்தால் கடைசி பாராவில் மனதைக் கனக்க வைக்கிறார். நல்ல கவிதைகள், ஆக்ரோஷ அரசியல் கட்டுரைகள் அல்லது மனதைப் பிழியும் சோகச் சித்திரங்கள் இவைதான் தமிழ்நதி என்கிற என் உள்மன பிம்பத்தை உடைப்பதாக இருந்தது கட்டுரை. http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
***
தமிழ் நாட்டில் எனக்கு குபீர் சிரிப்பைத் தரக்கூடியவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி (வெறுமனே அப்படிச் சொல்ல மனசு வலிக்கிறது. இவரது கார்ட்டூன்கள் அறச்சீற்றத்தாலும், ஆண்மையாலும் வரையப்பட்டவை...) மற்றொருவர் நம் இணைய சிரிப்பு வைத்தியர் குசும்பன். வழமையாய் வலையும், அது தரும் சர்ச்சைகளும் ஏற்படுத்தும் மன உளைச்சலை டாக்டர் குசும்பனார்தான் தீர்த்து வைக்கிறார். அவரது சமீபத்திய ஓபாமா கார்ட்டூன் 'இப்படி ஒரு பரிசைக் கொடுத்து கையை கட்டிப் போட்டுட்டாங்களே... விக்காத பாமையெல்லாம் இனி என்ன பண்றது?!' என்கிற நையாண்டியையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் மிகவும் ரசித்தேன்.
***
'அறிவு ஜீவி' என்கிற வார்த்தையே ஒரு மித். ஜெயலலிதா ஒரு இண்டலெக்சுவல் என்பது எப்படி பைத்தியக்காரத்தனமான ஒரு கற்பனைப் பிம்பமோ அப்படித்தான் இன்னார் ஒரு 'அறிவு ஜீவி' என்பதும். நம் சுய கற்பனைகளால் கட்டி எழுப்பும் கோட்டை நொறுங்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. புத்தகங்கள் படிக்கிறார்கள், தத்துவ விசாரங்கள் செய்கிறார்கள், பொதுப்புத்தி, பிரைவேட் புத்தி, நுண்ணரசியல், மைக்ரோ அரசியல் என எழுதிக் குவிக்கிறார்கள், சக மனிதனை ரத்தம் வர அடிக்கிறார்கள். வாழ்க அறிவு ஜீவிகள்!

எழுத்தில் தனி மனித தாக்குதல்கள் வேண்டாம் என்பதை ஒரு பிரச்சாரம் மாதிரி செய்கிறவர்கள், தனி மனிதனே பிஸிக்கலாகத் தாக்கப்படும்போது எதிர்வினைகள் ஏதுமற்று வாளாவிருக்கிறார்கள். எதிர்வினை செய்பவர்களும், எதிர்ப்பைக் காட்டுபவர்களும் சண்டைக்கு அலைகிறவர்களாக, சர்ச்சை விரும்பிகளாக அடையாளப்படுத்தி விடும் அபாயம் இருந்தாலும் ஜ்யோவ் தாக்குதலுக்கு எதிரான கண்டனங்களை சக இணைய எழுத்தாளனாகப் பதிவு செய்ய வேண்டிய கடமையும், அவசியமும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சென்னைப் பதிவர்களான தண்டோரா, உண்மைத் தமிழன், நர்சிம் ஆகியோர் முகத்தாட்சண்யத்துக்காகப் பார்க்காமல் சில விஷயங்களைக் கண்டித்து எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

என் மீதும், எனது எழுத்துக்கள் மீதும் 'ஜ்யோவ்' வைத்திருக்கும் அபிப்ராயமும், எனக்கும் அவருக்கும் இருக்கும் சர்ச்சைகளும் உலகறியும். ஆனால், தனது கருத்துக்களை, விமர்சனங்களை முன் வைத்ததற்காக ஒருவர் தாக்கப்பட்டால் அது 'அஜ்மல் கசாப்' - ஆக இருப்பினும் எனது நிலைப்பாடு இதுதான்.
***
அதிரசத்திற்கு மாவு பிசையும் வாசனை எவர் வீட்டு அடுப்பங்கரையிலிருந்தோ கிளம்பி என் விடுதியறை ஜன்னலுக்குள் நுழைகிறது. 'பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எத்தனை அழகானது' என்ற வண்ணதாசனின் வரிகளும், பிராயத்து தீபாவளித் தினஙகளும் நினைவுக்கு வருகின்றன. அம்மா, அக்கா, மதினிமார்களென கூட்டுக் குடும்பமாய் இருந்த நாட்களில் தீபாவளி என்பது பத்து நாள் வைபவம். முந்திரிக்கொத்து, சுசீயம், சீடை, அதிரசம், முறுக்கு, தட்டை, கடலை பணியாரம், ரசகுல்லா, கல கலா என அவரவர் விருப்புக்கேற்ற பண்டங்களைச் செய்வதில் வீட்டுப்பெண்கள் முனைப்புடன் இருப்பர். எண்ணெய் வழியும் விரல்களும், வியர்வை வழியும் கழுத்துமாக ராப்பகலாக அடுப்படியில் சுட்ட பலகாரங்களை 'சுவாமிக்கு வைக்கனும்டா...' என்கிற ராணுவக்கட்டுப்பாட்டில் தொட விடமாட்டார்கள். ஆனாலும் யாவரும் உறங்குகிற நள்ளிரவில் ரகசியமாக எடுத்துத் தின்றுவிடுவேன். அந்த சாமிக்குத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என் குடும்பத்தைக் கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ?!

பஸ் ஸ்டாண்டில் என் வருகைக்காக அப்பா காத்திருப்பார். வாட்டர் ஹீட்டர் வெந்நீரில் இருவரும் குளிப்போம். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அரைக்கிலோ பார்சலை விளக்கு முன் வைத்து வணங்கி, ஆளுக்கொரு துண்டை சாப்பிட்டு விட்டு, எதிர் வீட்டுக் குழந்தைகளுக்கு மிச்சத்தைக் கொடுத்து விட்டு விட்டத்தைப் பார்க்கும் வறண்ட தீபாவளி. கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்.

Comments

குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் தல!

அவர் மிஸ்டுகால் கொடுக்கும் பொது பேசுகிறேன்!
//பஸ் ஸ்டாண்டில் என் வருகைக்காக அப்பா காத்திருப்பார். வாட்டர் ஹீட்டர் வெந்நீரில் இருவரும் குளிப்போம். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அரைக்கிலோ பார்சலை விளக்கு முன் வைத்து வணங்கி, ஆளுக்கொரு துண்டை சாப்பிட்டு விட்டு, எதிர் வீட்டுக் குழந்தைகளுக்கு மிச்சத்தைக் கொடுத்து விட்டு விட்டத்தைப் பார்க்கும் வறண்ட தீபாவளி. கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்//

நெறிஞ்சி முள்ளாய் குத்தும் வார்த்தைகள். கண்ணீர் முட்ட என் அழுகையை அடக்கிக் கொள்ள ரொம்ப பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. நானும் கூட்டுக் குடும்ப ஆசாமிதான்......... காலம் ஆடிய கதகளியில்..... சிதறிய துண்டில் இருந்து, தூர வீசப் பட்ட துகள் நான்......
ramesh vaidaya avarkaLin pazhaiya ennil muyarsiththukkontiruntheen.

sms seykiren

thamizhnathiyI vaasiththen

kantikkappad ventiyathuthaan

nadakkattum
அண்ணே ரொம்ப கூச்சமா இருக்கு!

ரொம்ப நன்றி!

//வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்//

சீக்கிரம் நடக்கட்டும்!
Romeoboy said…
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எல்லாம் ஓல்ட் பிரதர். சென்னை பூ கடை பஸ் ஸ்டாப்ல சேட்டு கடை ஒண்ணு இருக்கு அங்க போனா தான் தெரியும் அதிரசம் அருமை. எங்க வீட்டுல எல்லாம் பதார்த்தம் சுட்டே ரொம்ப நாள் ஆச்சு. கால ஓடம் சாப்பிடும் பண்டங்களை கூட மாற்றிவிடுகிறது. கால கொடுமை.
சில விஷயமெல்லாம் எழுதி அடுத்தவங்களை கஷ்டப்படுத்துறதுக்கு சும்மா இருக்கலாம் செல்வாண்ணே.உங்க கடைசி மேட்டரைச் சொன்னேன் :(
மணிஜி said…
”கேண்டி”ல் ஒளியில் தீபா”வலி”மறக்க வாழ்த்துக்கள்
Anonymous said…
// கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன் //

இன்னுமொரு 6 மாதம்தானே பொருத்திறு.
//அந்த சாமிக்குத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என் குடும்பத்தைக் கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ?!//

:(

நானும் கூட்டுக் குடும்ப ஆசாமிதான்.
Ashok D said…
100-க்கு வாழ்த்துக்கள்.

//என் மீதும், எனது எழுத்துக்கள் மீதும்// இந்த para தேவையில்லையென நினைக்கிறேன்.
101 கவிதைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் எழுதுவது எளிது அதை பிரசுரம் ஆகும் அளவுக்கு எழுதுவது சாதனை
***************************************************************

ரமேஷ் அண்ணன் வெகு விரைவில் வெகு விரைவில் எல்லா வித வெறுமைகளில் இருந்தும் வெளியே வர வேண்டும்
***************************************************************************
தமிழ்நதியின் இடுகை எனக்கும் உங்களை ஒத்த உணர்வை கொடுத்தது
*********************************************************************************************
எனது உணர்வுகளை "அறை " கவிதையில் பதிவு செய்திருக்கிறேன் . மற்றவர்கள் இந்நிகழ்வை இன்னும் ஒரு விவாதத்திற்கு உரியதாகவே பார்ப்பது வேதனைக்கு உரியது
*************************************************************************************************
பண்டிகை நாட்களின் தனிமை மிக வேதனை அழிப்பதான ஒரு சாபம் .தொலை பேசி வாழ்த்துகள் கடந்து தொலைக் காட்சி பிசாசை அனைத்து அன்றைய நாளின் முதல் கவளம் வழக்கமான உணவகம் அடைபட்டு கிடக்க புதிய மேசையில் கிடைக்கப் பெரும் வலி சொல்லில் அடங்காது .என்னவோ உங்கள் வரிகள் இவற்று எல்லாம் மீளக் கொண்டு வந்தது
//கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்.//

சீக்கிரம் நேரில் வாழ்த்துகிறேன். கவிதைகளின் எண்ணிக்கைக்கு மறுபடி ஒரு வாழ்த்து.

//தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுத வேண்டுமென்கிற என் கனவு சுயமதிப்பீட்டுக் காரணங்களால் தள்ளிப் போகிறது.//

ரொம்பவும் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
selventhiran said…
வாங்க வால்!

"காலம் ஆடிய கதகளி" ரசித்தேன் பித்தன்.

வாங்க மண்குதிரை

யோவ் குசும்பு, 23 வயசுப்பையன் உமக்கு அண்ணனா?!

ரோமியோ பாய், கோயம்புத்தூர்லருந்து சென்னைக்கு வந்து ஸ்வீட் வாங்கினா கட்டுப்படி ஆகுமா?!

அப்துல்லாண்ணே, ஏதோ சுயகழிவிரக்கத்துல எழுதிப்புட்டேன்.

நன்றி தண்டோரா அண்ணே.

வாங்க அண்ணாச்சி.

வாங்க பட்டாம்பூச்சி.

நன்றி அசோக்.

வாங்க நேசமித்திரன்... கவிதைகளிலே கண்டுகொண்டேன் இருவருக்குமான சிமிலாரிட்டியை...

அன்பிற்கு நன்றி ஸ்ரீ.
Anonymous said…
//கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்//

சீக்கிரம் வர வாழ்த்துக்கள் :)
anujanya said…
சுவாரஸ்யமான இடுகை. நூறுக்கு வாழ்த்துகள் செல்வா. நிச்சயம் நீங்க தீவிர இலக்கியப் பத்திரிகைகளிலும் எழுத வேண்டும்.

தமிழ்நதி - படிக்க வேண்டும். நன்றி.

குசும்பன் - ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் - பலசமயம் நானே அவனிடம் மாட்டிக்கொண்டாலும் :)

கேண்டியின் வரவுக்கு எல்லோருமே காத்திருக்கிறோம். கொஞ்சமாவது அப்பத்தான் அடங்குவீங்க :)

அனுஜன்யா
//அந்த சாமிக்குத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என் குடும்பத்தைக் கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ?!//

சோகத்தின் வலியை கூட உங்கள் சொல் நடை சுவை ஆக்குகின்றன

அடுத்த தீபத்திருநாள் தல திபாவளி ஆக வாழ்த்துக்கள்
Karthik said…
செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்களும்! :)
Anonymous said…
செல்வா, 101 கவிதைகளும் உங்கள் வலைப்பதிவில் இருந்தால் லிங்க் கொடுங்கள். அதையும் மென்நூலாகத் தொகுத்துவிடலாம்... (நானும் ஒரே நேரத்துல அத்தனையையும் படிச்ச மாதிரி இருக்கும்ல...)
Sanjai Gandhi said…
101க்கு வாழ்த்துகள்..
என்னாச்சி ரமேஷ்வைத்யாவிற்கு?

விரைவில் சந்தோஷ தீபாவளி கொண்டாட வாழ்த்துகள்..
RRSLM said…
101க்கு வாழ்த்துகள் செல்வா..
iniyavan said…
கவிதைகளுக்கு வாழ்த்துக்கள்.

கடைசி பாராவை படித்ததும் மனசு வலிக்குது செல்வா?

என்னால் ஏதேனும் உதவ முடியுமா?

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்.
Thamira said…
ஏற்கனவே படிச்சாச்சு. பின்னூட்டத்தான் லேட்டாயிருச்சு.

**

கன்னி கன்னியாய் எழுதி அவற்றை// அது கண்ணி கண்ணியாய்..

**

கேண்டி வந்ததுக்கப்புறம் தனியாக நரகாசுரன் வேறு தேவையா என்ன.? ஹிஹி..