சனிமூன்

குறுக்கொடிக்கும் வேலைகளிலிருந்து சின்னாட்களெனும் மனைவியை மீட்கும் பொருட்டு கிறித்து பிறந்தநாளில் மைசூர் புகுந்தோம். சுற்றுலா அபிவிருத்திச் செயல்பாட்டிற்கென தனக்கிருந்த பெருமையை கருநாடகம் வெகுவாக இழந்திருக்கிறதென்பதை ஒவ்வொரு அங்குலத்திலும் உணர முடிகிறது. உள்ளூர்வாசிகள் இது கர்நாடகத்தின் இருண்டகாலம் என தலை கவிழ்கிறார்கள். குமாரசாமியும், எடியூரப்பாவும் மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் ஊழலே கண்ணாயினாராய் இருந்ததன் உறுபலன்.

***
இந்தியாவின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை பெருமையுடைத்த மைசூர் ஸூவில் கொக்கு, குருவி முதல் ஆப்பிரிக்க யானைவரை பராமரிக்க தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவை எந்த லட்சணத்தில் செலவழிக்கப்படுகின்றன என்பதை எவரும் மறுபரிசீலனை செய்வதில்லை போலும். அத்தனை உயிரினங்களும் மோனத்தை வெறித்தபடி சாவை அசை போட்டுக்கொண்டிருக்கின்றன. எலும்பும் தோலுமான வெள்ளைப் புலி, உடலெங்கும் சொரி பிடித்த ஆப்பிரிக்க யானை, தண்ணீரைக் கண்டு பல நாட்களாகி விட்ட முதலைகள், சாக்கடையில் புழு தேடும் ஃபெலிக்கான்கள் :(

மைசூர் ஸூவின் பிரதான சிறப்பம்சமே அமேஸானைப் பூர்விகமாகக் கொண்ட உயிரினங்களும், சில ஆஸ்திரேலிய சிறப்பினங்களும்தான். வாக்கப்பட்ட பூமி ஊழல் தேசமாயிற்றே...பிறந்த இடத்தின் பெருமை பேச முடியாமல் மெளனித்திருக்கின்றன.
மைசூர் மகாராஜாவின் அரண்மனை கேண்டிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதன் சவுந்தர்யத்திலிருந்த சுரண்டலும், ஐரோப்பிய மோஸ்தரும் அவளுக்கு எரிச்சலூட்டியது. ‘கால் பிடித்து காத்த அரண்மனை’ என்றழைத்தாள்.

சுதந்திரத்திற்காக திப்பு போராடிக்கொண்டிருந்த போது மைசூர் உடையார் பரம்பரையின் வாரிசுகள் அவருக்கு துரோகம் இழைத்தனர். லட்சுமியம்மணி அப்போது கோயம்புத்தூரிலிருந்த கர்னல் புலர்டனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த துயர வரலாற்றினை நான் சொல்லக் கேட்டதும் அவள் என்னை இழுத்துக்கொண்டு அரண்மனையையை விட்டு வெளியேறினாள்.

***


பிருந்தாவன் செல்ல முடிவெடுத்தது ஒரு முட்டாள்தனம். விடுமுறை நாட்களென்பதால் வந்து குவிந்த வாகனங்களுக்கு அளவில்லை. நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் வாகன நெரிசல். குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள் தாறுமாறாய் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்கள் பயணம் செய்த பேருந்தின் கதவுகளைத் திறக்க இயலவில்லை. ஏசி பேருந்து என்பதால் ஜன்னல்களுக்குப் பதில் கண்ணாடிச் சுவர்தான். ஐந்து மணி நேரம் பேருந்துக்குள் சிறைப்பட்டோம். இதற்கிடையில் நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட சில முதியவர்களுக்கு மூச்சுத்திணறல், மாறடைப்பு ஏற்பட 108 வாகனமும் மேலேறி வர வழியில்லை. மருந்துக்குக் கூட போலீஸ்காரர்களைக் காண முடியவில்லை. ஆத்திரம் தாளாமல், மைசூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் எண்களை நடத்துனரிடம் வாங்கி அழைத்தேன். சம்பந்தப்பட்ட பகுதி ‘மாண்டியா’ மாவட்டத்தின் கீழ் வருகிறது. அந்த ஊர் ஸ்டேசனில் போதிய காவலர்கள் இல்லை என்று பதில் வந்தது. எரிபொருளின்மையால் வண்டியின் எஞ்சின் அணைந்து ஏசி செயலிழந்தது. டேம் மீன் ஆசையில் மதியச் சாப்பாட்டினை ரத்து செய்திருந்த கேண்டி என் மார்பில் மயங்கிச் சரிந்தாள். பேருந்தின் மேற்கூரையிலிருந்த அவசர கால கதவினை நடத்துனர் திறக்க முயற்சித்தார். பெயிண்டோ, துருவோ அல்லது என் விதியோ எதனாலோ அது இறுகி இருந்தது. திறக்கவில்லை. தண்ணீர் தண்ணீரென்று கதறினேன். கொடுப்பாரில்லை. கடும் சினத்தோடு, நின்று கொண்டு பயணிப்போர் பிடித்துக்கொள்ளும் கம்பியைப் பிடித்து குருவி விஜய் பாணியில் தலைகீழாய் நின்று கதவை ஒரு உதை விட்டேன். திறந்து கொண்டது. யாரோ ஒருத்தர் ‘சைத்தான் கி பச்சா’ என்றது காதில் விழுந்தது. குறுகலான திறப்பின்வழி வெளியேறி தண்ணீர் பாட்டிலோடு திரும்பினேன். கேண்டி உற்சாகமாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். “என்ன சார்... ஹீரோ மாதிரி ஜபர்தஸ்த் காட்டறீங்க...” பேருந்தே சிரிக்க ‘பொளேரென’ அறைவாங்கினாள். ஹனிமூன் சனிமூனானது.

***

மைசூர் பிரயாணத்தின் ஓரே ஆறுதல் கரஞ்சி ஏரிதான். கயல்கள் துள்ளும் ஓசை கேட்கும் துல்லிய அமைதியில் உறைந்திருந்தது ஏரி. கிங் ஃபிஷர், ஃபெலிக்கான், நீர்க்கோழி, ஸ்னேக் பேர்டு என பத்து வகையான பறவைகளின் வாசஸ்தலம். பறவை ஆர்வலர்களுக்கென்று பிரத்யேக வாட்ச் டவர் இருக்கிறது. படகிற்கு வந்திருப்பவன் பறவைக் கோட்டி பிடித்தவன் என்பதறிந்த படகோட்டி உற்சாகத்தோடு ஏரியின் மறுகரை நோக்கி துடுப்பைப் போட்டான். பறவைகளை அடையாளம் காட்டி அவற்றின் இயல்புகளை உடைந்த ஆங்கிலத்தில் உரக்கச் சொன்னான். மொத்த பயணிகளில் ஒரு நாளைக்கு ஒருவன் கூட பறவைகளில் கவனம் செலுத்துவதில்லையென ஆதங்கப்பட்டான். பாம்பினைப் போல கழுத்தினைக் கொண்ட ‘ஸ்னேக் பேர்டு’ பறவைகளை மிக நெருக்கத்தில் பார்க்க பரவசமாக இருந்தது.

***

பேருந்து நிலையங்களைத் தம் மூத்திரக் கடலில் மூழ்கடிப்பது இந்திய தேசிய குணம் என்பதால் மைசூர் கார்ப்பரேஷன் ‘உச்சா ஓசு. கக்கா காசு’ என கழிப்பிடங்களை அமைத்துள்ளது. புத்தம் புதுசாய் இருக்கிறது மைசூர் பஸ் ஸ்டாண்டு.

மைசூரில் கண்ட இன்னொரு ஆச்சர்ய ஐடியா எல்லா நடத்துனரும் தங்களது பையில் பாலித்தீன் கவர்கள் வைத்திருப்பது. பிரயாணிகள் பேருந்துக்குள் வாந்தியெடுத்து விடக்கூடாதென.

***

பென்சில் ஃபிட் ஜீன்ஸூம், ஸ்லிவ்லெஸ் டி-சர்ட்டும் - அதில் குதர்க்கமாய் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுமாய் வளையவரும் கன்னடத்துப் பைங்கிளிகள்தாம் மைசூரின் வனப்பிற்குக் காரணம். அரை மீட்டர் கடப்பதென்றாலும் ஐந்தாறு அழகிகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. இன்னொருமுறை சாவகாசமாய் வரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

Comments

க ரா said…
இன்னொருமுறை சாவகாசமாய் வரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்
---
haha.... Belated new year wishes selva..
/*“என்ன சார்... ஹீரோ மாதிரி ஜபர்தஸ்த் காட்டறீங்க...” பேருந்தே சிரிக்க ‘பொளேரென’ அறைவாங்கினாள். */

நிஜமாகவே அறைந்து விட்டீர்களா? அப்பிடி இருந்தால் நீங்கள் செய்தது தவறல்லவா?

உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் கேட்பதாக நினைக்க வேண்டாம். பதிவில் எழுதியதால் கேட்டேன்.

கோபத்தை மௌனத்திலும் காட்டலாம். அது மிகவும் வலிமையானது.
இன்னொரு முறை சாவகாசமாக வருவது துணைவியுடனா - தனியாகவா - எப்படிச் சென்றாலும் நல்வாழ்த்துகள் - எண்ணியது ஈடேற
ஆனாலும் ரொம்ப குசும்புய்யா உமக்கு!

பொண்டாட்டியோட சுற்றுலா போனா கோவத்தையெல்லாம் சேட்டுகிட்ட அடமானம் வச்சிட்டு போயிடனும்.

இது உலகப்பொதுமொழி.
\\சின்னாட்களெனும் மனைவியை மீட்கும் பொருட்டு// வார்த்தை தப்பு! சின்னாட்களேனும் என்றிருக்க வேண்டும்.

\\‘பொளேரென’ அறைவாங்கினாள். ஹனிமூன் சனிமூனானது.// செயல் தப்பு! மனைவியை அடிப்பது, அதைப் பெருமையுடன் எழுதி பகிரங்கப்படுத்துவது... உங்களை மேல்ஷாவனிஸ்ட்னு சொன்னா மட்டும் கோபப்படுவீங்க. நிதானமா யோசிங்க ரைட்டர் கம் கவிஞரண்ணா!

\\இன்னொருமுறை சாவகாசமாய் வரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.// தனியாவா? அப்படின்னா உங்க எண்ணம் தப்பு! :)
Indian said…
/*“என்ன சார்... ஹீரோ மாதிரி ஜபர்தஸ்த் காட்டறீங்க...” பேருந்தே சிரிக்க ‘பொளேரென’ அறைவாங்கினாள். */

ஒரு ரெண்டு வருஷத்துக்கு பல்ல கடிச்சிகிட்டு பொறுமையா இருங்க.
:
:
:
:
அப்புறம் பழகிடும். :)

Popular Posts