மனசாட்சி



தமிழினி மீண்டும் இணைய வடிவம் பெற்றிருப்பதை இலக்கிய ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம் என்பேன். அதன் வடிவமைப்பு எளிமையாகவும், அசத்தலாகவும் இருக்கிறது.

***

தென்மாவட்ட சிற்றூர்களில் ஒரு குடும்பம் ராவோடு ராவாக ஊரைக் காலி செய்து கிளம்புகிறதெனில் சந்தேகமே இல்லாமல் திருப்பூருக்குத்தான் சென்றிருப்பார்கள் என தீர்மானித்துக்கொள்ளலாம். விவசாயம் பொய்த்து, வேறு தொழில் வாய்ப்புகளுமின்றி, இம்சிக்கும் சிட்டை வட்டியால் மொத்த குருதியும் சுண்டிய பின் வாழ வழி தேடி ஓடுவோரின் கடைசிப் புகலிடம் திருப்பூர்.

வறண்ட தலையும் கலைந்த விழிகளுமாய் திருப்பூரின் வெறிச்சோடிய வீதிகளில் திரியும் தெக்கத்தி இளைஞர்களின் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்க்கையில் கண்கள் கசிகின்றன. நடப்பு இதழ் தமிழினியில் இப்பிரச்சனை குறித்து மணல்கடிகை கோபாலகிருஷ்ணன் மற்றும் கவி மகுடேஸ்வரன் எழுதிய இரண்டு விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இருவரும் இத்தொழிலினர் என்பதால் தகவல் புஷ்டியோடு இருக்கின்றன இக்கட்டுரைகள்.

ஆயிரத்துச் சொச்சம் பேர்கள் மட்டுமே படிக்கின்ற தமிழினி சமூக பிரச்சனைக்கு 16 பக்கங்கள் ஒதுக்குகிறது. திருப்பூரில் மட்டுமே பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிற தமிழகத்தின் முன்னணி வெகுஜன வார இதழ்கள் இப்பிரச்சனை குறித்து உருப்படியான எதையும் எழுதாதது தடித்தனமன்றி வேறென்ன?! லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை தமிழ் மக்களுக்கு போய்ச் சேரவேண்டியதில்லையென நினைக்கிறார்களா?!

***

நாதஸ்வரத்தில் வசனங்களே இல்லாமல் ஒரு எபிஸோட் என விளம்பரித்தார்கள். என்னே புதுமையென்று அலுவல் விட்டு அவசர அவசரமாய் கிளம்பி வந்து பார்த்தேன். இதுகாறும் தனித்தனியாய் ஒப்பாரியைப் போட்டவர்கள் கோரஸாய் ஒப்பாரினார்கள். என்ன எழவுய்யா இது...?!

***

பத்மவிபூஷண் டாக்டர் ராஜேந்திர பச்சோரியின் பேச்சை கேட்க நேரிட்டது. இயற்கையைச் சீரழிப்பதில் மேல்தட்டின் பங்கே அதிகம். இயற்கைச் சமனநிலை குலைந்து ஏற்படும் பேரிடர்களில் அவர்கள் சுலபமாகத் தப்பித்து விடுகிறார்கள். எளியோர்கள் மாட்டிக்கொண்டு உயிரிழக்கிறார்கள், வீடு இழக்கிறார்கள், வேலை இழக்கிறார்கள் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். வேகம் என்பதே அபத்தம் நாம் தவறான பாதையில் பயணிக்கையில் என ஜிடிபி மதிப்பீடுகளை விளாசினார். தனிமனிதனால் கடைப்பிடிக்க முடிகிற மூன்று எளிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

1) மாமிசம் உண்பதைக் கொஞ்சமேனும் குறைத்துக்கொள்ளுங்கள்.
2) சைக்கிள் மிதியுங்கள்
3) முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள்

***
நடப்பு இதழ் சூரியகதிரில் அடியேனின் சொற்சித்திரம் ‘தூஸ்ரா’ வெளியாகியுள்ளது. சிறுகதைக்குரிய அந்தஸ்து கிஞ்சித்தும் இல்லைதான் ஆனால், வாசிக்க உற்சாகமாக இருந்தது என ஜெயன் குறிப்பிட்டிருந்தார். உற்சாகமாகத்தான் இருந்தது வாசிக்க :)

***

கொஞ்ச காலத்திற்கு முன் நான் பணியாற்றிய நிறுவனமொன்றில் உதவாக்கரை சக ஊழியன் ஒருவன் இருந்தான். ‘உப்பானது சாரமற்றுப் போனால்...’ எனும் விவிலிய வாசகத்தை அடிக்கடி நினைவூட்டுகிறவன். அவனால் நிறுவனத்திற்கோ, குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ ஏன்... அவனுக்கே கூட பிரயோசனமில்லை என்பது சான்றோர் வாக்கு. மிகச் சமீபத்தில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. நம்பினால் நம்புங்கள் அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஆகி இருந்தான். சுஜாதாவின் பீட்டர் கதை நினைவுக்கு வந்தது. ஆனால், இந்தப் பக்கியிடம் பீட்டரின் குணாம்சங்கள் எதுவும் தட்டுப்பட்டதாக நினைவே இல்லை. எப்படி நிகழ்ந்தது இந்த ஆச்சர்யம்?!

‘எல்லாப் பயலுவலும் ஓடிப் போயிட்டாய்ங்க. என்னையும் டிரான்ஸ்பர், டீ-புரொமசன், மெமோன்னு என்னென்னமோ பண்ணிப்பார்த்தாங்க. உட்கார்ந்த இடத்தை விட்டு அசையலையே. கடைசீல இருக்கறதிலே சீனியர்னு மேனேஜர் ஆக்கிட்டாங்க...’ என்று சிரித்தபடி பதிலளித்தான்.

அழகாகத் தொடுத்து நெருக்கிக் கட்டப்பட்ட பூமாலையில் ஒவ்வொரு பூக்களாக விடுபட எஞ்சிய பூவே பூஜைக்குப் போகிறது என்பார் விகடன் அசோகன். உண்மைதான்.

***

உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் அழைத்தார். சக நண்பர்களோடு சேர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அமைக்க இருப்பதாகவும் அதற்கு நல்ல பெயரைச் சிபாரிசு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். கொஞ்சமும் யோசிக்காமல் ‘மனசாட்சி’ என்று வைக்கும்படிச் சொன்னேன்.

எப்படியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு திருடத்தான் போகிறார்கள். கொஞ்சமாவது உருத்தட்டும் என்றுதான்.

***

Comments

சுவாரசியமான தொகுப்பு..!! :)
//‘எல்லாப் பயலுவலும் ஓடிப் போயிட்டாய்ங்க. என்னையும் டிரான்ஸ்பர், டீ-புரொமசன், மெமோன்னு என்னென்னமோ பண்ணிப்பார்த்தாங்க. உட்கார்ந்த இடத்தை விட்டு அசையலையே. கடைசீல இருக்கறதிலே சீனியர்னு மேனேஜர் ஆக்கிட்டாங்க...’ என்று சிரித்தபடி பதிலளித்தான்.//

ada ungalukkum intha anubavamaa.....
தமிழினி - தம்பி! இன்னும் டீ வர்ல! :)
Venkatramanan said…
திருப்பூர் பிரச்சினை குறித்து தினமணி, புதிய தலைமுறையில் வெளிவந்த கட்டுரைகள்...

உருத்தட்டும் - உறுத்துகிறதே!

மற்றும் சென்ற வருடம் தமிழினி சந்தா செலுத்திய அந்த எழுவருக்கும் நினைவூட்டினீரா?!

அன்புடன்
வெங்கட்ரமணன்
//கொஞ்சமும் யோசிக்காமல் ‘மனசாட்சி’ என்று வைக்கும்படிச் சொன்னேன்.

எப்படியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு திருடத்தான் போகிறார்கள். கொஞ்சமாவது உருத்தட்டும் என்றுதான்//.
மிகவும் ரசிக்க வைத்த வரிகள். உறுத்தினால் சந்தோசம்