கிளப்புல மப்புல

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிக்கும் இவ்வமயம் இணையத்தில் 20 பில்லியன் ஹிட்டுகளை அநாயசமாகக் கடந்து விட்டிருக்கிறது ‘கொலவெறி’. பல நூறு வெர்ஷன்கள் உருவாகிவிட்டன. பெண்கள் பாடுவது போல. அரசியல்வாதிகள் பாடுவது போல, குடிகாரர்கள் பாடுவது போல. இன்னும் பல வெர்ஷன்கள் உருவாகும் சாத்தியம் இருக்கிறது. தீந்தமிழில், மலையாளத்தில், தெலுங்கில், ஹிந்தியில், அரபியில் இன்னமும் பெயரறியா பல மொழிகளில் இதே மெட்டமைப்பில் பாடல்கள் உருவாகி உலா வருகின்றன. இந்திய திரையுல பிரபலங்கள் வியந்தோதுகிறார்கள். மெள்ள மேற்கிலும் பரவுகிறது என்கிறார்கள் கடல் கடந்து வாழும் நண்பர்கள். சந்தேகமேயில்லாத தமிழ்ச்சாதனை.

மொழிக்கொலையில் என்ன சாதனை வேண்டிக்கிடக்கிறதென எழவெடுப்பவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. பொது அபிப்ராயத்திற்கும், ரசனைகளுக்கும் எதிராகச் சிந்திப்பதையே அறிவு ஜீவித்தனத்தின் வெளிப்பாடாகக் கருதுபவர்கள். சமீபத்தில் மண்டையைப் போட்ட ஒரு கஸல் பாடகனுக்கு அஞ்சலி எழுதும்போது ஓர் இசைஜீவி, ‘அவர் யார் தெரியுமா?! ரஹ்மான் ஆஸ்கார் வாங்கும்போது, ரஹ்மானுக்குத் திறமையிருந்தால் அவரை ஒரு கஸலை உருவாக்கச் சொல்லுங்களென’ சொன்னவராக்கும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் எங்களூரில் செத்த பேச்சு என்பார்கள். அவ்ளோ பெரிய அப்பாடக்கரான ஜெக்திக்சிங்கிடம் ‘நீரு ஒரு ஆஸ்கார் வாங்கி காட்டுமய்யா...’ என கேட்க நாதியில்லை. எவருடைய சாதனையையும் சிறுமைப்படுத்த இங்கே எவருக்கும் உரிமையில்லை.

நைட் ஷிப்ட் முடித்து அகாலத்தில் வீடு திரும்புகையில் தினமும் நான் காணும் காட்சி ஒன்றுண்டு. நட்ட நடு ராத்திரியில் குளிரையோ, கொசுவையோ பொருட்படுத்தாமல் சாலையோரங்களில் நாடி நெஞ்சில் சாய்ந்திருக்க தலை குனிந்து உளறிக்கொண்டிருப்பார்கள் டீன் ஏஜ் இளைஞர்கள். கடும் குடியென்பது பார்த்தாலே தெரியும். இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மேல் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களைப் பார்த்து உளறுவோரும் உளர். கிட்டப்போனால், தனியாக புலம்பவில்லை ஹெட்போன் மாட்டிக்கொண்டு எவரிடமோ சண்டையிட்டுக்கொண்டோ, அழுதுகொண்டோ, மன்றாடிக்கொண்டோ, கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டோ இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆம்; இவர்கள் சூப் பாய்ஸ். சுயதவறினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காதலையோ, நட்பையோ தொலைத்தவர்கள். இழந்த சொர்க்கத்திற்காக வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பவர்கள்.

‘கொலவெறி’ மனப்பாரம் சுமக்கிற இந்த தலைமுறையின் பாடல். இதில் புழங்குவது அவர்களது வாழ்வின் மொழி. இந்த இசை சுய எள்ளலின் இசை. ஏமாற்றத்தின் இசை. இதற்கு முன்பு தனுஷ் எழுதி பாடிய ‘அடிடா அவள... வெட்டுறா அவள...’ கூட ஒரு சூப் சாங்க்தான். தன் மொழியில், தன் பிரச்சனையைப் பாடுகிற ஒரு பாடலை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். நமக்கும் பிடித்திருந்தால் அணக்கம் காட்டாமல் ரசித்து விடுவோமே. காசா... பணமா...?!

***

கொலவெறி பாடலுக்கு முன்னரே இணையத்தில் வெளியாகி பல லட்சம் ஹிட்டுகளை அடைந்த ஒரு பாடல் ‘கிளப்புல... மப்புல...’ ஒருவகையில் கொலவெறிக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். அசலான தமிழ்-ராப். உருவாக்கியவர் ஆதி எனும் கொங்கு இளைஞனும் அவனது நண்பர்களும்.

கரண்டையைத் தாண்டும் மேலாடை; தலையிலும் முழங்காலிலும் கைக்குட்டையால் கட்டிக்கொள்வது; தொப்புளைத் தொடும் கழுத்துச் சங்கிலி அதன் முடிவில் சொழவு தண்டிக்கு டாலர்; மூக்கில், உதட்டில், நாக்கில், கொதவாளையில் இன்னபிற உடல் உறுப்புகளில் கம்மல்கள்; ஒண்ணுக்கு கேட்கும் விரலில் ஒன்பது வகை மோதிரங்கள்; நடுவிரலில் நண்டுக்கால் மோதிரம்; தோளில் படரும் ஜடாமூடி; தெருச்சண்டையில் பெண்கள் செய்யும் ஆபாச விரல் சமிக்ஞையினை அடிக்கடி காட்டும் காக்காவலிப்பு நடனம்; விரலி மஞ்சளை மிக்ஸியில் அடிப்பது மாதிரி எவனாலும் புரிந்துகொள்ள முடியாத வேகத்தில் வரிகள் - இவைதாம் ஹிப்ஹாப்பின் அடையாளங்களெனக் கொள்ளப்படுகிறது. உண்மை அதுவல்ல.

ஹிப்ஹாப் இசைவடிவம் ஏனோதானா உளறல் வகைமையன்று.
1970களில் அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பரின மக்களின் இசையாக வெடித்துக்கிளம்பிய புரட்சிகர இசைவடிவம்தான் ராப். இதனால்தான் இன்றளவும் ஒடுக்குமுறையை, ஆக்கிரமிப்பை, இனக்கசப்புகளை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இசையாக ஹிப்ஹாப் இருக்கிறது. போருக்கு எதிரான உலகளாவிய இயக்கமான மாவோ ஒவ்வொரு ஆண்டும் வான்கூவர் நகரில் ஹிப்ஹாப் ஃபெஸ்டிவல்கள் நடத்துகிறார்கள். கழகங்களுக்கு எதிரான கலக இசை என்றோ, கலவை இசை என்றோ என்னளவில் இதனை பொருள் கொள்கிறேன்.


சொல்லே இசையாக ஓங்கி ஒலிப்பதுதான் ராப். விளிம்பு நிலையிலிருந்த இனத்தின் இசையெனினும் டிஜேயிங், மிக்ஸிங், கிராஃபிட்டி, பிரேக்கிங், பீட்பாக்ஸ் எனும் ஐவகை ஒழுங்கமைவுகளைக் கொண்டது. இவற்றைக் கடைபிடிக்காமல் உருவாவதை வெற்றுக் கரைச்சல் என்றுதான் கொளல் வேண்டும். கொஞ்சம் பிரயத்தனம் எடுத்துக்கொண்டால், ஹிப்ஹாப் இசைவடிவினை எவரும் கேட்டு ரசித்து கொண்டாட இயலும். தாய்த்தமிழை ராப் இசைவடிவத்திற்குள் புகுத்தி பலரும் சாதனைகள் படைத்திருக்கிறார்கள். மலேஷிய யோகி.பியை தமிழ் -ராப்பிசையின் தந்தை எனலாம். புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் பலரும் ராப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அசல் அக்மார்க் பச்சைத் தமிழனாக இதில் முத்திரை பதித்திருப்பவர் என நான் ஆதியை சொல்லத் துணிவேன்.

ஆதி ஒரு அண்டர் கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட். அது என்ன அண்டர் கிரவுண்ட்?! அஃதொர் இயக்கம்; அல்லது பிடிவாதம்; வெகுஜன ஊடகங்களின் வாசல்களில் வாய்ப்புகளுக்காகப் போய் நிற்காமல், அவற்றின் அகோரப் பசிக்காகத் தன் கலையை நீர்த்துப் போகச் செய்யாமல், மனச்சாய்வுகளின்றி மக்களுக்காக மக்களின் மத்தியில் கலை வளர்ப்பவன்தான் அண்டர்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட். இவன் ஒருபோதும் ஊடகங்களை நோக்கிச் செல்லான். மக்களின் மத்தியில் தன் கலையினைக் கசிய விடுவதன் மூலம் ஊடகக் கவனத்தை தன்னோக்கி குவியச் செய்பவன். தமிழிலக்கியத்தில் இதற்கு உடனடி உதாரணமாக நான் கோணங்கியைச் சொல்வேன். பூமணியும் நினைவில் எட்டிப்பார்க்கிறார். விருது செய்திகளில் அவரது பெயர் அடிபட்டதும் ஒரு பெரும் பத்திரிகை அவரிடம் சிறுகதை கேட்டிருக்கிறது ‘இத்தனை காலமும் சிறுபத்திரிகையில் மட்டுமே எழுதுவது என்றிருந்திருக்கிறேன்; இனிமேலும் அப்படியே இருந்துடறனே...’ என பதில் வந்திருக்கிறது.

ஆதியின் ஹிப்ஹாப்தமிழா ஒரு அண்டர்கிரவுண்ட் பேண்ட். இவர்களின் ‘கிளப்புல மப்புல’ பாடல் யூ டியூபில்தான் வெளியானது. கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களின் மத்தியில் பிரபலமாகி, திரும்ப திரும்ப கேட்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளை அடைந்த பிறகு ஊடகங்கள் அவர்களைப் பின் தொடர்கிறார்கள். பேட்டி காண்கிறார்கள். எதுவானபோதும் ஆதி ஒரு அண்டர்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்டாகவே தொடர்கிறார். சினிமாக்காரர்களின் வீட்டு வாசலிலோ, சேனல்களின் வாசல்களிலோ நிற்கும் ஆசையில்லை.

தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் தற்போது ஹிப்ஹாப் தமிழா குழுவினரின் இசை நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ‘தேர்தல் ஆனந்தம்’ பாடலுக்கு இவர்களைத்தான் அணுகினார்கள். இந்திய அரசாங்கத்தோடு இணைந்து இவர்கள் வடிவமைத்த தேர்தல் பாடல் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வாக்குப்பதிவினை அதிகரிக்கச் செய்தது.

ஹிப்ஹாப் தமிழாவில் அப்படியென்ன ஸ்பெஷல்?! தமிழ்தான் ஸ்பெஷல். முடிந்தவரைக்கும் அழகு தமிழில் சமகாலத்தினைச் சித்தரிக்கிறார்கள். இளைஞர்களின் மொழியில் விரிகிறது இவர்களின் பாடல்கள். தங்களது சமூக விமர்சனங்களை எதிர்ப்புகள் வரினும் முன் வைக்க தவறுவதில்லை. தமிழில் பேசுவதை வெட்கமாக கருதும் தலைமுறையை அத்தலைமுறையின் பிரதிநிதியே கேலி செய்கிறார். ஆதியின் அக்கறை உண்மையானது என்பதை அவரது சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் கண்டுகொண்டேன். தமிழ்நாட்டில் தமிழராய் இருந்துகொண்டு தமிழில் பேசுவதைக் கேவலமாக நினைப்பதே உண்மையான கேவலம் என்கிறார். அவரது ரசிகர்கள் கரகோஷம் செய்து ஒத்துக்கொள்கிறார்கள். தமிழுணர்ச்சியை தூண்டி காசு பார்ப்பதை வியாபாரி செய்வான். கலைஞன் செய்யமாட்டான். தங்கிலீஷ் பெண்களைக் கேலி செய்யும் ஓர் அழகான பாடல் ஆதியின் அடுத்த ஆல்பத்தில் வெளியாக இருக்கிறது. அதற்குப் பின் ‘ஹேய் வ்வாட்ஸ் அப் யார்ர்... கோன்னா ஹேங்க் அவுட்...’ பீட்டர்கள் கணிசமாகக் குறையும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும், மகாநாடுகளும் தமிழ் வளர்க்கிறேன் பேர்வழி என என்னமோ செய்துகொண்டிருக்கட்டும். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என கிளம்பியிருக்கிறார் ஆதி. அவர் செய்து முடிப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் முன்னோடி புரட்சிப்பாடகனாக நினைப்பது ‘எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என முழங்கிக் கிளம்பிய பாரதியை.



Comments

பல தரப்பட்ட இசையை பற்றிய நல்லதொரு ஆராய்ச்சி. "கொலை வெறி " பாடலின் வெற்றியில் எனக்கு புரியாத ஒரு விஷயம் உண்டு. சினிமாவில் கீழ் மட்ட மக்களை பிரதிபலிப்பதாலேயே தனுஷ் படம் விரும்பப் படுவதாக சொல்கிறார்கள். இணையத்தில் கீழ் மட்ட மக்களின் பங்கில்லை இங்கேயும் வெற்றி. அவருடைய வெள்ளந்தித்தனம் பலரை கவர்கிறது என்று நினைக்கிறேன்
KSGOA said…
நேற்று உங்கள் முந்தய(2009,2010) பதிவுகள் படித்தேன்.இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையே என்று நினைத்தேன்.இன்றய பதிவு பார்த்து மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்கள்.
இரண்டாவது வீடியோவில் கடைசியில் இரண்டு விரலைக் காட்டி, இரட்டை இலைக்கு ஏன் ஒட்டு கேட்கிறார்? #டவுட்..
ஆதியைப் பற்றி நீங்க சொல்வது சரிதான் ஆனா கிளப்புல மப்புல சரியான ராமசேனா வகை பாட்டு.நல்ல டியூன் இருந்தாலும் மகா மட்டமான கருத்து.இதில் என்ன தமிழ் வளர்க்கிறாங்கனு புரியல.
Thamira said…
ஆதியின் இசையில், வரிகளில் ஒரு உயிர்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னால் கேள்விப்பட்டதில்லை. நன்றி செல்வா.

எதையாவது எழுதிக்கொண்டிருக்கவும்.
shri Prajna said…
நமக்கும் பிடித்திருந்தால் அணக்கம் காட்டாமல் ரசித்து விடுவோமே. காசா... பணமா...?!”

ஆமாம்பாஆமா..

Popular Posts