எழுத்துக்கு மரியாதை

நேற்று நண்பன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். 5 மணிக்கு துவங்க வேண்டிய விழா தமிழ்ப்பண்பாட்டின்படி ஒரு மணி நேர காத்திருக்குப் பின் துவங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம், அதிமுக மாநாட்டுக்கு வந்தது போன்ற உணர்வு எனக்கு. கொஞ்மேனும் அறிவுலக பரிச்சயம் உள்ளவர்கள் ஏன் விஜய், டைரக்டர் ஷங்கர் போன்ற ஆசாமிகள் மீது ஒவ்வாமை கொள்கிறார்கள் என்பது புலப்பட்டது. அப்படத்தோடு சம்பந்தப்பட்ட சகல ஜீவராசிகளும் இருவரையும் பாமாலை பாடி பூமாலை சூட்டினர். அடிக்கிற சிங்கியில் காது கிழிந்துவிடாதா?! பிரபு, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள்கூட விதிவிலக்கல்ல.

இறுதியாக ஏற்புரை வழங்கிய ஷங்கர் ‘இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறதென்றால், த்ரீ இடியட்ஸை இயக்கிய ராஜ்குமார் ஹிரானிக்குத்தான் அப்பெருமை சேரும்’ என மிகுந்த அவையடக்கத்தோடு சொல்ல மொத்த கூட்டமும் சிலிர்த்துக்கொண்டது. என் மனது மட்டும் ‘சேதன்...சேதன்’ என அடித்துக்கொண்டது. மொத்த விழாவிலும் சேத்தன் பகத்தின் பெயர் எவ்வகையிலு குறிப்பிடப்படவில்லை. எந்த இடத்திலும் எழுத்தாளனுக்கு பின்னிருக்கைதானா?! சேதனின் ‘பைவ் பாயிண்ட் சம் ஓன்’ நாவலை பேரரசு இயக்கியிருந்தால் கூட அது வெற்றிகரமான திரைப்படமாகத்தான் இருந்திருக்கும். ஐஐடி வாழ்வின் சகல பரிமாணங்களும், நவ இளைஞர்களின் வாழ்வும் இளமையான மொழியில் சித்தரிக்கப்பட்ட நாவல் அது. எவ்வகையில் பார்த்தாலும் த்ரீ இடியட்ஸின் மூலக்கதையாளனுக்கே முக்கியத்துவம் அதிகம். சரி சேத்தனைத்தான் விட்டார்கள். மிகச்சிறப்பாக நாவலை திரைக்கதையாக்கிய ஜோஷிக்கும் அதே கதிதான்!

***

இந்தச் சங்கடங்கள் ஒருபுறம் இருக்க சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் நிறைவு விழாவில் நேற்று ஒரு அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து சிறந்த படங்கள் இரண்டிற்கும், தனிநபர் பங்களிப்பிற்கு ஒன்று என மொத்தம் மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பட்டியலில் இந்த ஆண்டு 12 திரைப்படங்கள் இருந்தன. இவ்விருது ஒரு லட்சம் ரூபாயும் கேடயமும் உள்ளடக்கியது. பொதுவாக தனி நபர் பங்களிப்பு விருதுகள் இயக்குனர்கள் அல்லது நடிகர்களுக்கு வழங்கப்படுவதுதான் வழமை. இந்த ஆண்டு சிறந்த தனிநபர் பங்களிப்பிற்கான விருது ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியரான பாஸ்கர் சக்திக்கு வழங்கப்பட்டது. மதன், ரோகிணி மற்றும் பிரதாப் போத்தன் அடங்கிய ஜூரிக்களின் ஏகோபித்த தேர்வாக பலத்த கரவோலிகளுக்கு இடையே இவ்விருதினை பாஸ்கர் சக்தி பெற்றுக்கொண்டார். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரமாக நான் இதை கருதுகிறேன் என்றார் பாஸ்கர்.

கதை இத்தோடு முடியவில்லை. மதுரையிலிருந்த சு.வெங்கடேசனும் இந்த நிறைவு விழாவிற்கு வரவழைக்கப்பட்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றமைக்காக கவுரவிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் சரத்குமார் தன் சொந்தப்பணத்திலிருந்து வெங்கடேசனுக்கு ஒரு லட்சம் ரூபாயினை மேடையிலேயே வழங்கியிருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது என்னளவில் மிக முக்கியமான நிகழ்வு. விழா அமைப்பாளர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்துகொள்கிறேன்.

***

“தமிழ் சினிமா ஒரு கூவம் மாதிரி. இரண்டு பாட்டில் மினரல் வாட்டரைக் கொட்டி அதனைச் சுத்திகரித்து விட முடியாது” என எஸ்ரா மற்றும் ஜெயனின் திரைப்பிரவேசத்தைப் பற்றி நாஞ்சில் சொன்னார். இப்போது அவரே மினரல் பாட்டிலாகி இருக்கிறார். பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் என தமிழின் முக்கிய எழுத்தாளுமைகள் கூவத்தை சுத்தம் செய்ய களமிறங்கியுள்ளார்கள். பார்ப்போம்.

Comments

பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துக்கள்.
நாஞ்சில்நாடன் அவர்களின் படைப்பு ஏதேனும் திரைப்படமாகிறதா செல்வா..?!
Unknown said…
எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்
wishes to baskar sakthi & Venkatesan
நல்ல வேலை. சேதன் என்று வாய் விட்டு சொல்லாமல் விட்டீர்கள். அவர்கள் என்னத்தை கண்டார்கள். எவனோ மலையாளி வந்த சேட்டனுக்கு சப்போர்ட் பண்ணுகிறான் என்று நினைத்து மாப்புள இங்க தனியா ஒருத்தன் சிக்குனாண்டா. முல்லைப் பெரியாத்துக்கு நியாயம் கேப்போம் வாடா என்று கூவி மொத்த மலையாளிகளுக்குமான பதிலை உங்கள் முதுகில் எழுதாமல் விட்டார்கள் போங்கள்.
Prabu Krishna said…
எழுத்தாளர்களை பயன்படுத்தி இருந்தால் தமிழ் சினிமா நல்ல சினிமாவாக இருந்து விடுமே. இவர்களில் பாதி பேருக்கு கதையே முக்கியம் இல்லை. அஞ்சு பாட்டு. நாலு பைட்டு. அவ்ளோ தான் படம். நடுவுல நடிகை இடுப்பையோ, மார்பையோ காட்டிட்டா ரசிகனுக்கு திருப்தி என்ற நினைப்பு.

"அழகர்சாமியின் குதிரை" நல்ல முயற்சி. சிறந்த கதை. பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துகள்.
shri Prajna said…
"தமிழ்ப்பண்பாட்டின்படி ஒரு மணி நேர காத்திருக்குப் பின் துவங்கியது" ஹும் ஹூம் திருந்தமாட்டாங்கலே..என்ன செய்ய ஏதோ சினிமாகாரங்கள பாக்கன்னா முந்திஅடிச்சிட்டு போற சனத்தயில்ல சொல்லனும்..தனி நபர் துதி ஒரு தொத்துவியாதி மாதிரி முன்னால யாரவது பேசினாங்கன்னா அப்பிடியே follow பண்ணிட்றது.story யாரோடதுன்னு பார்கனும் hollywood ல எல்லாம் directors equal லா story writter தான் போடுவாங்கன்னும் எஸ்.ரா.ஒரு தடவை பேசறப்போ சொன்னாரு. இங்க கதைய திருடாம original writter பேர் போடுவதே பெரிய விஷயம்.இப்போதானே நடிகனுகளை கொஞ்சம் விட்டுட்டு directors,camera man,art director ன்னு கவனிக்கிறோம்.காலப்போக்கில் மாறனும்.
பாஸ்கர்சக்திக்கும்,வெங்கடேசனுக்கும் விருது கிடைத்தது சந்தோசம்.எந்த உழைப்புமே வீண்போகாது ஏதோ ஒருவிதத்தில் கவனிக்கப்படுவது ஆறுதல்.

”பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் என தமிழின் முக்கிய எழுத்தாளுமைகள் கூவத்தை சுத்தம் செய்ய களமிறங்கியுள்ளார்கள். பார்ப்போம்” நானும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
uorodi said…
எப்போதேனும் அதிசயங்கள் நிகழ்கின்றன
கூவத்துக்குக்கு பக்கத்தில் ஒரு நல்ல தண்ணி சிற்றோடையாகவேனும் நம் படைப்பளிகள் பங்களிப்பார்கள்.அவன் இவன் மாதிரி மாட்டிக்கொள்ளாமலும் தப்பிக்கணும்

Popular Posts