Sunday, July 27, 2014

திருடருடன் நான்

தினத்தந்தியில் இடம்பெறக் கூடிய பரிபூரண தகுதிகளுடைய ‘திடுக்’கிடும் சம்பவம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்தது.

அப்போது நான் விகடன் ஊழியன். மீச்சிறு கிராமங்களில் கூட விகடன் கிடைக்கச் செய்யவேண்டுமெனும் முனைப்புடன் ஊர் ஊராகச் சென்று முகவர்களை நியமனம் செய்துகொண்டிருந்தேன். ஈரோட்டிலிருந்து அறச்சலூருக்குச் செல்லும் பேருந்தில் ஏறுகையில் நிகழ்ந்தது அந்த சம்பவம். படியேற முயன்ற என்னை நெட்டித் தள்ளியபடி ஒருவன் ஓடினான். தவறி கீழே விழப்போனவன் சுதாரித்து கம்பியை பிடித்துக்கொண்டேன். அவனது கரங்கள் முன்புறமாக சேர்த்து வைக்கப்பட்டு விலங்கு மாட்டப்பட்டிருந்தது. கைதி!

சரவல் எனில் சற்றும் தயங்காமல் பத்தடி பின்னால் பாயும் நான், வழக்கத்திற்கு மாறாக முன்னால் பாய்ந்தேன். பயணிகள் ஸ்தம்பித்து நிற்க அவன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கிடையே புகுந்து புகுந்து ஓடினான். எப்படி வேண்டுமானாலும் வளைந்து குழையக்கூடிய ஒடிசல் தேகம் அவனுக்கு வாய்த்திருந்தது. பத்தே எட்டில் பேருந்து நிலைய வாசலுக்குப் போய் விடுவான் போலிருந்தது. தோளில் காவியிருக்கும் வியாபாரப் பை பின்னால் இழுக்க, செருப்பு பிய்ந்து தெறிக்க, நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு தலை தெறிக்க அவனைத் துரத்தினேன். எனக்கும் அவனுக்கும் இரண்டடி இடைவெளி இருக்கையில் அவன் சட்டென்று நின்று சடாரென திரும்பினான். ‘ *&^%$மவனே, பக்கத்துல வந்தா பிளேட துப்பிடுவேன்..’ என உறுமினான். முன்னோர் தவப்பயன் என் மூளை சட்டென்று வேலை செய்தது. தோளில் தொங்கிய வியாபாரப் பையினைக் கழற்றி அவன் மூஞ்சியில் எறிந்தேன். நிலை தடுமாறி கீழே விழுந்தான். சட்டென்று கூட்டம் அவன் மேல் பாய்ந்தது. கைதியின் காவலுக்கு உடன் வந்திருந்த இரண்டு போலீஸ்காரர்கள் மூச்சிரைக்க வந்து கூட்டத்தை விலக்கினர். ஒருவர் கைதியின் செவுளில் பொளெரென இரண்டு அறை விட்டார். மற்றொருவர் தாய்க்குலங்கள் தத்தம் காதுகளைப் பொத்திக்கொள்ள வைத்தார். எனக்கு எங்கிருந்தோ சோடா வந்தது.எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டேன். என் கைகால் நடுக்கம் நின்று படபடப்பு குறைய  கொஞ்சம் நேரம் பிடித்தது. திருட்டு வழக்கில் கைதானவன் என்று சொன்னார்கள். காவலர்கள் என் பெயர் விபரங்களைக் கேட்டு குறித்துக்கொண்டார்கள். வேறு பஸ் கிடைத்து நான் கிளம்பும் வரை மாறி மாறி நன்றி சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.

பஸ்ஸில் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்நேரம் இந்தப் பரபரப்புச் சம்பவத்தால் ஈரோடு பற்றியெரிந்து கொண்டிருக்கும். இச்செயற்கரிய தீரச்செயலுக்காக என்னை நானே பலவாறு பாராட்டிக்கொண்டேன். கோவை திரும்பியதும் எனக்கு நானே பார்ட்டி கொடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தேன்.  “அடடா.. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைக் கொடுக்காமல் வந்து விட்டோமே... நாளிதழ்கள் அழகாக பிரசுரித்திருக்குமே.. கைதியை விரட்டிப் பிடித்த இளைஞன்!; உயிரைப் பணயம் வைத்து திருடனைப் பிடித்த வாலிபர் - பொதுமக்கள் பாராட்டு!; தப்பிக்க முயன்ற கைதியை விரட்டிப் பிடித்த பத்திரிகையாளருக்கு கமிஷனர் பாராட்டு!” - விதம் விதமான தலைப்புகள் மனக்கண்ணில் மின்னின.

ஒரு நாள் டூரை நீட்டித்து ஈரோட்டில் தங்கி மறுநாள் நாளிதழ்களைப் பார்த்து விட்டுப் போனால் என்ன? பிரஃப் ரோடு கல்யாணி லாட்ஜில் அறையெடுத்து தங்கினேன். மறுநாள் நாளிதழ்கள் எதிலும் இந்தச் செய்தியில்லை. சரி ஒருநாள் கழித்து வரலாமென அன்றிரவும் தங்கினேன். செய்தி வரவில்லை. ஈரோடு முகவரிடம் நடந்த சம்பவத்தில் சில திடுக்கிடும் திருப்பங்களைச் சேர்த்துச் சொல்லி செய்தி பேப்பரில் வந்தால் கட்டிங்கை அனுப்புங்களென வேண்டுகோள் வைத்து ஊர் திரும்பினேன்.

ஆறு மாதங்கள் வரை செய்தி வரும் என மனதார நம்பினேன். இடைப்பட்ட காலத்தில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் குழந்தை பெற்றாள்; கழிப்பறையில் லட்சக்கணக்கில் பணம் இருந்த பை கிடந்தது; மனநிலைப் பிறழ்வு உள்ள ஒருவர் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினார்; பிரபல தாதா ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான்; ஆளுங்கட்சிக்கு விரோதமான பத்திரிகை பார்சல்களை முகம் தெரியாதவர்கள் தீக்கிரையாக்கினார்கள். ஆனால், என்னுடைய சரித்திர சாதனை மட்டும் கடைசி வரை வரவேயில்லை. என் செருப்பு அந்து போனதுதான் மிச்சம்.

***

டந்த சில மாதங்களுக்கு முன் வார இறுதிக்கு ஊருக்குச் செல்லும் என் தங்கையை வழியனுப்ப காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தேன். நல்ல குளிர் இரவு. அவளது லேப்டாப் பையினை சீட்டில் வைத்து விட்டு பேருந்து கிளம்பும் வரை முன்வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். பின் வாசல் வழியாக வேட்டி சட்டை அணிந்த முதியவர் ஒருவர் முதுகில் ஒரு லேப்டாப் பேக்கை சுமந்தபடி இறங்கினார். ’வாட் ஏ காம்பினேஷன்’ என சொல்லிச் சிரித்த எனக்கு சட்டென புத்திக்கு உறைத்தது. அது தங்கையின் லேப்டாப்! ‘ஐயா... பெரியவரே.. சார்.. யோவ்.. டேய்..’ நின்றாரில்லை. சிட்டாகப் பறந்தார்.  ‘வயதோ அறுபது.. வாலிபர் போல் சுறுசுறுப்பு’ என்றொரு விளம்பரத்தை முன்னாட்களில் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து சென்றார். விரட்டிச் சென்று சட்டையைப் பிடித்து இழுத்தேன். எழுபது வயதிருக்கும். நன்றாகக் குடித்திருந்தார். பரோட்டாவுக்காகப் பிசைந்து வைத்த மைதா மாவில் இரண்டு குத்து விட்டாற் போன்ற அமுங்கிய முகம். ‘சாரி பிரதர்.. மாத்தி எடுத்துட்டேன் போலருக்கு.. உங்க பேக்கா இது... வச்சுக்கோங்க’ அதற்குள் பின் சீட்டில் இருந்த பெண் இறங்கி வந்து விட்டார் ‘என் பேத்தியோட பேக்தான் அது... வேற பஸ்ஸூல போறோம்னு சொல்லிதாங்க எடுத்தாரு..’. தொழில்முறை திருடர் என்பது ஊர்ஜிதம் ஆனது.

அதற்குள் கண்டக்டர்கள், டிரைவர்கள் கூடி விட்டார்கள். கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கிளம்பும் பஸ்களில் வார இறுதிகளில் லேப்டாப் பைகள் காணாமல் போவது தொடர்கதை என்றும்  ஒருமுறை நடத்துனரின் பெட்டியே பறிபோனது என்றும் விதம் விதமாகச் சொன்னார்கள். அதற்குள் பெட்டியைப் பறிகொடுத்த நடத்துனருக்கு தகவல் போய் விட்டது போல. பாய்ந்து வந்து பெரியவர் செவிட்டில் அடித்தார். விதம் விதமான வசவுகள். அடிகள். என் தங்கை கீச்சுக்குரலில் பேக்தான் கிடைச்சுடுச்சுல்ல... தாத்தாவை விட்ருங்க என அணத்தினாள். அடிப்பதை நிறுத்தி விட்டு அவளை உற்றுப்பார்த்த ஓட்டுநர் ஒருவர் ‘ஊருல இறங்கும்போது அய்யோ..அம்மா கடன் வாங்கி வாங்கின லேப்டாப்பை காணமேன்னு.. ஒன்ன மாதிரி படிக்கிற புள்ளைக வயித்துல அடிச்சுடு அழுறத வாராவாரம் பாக்கேம்மா... இவன மடியில வச்சி கொஞ்ச சொல்றீயா.. டிக்கெட் எடுத்து ஏறிட்டு நடுவழியில பைய எடுத்துட்டு எறங்கிருவாம்மா தாயளீ..’ என்று மீண்டும் சாத்துப்படலத்தை துவங்கினார். நான் குறுக்கே பாய்ந்து யாரும் அடிக்காதீங்க.. நான் போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிடறேன் என்றேன். தரும அடி ஆர்வலர்கள் கிடைத்த நல்வாய்ப்பு பறிபோன ஆதங்கத்தில் முறைத்தபடி விலகினார்கள். தங்கையும் அடுத்த பேருந்தில் ஊருக்கு கிளம்பி போய்விட்டாள்.

ஒரு கையால் பெரியவரின் சட்டையைப் பிடித்தபடி மறுகையால் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்கி புகார் எழுதி போலீஸ் பூத்திற்கு அழைத்துப் போனேன். தீவிர தியானத்தில் ஆழ்ந்து குண்டலினியை உசுப்பி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்த காவலர் ஒருவர் எரிச்சலுடன் கண் விழித்தார். கண்ணுக்குள் கருந்தேள் கொட்டியது போல கசக்கிக்கொண்டார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் செயற்கையான ஒரு தீவிர பாவனையை உருவாக்கிக்கொண்டு கையிலிருந்த ரப்பர் தடியால் பெரியவரின் தொடையில் இரண்டு அடி வைத்தார். பெரியவர் கையெடுத்து கும்பிட்டபடி ‘ஈரோடுங்க.. பிள்ளைங்க வீட்டை விட்டு தொரத்திட்டாங்க.. பசி தாங்க முடியாம திருடிட்டேங்க..” என்றார்.  “தாயோளீ சரக்கடிக்க காசு இருக்கு.. சாப்பிட காசு இல்லையோ... சட்டையக் கழட்டுடா &*&(^%^&% மவனே” இப்போது இரண்டு அடிகள் கொஞ்சம் உறைப்பாக ஓங்கி விழுந்தது. ரப்பர் தடி தொடையில் இறங்கும் ஓசையில் எனக்கு உடல் விதிர்விதித்தது. தர்மசங்கடமாகவும் இருந்தது. பை கிடைத்தவுடன் இவரை விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது. இதே வயதும், தோற்றமும் உடைய அப்பாவின் நினைவு வந்தது. ‘சார், இந்தாங்க என் கம்ப்ளைய்ண்ட். நீங்க இவரை விசாரிச்சுக்கங்க..தேவைப்பட்டா கூப்பிடுங்க’ கிளம்ப யத்தனித்தேன்.

 “அய்யோ சார்.. நான் கம்ப்ளைய்ண்ட் எடுத்துக்க முடியாது. பேட்ரால் வண்டிக்கு சொல்லியிருக்கேன். இப்ப வந்துடும். இது ரேஸ்கோர்ஸ் ஸ்டேசன் லிமிட். நீங்க இன்ஸ்பெக்டர் ஐயாவப் பாத்து அக்யூஸ்ட ஹேண்ட் ஓவர் பண்ணிடுங்க..” என வேண்டுகோள் வைத்தார் காவலர். இதென்னடா வம்பு என நான் போலீஸ் பூத்தில் காத்திருந்தேன். இதற்கிடையில் அவ்வப்போது உள்ளே வருகிற காவலர்கள் என்னையும் பெரியவரையும் விசாரிப்பார்கள். ஆளுக்கு முறையே இரண்டு அடி லத்தியால் பெரியவரின் தொடையில் வைப்பார்கள். இது என்ன விநோத கணக்கு என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை. பெரியவரின் சட்டையைக் கழற்றி காவலர்கள் பீராய்ந்ததில் ஒரு மூக்குக்கண்ணாடியும், திருவண்ணாமலை அண்ணாமலையாரின் சிறிய புகைப்படம் ஒன்றும் கிடைத்தது. வயிற்றில் எப்போதோ செய்த அறுவை சிகிழ்சை தழும்புகள் இருந்தன.

கொரகொரக்கும் வயர்லெஸ் இரைச்சல்களைக் கேட்டபடி போலீஸ் பூத்திற்குள் காத்திருப்பது பதட்டத்தை ஏற்படுத்தியது. தூக்கம் கலைந்த கடுப்பில் என் மீது எதாவது கேஸ் எழுதிவிடுவார்களோ என்று கூட ஒரு கணம் பயந்தேன்.

ஒரு வழியாக வாகனம் வந்தது. அவரை வண்டியில் ஏற்றிக்கொள்ளுங்கள். நான் எனது டூவீலரில் பின்னால் வருகிறேன் என்றேன். காவல் வாகனஓட்டி ஒத்துக்கொள்ளவில்லை. திரும்ப கொண்டாந்து விடுறேன் சார்.. எங்க வண்டிலேயே வாங்க என என்னை விடாப்பிடியாக திருவாளர் திருடருன் சேர்த்து உட்கார வைத்தார். பெரியவர் பேட்ரால் வாகன ஓட்டியிடம் ‘தீப்பெட்டி இருக்குமா தம்பி’ எனக்கேட்க அவர் பச்சை பச்சையாக வைதார். அவரது சொந்த ஊர் மதுரைப்பக்கம் திருமங்கலமா என கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.

வண்டி ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் வருவதற்குள் டிரைவர் ஏராளமான தகவல்களைச் சொன்னார். திருடர் தனியாள் இல்லை எனவும், அடித்துக்கொடுப்பதுடன் இவரது வேலை முடிந்து விட்டது. பஸ்ஸ்டாண்டுக்குப் பின்புறம் புதரில் பேக்கை எறிந்து விடுவார். அங்கிருந்து கலெக்ட் செய்ய ஒருவர். பஜாருக்கு எடுத்துச் சென்று விற்க ஒருவர் என பெரிய கேங் ஆபரேட் ஆகுது. சின்னப் பசங்க, திருநங்கைகள் உள்ளிட்ட பலர் இந்த டீமில் இருக்காங்க என்றார். எனக்கு சுவாரஸ்யம் அடக்கமாட்டாமல் ஒன்றைக் கேட்டே விட்டேன் “இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்களே சார்.. பின்ன ஏன் இவங்களை அரெஸ்ட் பண்ணாம விட்டு வச்சிருக்கீங்க..”

ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் எனக்கு பல இன்ப அதிர்ச்சிகள் காத்திருந்தன. இன்ஸ்பெக்டர் பிஸியாக இருந்ததால், நானும் திருடரும் ஒரு அறையில் காத்திருந்தோம். அறையில் ஒரு பெண் காவலர் மேஜையில் அமர்ந்து எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தார். அவரது முதுகிற்குப் பின்னால், பக்கவாட்டில், தலைக்கு மேல் இருந்த பரணில் ஏராளமான கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதிலெல்லாம் என்ன எழுதப்பட்டிருக்கும்? சும்மா இருக்கும் கோப்புகளை நூலகங்கள் போல என் போன்ற தீவிர வாசகர்களுக்கு வாசிக்கக் கொடுத்தால் என்ன என கேனத்தனமாக சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அவரது எழுத்து மேஜை முழுக்கவும் ஃபைல்கள் இருந்தன. பக்கத்தில் கொசுவத்தி சுருள் புகைந்து கொண்டிருந்தது. அதன் கங்கு விழுந்து எந்நேரம் வேண்டுமானாலும் தீப்பற்றிக்கொள்ளலாமென தோன்றியது. நேரம் ஒன்பதைக் கடந்து விட்டிருந்தது. பக்கி இன்னும் வீடு திரும்பலையே என வீட்டம்மனிடமிருந்து எனக்கு அழைப்புகள் வரத்தொடங்கின. சுருக்கமாக விஷயத்தை சொன்னேன். மனைவி அதில் சுத்தமாக ஆர்வம் காட்டவில்லை.  ‘வரும்போது கடை திறந்திருந்தா ரெண்டு பரோட்டா வாங்கிட்டு வாங்க.. வயிறு லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு..சீக்கிரம் வந்து சேருங்க’ என ஃபோனை வைத்து விட்டாள். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. சமூகப்பொறுப்புள்ள பிரஜையின் சாகஸங்களுக்கு சொந்த வீட்டிலேயே மரியாதை இல்லையென்றால் எப்படி?


அங்கங்கே பணி முடித்து காவலதிகாரிகள் ஒவ்வொருவராக சோர்ந்த முகங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். கேசம் கலைந்து, கலங்கின கண்களுடன் அவர்களைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது. ஸ்டேசனுக்குள் கொசு பிடுங்கியெடுத்தது. இருந்த அறையை ஒரு முறை நோட்டமிட்டேன். கும்பாரம் கும்பாரமாக ஃபைல்கள். அவற்றை அடுக்கி வைக்க முறையான பீரோக்கள் இல்லை. ரைட்டரின் தலைக்கு மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி கடிகாரத்தின் நிமிட முள் போல நிறுத்தி நிறுத்தி நகர்ந்துகொண்டிருந்தது. நாம்தான் வாயால் ஊதி காற்றை உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஒருகணம் எனது அலுவலக அறையை நினைத்துக்கொண்டேன். ச்சே இவர்களென்ன பாவம் செய்தார்கள். இப்படிப்பட்ட பணிச்சூழல்தான் இவர்களைக் கடுமையானவர்களாக மாற்றியிருக்கிறது. நம்மால் முடிந்தது கொஞ்சம் கல்லூரி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு இவர்களது ஃபைல்களை, அலமாரிகளை முறையாக அடுக்கி கதவு ஜன்னல்களுக்கு கொசுவலை அடித்து, ஃபேன்களைத் துடைத்துக் கொடுத்து உதவினால் என்ன என்றும் தோன்றியது.


திருடர் மெள்ள வாய் திறந்து அந்த பெண் காவலரிடம் ‘தீப்பெட்டி கிடைக்குமாம்மா...’ என்றார். கடுப்பானவர் மேஜையிலிருந்த சில்வர் டம்ளரை எடுத்து அவர் மேல் ஏறிந்தார். உள்ளறையை நோக்கி திரும்பி ‘ஏட்டையா இந்த நாயை வந்து என்னன்னு கேளுங்க..’ என கத்தினார். திருடர் பயந்து சுவரின் மூலையில் ஓட்டிக்கொண்டார். இந்தாளு திருடனா இல்லை காமெடி பீஸா என எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. கூடவே அவர் மீது மெள்ளிய வாஞ்சையும் உருவானது. அண்ணாமலையார் படம் வைத்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இவரை அனுப்பிவிட்டு நாமே சிறை சென்றுவிடலாமா என்று கூட ஒருகணம் யோசித்தேன். திரு கண்டிப்பாக ஜாமீன் எடுக்க வரமாட்டாள். பரோட்டா வாங்கி வராத கோபத்தில்.

மஃப்டியில் வந்த அதிகாரி ஒருவர் என்னவென விசாரித்தார். திருடர் முகத்தைப் பார்த்ததும் பரபரப்பானவர். தன் செல்ஃபோனை எடுத்து என்னவோ தேடினார். சட்டென ஒரு படத்தை எடுத்து காட்டியவர். அதை திருடரின் முகத்தோடு ஒட்ட வைத்துப் பார்த்தார். பிறகு, இவனேதான் தாயோளீ என கூவினார். என்னைப் பார்த்து நல்ல காரியம் பண்ணீங்க சார்..சூப்பர் சார்.. என்று முதுகில் தட்டினார். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில் காவலர்கள் தத்தம் அலுவல்களை விட்டு விட்டு  அறைக்குள் கூடினார்கள். சமீபத்தில் பிரபல கல்யாண மண்டபமொன்றில் மொய்க்கவர் அபேஸ் செய்யப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த தினத்தன்று காலை அந்தப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கண்ட மஃப்டி அதிகாரி சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த கீழ்படிதலுள்ள திருடரைப் பிடித்து விசாரித்திருக்கிறார். பதில் முன்னுக்குப்பின் முரணாக இருக்கவே எதற்கும் இருக்கட்டுமென ஒரு புகைப்படமும் எடுத்து வைத்திருந்திருக்கிறார். பிறகுதான், மொய்க்கவர் ஓஹயா சம்பவம் நடந்திருக்கிறது. பெரிய இடத்துக் கல்யாணம். கடுமையான ப்ரஷர் வேறு இருந்ததாகச் சொன்னார். நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். அதிலிருந்தவர் பெரியவர் போலவும் இருந்தார்.

சரசரவென ஸ்டேசனில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சிலர் வந்து என் கைகளைக் குலுக்கினார்கள். நான் பொறுப்புள்ள பத்திரிகை ஊழியன் என்றார்கள். இதையெல்லாம் எழுதிக்கொடுத்தீங்கன்னா என் மானேஜர்கிட்ட காட்டிப்பேன். ஒரு எழவுக்கும் ஆகாதவன் என்கிறார் அவர் என சொல்ல நினைத்தேன். மஃப்டி அதிகாரி என் பெயர் விபரங்களைக் குறித்துக்கொண்டார். உங்களுக்கு நிச்சயம் ரிவால்வர் கிடைக்கும் என்றார். எனக்கெதுக்கு ரிவால்வர்? அட ரிவார்டு! தூக்கக்கலக்கத்தில் அப்படி கேட்டிருக்கிறது.

அதற்குள் பெரியவரின் வேட்டியும் உருவப்பட்டு பூசை கொள்ள வாராய் பராபரமே என அதிகாரிகள் அவரை நெருங்கினர். இப்போது பெரியவரின் குரலே மாறியிருந்தது. அதிகாரம் மிக்க உறுதியான குரலில் ‘நான் குடிச்சிருக்கேன். இப்போ அடிக்காதீங்க. எதுவா இருந்தாலும் காலையில பேசுங்க’. நான் உறைந்து போய் நின்றேன். மெள்ள வெளியேறினேன்.

ஸ்டேசனை விட்டு வெளியே வந்தால் பேட்ரால் வண்டியைக் காணவில்லை. விசாரித்ததில் அது போய் அரைமணி நேரமாச்சு என்றார்கள். ஆட்டோ பிடித்து பஸ்ஸ்டாண்டு போய் பைக்கை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் தங்கையை அழைத்து ‘உன் தாத்தா வெறும் தாத்தா இல்லை.. பக்கா மங்காத்தா’ என்றேன்; மனைவியைக் கூப்பிட்டு பெரிய கொள்ளைக்கூட்டத்தின் தளபதியையே பிடித்துக்கொடுத்திருக்கிறேன். கமிஷனரே வந்து கரங்களைப் பிடித்து வாழ்த்தினார். நாளைக்கு பேப்பர்ல வரப்போகுது என்று கொஞ்சம் ஃபிட்டிங்குகளைச் சேர்த்தேன். ’வாழ்த்துக்கள் செல்வேந்திரன். வந்து சேருங்க’ என வைத்து விட்டாள்.

விடிய விடிய தூக்கம் வரவில்லை. எப்பேர்பட்ட சாதனை?! முறையாக காவல்துறையிடம் ஒப்படைத்தது எவ்வளவு நல்லதாகப் போயிச்சு. மொய்ப்பணம் திருட்டு வழக்கில் எவ்வளவு பெரிய பிரேக் த்ரோ! நாளை கண்டிப்பாக பேப்பரில் வரும். எப்படியோ உறங்கிப்போயிருக்கிறேன். ஜனாதிபதி சட்டையில் பதக்கம் குத்துவதாக அதிகாலையில் கனவு வந்தது. துள்ளியெழுந்தேன். மணி ஐந்தரை. கடைக்கு பேப்பர் வரும் வரை பொறுப்பதற்கில்லை. நியூஸ் ஏஜெண்டுகளின் பாயிண்டிற்கே சென்று அனைத்து பேப்பர்களையும் வாங்கிப் பார்த்தேன். செய்தி இல்லை,

மறுநாள், அதற்கடுத்த நாள்வரை பொறுத்துப்பார்த்து ‘ஸ்டேசன் பீட்’ பார்க்கும் செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை ராத்திரி எதுனா மொய் மேட்டர் சொன்னாங்களாவென விசாரித்தேன். இல்லையென சொல்லிவிட்டார். ஒருவேளை ரகசியமாக வைத்திருந்து மொத்த கும்பலையும் வளைப்பார்களாயிருக்கும் என திரு ஆறுதல் சொன்னாள். அப்படின்னா ஜூவியில கூட செய்தி வருமென நினைத்து சந்தோசப்பட்டேன். மூன்று மாதம் வரை பாலிமர் செய்திகள் கூட விடாமல் பார்த்து வந்தேன். செய்தி வரவில்லை. தப்பித்தவறி வெளியூருக்குச் செல்ல நேர்ந்தால் கூகிளில் ‘காந்திபுரம் லேப்டாப் திருடன் / கோவை திருமண வீட்டில் மொய்க்கவர் / வளைத்துப்பிடித்த வாலிபர்’ என்றெல்லாம் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவர் திருடர் அல்ல. திருவண்ணாமலை யோகி என விசாரணையில் தெரியவந்திருக்குமோ என்னமோ?!

***

டுத்த முறை ஒரு திருடரை சந்திக்க நேர்ந்தால் காவல் நிலையத்திற்குச் செல்வதற்கு முன் எங்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரைக்காட்டி செய்தி எழுதச் செய்வேன். அல்லது குறைந்த பட்சம் ஒரு செல்ஃபியாவது எடுத்து ‘திருடருன் நான்’ என ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்வேன்.

***

13 comments:

வெங்கட்ராமன் said...


சும்மா இருக்கும் கோப்புகளை நூலகங்கள் போல என் போன்ற தீவிர வாசகர்களுக்கு வாசிக்கக் கொடுத்தால் என்ன என கேனத்தனமாக சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது


இவ்வளவு ரணகளத்திலயும் வாசிக்க நினைக்கிறீங்க. நல்ல வாசனைய்யா நீர்.அதற்குள் பெரியவரின் வேட்டியும் உருவப்பட்டு பூசை கொள்ள வாராய் பராபரமே என அதிகாரிகள் அவரை நெருங்கினர்

வாய்விட்டு சிரிக்க வைத்த வரிகள்

Jeyakumar Srinivasan said...

செல்வேந்திரன், அருமையான நடை. இருநிகழ்ச்சிகளையும் நேரில் கண்டது போன்ற விவரனை. படிக்க பிடித்திருந்தது.

Anonymous said...

உங்களளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்தவரை எனது அனுபவத்தை கீழ்கண்ட இணைப்பில் பதிந்திருக்கிறேன்.

http://www.tamilpaper.net/?p=7599

முரளிகண்ணன் said...

செல்வா இஸ் பேக்

வடுவூர் குமார் said...

வாவ்! வாசிப்புக்கு ஒரு விருந்து இது.

Mahi_Granny said...

உங்களுக்கு ரிவார்டாக ரிவால்வர் தரலாம் . எழுதுங்க செல்வேந்திரன்

butterfly Surya said...

அருமை செல்வா. Love you. Cheers.

Narayan K said...

அருமை

Narayan K said...

அருமை . Keep writing

Adimurugan Venugopalan said...

கடைசியில நீங்க வீட்டுக்கு பரோட்டா வாங்கிக் கொண்டு போநீங்கலான்னு சொல்லவே இல்லையே. வாங்காம போயிருந்தா உங்களையும் சொல்லியிருப்பாங்களே, "பூசை கொள்ள வாராய் பராபரமே". - அது தனி கதையா வருமா?

A Simple Man said...

because of your sister's fault (she should have kep the laptop with her & not in the seat) we got interesting stories from u :-)
keep writing more..

jayakanth said...

சூப்பர் செல்வா.

jayakanth said...

சூப்பர் செல்வா