விமர்சன பீஷ்மர்
//ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்களாம்//
ஃபேஸ்புக்
விமர்சகர்: பாட்டிகள் பொதுவா கிராமங்கள்லதானே இருப்பாங்க
//ஒரு நாள் அவங்க வடை சுட்டாங்களாம்//
ஃபேஸ்புக்
விமர்சகர்: எனக்குத் தெரிஞ்சு பல பாட்டிகளுக்கு பல் இருக்காது; பருப்பு வடை சாப்பிடமுடியாது.
ஆகவே சுட எத்தணித்தது உளுந்தவடையாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். கதை எழுதுபவர்கள்
துல்லியமான சித்திரத்தை அளிக்கவேண்டும்.
//காக்கா வந்து வடைய தூக்கிட்டுப்
போயிடுச்சாம்//
ஃபேஸ்புக்
விமர்சகர்: பொதுவாக வடையை கிச்சனில் சமைப்பதுதான் வடவள்ளி பகுதிகளில் வழக்கம். வடையை
வீட்டு வாசலில் சுடுவதைப் போல சித்தரிப்பது கதை மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.
மேலும் சூடான எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்ட வடை 86 டிகிரி சூட்டில் இருந்திருக்கும்
என்றே நான் நினைக்கிறேன். அவ்வளவு சூடான வடையை எப்படி ஒரு எளிய காகம் எடுத்திருக்க
முடியும்.
//அந்த வழியா ஒரு நரி வந்துச்சாம்//
ஃபேஸ்புக்
விமர்சகர்: நானறிந்தவரை நரிகள் காட்டில்தான் இருக்கும். நகரங்களுக்கு வரும் அட்ரஸ்
அவைகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
//நரி காக்காவைப் பார்த்து ‘காக்கா..
காக்கா… நீ ரொம்ப அழகா இருக்கே… ஒரு பாட்டு பாடுன்னு’ சொல்லுச்சாம்//
ஃபேஸ்புக்
விமர்சகர்: காக்கா அமர்ந்திருந்தது மின் கம்பத்திலா, வேப்ப மரத்திலா (வேம்பு வேறு வேப்பமரம்
வேறு என்றேதான் நினைக்கிறேன். பொதுவாக வடவள்ளியில் வேப்பங்காய் கசக்கும்.) என எழுத்தாளர்
குறிப்பிடவில்லை. அது கூட பரவாயில்லை. ஆனால், காகத்தின் பாஷை நரிக்கு எப்படித் தெரியும்
என்கிற எளிய தர்க்கம் கூட எழுத்தாளருக்குத் தெரியாதது மிகுந்த சோர்வளிக்கிறது. நான்
வாசித்த யுவால் நோவா ஹராரி புத்தகத்தில் மிருகங்கள் பறவைகள் பேசிக்கொள்வதைப் பற்றிய
குறிப்புகள் இல்லை என்பதை நீங்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம்.
//காக்கா பாடறதுக்காக வாயை திறந்து
‘கா கா’ன்னுச்சாம். வடை கீழே விழுந்துருச்சாம். நரி அதை எடுத்துக்கிட்டு ‘நல்லா ஏமாந்தியான்னு’
சொல்லிட்டு காட்டுக்குள்ள ஓடிடுச்சாம்//
ஃபேஸ்புக்
விமர்சகர்: இங்கேதான் பிரச்சனை வருகிறது. வடை கீழே விழுந்திருந்தால் மண் ஒட்டியிருக்கும்.
அதனால் நரிக்கு பிரயோசனம் இல்லை. ஒருவேளை நரி அதை கேட்ச் பிடித்திருக்கும் என்றும்
கற்பனை செய்ய முடியாது. பொதுவாக இந்தியர்கள் சிறந்த பீல்டர்கள் இல்லையெனும்போது இந்திய
நரிகளிடம் அத்திறமையை நாம் எதிர்பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன். இதே கதையை ஆதவன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன்,
வெங்கட்சுவாமிநாதன், க.நா.சு, சுஜாதா, அனுராதா ரமணன், இந்திரா பார்த்தசாரதி, சொர்ணமால்யா,
பாலகுமாரன் ஆகியோர் எழுதியிருந்தால் நிச்சயம் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதை நான்
சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. கருவிலே திருகொண்ட இவர்களைத் தவிர மீத நபர்களெல்லாம்
இம்மாதிரி கனமான கருக்களைக் கையாண்டு பரிதாபகரமான தோல்வியை அடையவேண்டியதில்லை என்றே
நான் நினைக்கிறேன். உதாரணமாக இக்கதையில் நிலச்சித்தரிப்புகள் வலுவில்லாமல் உள்ளன. பருவநிலைக்
குழப்பங்கள் உள்ளன. வடை திங்கலாமே எனும் எண்ணம் பொதுவாக மழைக்காலங்களில் ஏற்படுவது.
நரி போன்ற மிருகங்கள் ஊருக்குள் வருவது கோடை காலங்களில். அடையாள குழப்பங்கள் தனி ரகம்.
சாதா காகமா அண்டங்காக்கையா எனும் குழப்பம் கதை நெடுக நீடிக்கிறது. முதலில் திருடியது
காகம். ஆனால் நரியை இருண்மையாகச் சித்தரிப்பதன் வழியாக கதாசிரியரின் ஒருபக்கச் சார்பு
மிகத் தெளிவாக வெளிப்பட்டு விடுகிறது. சுட்ட வடையில் ஒன்றை காகத்திற்கு தானே மனமுவந்து
கொடுக்காதது ஒரு பூர்ஷ்வாத்தனம். அதைப்பற்றிய சிறிய விமர்சனம் கூட படைப்பில் இல்லை.
இதெல்லாம் விடுங்கள். பாட்டி வடை சுடும் இடத்தில்
ஒரு சிசி டிவி கேமரா இருந்திருந்தாலே இரண்டு திருட்டுக்களையும் தடுத்திருக்க முடியுமே.
இவ்வளவு
மொக்கையான கதைகளை ஏன்தான் சிலாகிக்கிறார்களோ? ஹய்யோ.. ஹய்யோ.
Comments
Haaa Haaaa