வீட்டு வேலைகளைக் குறைத்துக் கொள்வது எப்படி?


எனது தோழிகள் - காஜல் அகர்வால் தவிர - அனைவரும் வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள். ஐடி வேலை, மளிகைக்கடை, சீரியல் வசனகர்த்தா, வட்டிக்கு விடுதல். விதம் விதமான பணிச்சூழல். இவர்களெல்லாம் ஏகதேசம் சொல்வது ‘கொரானாவிற்குப் பிந்தைய நாட்கள் கடுமையான வேலைப்பளு’


நாள் முழுக்க பொட்டி தட்டிக்கொண்டே இருப்பது போலவும், முழுநாளும் சமையல் கட்டிலேயே நின்றுகொண்டிருப்பது போலவும் இருக்கிறது. வாழும் கணங்கள் குறைந்து விட்டது. உள அழுத்தம் தாளவில்லை என்கிறார்கள். ஓரிருவர் சொன்னால் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். அன்றாடம் நான்கைந்து அழைப்புகளாவது  வருகிறது. எழுத்தாளன் என்றால் சர்வரோகநிவாரணி அல்லவா?


மீண்டும் திருக்குறளரசி புராணம். அம்மையாருக்கு வாழ்க்கையில் ஐம்பெரும் பொறுப்புகள். 1) வீட்டை நிர்வகிப்பது 2) இரு பிள்ளைகளின் கல்வி 3) அர்த்தமண்டபம்  4) இலக்கிய வாசகி 5) சினிமா


கடைசியிலிருந்து துவங்கலாமென நினைக்கிறேன். இந்த உலகத்தில் இப்படியெல்லாம் சினிமா பார்க்க முடியுமா என நான் வியந்த ஆளுமைகள் கோகுல் பிரசாத்தும், நரேனும். கோகுல் போடும் பட்டியல்களைப் பார்க்கையில் மூன்று வயதிலேயே சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பார் எனும் ஐயம் உங்களுக்கும் எழலாம். நரேன் நாளொன்றுக்கு நல்லதும் அல்லதுமாக இரண்டு படங்களேனும் பார்க்கிறார். திருக்குறளரசி இவர்களைக் காட்டிலும் கொடியவர். எந்தத் திரைப்படத்தையும் பரவசம் குன்றாமல் பார்க்கக் கூடியவர். ஐய்யப்பனும் கோஷியும் பார்த்த பித்தடியில் அண்டாவ காணோம் பார்க்கும் ஆற்றல் படைத்தவர். படமில்லா நாளெல்லாம் பிறவாத நாளே என்று வாழ்பவர். எப்படி திரு இப்படி என்று விழிவிரிய கேட்டால், ‘ப்ச் அவ்ளோதான் முடியுது.. என்ன செய்ய..’


இலக்கிய வாசகி ரோல்தான் ஆகக்கடினமானது. வெண்முரசு அப்டூடேட். தளத்தில் வரும் பதிவுகள். தவிர, நாளொன்றுக்கு அரைப் புத்தகம்.


பிள்ளைகள் இம்சை இளவரசிகள். ஆளுக்கொரு ரூமில் ஆன்லைன் வகுப்புகள். இறுத்தி உட்கார வைத்து ஸ்கீரினை கவனிக்க வைப்பதற்குள் இரண்டு அறைகளுக்கு இடையே சுமார் ஐம்பது ரன்கள் ஓடிச் சேர்த்திருப்பாள். இளம்பிறை கூகிள் க்ளாஸ் ரூமை மினிமைஸ் செய்து விட்டு யூட்யூபில் ‘மாம்பழம் விக்கிற கண்ணம்மாவிற்கு’ நைஸாகப் போய்விடுகிறாள். அவள் தலை ஆடுவதை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. (எல்கேஜிக்கெல்லாம் மேக் புக்கில் ஸூம் ரொம்ப ஓவர். மிஸ்டர் செங்கோட்டையன் இந்த வயதில் நீங்களும் நானும் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதை மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள்.)


அர்த்தமண்டபம் இப்போது வெப்பீனார்கள், மொழிபெயர்ப்புகள், புத்தகங்கள், இதழ்கள் வடிவமைப்பு என ஆன்லைனில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அவளது நிறுவனத்தைப் பற்றி பொதுவெளியில் எழுதக்கூடாதென எனக்குத் தடை உத்தரவு. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.


கூடுதலாக நாடடங்கு துவங்கிய நாட்களிலிருந்து வெளிவேலைகள் அனைத்தும் திருவிற்குத்தான். பாதுகாப்பு குறிச்ச சில காரணங்களுக்காக. (வெளியுலகைச் சுற்றிவருவது பெண்களுக்கு மெலிதான ஆசுவாசம் அளிக்கும். நமக்கும் கொரானா வராமல் இருக்கும் -ஆர்.)


அவளும் நமது ஃபேஸ்புக் அம்மணிகளுக்குச் சற்றும் சளைக்காமல் ஓரொரு நாளும் விதம் விதமாய்ச் சமைத்து காலை முதல் மாலை வரை கழுவிக்கொண்டும் துடைத்துக்கொண்டும் சலித்துக்கொண்டும் உறுமிக்கொண்டும் இருந்தாள்.


வெகுண்டெழுந்து ஒரு மலைப்பிரசங்கம் ஆற்றினேன்: 


“கொள்ளை நோய், பஞ்ச காலங்களில் மக்கள் வழக்கத்தை விட அதிகமாக சமைப்பார்கள். விதம் விதமாய் உண்பார்கள். இஃதொர் உளப்பிரச்சனை. ஐயாம் லிவிங் பெட்டர் தென் யூ என உலகத்திற்கும் தனக்கும் சொல்லிக்கொள்ள வேண்டிய நுட்பமான சிக்கல். தின்பதைப் படம் பிடித்து சமூகவலையில் போடுவதன் சைக்காலஜி இதுதான். இந்தப் பயல்கள் பெருமாள் கோவில் புளியோதரைக்கு க்யூவில் அடித்துக்கொண்டு நிற்பதையெல்லாம் எப்போதாவது படம் பிடித்து போட்டிருக்கிறார்களா?


இந்த அடுக்ககத்தின் சுற்றுச் சுவருக்கு அப்பால் அறிவொளி நகரில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து பட்டினியால் வாட ஹைதரபாத் மட்டன் பிரியாணியும், கோழி வருவலும், ரத்தப் பொரியலும், நல்லி ரசமும் வைத்து சாப்பிடுவது அதர்மம். கப்பலில் தானியம் வந்தால்தான் சோறு என இறக்குமதியை நம்பியிருக்கும் பல நாடுகளில் இப்போதே தட்டுப்பாடு. நாம் இப்படி தின்று தீர்த்தால் ஏழை பாழைகளுக்குப் பொருளில்லாமல் போகும் என்பது எளிய சமன்.


நாம் கொள்ளை நோயில் வீடடங்கிக் கிடக்கிறோம். இது விடுமுறைக் கொண்டாட்டம் அல்ல. நோய்க்காலங்களில் இப்படி பெருந்தீனி தின்பது ஆரோக்கியத்திற்கு எதிரானது. மிக மிக எளிமையானதும் ஆரோக்கியமானதுமான உணவுகளை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதே அறிவுடைமை. சில்லி சீஸ் ஃபில்டு பொட்டேட்டோ நக்கட்ஸூக்குப் பதிலாக சுக்குட்டி கீரை பொரியல் பலனளிக்கக் கூடியது. உண்டி சிறுத்தல் பெண்டிற்கு அழகு.


நமது ஓட்ட சாட்டங்கள் வல்லிசாகக் குறைந்து அதிக நேரம் அமர்ந்து அமேஸான் ப்ரைம் பார்ப்பது போன்ற அரிய வேலைகளைப் பார்க்கிறோம். ஆகவே செரிமான சிரமங்களை உண்டு பண்ணும் வலுத்த அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்தல் ஆட்டிற்கும் நாட்டிற்கும் நலம். ஞாயிற்றுக்கிழமை காலையை இட்லி குடல் கறியில் ஆரம்பித்து திங்கள் கிழமை இரவு தோசை மாசிச் சம்பலில் முடிப்பது என நான்வெஜ் மாரத்தான் நடத்துவது அர்த்தமில்லாதது. கு.சிவராமனின் குடும்ப உறுப்பினரான நாமே இப்படி துரோகம் செய்தல் நீதி ஆகாது. பன்றி போல தின்றால் பன்றி குணம் வரும் எனச் சொன்ன ப.சிங்காரம் எழுத்தாளரென்றாலும் ஞானி.


ஓயாமல் அடுப்பைப் பற்றவைப்பது, வேளாவேளைக்குச் சூடாக சமைப்பது ஒரு தரித்திரம். குடும்பமாய் தீப்பெட்டித் தொழிலில் பாடுபட்ட நாட்களில் அக்கா காபியை ஒரு குண்டாவில் வைப்பாள். குழம்பை அண்டாவில் வைப்பாள்.  அவ்வப்போது சூடு பண்ணிக்கொள்வோம். மதியம் பொங்கும் சுடுசோறும் தொடுபுளியும் மறுநாள் காலை உணவாகப் பழைய சாதமாகப் பரிமளிக்கும். ஒரே நாடு ஒரே குழம்பு.


திங்கள் மீன் குழம்பு; செவ்வாய் பருப்பு குழம்பு - தக்காளி கூட்டு; புதன் கருவாட்டு குழம்பு; வியாழன்  மிளகு ரசம் - துவையல்; வெள்ளி சாம்பார் - அவியல்; சனி தக்காளி ரசம் - பொரியல்; ஞாயிறு புளிக்குழம்பு-அப்பளம்;  இடைக்கிடை உளுந்தங்கஞ்சி, மொச்சை குழம்பு, முட்டைக் குழம்பு, சொதி குழம்பு, வெந்தயக் குழம்பு, பச்சை பயிறு, கீரை, கூட்டாஞ்சோறு என அப்போதைய பொருளாதாரத்திற்கும் சந்தையில் வல்லிசாய் கிடைக்கும் பொருளுக்கும் ஏற்ப சமையலில் மாறுபாடு இருக்கும். இதுதான் மேக்கின் இந்தியா தற்சாற்புப் பொருளாதாரம். நித்தியம் ரெண்டு குழம்பு மூணு தொடுகறி என்றால் சம்பளக்குறைப்பில் வாழும் சம்சாரி என்னதான் செய்வான்?  


மூன்றரை பேர் வசிக்கும் வீட்டில் முப்பது தட்டுகள், நாற்பது தம்ப்ளர்கள், எழெட்டு விதமான கப் & சாஸர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஸ்பூன்கள், கணக்கற்ற கரண்டிகள், குக்கரிலேயே எட்டு வகை, குண்டான்களில் பத்து வகை எதற்கு? நான்கு தட்டுகள், ஆறு டம்ப்ளர்கள், எளிய சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு மீதம் இருப்பதை ஒரு அட்டைப் பெட்டியில் கட்டி பரணில் ஏற்றினோம். ஸ்வீட் பாக்ஸூகள், ஸ்விக்கிகாரன் கொடுத்த டப்பாக்கள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், ஸ்பூன்கள் என சுமார் நூறெண்ணம் கழித்தோம். எப்பவாச்சும் டூர் போனால் சாப்பாடு பார்சல் செய்துகொள்ள ஆகுமென உங்கள் கிச்சனில் எது இருந்தாலும் எடுத்து மாடி வழியாக ரோட்டில் வீசி விடுங்கள். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நீங்கள் எங்கும் செல்ல முடியாது. இப்படி நான் எழுதுவதை தலையாட்டி தலையாட்டி வாசித்துக்கொண்டு வீட்டில்தான் இருக்கப் போகிறீர்கள்.


மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எப்போதோ செய்யும் கேக் - என்ன ஒரு கண்றாவியான அவுட்புட்? - அதற்குரிய கேக் பாத்திரங்கள், கிரில், ஓவன், சாண்ட்விட்ச் மேக்கர், குல்ஃபி அச்சு, பிஸ்கட் கட்டர், ப்ளெண்டர் - ஒரு டூவிலர் ஓர்க்‌ஷாப்பை விட அதிகமான பொருட்கள். நியாயமாரே?


மூன்று கரண்டிகள் இருந்தால் உடனுக்குடன் கழுவி பயன்படுத்துவோம். முப்பது கரண்டி சேர்ந்த பிறகு சிங்க் பக்கம் போனால் போர்க்கள குவியல் போலத்தான் இருக்கும். சமையல் கட்டில் பாத்திரங்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நேரமும் உழைப்பும் மிச்சமாகும். ப்ளாஸ்டிக் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்தளவுக்கு கரப்பான்பூச்சிகள் குறைவாக இருக்கும் என்கிறார் அப்துல்கலாம்.


நம்முடைய பெரும்பான்மை சமையலுக்குத் தோதான முறையில் டப்பாக்களை அடுக்கி வைப்பது. பாத்திரங்களை கைவாகாக வைப்பது எனும் பழக்கமே நம் பெண்களிடம் இல்லை. அடிக்கடி எடுக்கும் உப்பு டப்பாவை கீழ் ராக்கில் வைப்பது, எப்போதாவது தேவைப்படும் குங்குமப்பூவை அடுப்புக்கருகே வைப்பது துவங்கி அரிவாள்மனையை எழுத்து மேஜையில் வைப்பது வரை வளைந்து நெளிந்து குழைந்து சர்க்கஸ் போல சமைக்கிறார்கள். ஆயுதங்களை அடுக்கி வைப்பது தொடர்பாக ஜப்பானிய முறை, சீன முறை, ஹீலர் பாஸ்கர் முறை என பலதும் உளது. நான் இதில் விற்பன்னன். ஆனால் இதையெல்லாம் தேடியும் யோசித்தும் கற்றுக்கொள்வதே நல்லது.


நான் இருமாதங்களுக்கு ஒருமுறை திரு வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து சமையல் கட்டில் புகுந்து அஞ்சறைப் பெட்டியிலும் இதர டப்பாக்களிலும் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை ஸ்டாக் எடுப்பேன். (அப்போது அப்பா முகம் சிபிஐ அதிகாரி போல இருக்கும் - இளவெயினி) ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கின கருப்பட்டி, இரண்டாண்டுகளுக்கு முன்பு வாங்கின பனங்கற்கண்டு, எப்போதோ திரித்த உளுந்த மாவு, மொச்சை, அவல், வண்டு விழுந்த ரவை, பூச்சி புழங்கும் கடலை மாவு, மம்மிகளைப் போல மாறிவிட்ட கருவாடு, பொங்கலுக்கு வாங்கின மஞ்சள் என பலதும் தட்டுப்படும். ரோஸ் வாட்டர், வெண்ணிலா எஸன்ஸ், சாக்லேட் பவுடர், பாஸ்தா, ஓட்ஸ், பிரட் க்ரம்ப்ஸ் என வெளிநாட்டுப் பயல்களும் ஒளிந்து கிடப்பான்கள். இதில் பல விஷயங்கள் கைபார்க்கப்பட வேண்டியவை. மொட்டை மாடியில் பேப்பர் விரித்து இவற்றை காய வைத்து சலித்து எடுத்து மீண்டும் சுத்தமான டப்பாக்களில் போட்டு வைத்துக்கொள்வேன்.


திருமதி வீடு திரும்பியதும் ஆலாபனையை ஆரம்பிப்பேன். முதல் சுற்று பொறுமையாக கேட்டுக்கொள்வாள். ‘முட்டை விடுற கோழிக்குத்தான்..’ என நாட்டாரியல் ஆரம்பிக்கும்போது டம்ப்ளர்கள் காற்றில் மிதக்கும். சமரச உடன்படிக்கையில் நான் ஒரு பட்டியல் கொடுப்பேன். அதன் படி கைவசம் இருக்கும் பொருட்களின் அடிப்படையில் உளுந்தங்களி, வெந்தயக்களி, சுசீயம், சிறுபயிறு, அவல் உருண்டை, பால்பாயாசம், மாசிச் சம்பல், ஒடியன் கூழ் (நாக்கைச் சுழட்டாதீங்க மேன்..) என ஒவ்வொன்றாகச் செய்து தின்று தீர்ப்பது என முடிவெடுப்போம். இவ்வழியாக நீண்ட நாட்கள் இண்வெண்டரி குறைவதுடன் அம்மாதத்தின் மளிகைச்செலவும் மிச்சமாகும். ஆனால், இந்த வெள்ளரி விதையை விதைத்து தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தேன். அது முளைக்காதாமே?


வரலெட்சுமி பூஜை, நவராத்திரி பூஜை, லெஷ்மி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்கும் விழாக்களுக்கும் வாங்கிய விரலி மஞ்சள், பாக்கு, மஞ்சள் கயிறுகள், வளையல்கள், குங்கும டப்பாக்கள், டிஸ்போஸபிள் தட்டுகள் என ஒரு பேன்ஸி ஸ்டோர் வைக்கும் அளவிற்குச் சேர்ந்து விடும். இவற்றை என்ன செய்வது என்று நானும் நாஞ்சில் நாடனும் நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறோம். வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதியலாம்.


கோவைப்புதூரில் கீரை விற்பவர்கள், மீன் விற்பவர்கள், காய்கறி வியாபாரிகள் தோள்களில் பளபளப்பான ஜரிகை துண்டுகள் மின்னினால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள். விழாக்களில் சேகரமாகும் பொன்னாடைகளை நாங்கள் அவர்களது பணியை மெச்சி போர்த்தி விடுவோம். அதில் ஒருவர் ‘பொன்னாடை போர்த்தி தேங்காயும் கொடுப்பாங்கள்லா’ என்று கேட்டபோது நான் சற்று கண்கலங்கினேன்’.


இந்த வீடடங்கு நாட்களில் பிள்ளைகளை ஆரோக்கியமாகப் பல விஷயங்களில் ஈடுபடுத்தி ஐஐடிக்குத் தயாராக்கி விடலாமென்று கண்ட குப்பைகளையும் வாங்கி நிறைத்திருப்போம். ஆக்டிவிட்டியாது ஆட்டுக்குட்டியாவது என பிள்ளைகள் எல்லாவற்றையும் ஹாலில் இறைத்து விட்டு ஓடிவிடுவார்கள். ஒதுங்க வைத்து ஒதுங்க வைத்து ஒதுங்க வைத்து ஒதுங்க வைத்து ஒதுங்க வைத்து ஒதுங்க வைத்து ஒதுங்க வைத்து. சை. மனுஷனா மாரிதாஸா? வீட்டில் இருப்பது டாவின் ஸிஅல்ல. லிட்டில் சிம்பன்ஸி. பன்னிரெண்டு க்ரேயான்ஸூக்கு மேல் இருக்கிறதை எடுத்துக் கொண்டு போய் பக்கத்து குப்பத்தில் கொண்டு போய் கொடுத்தோம். இருக்கிற புத்தகங்களில் படிக்காதது போக மீதமிருந்ததை ஆனைகட்டி பழங்குடிச் சிறார்களுக்கு ஆனந்த் (நான்காவது தடம் நூலின் ஆசிரியர்) வழியாக ஒப்படைத்தோம். இத்தனை முறை வீட்டைச் சுத்தம் செய்தேனென அப்பரைஸலில் குறிப்பிட முடியாது.


இறுதியாக துணிமணிகள் பயன்பாடு. மார்ச் 24 முதல் நான் நாலு முழம் வேட்டி. எழுதும்போது மட்டும் தலையில் முண்டு. முக்காடு இல்லை தலப்பாகட்டு. பிறகு யோசித்தேன். இதை அலசிப் பிழிவதற்குப் பதில் டவுசருக்கு மாறிக்கொண்டேன். ஒரு நாளுக்கு மூன்று துணி கழற்றி மாட்டும் பிள்ளைகளை வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு துவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றதும் டூ மினிட்ஸில் சேட்டையைக் குறைத்துக்கொண்டார்கள். மெஷின் துவைத்த துணியை ஒரு உதறு உதறி காயப் போட்டாலே அயர்ன் செய்யும் வேலை மிச்சம். ஆனால் டிரையரில் கருவாடாக விட்டுவிட்டால் ஸ்பிரிங் போல முறுக்கிக்கொள்ளும். சோலியத்த சோலி.


இதையெல்லாம் செய்தால் பெண்களின் நேரமும் உழைப்பும் கொஞ்சம் மிச்சப்படலாம். சிலர் வீட்டில் அனைவரும் இருக்கிறார்கள் என்று தானே மனமுவந்து - டிஸ்பிளேயிங் கல்லினரி ஸ்கில்ஸ் இன் பேமிலி வாட்ஸாப் குரூப் ஃபார் அற்ப சியர்ஸ் சிம்பல் - யூட்யூபில் உதவாக்கரை வீடியோக்களாகப் பார்த்து சமைத்து தள்ளுகிறீர்கள். தப்பில்லை. ஆனால், அதில் பாவனையான சலிப்பை சேர்க்காதிருங்கள். அட்லீஸ்ட் சமைப்பதாவது வாய்க்கு விளங்கும்.


சரி இதெல்லாம் பெண்களுக்குத்தானா? இந்த ஆண்கள் - தடித்தாண்டவரான்யன்கள் - கொஞ்சம் சமையலில், வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவக்கூடாதா? என்ன ஒரு ஆணாதிக்கமான ஆலோசனைகள்? - அன்புள்ள அம்மணி, அதற்கு நீங்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாருநிவேதிதா போன்ற உத்தமர்களைக் கல்யாணம் செய்திருக்க வேண்டும். போகன் சங்கருக்குக் கழுத்தை நீட்டிவிட்டு வந்து பாத்திரம் கழுவு என்று சொன்னால், நடக்குமா?


ஆறிலக்கம் சம்பளம் வாங்குகிறவன் வீட்டிலும் அப்படித்தான் இருப்பான். சீரியலில் சினிமாவில் பார்க்கும் ஓரிரு விதிவிலக்குகளைக் கொண்டு நமக்கும் அப்படி லாட்டரி அடிக்கும் என நினைக்க வேண்டியதில்லை. ஐரோப்பா டூரும் வேண்டும். அடுப்பங்கரையை ஒதுக்கவும் வேண்டும் என்றால் நடக்காது. காலேஜ் தேர்டு இயர் படிக்கையில் மூட்டை தூக்கியாவது உன்னைக் காப்பாற்றுவேன் என கன்னம் ஒட்டிய ஒரு பையன் சொன்னானே அவனிடம் எதிர்பார்க்க வேண்டியதை மணி ஹெய்ஸ்ட் பார்த்துவிட்டு திவ்யா திராவிடமணிக்கு லைக்ஸ் போடுகிறவனிடம் எதிர்பார்க்கவே கூடாது. சமைக்கவே பிடிக்கவில்லையா. எரிச்சல் எரிச்சலாக வருகிறதா? சங்கடமே படாமல் ஸ்விக்கியை எடுத்து ஆர்டர் செய்யவேண்டும். அநியாய ஜிஎஸ்டி, பேக்கிங் சார்ஜஸ், டிப்ஸ், ப்ளாஸ்டிக் குப்பை என்று நம் வீட்டு கார்ப்பரேட் குண்டுமணி வகுப்பெடுத்தால், என்னிடம் சொல்லுங்கள். தனிக் கட்டுரை எழுதி கடுகு தாளித்து விடலாம்.


சரி இறுதி நீதிக்கு வருகிறேன். என்னதான் செல்வராணி, சைதன்யா, மீனாம்பிகை போன்றவர்கள் பெண்ணிய விஷக்கருத்துக்களை திருக்குறளரசி மனதில் விதைத்தாலும், கணவன் சொற்களே கைவிளக்கென்று கருதுவதால் திருக்குறளரசியால் குடும்பத்தையும் தொழிலையும் பார்த்துக்கொண்டே தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்திலும் நேரம் செலுத்த முடிகிறது. என்ன ஒன்று இலக்கியத்தின் மெல்லுணர்ச்சிகள் அன்றாடத்திலும் பிரதிபலிக்கும் ‘வெண்முரசு முடியப்போகுது... உனக்கு காஃபி ஒரு கேடா?’


சற்று நேரத்திற்கு முன்பு கிச்சனிலிருந்து ஒலித்தது ‘சீனாக்கார மயிராண்டி சண்டைக்கி வாரான்... இனி யாராச்சு ஃப்ரைடு ரைஸ் கேளுங்க... அப்ப இருக்கு...’

I need your support so I can keep delivering good content. Every contribution, however big or small, is so valuable for my literary attempts. Thanks. Support Good Content


-       © செல்வேந்திரன்

Comments

Popular Posts