ஏமாற்றாத எழுத்து - பாலைநிலப் பயணம்
அன்புள்ள செல்வேந்திரன்,
உங்கள் பாலைநிலப் பயணம் இன்று பிற்பகல் வாங்கி, மாலைக்குள் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்.
சமூக ஊடகங்களின் இடையூறு காரணமாகப் புத்தகங்களை ஒரே மூச்சில் வாசிக்கும் பழக்கம், என்னிடம் குறைந்து வருகிறது. அதைமீறி, சில மணி நேரத்தில் உங்கள் புத்தகத்தை
முடித்துவிட்டேன். நானும் உங்களைப் போல் ஒரு பயணப் பைத்தியம் என்பது, அதற்கு முக்கியக் காரணம். ஏற்கெனவே உங்கள் நூலை, பயணக் கட்டுரைகளில் முக்கியமானது என்று, ஆசான் குறிப்பிட்டிருந்தது மற்றொரு
காரணம். ஏமாற்றவில்லை உங்கள் எழுத்து.
எதையும் அளவுக்கு மிகாமல் திட்டமாகத் தந்து, நூலைக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
“நாஞ்சில் நாடனுக்குப் பணிவன்புடன்” என்ற
அர்ப்பணக் குறிப்பைப் பார்த்ததுமே மனம் மலர்ந்துவிட்டது. அதே மலர்ச்சியுடன்
அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டி அவ்வப்போது எனக்குள் சிரித்துக்கொண்டே நூலை
வாசித்தேன். கூட்டுப் பயணங்களில் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது பற்றிய
கருத்துடன் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு. நெகிழ்ந்து கொடுக்காத டிராலிகளும், சூட்கேஸுகளும் வாகனப் பயணத்துக்கு இடையூறு
என்னும் அனுபவக் குறிப்பு சக பயணிகளுக்குத் தேவையான ஆலோசனை. வெடிச் சிரிப்புடன்
ஆடத் தொடங்கிய பயண ஊஞ்சலில்,
நாங்களும் சேர்ந்து ஆடினோம். ஒரு வாரம், நாங்களும் உங்களுடனேயே பல மணி நேரம் காருக்குள் அடைபட்டிருந்தோம்.
பாலைவெளியின் சூட்டையும் இரவு நேரக் குளிர்மையையும் அனுபவித்தோம்.
நானும் வறட்சியான விருதுநகர் மாவட்டத்துக்காரன்
என்பதால், ராஜஸ்தானின் பாலைநிலக்
காட்சிகளோடு உடனடியாகத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. பயணங்களின்போது நிலக்
காட்சிகளை ஒப்பிடுவது, எனக்கும்
தவிர்க்கமுடியாததே. நான் சிதம்பரத்தில் படிக்கும்போது, மூர்த்தி காப்பிக் கடை மட்டும்தான் வைத்திருந்தார். அடுத்தமுறை சிதம்பரம்
செல்லும்போது இட்லி, கொத்சை ஒருகை
பார்க்கவேண்டும். தேடிச் சோறு நிதம் தின்பதில் எனக்கொன்றும் கூச்சமில்லை. நாமெல்லாம்
நாஞ்சில் மாணாக்கரன்றோ !
சாஷி மாதா ஆலயத்தைப் பார்க்கும் ஆவலைத்
தூண்டிவிட்டீர்கள். சாம் மணற்குன்றுகளைத் “தங்க உப்பளம்” என்று நீங்கள்
குறிப்பிட்டது பேரழகு. அதேபோல்,
பாலைவன இரவில் பெய்த கனத்தமழையின்போது பார்த்த மின்னல் பொழிவை, “ஒளியின் சிலந்திவலை” என வருணித்திருந்ததும்
அழகோ அழகு. கானமயில் தேசியப் பறவையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டிய பறவை என்பது
புதுத் தகவல். இடையிடையே செந்தமிழ் வளர்த்த ஜெர்மானியர் சீகன் பால்கு பற்றியும்
குறிப்பிட்டிருந்தீர்கள். அவரைப் பற்றியும் அவரது தமிழ்த் தொண்டு பற்றியும்
பலருக்கும் அறிமுகம் கிடைக்க அது உதவியிருக்கும்.
“பயணத்தில் செய்யவே கூடாதவை, பொருளற்ற சாகசங்கள்” என்று ஜெமோ கடிந்துகொண்டது, பயணிகள் அனைவருக்கும்தான். ரூடாலிப் பெண்
பற்றிய தகவலுக்காக யூடியூபில் விரல்களால் மேய்ந்துவிட்டு, ஷ்ரத்தா டாங்கரை இணையத்தில் தேடியபோது சரியாக உங்கள் அசரீரி ஒலித்தது.
பூஜ் நிலநடுக்கம் நேர்ந்தபோது,
எங்கள் வானொலி நிலையத்திலிருந்து 3 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நன்கொடையைத்
திரட்டி அனுப்பியது நினைவுக்கு வந்தது.
“சிறுவயதில், தொலைநோக்காடியை இடித்துத் தின்றிருப்பாரோ?” என்று நீங்கள் சந்தேகப்படும் கிருஷ்ணனின் புண்ணியத்தால் நீங்கள் பார்த்த
ஃபிளெமிங்கோ எங்களுக்கும் நல்ல காட்சி. அவற்றை நீங்கள் “மண்ணில் நடனமிடும் ஃபலூடாக்கள்”
என்று வருணித்தது இன்னும் அழகு. ராணி கி வாவ் படிக்கிணறு பற்றிய வருணனை, இன்னும் கொஞ்சம் நீளாதா என்றிருந்தது எனக்கு.
விரைவில் காணவேண்டிய இடங்களுக்கான என் பட்டியலில், அதுவும் மொதேரா ஆலயமும் முன்னணியில் உள்ளன. அவை இரண்டின் படங்களையும்
இன்னும் கொஞ்சம் நீங்கள் இணைத்திருக்கலாம். கிண்டிலில் இவ்வளவுதான் முடியும் என
நினைக்கிறேன். புத்தகமாகப் போடும்போது சிற்பங்களின் படங்களை நிறைய
எதிர்பார்க்கிறேன்.
சந்திர களங்கம்போல் சில எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன.
புத்தக வடிவில் வரும்போது அவற்றைக் களையமுடியுமென நம்புகிறேன். நன்றி நண்பரே.
என்னையும் உங்கள் பயணத்தில் இணைத்துக் கொண்டமைக்கு !
மிக்க அன்புடன்,
Comments