ஒரு கேள்வியும் பதிலும்



கேள்வி:

அன்புள்ள செல்வேந்திரன்,

நலம்தானே. நான் அனிதா.  உங்கள் வாசகி. உங்களது ஆங்கில மொழியாக்கம் நீங்கலாக நான்கு புத்தகங்களையும் வாசித்தேன். மிக திருப்தி. இங்கே எங்கு திரும்பினாலும் உங்கள் நூல்களுக்கான மதிப்புரைகள் கண்ணில் படுகின்றன. அக்ரசிவ்வாக மார்க்கெட்டிங் செய்து சூப்பர் ஹிட் அடித்துவிட்டீர்கள்.

ஜெயமோகனே குறிப்பிட்டது படி பாலைநிலம் புத்தகம் பயண இலக்கியத்தில் ஒரு க்ளாசிக். ஒரு பெஞ்ச் மார்க் செட் பண்ணிவிட்டீர்கள். நானும் என் ஐரோப்பிய அனுபவங்களை எழுதும் ஊக்கம் பெற்றேன். இரண்டு அத்தியாயம் எழுதினேன். வாசித்துப் பார்த்தேன் சவசவா என்றிருந்தது.

எனக்கு ஒரு கேள்வி. உங்கள் வாசிப்பது எப்படி புத்தகத்தில் செய்தித்தாள்கள் வாசிப்பதைப் பற்றி எழுதியுள்ள அத்தியாயங்கள் மிக மிகப் பிரமாதமாக வந்திருந்தது. இத்தனை ஆண்டுகளில் செய்தித்தாள்களை நீங்கள் சொல்லும் கோணத்தில் உலகளவில் எவரும் அணுகியது இல்லை. தங்கள் விற்பனையை அதிகரிக்க நினைக்கிற செய்தித்தாள்கள் உங்கள் கட்டுரையை முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கவேண்டும். உங்கள் பெயரையும் கட்டுரை தலைப்பையும் கூகிளில் இட்டு தேடினேன். இந்து தமிழ் திசையில் ஒரு கட்டுரை வந்திருக்கிரது. வேறு எந்த ஊடகத்திலும் இல்லை. தமிழ் பத்திரிக்கைகள் தள்ளாடுவதாக செய்திகள் வருகிறது. அவர்களாவது உங்கள் புத்தகத்தையும் கட்டுரைகளையும் கவனப்படுத்தினார்களா என்பது தெரியவில்லை.

ஒரு முன்னாள் கல்வியாளரும் இந்நாள் ஊடகவியலாளருமாக நான் சொல்லிக்கொள்வது உங்களது ‘வாசிப்பது எப்படி?’ நூல் தமிழ்நாட்டு பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்படவேண்டியது. என்னுடைய தொடர்புகளின் வழியாக நூலை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
அனிதா சுயம்புலிங்கம்

பதில்:

அன்புள்ள அனிதா அவர்களுக்கு,

நலம்தானே. உங்கள் கடிதம் உற்சாகமளித்தது. அன்பிற்கு நன்றி.

எங்களுடைய இலக்கியச் சுற்றத்தில் நான்தான் மிகக்குறைவாக வாசிக்கிறவன்  எனும் தாழ்வுணர்ச்சி எனக்குண்டு. என் குறைவுபட்ட வாசிப்பிலும் கூட உலகளவில் முக்கியமான எழுத்தாளர்களான டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி, ஹெமிங்வே, மார்குவேஸ், செக்காவ், கேம்யூஸ், பால்சாக், ரேமண்ட் கார்வர், ஜூலியன் பார்ன்ஸ், சினுவா உள்பட பலரை வாசித்திருக்கிறேன். இந்திய மொழிகளிலும் தமிழிலும் முதன்மையான ஆசிரியர்கள் அனைவரின் சிறந்த படைப்புகளையெல்லாம் வாசித்திருக்கிறேன். அந்தத் தகுதியின் அடிப்படையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய ஆசிரியன் என நான் ஜெயமோகனைச் சொல்வேன். அவரே தனது வாசகர்களை ‘நண்பர்கள்’ என்று பெருந்தன்மையாக விளிக்கிறார். நான் சோட்டா எழுத்தாளன். வாசகி என்றெல்லாம் சொல்லி சங்கோஜப்படுத்தாதீர்கள்.

என்னுடைய ஆர்வம் புனைவுகள் எழுதுவது. கதைசொல்லியாக நினைவுகூரப்பட வேண்டும் என்பது. அம்முயற்சிகளின் சறுக்கல்களில் என்னை நானே தேற்றிக்கொள்ளும் பொருட்டு சிறு சிறு நூல்கள் எழுதுகிறேன். அவை வரவேற்பைப் பெறுகின்றன. அந்த உற்சாகம் எனக்குத் தேவையாக இருக்கிறது.

இந்தக் கொரானா நாட்களில் ஜெயமோகன் வெண்முரசு நீங்கலாக சுமார் 75 கதைகள் எழுதியிருக்கிறார். தமிழின் க்ளாஸிக் எழுத்தாளர்களான திஜா, அசோகமித்திரன், சுரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், லாசரா ஆகியோர் தங்கள் மொத்த வாழ்நாளிலும் எழுதிய கதைகளை அவர் இந்த சீசனிலேயே முறியடித்துவிடுவார்.

சாருநிவேதிதா பூச்சி என்றொரு கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார். கிட்டத்தட்ட 90 பாகங்களை எட்டுகிறது. இலக்கியம், இசை, சினிமா, அரசியல், சமூகம், வரலாறு என பற்பல புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் மிக முக்கியமான கட்டுரைகள்.

சோ. தர்மன் தொடர்ச்சியாக கிராமிய விவேகத்தை உலகிற்குப் பறைசாற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை சுமார் 50 வீடியோக்கள். கிராவின் மிகத்துல்லியமான தொடர்ச்சி தான் என்பதை நிரூபிக்கும் அற்புதமான வீடியோக்கள்.

பேராசிரியர் டி. தர்மராஜ் தத்துவவாதிகள், கோட்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தி வெப்பினாரில் உரையாற்றி வருகிறார். புதிய புதிய சிந்தனைக்கோணங்கள், அதன் தொடர்ச்சியாக நீளும் செறிவான விவாதங்கள். அவரைப் போன்ற ஒரு முதன்மையான அறிஞரின் உரையைச் செலவினமின்றி வீட்டிலிருந்தபடியே கேட்க வாய்ப்பது கொரானாவின் பேறுகளில் ஒன்று. இப்போது அயோத்திதாசரை மையமிட்டு ஆரோக்கியமான சொல்லாடல்கள் அவரது பக்கத்தில் நிகழ்கின்றன.

பா.ராகவன்  சென்னையைப் பற்றிய அருமையான நினைவோடைத் தொடர் எழுதி முடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் தொடர்.

எஸ்.ராமகிருஷ்ணனின் மிகப்புரட்சிகரமாக யூட்யூபில் சந்தா செலுத்தி பார்வையிடும் உரைகளை நிகழ்த்துகிறார். தளத்தில் குறுங்கதைகள், சினிமாக்கள் என மிகத்தீவிரமாக இயங்கி வருகிறார்.

உயிர்மை இணையதளத்தில் அபாரமான பல தொடர்கள் வருகின்றன. ஒருவர் கூட சோடை போகாத எழுத்தாளர்கள். தமிழினி ஆசிரியர் கோகுல் பிரசாத் உலக சினிமாக்கள் பற்றிய பிரமிப்பூட்டும் பட்டியல்களை, முக்கியமான இயக்குனர்களைப் பற்றிய செறிவான கட்டுரைகளை எழுதிவருகிறார். அல்லிக்கேணி என்றொரு அருமையான தொடரை ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி மிக மிக சுவாரஸ்யமாக எழுதி வருகிறார். ஒலி வடிவிலும் அத்தொடரைக் கேட்க முடியும்.

இன்னமும் பல்வேறு எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கொரானா அச்சலாத்திகளைத் துறந்துவிட்டு மிகத் தீவிரத்தன்மையுடன் இயங்கி வருகிறார்கள். அறிவுப்பசி கொண்டவர்களுக்குப் பொற்காலம். இவைகளைப் பற்றி நமது ஊடகங்களில் ஒருவரிச் செய்தி இல்லை. இதில் எலிப்புழுக்கை என்னுடைய செய்தியை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?

ஊடகங்கள் இலக்கியத்தைக் காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் இன்றில்லை. இணையமும் ஸ்மார்ட்போன்களும் இலக்கியச் செயல்பாட்டிற்கு சிறகுகள் அளித்துவிட்டன. கிண்டில் இப்போது ஜெட் விமானமாயிருக்கிறது. இதை அன்றே யூகித்து தொடர்ச்சியான தீவிரத்துடன் செயல்பட்டு தங்களுக்கான வாசகர்களை ஜெயமோகன், சாரு, எஸ்ரா, பா.ராகவன், ஆர்.அபிலாஷ், வா. மணிகண்டன் உள்ளிட்ட பலர் தாங்களே உருவாக்கிக்கொண்டார்கள். போகன் சங்கர், கார்ல் மார்க்ஸ், சரவணகார்த்திகேயன், அராத்து, சரவணன் சந்திரன், லஷ்மி சரவணக்குமார் உள்ளிட்ட பல இளைய எழுத்தாளர்கள் சமூகவலைதளங்களை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  

நான் 15 ஆண்டுகளாகப் பத்திரிகை ஊழியன். எனது மனைவி மேனாள் பத்திரிகையாளர். அவரது நிறுவனம் மக்கள் தொடர்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றது. உலகின் எந்த ஊடகத்திலும் செய்திகள், பேட்டிகள், மதிப்புரைகள் வரவழைக்க முடியும். அதனால் கிடைக்கும் மெல்லிய கிளர்ச்சியினால் எழுதுகிறவனுக்கு எந்தப் பலனும் இல்லை. என் நூலை வாசித்த  ஒருவர் இன்ஸ்டாகிராமில் இரண்டு வரிகள் எழுதினால், அன்று இரண்டு புத்தகங்கள் கூடுதலாக விற்கின்றன. ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதினால் நான்கு பேர் புத்தகத்தைக் கேட்டு எழுதுகிறார்கள். அது போதும். என் முந்தைய தலைமுறையின் ஆசிரியர்களில் பலரும் இன்னமும் கரங்களால் எழுதுகிறார்கள். இணையம் கண்டு அஞ்சுகிறார்கள். நாஞ்சில்நாடன், வண்ணநிலவன், சு.வேணுகோபால், கோணங்கி உள்ளிட்ட பலர் இன்னமும் இங்கே இறங்கி அடிக்கவில்லை. அவர்களைச் சந்திக்கும்தோறும் நான் வாதிட்டுக்கொண்டே இருக்கிறேன்.

சமீபத்தில் எழுதிய மிஷ்கின் கட்டுரைக்கு சுமார் 300 கடிதங்கள் வந்தது. சினிமா சோக்கு என்று பொருட்படுத்தவில்லை. பணிநீக்கம் கட்டுரைக்கு 800+ கடிதங்கள். 75% கடிதங்களை இன்னும் படித்து முடிக்கவில்லை. விருதுகள், வெளிநாட்டுப் பயணங்கள், கருத்தரங்க அழைப்புகளுக்கு ஏங்கி நிற்பவர்களுக்குத்தான் ஊடக வெளிச்சம் தேவை. அதற்குக் கூட தேவையில்லை என்று என்னுடைய How to Read? மொழியாக்கம் நிரூபிக்கும். இதை எழுதும் கணத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் Owen Clough நூலைப் பாராட்டி ஒரு செய்தி அனுப்பியுள்ளார்.

இன்னொரு வரவேற்கத் தகுந்த ஒரு விஷயம் என்னவெனில் டெலிகிராமில் நூல்களை பிடிஎஃப் ஆக வாசித்தவர்களுள் சிலர் எனது கூகிள் பே அக்கவுண்டில் பணம் செலுத்திவிட்டு கடிதமும் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப மேன்மையான விஷயம். நம்பிக்கையளிக்கக் கூடிய ஒளிக்கீற்று.

எனது நூல் என்றில்லை. எந்த நூலையும் பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடமாக வைப்பதில் பொருளில்லை. வெறுக்கத்தக்க ஒரு பண்டமாக அது மாறிவிடும். நன்மையில் நம்பிக்கையுள்ள பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வாசிப்பது எப்படி நூலை வாசித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். அவர்களது வாய்ச் சொல்லாக நூலின் கருத்துக்கள் மாணவர்களிடம் சென்று சேர்ந்தால் போதும். ஜீரோ டிகிரி பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பிக்கப் போகிறது. சர்வ நிச்சயமாக பல்லாயிரம் பிரதிகள் விற்கும். அவ்வழி அறியாதவனல்ல நான்.

நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்யவேண்டாம். வாழும் நாளெல்லாம் பேரிலக்கியங்களை வாசியுங்கள். எழுதுங்கள். அதைக்காட்டிலும் புனிதம் மிக்க செயல் வேறொன்றுமில்லை.
நமது பத்திரிகைகளுக்கு வைரமுத்துதான் பெரும்படைப்பாளி. அவர்களது நம்பிக்கையை ஏன் கெடுப்பானேன்? J

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

*நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தையும் எனது பதிலையும் இணையத்தில் பகிர்கிறேன்.

Comments