தன் வரலாறுகள்

எஸ்.ராமகிருஷ்ணனைத் தொடர்ச்சியாகப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும். அவரது ஒவ்வொரு உரையிலும் பதிவு செய்யப்படாத வாழ்க்கைகளைப் பற்றிய தனது அச்சலாத்தியைத் தெரிவித்துக்கொண்டே இருப்பார். லட்சக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்ட பின்னரும் எத்தனையோ வரலாறுகள் கண்ணுக்கு முன்னே குவித்து வைக்கப்பட்ட பிறகும் ஏன் இந்த வாழ்க்கைகள் பதிவு செய்யப்பட வேண்டுமென்கிறார்?

வரலாறென்று நமக்கு கிடைப்பதெல்லாம் ஏதோ ஒருவகை அதிகாரம் கைவரப்பெற்றவர்களின் கதைகள்தாம். இக்கதையாடல்களின் சுருள்களை நீவி நீட்டிப் பார்த்தால், பெரும்பாலும் ஒரே திரைக்கதை. அசகாய சூரத்தனங்கள். அவற்றைக் கொண்டு அன்றைய வாழ்க்கையையும் புரிந்து கொள்ள இயலாது. இன்றைய சிக்கல்களுக்கும் அவை பொருந்தி வராது. உடனடி உதாரணம்: இடைநிலைச் சாதிகளின் வீரவரலாற்றுக் கதைகள். பின்புலமும் மாந்தர்களின் பெயர்களும் மட்டுமே வேறு. நரேஷன் ஒன்றுதான்.

பெருவரலாற்றின் ஒளிவட்டங்களுக்குள் வராத தன்வரலாற்று நூல்களின் மீது எனக்குப் பிரேமை உண்டு. சமத்காரங்களின் கூக்குரலுக்கு மத்தியில் மிக மெதுவாக மிருதுவாக நெருக்கமான மாற்று உண்மையை முன்வைப்பவை இந்த இணை வரலாறுகள். மாலைச் சூரியன் மறைவதும் அந்தியில் சந்திரன் எழுவதும் எங்கள் சாதனையே என திரும்பும் திசையெங்கும் திராவிடத்தின் ‘டால் க்ளேய்ம்’ கூவல் சூழலை நிறைத்துள்ளது. தத்துவங்களுக்குத் தாலி கட்டிக்கொண்டவர்கள் முற்போக்கு முகமூடிகளுடன் சமூக ஊடகங்களுக்குள் நுழைந்து அன்றாடம் வாக்கரசியல் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பப்பெருக்குகள் தனி வாழ்வில், கட்சி அரசியலில், நிர்வாகத்தில், பொதுவாழ்வில் செய்த அத்தனைக் கீழ்மைகளையும் சொட்டு விமர்சனங்களின்றி தங்கள் அரக்க இரைச்சலுக்குள் அடக்கிவிடுவார்கள். இன்று நாம் எதிர்கொள்கிற அத்தனைச் சிக்கல்களுக்கும் வேர் தங்கள் பாட்டுடைத்தலைவனைச் சென்று சேர்கிறதென்பதை வசதியாக மறைப்பார்கள். கண்ணதாசனின் வனவாசம், வலம்புரிஜானின் வணக்கம், சின்ன அண்ணாமலையின் சொன்னால் நம்பமாட்டீர்கள், வே. இராமநாதன் எழுதிய மாண்புமிகு உளவுத்துறை உள்ளிட்ட பல இணை வரலாற்று நூல்கள் மெளனமாக இந்த ஆளுமைகளின் மறுபக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். திராவிடத் தலைமைகளின் சமூகபங்களிப்பைப் பற்றி மயிர்கூச்செறியும்போதே அவர்கள் உருவாக்கிய கீழ்மைகளையும் பேசுவதற்கு இத்தகு ‘பனை பாடினால்’ நூல்கள் விதைகள் போல உறங்கிக்கொண்டிருக்கும். சரி போட்டு. அரசியல் கட்டுரை அல்ல இது.

அப்பாவைப் போல ‘ஒரு சிறந்த குடும்ப மனிதனாக’ இருக்க வேண்டும் என்கிற உறுதி எனக்குண்டு. குடும்பத்துடன் இருப்பதன் பொருட்டு எதையும் தியாகம் செய்வேன். இயகோகா சுப்பிரமணியம் எழுதிய திரைகடல் ஓடு திரவியம் தேடு என்ற நூலில் ஸ்விட்ஸர்லாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஹெபாசிட் நிறுவனத்தின் தலைவர் சொல்வார் ‘குடும்ப மனிதனாக இருப்பதென்பது எப்போதும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பது மட்டுமல்ல. ஒருவன் இருப்பினும் இல்லாது போயினும் அவனது குடும்பம் நல்ல வாழ்க்கைத்தரத்தைக் கொண்டிருக்க வகை செய்வதே ஒரு சிறந்த குடும்ப மனிதனின் அடையாளம்’. அந்த வரி என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. குடும்பம் அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் நிலையில் குடும்பத்தோடு நேரம் செலவிடுகிறேன் என்பது எவ்வளவு பெரிய அனர்த்தம்.

கொடீசியா இந்தியாவில் முன்மாதிரியான அமைப்பு. அதைக் கட்டி எழுப்பிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர் ஏ.வி.வரதராஜன். மீப்பெரும் தொழிலதிபர். அவரைப் பற்றி இந்திய தொழில் வர்த்தக சபை சிறு நூல் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு சம்பவம். பழனிக்கு காந்தி வருகிறார். சொல் எழா கூட்டம். பத்து வயதுப்பையனாக சித்தப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு திருவிழா பார்க்கச் செல்கிறார் ஏவிவி. காந்தி இருக்கும் கார் கூட்டத்திற்குள் நுழைகிறது. முன் இருக்கையில் காந்தி ஜனங்களைப் பார்த்து வணங்கியபடி இருக்கிறார். ஏவிவி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சடாரென குதித்து கூட்டத்தைப் பிளந்து வேகமாக ஓடிச்சென்று காரின் ஃபுட் ஸ்டெப் - அக்காலங்களில் கார்களில் ஃபுட் ஸ்டெப் இருக்கும் - தொற்றி ஏறிக்கொள்கிறார். காந்தியின் நீட்டிய கரங்கள் கார் கதவின் இடைவெளிக்குள் இவரது கைக்குள் மாட்டிக்கொண்டது. கொஞ்ச தூரம் சென்றபின் காரை நிறுத்தி இவரை அன்போடு இறக்கி விடுகிறார்கள். ஏவிவி பின்னாட்களின் தொட்ட சிகரங்கள் அனைத்திற்குமான விதைபோல இந்தச் சம்பவம் என நினைத்துக்கொள்வேன். புயல் போன்ற செயலிலும் துறவியைப் போன்ற எளிமையிலும் அவர் எனக்கு ஒரு குட்டி காந்தியாகவே தெரிவார். கோவையில் காந்தி நட்ட மரம் இருக்கிறது. தொட்ட மனிதரும் இருக்கிறார் என அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவரான அண்ணாமலை அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘அறவாழ்வும் அர்ப்பணிப்பும்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. திராவிட இயக்கம் கோலோச்சிய காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பட்ட இன்னல்கள், அரசுப்பணியில் இருப்பவர்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்காக கொடுக்கவேண்டியிருந்த விலை, எமர்ஜென்சி தளும்புகள், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அமைக்கப்படுவதற்கு இடையூறு செய்த ஒரு வங்க அமைச்சருக்கு எதிராக கல்கத்தாவிற்கே சென்று வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்தது என பல சுவாரஸ்யங்கள்.

ஜிடிநாயுடு இரண்டு முறை ஐரோப்பியப் பயணத்திற்குத் திட்டமிட்டும் கப்பல் விபத்துக்குள்ளானதால் நீந்தி கரையேறி உயிர் பிழைத்தார். மூன்றாவது முயற்சியில் ஐரோப்பா சென்றார். பற்பல சாகசங்கள் நிரம்பிய அவரது பயணங்களில் ஹிட்லர், முஸோலினி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தன்னுடைய கண்டுபிடிப்புகளை அவர்களுக்குப் பரிசளித்தார். பெருந்தொழிலதிபர் என்றபோதும் அங்குள்ள கல்விக்கூடங்களில் சேர்ந்து மோட்டார்களை மேம்படுத்த கற்றுக்கொண்டார். கற்றும் கொடுத்தார். சென்ற நாடுகளின் பொது நிர்வாகத்தை, தொழில்முனைவை, மக்களின் பண்புநலன்களைப் பரிசோதிக்கும் பல்வேறு பரிட்சார்த்தங்களை மேற்கொண்டார். எல்லாமே சர்க்கஸ் பார் விளையாட்டு போல வித்தையும் விபரீதங்களும் கலந்தவை. ஒரு தொழிலதிபர் ஏன் பயணம் மேற்கொள்ள வேண்டும்? அதன் நோக்கம் என்னவாக இருக்கவேண்டுமென்பதை அறிந்துகொள்வதற்கு அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘நான் கண்ட உலகம்’

தினத்தந்தி ஆதித்தனார் திரட்டிய சொத்துக்களுடன் நாடு திரும்பியபோது கப்பல் தீக்கிரையாகி நீந்தியே தமிழகம் வந்து சேர்ந்தது (ஆதித்தனார் வரலாறு) பிசாசு என நினைத்து ஊரே அஞ்சி நடுங்கிய திருடனை ஒற்றையாய் போராடி பிடித்த நாமக்கல் கவிஞரின் அம்மா (என் கதை), ஜோர்டான் ஃபெல்போர்ட் சிறுவயதிலேயே சாதாரண ஐஸ்க்ரீமை வெளிநாட்டு ஐஸ்க்ரீம் என்று கடற்கரைக் காதலர்களிடம் விற்று பணம் சம்பாதித்தது (வுல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்), ரயிலில் பயணம் செய்ய இருப்பவர்கள் வீட்டிலிருந்தே குண்டுபல்பு கொண்டு வந்து பயணிக்கும் பெட்டியில் பொருத்திக்கொள்ளவேண்டியது (ஏகே செட்டியார் பயணநூல்கள்), பர்மாவிலிருந்து கால்நடையாகவே வந்து சேர்ந்தவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் பட்ட அவலங்கள் அலைக்கழிப்புகள் (பர்மா நடைப்பயணம்), அன்றாடம் ஊரே குளித்த தெள்ளிய நீர் ஓடிய கூவம் பற்றிய சித்தரிப்புகள் (திருவிக வாழ்க்கைக் குறிப்புகள்), இந்தி தெரியும் என்கிற காரணத்தினாலேயே ராஜாஜி பக்கம் சாய்ந்த காந்தி (சாண்டில்யனின் எனது போராட்டங்கள்) ஆலயப் பிரவேசத்தை எதிர்த்த உவேசா (நாடார் கறுப்பா காவியா?) அரவணைக்க ஆட்களிருந்தாலும் எந்த அமைப்பிற்குள்ளும் ஒழுங்கிற்குள்ளும் அடங்க மறுத்து வறுமையை வாரிச்சூடிக்கொண்ட புதுமைப்பித்தன் படுத்திய பாடுகள் (தொமுசியின் புதுமைப்பித்தன் வரலாறு) கர்நாடக சங்கீத இசையுலகிற்குள் இருந்த அரசியல்கள், பக்கச் சாய்வுகள் (ரஸிகமணி கடிதங்கள்) வெள்ளை அதிகாரிக்கு எதிராக காந்தி கோவையில் நடத்திய போராட்டம் (ஆர்.கே.எஸ். வாழ்க்கை வரலாறு) எழுதும் போது ஒவ்வொரு இணைவரலாற்று நூலின் பெயர்களும் சம்பவங்களும் நினைவில் முட்டிக்கொண்டே இருக்கின்றன. நிற்க.

இந்தக் கொரானா காலத்தில் சில தன்வரலாற்று நூல்களின் கைப்பிரதிகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றுள் முக்கியமானது நண்பர் யுவராஜின் அம்மாவுடையது. தலைமைக் காவலர் பதவிக்குப் பெண்களை நியமனம் செய்யலாம் என அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொண்டு வந்த திடீர் சட்டத்தின் பயனாக 22 பெண்கள் தலைமைக்காவலர் ஆகிறார்கள். அதில் ஒருவர் யுவராஜின் அம்மா. 18 வயதிலேயே தலைமைக்காவலராகப் பணியில் சேர்ந்து டிஎஸ்பி வரை உயர்ந்து ஓய்வு பெறுகிறார். அக்காலத்தைய போலீஸ் குவார்ட்டர்ஸ் வாழ்வு, பெண்களின் நிலை, சமூகச்சூழல், நாற்பது வயதைத்தாண்டிய ஆண் காவலர்கள் 18 வயது பெண் தலைமைக் காவலரை எதிர்கொண்ட விதம், பிள்ளைகளை வளர்க்க முடியாமல் அவரது அப்பா - அவரும் ஒரு காவலர் - காவல்நிலையத்திற்கு எதிரேயே ஒரு சைக்கிள் கடை நடத்தியது என படு சுவாரஸ்யமான நாவலைப் போல இருந்தது. அன்று தமிழகத்திலேயே மிக அதிகம் தற்கொலை பழனியில்தான் நிகழ்ந்திருக்கிறது. புண்ணிய ஸ்தலத்தில் இறந்தால் மோட்சம் போகலாமென பழனிக்கு வந்து சண்முகா நதியில் மூழ்குபவர்கள், மலையிலிருந்து குதிப்பவர்கள், விடுதி அறைக்குள் தற்கொலை செய்பவர்கள் என அன்றாடம் குறைந்தபட்சம் இரண்டு மூன்று சாவுகள் விழும். பழனி காவல்நிலையத்தில் பணியாற்றுவது ஏறக்குறைய தண்டனை. எடுத்த எடுப்பில் தலைமைக் காவலரான பெண்ணை யார் சித்திரவதை செய்யாமல் இருப்பார்கள்? தற்கொலைப் பிணங்களைக் கைப்பற்றி விசாரிக்கும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்படுகிறது. இன்று போல கர்ப்பிணிகளுக்கு விடுப்பு கொடுக்கும் வழக்கம் அன்றில்லை. திருமணத்திற்குப் பின் யுவராஜின் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, ஒரு பெண் வீட்டைப் பூட்டிக்கொண்டுவிட்டாள் என்று தகவல் வருகிறது. வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறார். தூக்கிட்டு பிணமாகத் தொங்குபவளின் கால்கள் இந்த நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மோதுகிறது. கைப்பிரதியை மூடிவைத்துவிட்டு அப்படியே உறைந்துபோய்விட்டேன்.

இன்னொரு சுவாரஸ்யமான வரலாறு செயின் ஆஃப் ஸ்கூல்ஸ் உருவாக்கிய ஒரு இளம்தொழில்முனைவியுடையது. வசதியான பெற்றோர்களுக்குப் பிறந்து வெளிநாடுகளில் உயர்கல்வி பெற்றவர். வேலைக்கெல்லாம் போகவேண்டாமென 22 வயதிலேயே திருமணம் செய்து அனுப்பிவிட்டனர். அந்த வீட்டில் ஒரு மாமியார். கல்வி கற்காதவர். ஐம்பதாண்டுகளாக சமையல்கட்டிலேயே கிடப்பவர். ஆணாதிக்கச் சிந்தனை மிக்க கணவரிடமும் மாமனாரிடமும் கட்டுண்டவர். எந்தச் சபையிலும் ஒரு சொல் சொல்லிப் பழகாதவர். ஆனால், தொடர்ச்சியாக இந்த உலகை அவதானித்து வந்தவர். சிறு கனலை மனதிற்குள் மிருதுவாக ஊதி ஊதி புகைய வைத்தவர். தழையத் தழையப் புதுத்தாலியுடன் வளைய வந்த மருமகளிடம் ‘நீயும் என்னை மாதிரியே அடுப்பங்கரையிலேயே கிடக்கப் போறீயா’ என்று கேட்டார். அங்கு விழுந்தது முதல் விதை. சீரியலில் வரும் ஸ்டீரியோ டைப் மாமியார்களைப் பார்த்து அலுத்துப் போயிருப்பீர்கள்தானே? இந்த மாமியார் ஒரு நெடிய போருக்குத் தன் மருமகளைத் தயார் செய்தார். கார் ஓட்டுவது முதல் ஒப்பந்தங்களை வாசித்துப் புரிந்துகொள்வது வரை சகல விஷயங்களையும் ஒவ்வொன்றாகப் போராடி போராடி கற்றுக்கொள்ள வைத்தார். ஒரு மதியூக மந்திரியாகப் பின்னாலிருந்து தன் மருமகளை இயக்கத் துவங்கினார். இன்று பத்து பள்ளிக்கூடங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் அந்த வாழ்க்கை வரலாற்றை நானே மொழிபெயர்ப்பேன்.

இன்னொன்று பன்னிரெண்டாயிரம் சம்பளம் வாங்கிய வேலையைத் துறந்துவிட்டு நிறுவனம் ஆரம்பித்த பத்தே வருடங்களில் 200 கோடி ரூபாய்க்கு விற்று விட்டு பெண்கள் மறுமலர்ச்சிக்கு மீத நாட்களை ஒப்புக்கொடுத்து விட்ட ஒரு மேனாள் பெண் தொழிலதிபரின் சரிதம். இது ரியல் கார்ப்பரேட் கிரிமினல்களின் கதை. ஊழியர்களைப் போல நிறுவனத்திற்குள் நுழைந்த போட்டி கம்பெனியின் ஆட்கள், வெஞ்சர் என உள்ளே நுழைந்த வல்ச்சர்கள், ஏற்றுமதி செய்த நாடுகளில் அங்குள்ள தொழிலதிபர்களுடன் அரசுகளே இணைந்து செய்த மோசடி என்று பற்பல வெப்சீரிஸூகளுக்கான சம்பவங்கள். விரைவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாக இருக்கிறது.

இன்னொரு நூல் ஒரு நகைக்கடைக்காரரின் வரலாறு. மிகச்சிறிய நகரமொன்றில் மிகச்சிறிய நகைக்கடை. ஆனால் தமிழகத்தில் எவரோடும் போட்டியிடும் அளவிற்கு டர்ன் ஓவர். எந்தக் கலர் கலர் விளம்பரத்தாலும் முறியடிக்க முடியாத குடி நாணயம். வியாபாரத்தில் விதம் விதமான வித்தைகளைக் காட்டியிருக்கிறார். உதாரணமாக ஒன்று. அந்தச் சிறிய நகரத்தைச் சுற்றி சுமார் 80 கிராமங்கள். அந்தக் கிராமத்திலிருந்து டவுணுக்கு வந்து இந்த நகைக்கடைக்குள் எவர் நுழைந்தாலும் பஸ் டிக்கெட்டுக்கான பணம் இனாம். நகை வாங்க வேண்டுமென்பது அவசியமில்லை. டிக்கெட்டைக் காட்ட வேண்டுமென்பதும் அவசியம் இல்லை. நுழைந்து வேடிக்கை பார்த்தாலும் குறைந்தபட்சம் ரூபாய் முப்பது கையில் கொடுத்து விடுவார்கள். கெத்தெல் சாகிப்புக்கு நட்டம் இல்லை என்பது இலக்கிய வாசகன் அறிவான்.

ஏன் வரலாறுகள் எழுதப்பட வேண்டுமென்று எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் என்பது புரிகிறதில்லையா. ஒவ்வொரு வாழ்க்கையும் முக்கியமானது. அனைத்தும் வரலாற்றின் விசையோடு பின்னிப்பிணைந்தது. எதிர்காலத்தை நோக்கி எழுதப்படுவது. என்றென்றும் மண்ணில் நிலைத்திருக்கக் கூடியது. காடுகள், மலைகள், நதிகள், கோட்டைகள், அரண்மனைகள், பேராலயங்கள் அழிந்திருக்கின்றன. ஆனால் எழுத்துக்கு மரணமில்லை. என்றோ எழுதப்பட்ட இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், குகை ஓவியங்களைக் கொண்டு இன்று நாம் வரலாற்றை மீட்டிக்கொள்கிறோம். ஒரு குயவனின் பானையொட்டுக் கிறுக்கலில் கீழடிக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்குமான ஒரு கோட்டை இழுக்கிறோம் இல்லையா? நூல்களுக்கு ஒருபோதும் அழிவில்லை. ஒரெயொரு நூல் ஏதேனும் ஒரு நாட்டின் நூலகத்தில் எஞ்சியிருந்தாலும் விதை போல உறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழப்போகும் பெருமரத்தின் விதை. அதைக் கொண்டு வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிக்கொள்ள முடியும்.

பேராளுமைகளின் வாழ்வைச் சித்தரிக்கும் வரலாறுகள், வெற்றியாளர்களின் சாதனைகள், நிறுவனங்கள் தோன்றி வளர்ந்த கதைகள், முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள், பெருவாழ்வு வாழ்ந்த மனிதர்களின் நினைவோடை, குடும்ப வரலாறுகள், பொருட்கள் மானுட வாழ்க்கைக்குள் நுழைந்த தருணங்கள், காபி டேபிள் புத்தகங்கள், நினைவு மலர்கள், சங்கங்களின் செயல்பாடுகள், முத்திரை பதித்த அதிகாரிகள், போராட்டங்களின் வரலாறு என ஒவ்வொன்றிற்குமான தேவைகள் இருக்கிறது. ஆனால், இவை காமா சோமோ மொழியில் எழுதப்படுவதனால் பிரயோசனமில்லை. பல தொழிலதிபர்கள் சித்திரவதையான மொழிநடையில் பல நூல்களை வடித்துள்ளார்கள். எந்த வாழ்க்கை வரலாறும் தேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட வேண்டும். ஜெயமோகனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார் குமாரமங்கலம் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் அவர் காங்கோவில் போர் செய்ததை ஒருவரி தகவலாகச் சொல்லிச் செல்கிறார் என்று.

இத்தகைய நூல்களை எழுதுவதற்கு சில அடிப்படைகள் உண்டு. மிகத் தீவிரமான ஆராய்ச்சி, எதையும் விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் நோக்கும் பார்வை, தளராத படைப்பூக்கம், நுட்பமானச் சித்தரிப்புகளுடன் பாயும் நடை, போலியான மிகையுணர்ச்சிகள், தேய்வழக்குகளைக் களைவது, நான் லீனியராக அலைவுறும் பாணியில் கதையை சொல்வது, உணர்ச்சித் தருணங்களை அடையாளம் கொண்டு போதிய அழுத்தத்தை உருவாக்குவது, கச்சிதமான வடிவம் வரும்வரை அயற்சியின்றி எடிட் செய்வது போன்றவை முக்கியமானது. இவற்றுக்குரிய பயிற்சி இல்லாதவர்கள் ஒரு எழுத்தாளரை அமர்த்திக்கொண்டு தங்கள் வரலாற்றை எழுதுவதே சரியானது. ஜிடிநாயுடுவின் ‘நான் கண்ட உலகம்’ இன்று பிரபலமடைந்திருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் கோஸ்ட் ரைட்டரான திருலோகசீதாராம். இன்றும் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் சீரிஸ் நூல்கள் விற்பதற்குக் காரணம் யார் என்பதை ‘அறம்’ சிறுகதை வாசித்தவர்கள் உணர்வார்கள்.

வரலாறுகள், சுயசரிதைகள், நினைவோடைகள் எழுதுவதற்கு வரலாற்றிலேயே மிக உகந்த காலகட்டம் இதுதான். கிரிக்கெட் ஸ்கோர் போல சாவுச் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதில், பிஸினஸ் என்னவாகும் என்கிற ஆரூடங்களை நாள் முழுக்க போனில் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் உங்கள் பேரன் பேத்திகள் வாசித்து அறிந்து கொள்ளும்படி குறைந்தபட்சம் குடும்ப வரலாறுகளையாவது எழுதி வையுங்கள்.

- செல்வேந்திரன்
k.selventhiran@gmail.com




Comments

Popular Posts