ஆற்றலரசன்

வெண்முரசு நிறைவடைந்திருக்கிறது. அத்தோடு ஒட்டி ஒழுகும் வாழ்க்கைத் தருணங்கள் என் குடும்பத்திற்கு நிறைய உண்டு. என் உடல் உறுப்புகளின் ஒன்றென ஆகிய மேக்புக் ஏர் 11 விண்டேஜ் மாடலாகி விட்டது. அதன் பேட்டரிகளை நான் ப்ரீமியம் விலை செலுத்தி வாங்குவேன். வேறு கணிணி மாற்ற முடியாமல் இல்லை. ஜெயமோகனின் ஐரோப்பிய, கனடா பயணங்களின் போது உடன் சென்ற என் மேக்புக்கில் வெண்முரசின் சில நாவல்கள் எழுதப்பட்டன. அவ்வகையில் அக்கணிணி என் வாழ்நாள் முழுக்க உடன் வரவேண்டுமென்று விரும்பினேன். கடந்த ஓராண்டில் எனது பத்து நூல்களும், முதல் நாவலும் அந்தக் கணிணியில் உருக்கொண்டது என் ஆசிரியனின் ஆசிகளின் தொடர்ச்சி என்றே கருதுகிறேன்.

இந்திரநீலத்தின் பல பாகங்களை ஜெயமோகன் குரல்வழியாகப் பதிவு செய்து அனுப்புவார். அதை காதில் கருஞ்சரடு மாட்டி திருக்குறள் சில நாட்கள் தட்டச்சு செய்து கொடுத்தாள். நான் அந்த குரல்பதிவுகளைக் கவனமாக சேகரித்து வைத்திருக்கிறேன். மிக அந்தரங்கமான குரலில் ஒருவருக்கு மட்டுமே சொல்லப்பட்ட வெண்முரசு. தட்டச்சிய அத்யாயங்கள் வலையேறுகையில் ஆர்வமாகச் சென்று பார்ப்பேன். ஒரு வரி மாறியிருக்காது. அத்தனைத் துல்லியமாக எழுதும் வேகத்தில் அவரால் டிக்டேட் செய்யவும் முடியும்.

திரு இரண்டாவது முறை கருத்தரித்தாள். பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லும் இறுதி நொடியிலும் வயிற்றின் மீது தொக்கையான இந்திரநீலத்தினை வாசித்துக்கொண்டிருந்தாள். புத்தகத்தின் கனத்தைப் பார்த்து அதிர்ந்த கங்கா மருத்துவமனை மருத்துவர்கள் அச்சத்துடன் எச்சரித்தனர். இளம்பிறை பிறந்தாள். இன்றும் சமயங்களில் அவளை நான் சியமந்தகமணி என்றழைப்பதுண்டு. ஆறாண்டுகளாக சரஸ்வதி பூஜையில் நாங்கள் வெண்முரசின் பிரதிகளை வைத்து வணங்குவது வழக்கம். இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு என் பரம்பரையில் அவ்வழக்கம் தொடரும் என்றே நினைக்கிறேன்.

சிங்கப்பூர் நண்பர் சந்திரசேகர் இறந்தபோது அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நானும் ஜெயமோகனு சென்றிருந்தோம். அவர் உடல் இந்தியா வருவதற்குள் அவர் ஆர்டர் செய்திருந்த வெண்முரசின் நாவல் ஒன்று வந்திருந்தது. அவரது உடலுடன் பாலித்தீன் பிரிக்கப்படாத அந்தப் புத்தகமும் சேர்த்து புதைக்கப்பட்டது. அன்று ஜெயமோகன் நிலையழிந்திருந்ததை கண்ணீர் விட்டதை இப்போது நினைத்தாலும் நடுக்கம் வருகிறது.  அவரைக் கைத்தாங்கலாக ஒரு கிராமத்து டீக்கடை வாசலில் அமரவைத்து டீயை ஆற்றிக்கொடுத்தபோது சொன்னார் ‘திருதராஷ்டினனுக்காவது 100 பிள்ளைகள்தான். எனக்கு ஆயிரக்கணக்கான பிள்ளைகள். அவர்களுக்கு ஒன்றென்றாலும் நான் தாங்கமாட்டேன்’ என்றார். எழுதுகையில் எனக்கும் கண்ணீர் வழிகிறது.

இடையில் இரண்டாண்டுகள் நெல்லையில் வசித்தபோது மாதம் இருமுறையேனும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பிருந்தது. அவரது அறையில் அவர் வெண்முரசு எழுதுவதை அருகிருந்து கவனித்திருக்கிறேன். பிற்பாடு பல பயணங்களில். எந்தச் சூழலும், வசதியின்மையும், இரைச்சலும், அலுப்பும் அவரைக் கட்டுப்படுத்தாது. கண்களில் தொற்று ஏற்பட்டு நீர் வழிய எழுதியிருக்கிறார். வீங்கிய கைகளில் ஈரத்துணியை சுற்றியபடி எழுதியிருக்கிறார். கீஸ் தெரித்து விட்ட கணிணியில் எழுதியிருக்கிறார். திரை முற்றிலும் சிதைந்து சொற்கள் அறவே தெரியாத லேப்டாப்புகளில் எழுதியிருக்கிறார். கண்ணாடி தொலைத்து விட்டு கைகளால் தடவித்தடவி எழுதியிருக்கிறார். வெண்முரசு எழுதும் நேரங்களில் ஜெயமோகன் எனும் மனிதன் மறைந்து உடலும் உள்ளமும் கரங்களும் கருவிகளும் குவிந்து இரைக்குக் குறிவைக்கும் சிறுத்தைப் போன்ற ஒருவராக அவர் தோற்றமளிப்பார். படைப்பில் ஆழ்ந்து பல்வேறு விமானங்களை விமானநிலையத்திலேயே தவறவிட்டிருக்கிறார். பேருந்தை, ரயிலை.

வெண்முரசு எழுத ஆரம்பித்தபின் அற்ப காரணங்களைச் சுட்டி அவரை விட்டு விலகிய நண்பர்களின் பெயர்ப்பட்டியல் பெரிது. அவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஜெயமோகன் செய்த உதவிகளை நான் அறிவேன். பெற்றுக்கொண்டவர்களுக்கேயுரிய சுயகழிவிறக்கம். பிறப்பின் அடிப்படையிலான வெறுப்பு, மதவெறி என பற்பல காரணங்கள். இன்றும் நேரடியாகவும் போலி அக்கவுண்டுகளிலும் அவரை வசைபாடுபவர்கள். ஜெயமோகன் எனும் மாமனிதனின் கால் தூசிக்குப் பெறாதவர்கள். காலம் அவர்களைக் கசக்கித் துப்பிவிடும்.

வெண்முரசு காலகட்டங்களில் அவரைச் சுழன்றடித்த பல புயல்களின் போது உடன் நின்றிருக்கிறேன். என் கவனமின்மை கூட சமயங்களில் அவருக்குப் பிரச்சனையாக நின்றிருக்கிறது. மாமங்கலையில் மூகாம்பிகையின் மடியில் எனக்கு அவர் அருளிய ஆதியாத்மீகம் ஆதிபெளதீகம் ஆதி தெய்வீகம் போன்றவை அவர் விஷயத்தில் அப்படியே நிகழ்ந்தது. கீதையின் மூன்று மார்க்கங்களின் வழியே அவர் விதியை வென்றுவிட்டார்.

வெண்முரசு நிகழ்ந்து முடிந்த பின்னரே அதை வாசிக்கவேண்டும். அதுவரை ஒரு மாமலை உருவாவதை அருகிருந்து பார்க்கவே என் மனம் விரும்பியது. குருபூர்ணிமா நாளில் அவரை மானசீகமாக வணங்கி வெண்முரசை அன்றாடம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு நாவல் முடிகையிலும் சொற்பொருள் அகராதி, உவமைகளின் தொகுப்பு, வாசிப்பிற்கான துணை நூல்களையும் உருவாக்க வேண்டுமெனும் ஆவல் இருக்கிறது. வெண்முரசு வாசகர்களில் பலரும் இத்தகு முயற்சிகளில் இருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது.

2004-ல் அவரைச் சந்தித்தேன். அதற்கும் முன்பே வாசகர் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடந்த 16 ஆண்டுகளாக என் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை விஷயங்களிலும் அவர் இருந்திருக்கிறார். வழிகாட்டியிருக்கிறார். சிந்தனையை அல்ல சிந்திக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தந்திருக்கிறார். விஷ்ணுபுரம் ஞானசபையின் கடைசி பெஞ்சில் இருந்து படிப்படியாக முன்நகர்ந்து வந்திருக்கிறேன். அவரது பல பக்கங்களை அறிந்தவனாக நான் எப்போதும் நெஞ்சில் அறைந்து சொல்வதுண்டு படைப்பாளி ஜெயமோகனை விடவும், விமர்சகர் ஜெயமோகனை விடவும் மிக மிக மேலானவர் ஜெயமோகன் எனும் தனிமனிதர். நானும் என் பரம்பரையும் மூன்று தலைமுறைகள் தலைகீழாக நின்றாலும் அம்மனிதனின் மேன்மையின் சிறு உயரத்தையும் எட்ட முடியாது. நான் கண்ணாரக் கண்ட கர்ணன். மாண்புமிகு மனிதன். என் பிள்ளைகளுக்குக் காட்டி வளர்க்க எனக்குக் கிடைத்த முன்னுதாரணம்.

விசையுடன் எழுதுவதொன்றே ஆசிரியனுக்குச் செய்யும் சரியான தட்சணை. அதைச் செய்வேன். ஆற்றலரசனுக்கு என் வணக்கங்களும் முத்தங்களும்.

Comments

Popular Posts