இரு கேள்விகள்


இரு கேள்விகளும் பதிலும்

வணக்கம்,

என் பெயர் வெங்கட் குமார். வயது 38. தகவல் தொழில்நுட்பத் துறையில் பதினான்கு ஆண்டுகளாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். தற்போது மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். நீங்கள் இயற்றிய புத்தகம் "வாசிப்பது எப்படி" படித்தேன். மிகவும் சிறப்பான வழிகாட்டுதல் நூலாக இருந்தது. பல விஷயங்களை அதிலிருந்துதான் தெரிந்துகொண்டேன். உதாரணத்திற்கு ரீடிங் கிளப், புக் மராத்தான் இவைகள் எனக்கு புதிதாக இருந்தது. எனக்கு அந்தப் புத்தகம் குறித்து இரண்டு கேள்விகள் உள்ளன.


1. கேட்ஜட்ஸ் தவிர்ப்பது பற்றி. இப்போது கோரோனா நோய்த்தொற்று உள்ள காரணத்தால் புத்தகங்கள் கிடைக்கப்பெறுவது கடினமாக இருக்கும் சூழலில், கடந்த சில மாதங்களாக கிண்டிலில்தான் படிக்க வேண்டியுள்ளது. ஆகையால் டேப்லெட்டோ அல்லது ஸ்மார்ட் போனில்தான் படிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதைப்பற்றி உங்கள் கருத்து, அதன் நன்மைகள் மற்றும் அதன் எதிர்மறைகள் விளக்குங்களேன்.

2. தகவல் தொழில்நுட்ப துறையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் புதுப்புது மென்பொருள் கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள், மாற்றங்கள் வருவதால் அதற்கான தேவைக்கு , பணி சம்பந்தமாக வாசிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. இதல்லாமல் அரசியல் வரலாறு, இலக்கியம், சுயமுன்னேற்றம் என்று வாசிப்பு ஆர்வம் உள்ளதால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று புத்தகங்கள் படிக்க வேண்டியுள்ளது. "ஒரே நேரத்தில் பல நூல்களை வாசிப்பது சிலரின் இயல்பு. எனக்கு அந்தச் சிக்கல் ஆரம்பம் தொட்டே இருக்கிறது. அறிவுச் செயல்பாடு எனும் அடிப்படையில் அது வரவேற்புக்குரியதல்ல. " ஆனால் என் போன்று பணி சம்பந்தமாக வாசிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இதை எப்படி மேற்கொள்வது? இந்த விஷயத்தில் உங்கள் அறிவுரை தேவைப்படுகிறது.


நன்றி
வி.வெங்கட்


வணக்கம் வெங்கட். நலமாக இருக்கிறீர்களா? வாசிப்பது எப்படி நூல் உங்களுக்கு உபயோகமாக இருந்ததை அறிவதில் மகிழ்ச்சி.


உங்கள் முதல் கேள்விக்கான எனது பதில். தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா அல்லது தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்திக்கொள்கிறதா என்பதுதான். நான் கிண்டிலிலும் அதிகமாக வாசிக்கிறேன். மூன்று காரணங்களுக்காக. 1) நாடடங்கினால் விரும்பிய நூல்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. 2) சில மேலாண்மை மற்றும் தொழில்முனைவு நூல்கள் விலையேறினவை. கிண்டில் அன்லிமிடடில் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்து வாசிக்க முடிகிறது 3) இரவில் அருகில் உறங்குபவரை உறுத்தாத ஒளியில் வாசிக்க முடிகிறது.


இதற்கு முன் கடந்த 14 ஆண்டுகளாக இரவில் தூக்கம் வரும் வரை செல்போனில் வாசிக்கும் வழக்கம் இருந்தது. அரங்கசாமியிடமிருந்து ஒட்டிக்கொண்ட தீப்பழக்கம். செல்போனின் மிதமிஞ்சிய ஒளி கண்ணுக்குக் கேடு. ஒளிரும் திரைகள் தூக்கத்தைப் பின்னுக்கு இழுக்கின்றன. பல வருடங்களாகத் தூக்கமின்மையால் உழல்கிறேன். விதை அரங்கசாமி போட்டது. ஒப்புநோக்க கிண்டிலின் ஒளி உமிழ்வு குறைவானது. இணைய மேய்ச்சலுக்கு வழியில்லை என்பதால் கவனம் கலைதல் குறைவானது. சமீபத்தில் பாராகவனின் கொம்பு முளைத்தவன், Excellent ஆகிய இரு நூல்களையும் இரண்டு மணி நேரத்தில் கிண்டிலில் வாசித்தேன். என் ஏழ்வைக்கு இது நம்ப முடியாத வேகம். நோட்டிபிகேஷன் என ஒன்று அத்திரையில் வருமானால் இது சாத்தியமே இல்லை.


உங்கள் இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்ல நான் தகுதியானவன் அல்ல. என்னுடைய வாசிப்பு முறையும் ‘கழனிப் பானை’ வகையரா. இதைக் கைவிடத்தான் முயற்சிக்கிறேன். முடியவில்லை. ஒரு நூலுக்கான முன் தயாரிப்பிற்காக ஸ்டாட்டஜி தொடர்பான நூல்களை வரவழைத்திருக்கிறேன். நண்பர்கள் சிலரின் நூல்களுக்கு அறிமுகம் எழுத வேண்டும். சொல்முகம் சந்திப்பிற்காகப் புத்துயிர்ப்பு. அனைத்தும் பாதியில் கிடக்கிறது. வெண்முரசில் விட்டதைப் பிடிக்கும் வெறித்தனம். ஆனாலும் இன்று காலையில் சிறுவாணி பிரகாஷ் அனுப்பிய புத்தகக் கவரில் இருந்த திருலோகசீதாராமின் இலக்கியப்படகு கவனத்தை இழுத்துவிட்டது. உங்கள் கடிதத்திற்குப் பதில் எழுதும் முன் அந்நூலை பாதி கடந்திருந்தேன். இந்த கழனிப் பானை வாசிப்பிற்கு கடந்த சில நாட்களாக ஒரு உபாயம் கண்டுபிடித்திருந்தேன். பகலில் தொழிலுக்குத் தேவையான வாசிப்பு. இரவில் வெண்முரசு. நடு நடுவே (சரி… கழிவறையில் அமர்ந்திருக்கும்போதுதான்) கனலியில் / யாவரும்மில் / தமிழினியில் ஒரு சிறுகதை.


வாசிப்பில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பல விஷயங்களிலும் பாதி கிணறு தாண்டுவது என் பிரச்சனை. Finishing, Reconciliation விஷயங்களில் நான் படுமட்டம். இந்தப் பாதி மேயும் புத்தகப் பழக்கம்தான் தொழில் வாழ்விலும் தொடர்கிறதோ எனும் ஐயம் எனக்குண்டு. இந்தக் கடிதத்தை முகநூலில் போடுகிறேன். வாசிப்பு விற்பன்னர்களிடமிருந்து நமக்கெதும் பரிகாரம் கிடைக்கலாம்.


மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Comments