செளந்தர விஜயன்

ஜூனியர் விகடன் இதழின் சேலம் பகுதி புகைப்படக்காரர் செளந்தர விஜயன் இன்று காலை சாலை விபத்தில் காலமாகி விட்டார். அவரது மரண செய்தியை கேள்வியுற்ற பொழுதிலிருந்து உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அஞ்சலி கட்டுரைகளை ஒருபோதும் எழுதகூடாது என்பது எனக்கு நானே விதித்துக்கொண்டிருந்த கட்டுப்பாடு. ஒருவன் பழுத்திருக்கும்போது பழம் தின்னாமல், பட்ட பின் வந்து புழுக்கொத்துவதாகத்தான் இரங்கல் கூட்டங்களும், அஞ்சலி கட்டுரைகளும் இருக்கின்றன. ஆனால் மரண செய்திகள் நினைவைக் கிளறிவிடும் வல்லமை பெற்றவை. அதை எதிர்கொள்ளும் எல்லாரது ஞாபக அறைகளும் சடக்கென திறந்துவிடுகிறது. எதையாவது செய்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டால் ஒழிய அதன் கதவுகளை பூட்ட முடிவதில்லை.
விஜயன் நல்லவர். அதற்கு ஆதாரம் அவர் என்னை வெறுத்ததே. விஜயனால் மிகவும் வெறுக்கப்பட்ட நபர்களுள் முதன்மையானவனாக நான் இருந்தேன். என்னை வெறுப்பவர்கள் நல்லவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது நானே கண்டறிந்த உண்மை. பால் பேதமில்லாமல் பழகக்கூடிய கன்னியம் அவரது மிகப்பெரிய அலங்காரமாக இருந்து துருத்திக்கொண்டே இருந்தது. மென்மையான வார்த்தைகளை மட்டும்தான் பிரயோகிப்பார். அவருடனான எனது நான்காண்டு கால தொடர்பில் ஒரு நிமிடத்திற்கு மேல் உரையாடல் நீடித்ததே இல்லை. அளவாக பேசுபவர் என்று எனக்கு படவில்லை. என்னிடம் ஒரு நிமிடத்தை அளவாக வைத்துக்கொண்டிருந்தார் என்பது புரிய ஆரம்பித்தபின் தொடர்புகள் முற்றாக அறுந்தது.
என் குறித்து அவர் முன் தீர்மானம் செய்திருந்த சிலவற்றில் பல தவறானவை என்பதை அவர் உணரத்தொடங்கிய கடைசி காலங்களில் என்னோடு மணிக்கணக்காக பேசுபவராக மாறியிருந்தார். கடந்த வாரம் விருகம்பாக்கத்தில் ஒரு ரோட்டோரத்தில் எனது இருசக்கர வாகனத்தை ஒதுக்கி நிறுத்திவிட்டு அவர் பேசுவதை 'ஊம்..' மட்டும் கொட்டி மணிக்கணக்காக கேட்டுக்கொண்டிருந்தேன்.
புகைப்படம் எடுப்பதை பொறுத்தவரை அவர் ஒரு சராசரி புகைப்படக்காரர்தான். ஆனால், புலனாய்வுப் பத்திரிகைகளுக்கேற்ற 'டீடெய்ல்டு போட்டாகிராஃபி'யில் வல்லுனராகத்தான் இருந்தார். புகைப்படம் எடுப்பதோடு தன் பணிகள் நிறைவடைந்ததாக நினைப்பவரல்ல அவர். அவரிடம் எழுதுவதற்கான வேட்கை இருந்தது. தயக்கம்தான் தடுத்துக்கொண்டிருந்தது. நன்மையில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். எவரோடும் புகார்களோ, வன்மங்களோ இல்லாதவர். அவரது மரணம் மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கிறது.

Comments

எந்த தர்மத்தை நம்புவது? எதன் பெயர் அறம்? 88 வயது வரை வாழ்வாங்கு வாழ்பவர்களின் அன்றாட சீலம் என்ன? எனக்கு நேரடிப் பரிச்சயமில்லாத தம்பிதான் விஜயன். போனில் பேசியிருக்கிறேன். ஆனால், மொத்த சம்பவத்தையிட்டும் அலுவலகத்தில் நிலவும் கனத்த பேரமைதி எதை நினைவூட்டுகிறது?
நள்ளிரவில் ஊளையிட்டு ஊர்த்தூக்கம் கெடுப்பவர்கள், நீடுழி வாழ்கிறார்கள்.
கடவுளின் பெயர் என்ன என்று தெரியவில்லை.‌
selventhiran said…
ரமேஷ் அண்ணா, இந்த விபத்தில் அவரது முகம் கோரமாக சிதைந்து சம்பவ இடத்திலேயே மரணித்திருக்கிறார் என்பதை அறிந்த பின், அவரது இறுதி சடங்கிற்கு கூட நான் செல்லவில்லை. சிரித்தபடியே இருக்கும் அவரது முகம் நெஞ்சுக்கூட்டிற்குள் இருக்கிறது. அதை சிதைக்காமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தில்...

Popular Posts