Tuesday, March 3, 2009

நானும் பார்த்துவிட்டேன்

நண்பர்கள் எல்லோரும் அச்சுறுத்தியதால் எங்கே 'சென்னைக் காதல்' போல இருந்துவிடுமோ என்ற பயத்தில் எஸ்.எம்.எஸ் பார்ப்பதைத் தவிர்த்திருந்தேன். நேற்று ரொம்பவும் தனிமை வாட்டியதால் துணிந்து கிளம்பினேன். 'ஹவுஸ் ஃபுல்' முப்பது ரூபாய் டிக்கெட்டை 100 சதவீத கூடுதல் விலையில் வாங்கி அரங்கத்திற்குள் நுழைந்தால் 99.99 சதவீத யூத்துகளால் நிரம்பி இருந்தது தியேட்டர்.

அப்படியொன்றும் மோசமான படம் இல்லை. வெற்றியை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வணிகத் திரைப்படத்தின் எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற படம். நகைச்சுவைக் காட்சிகளை அரங்கம் அதிர்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. நானும் ரசித்தேன். கல்லூரி மாணவர்களைக் குறி வைத்திருக்கிறார்கள். வைத்த குறி தப்பவில்லை.

திரை முழுக்க சாராய நதி பாய்வதும், படத்தின் பிரதான காட்சிகள் பெரும்பாலும் டாஸ்மாக்கில் நிகழ்வதும்தான் பெரிய குறையாகப் பட்டது. இயக்குனர் ராஜேஷ்வரிடமிருந்து தமிழ் சினிமா ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துவிடவே முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார். இனியொரு தயாரிப்பாளர் சிக்குவது கடினம்.

கதாநாயகி பார்க்க சுமாராக இருக்கிறார் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. கதாநாயகன் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது. நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?!

அஞ்சா நெஞ்சம் படைத்த தளபதிகளின் புத்திரர்களோ, ரேஷன் அரிசி கடத்தி விற்பவர்களோ எடுத்திருக்க வேண்டிய படத்தைப் போய் விகடன் டாக்கீஸ் எடுத்திருக்கிறார்களே என்ற தனிப்பட்ட வருத்தம் எனக்கு. விகடன் டாக்கீஸிடம் இருந்து 'மொழி' மாதிரியான படங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன். மக்களும் அதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், இந்த களங்கத்தை தயாரிப்பாளர் திரு. பா. சீனிவாசன் தனது அடுத்த படமான 'வால்மீகி'-ல் நிச்சயம் துடைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

பின்குறிப்பு:

இந்தப் படத்தை விகடன் நிறுவனத்தார் சந்தைப்படுத்திய விதம் அபாரமாய் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் பத்திரிகை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகளில் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டியதும், தினசரி நாளிதழ்களில் 'பேப்பர் இன்செர்ட்' வைத்ததும், கல்லூரி கல்லூரியாகச் சென்று படத்தை விளம்பரப்படுத்தியதும், விகடனில் படத்தையும், படத்தில் விகடனையும் விளம்பரப்படுத்தியதும் தமிழ் சினிமாவிற்குப் புதியது. நல்ல பலன்களையும் கொடுத்திருக்கிறது.

22 comments:

Anonymous said...

//கல்லூரி கல்லூரியாகச் சென்று படத்தை விளம்பரப்படுத்தியதும்//

செல்வேந்திரன், இது சரியான முன்னுதாரணமாகப் படவில்லையே. அப்புறம் எல்லா படத்துக்கும் கல்லூரி கல்லூரியாப் போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சிருவாங்க.. இதை “புதுமை” ந்ன்னு சொல்லாம உங்க சமூக அக்கறை கோணத்துல கண்டிச்சு எழுதுவீஙகன்னு எதிர்பார்க்கிறேன்.

நான் இன்னும் பார்க்கலை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

சீமாச்சு

லதானந்த் said...

செல்வா! வாழ்த்துக்கள். உங்கள் கட்டுரையை வாசித்தேன். பெரு மகிழ்வுற்றேன். காரணம் மூன்றே மூன்று பிழைகள்தாம் உள.

ஒவ்வொரு முறையும் நானே பிழைகளையும் திருத்தங்களையும் சுட்டுவது அயற்சியாய் இருக்கிறது.

மேலும் தாங்களே ஊன்றி மறுபடியும் வாசித்துத் திருத்தும் “exercise" இந்த முறை உங்களுக்கு அளித்திருக்கிறேன்.

நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதைப்போல இதர பிழையர்களுக்கும் இஃது ஓர் அரிய வாய்ப்பாய் இருக்கும் அன்றோ?

மண்குதிரை said...

உங்களுடைய முந்தைய பதிவுகள்

''சுவர்ணமால்யா''

''சரவல் கோட்டம்''

''ஸ்கார்பியோ''

''பீனா''


எல்லாவற்றையும் ரசித்தேன்.

SMS இன்னும் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது

நானும் வால்மீகியை எதிர்பார்க்கிறேன்

குசும்பன் said...

//நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?!//

ஹா ஹா சிரிப்பை அடக்க வெகுநேரம் பிடித்தது!

வால்பையன் said...

//கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது. நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?!//

அருமையான வரிகள்,
ஏற்றுகொள்ள வேண்டிய வார்த்தைகள்!

ஆனா பெண்களும் பாருங்க அஜித், விஜய்ன்னு தான் அலையுறாங்க, என்னை மாதிரி சுமார்(அல்லது சப்ப) ஆளுன்னா கண்டுக்க மாட்டிங்கிறாங்க

வெயிலான் said...

ம்... என்ன சொல்வது? வி-கடன்.

ஸ்ரீதர் said...

// விகடன் டாக்கீஸிடம் இருந்து 'மொழி' மாதிரியான படங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.//

Great.மிக மிக சரியான வார்த்தை.படம் இன்னும் பார்க்கவில்லை.டிவி யில் வந்த சில காட்சிகளைப் பார்த்ததும் நான் நினைத்ததும் இதைத்தான்.

//அஞ்சா நெஞ்சம் படைத்த தளபதிகளின் புத்திரர்களோ, ரேஷன் அரிசி கடத்தி விற்பவர்களோ எடுத்திருக்க வேண்டிய படத்தைப் போய் விகடன் டாக்கீஸ் எடுத்திருக்கிறார்களே என்ற தனிப்பட்ட வருத்தம் எனக்கு.//

பயங்கர தெம்புங்க உங்களுக்கு.ஆனா சொன்னது சரியான மேட்டர்.

உமாஷக்தி said...

செல்வா, சமீபத்திய பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். SMS இன்னும் பார்க்கவில்லை, விமர்சனம் படித்ததும் பார்க்கும் ஆவல் சுத்தமாக இல்லை. விகடனின் மார்கெடிங் நன்றாகத்தானிருக்கிறது, ஆனால் படமும் சொல்லும்படியாக இருக்கவேண்டும் அல்லவா? இவர்களே படம் எடுத்து இவர்களே மார்க் போட்டு, கடைசியில் இவர்கள் மட்டும் பார்வையாளர்களாகிவிடக்கூடும் பரிதாபமான நிலை வராமல் இருக்கவேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?!//

:)-

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது\

சேம் ப்ளட்

இளவஞ்சி said...

// இந்தப் படத்தை விகடன் நிறுவனத்தார் சந்தைப்படுத்திய விதம் அபாரமாய் இருந்தது.//

வாராவாரம் விகடன்ல மொக்கையாக 4 பக்கம் இந்த படத்தைப்பத்தி எழுதறது விளம்பரமா? அதுவும் ஜீவில செய்திவடிவில் ஒரு கட்டுரை! இதெல்லாம் தயாரிப்பாளரா செய்யவேண்டியது தான். ஆனா விருப்பு வெறுப்பற்ற வி.விமர்சனக்குழுவை வச்சி விமர்சனம் எழுதி மார்க் போட்டிருக்கலாமே?! 36ன்னு மார்க்கு போட்டா படம் ஒடறதை பாதிக்க்கும்னு பயமா? இதெல்லாம் மத்த படத்துக்கு மார்க் போடறப்பவும் இருக்கனும்ல! இதுல கொடுமை ப்ரிவியூ பார்க்கவிட்டு ஒரு டைரடக்டரு 100க்கு 100ன்னு சொன்னதா கட்டுரை.. அட போங்கப்பா!!

கும்க்கி said...

டமில் சினிமால்லாம் பார்கறிங்க...ஹூம்.
சினிமா விமர்சனம் போடற அளவுக்கு ட்ரையா..?

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

//கதாநாயகி பார்க்க சுமாராக இருக்கிறார் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. கதாநாயகன் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது. //

இப்போது கதாநாயகிகளை நாயகனுடன் டூயட் பாடவும் கிளுகிளுப்பு ஏற்படுத்தவுமே பயன்படுத்துகிறார்கள் செல்வா. நடிப்பு என்று வரும் போது நாம் புறத் தோற்றத்தில் அழகு பார்ப்பதில்லை. ஆனால் கிளுகிளுப்புக்கு வருபவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டி இருக்கு.

//நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?!//

நாம் காதலிக்கிற நம்மை காதலிக்கிற பெண்கள் நம் வாழ்நாள் முழுதும் உடன் இருக்க வேண்டியவர்கள் என்பதால் மனசுக்கு முக்கியத்துவம் தர வேண்டி இருக்கு.

ஆனால் இன்றைய கதாநாயகிகள் 30 நிமிடம் ( பாடல்களுக்கும் இன்ன பிற கில்மா காட்சிகளுக்கும் இவ்வளவு நேரம் தானே தேவை படுகிறார்கள்.) நம்மை மகிழ்விக்க தானே வருகிறார்கள். அதனால் காதலிக்கும் கதாநாயகிக்கும் வேறுபாடு இருப்பதாகவே தோன்றுகிறது செல்வா.. :)

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

எனக்கு இந்த படம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது செல்வா.. துவக்கம் முதல் இறுதி வரை ஒரே மாதிரி காட்சிகள்.. புதுமையாய் ஒன்றுமே இல்லை..

ரமேஷ் வைத்யா said...

நான் காதலித்த என்னைக் காதலித்த பெண் (சளி பிடித்தால்கூட) தேவதை மாதிரியே இருப்பாள்.

ச.முத்துவேல் said...

/நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?!/
நீங்களே சொல்லிட்டீங்களே. அதான், சினிமாலயாச்சும் தேவதை....
(அட! நிறைய பேரு இதே வரிகளைப் பத்திதான் பேசியிருக்காங்க)

விக்னேஷ்வரி said...

நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்?! ///

இது என்ன, எல்லாமே பன்மையில் இருக்கே. சரியா கணக்கு பண்ணி சொல்லுங்க. நீங்க எத்தனை பெண்களைக் காதலிக்குறீங்க. உங்களை எத்தனை பெண்கள் காதலிக்குறாங்க. (!!!!!!!!!!!)

செல்வேந்திரன் said...

சீமாச்சு, காலேஜ் வாசல்ல நின்னு சினிமாக்கு வாங்கண்ணு கூப்பிடுறது ஆரோக்கியமானது இல்லை. சந்தைப்படுத்துகிற விஷயத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைக் குறிப்பிடுகையில் இதையும் குறிப்பிட வேண்டியதாகிவிட்டது.

லதானந்த் சார், நன்றி. என் பிழைகளற்ற பத்தி என் நெடுநாள் கனவு. கடுமையாக உழைத்து உங்கள் தேர்வில் வெற்றி பெறுவேன்.

மண்குதிரை நன்றி. வால்மீகி ஒரு ரியலிஸ படமாக இருக்கும் என்று திரையுல நண்பர்கள் அபிப்ராயம் சொல்கிறார்கள். நானும் காத்திருக்கிறேன்.

வாங்க குசும்பன்

வால்பையன், எல்லா பெண்களும் உங்களைக் கண்டுக்க என்னிடம் அருமையான யோசனைகள் இருக்கிறது. தனி மடலில் தொடர்பு கொள்ளவும்.

அட வெயிலான்... வார்த்தைகளை வைத்துக்கொண்டு நீங்கள் அடிக்கிற லூட்டி இருக்கிறதே....

நன்றி ஸ்ரீதர்.

உமா, என் பெரும் பிரயத்தனத்திற்குப் பின் நீங்கள் இடும் முதல் பின்னூட்டம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிறது :)

அமிர்தவர்ஷிணி அம்மா (என் நீரோ மன்னன் கவிதை நினைவுக்கு வருகிறது) பொழிந்ததற்கு நன்றி!

வாங்க ஜமால்.

இளவஞ்சி சார், படம் பாத்துட்டீங்க போலருக்கே...

கும்க்கீ என் அருமை நண்பரே... இத்தனை நாள் எங்கே போய்விட்டீர்?!

சஞ்செய் உங்களுக்கு உயர்ந்த ரசனை.

ரமேஷ் அண்ணா, அவள் என் காதலி.

வாங்க முத்துவேல். அதான் சினிமாலயாச்சும் என்கிற வரிகள் :)

விக்கி, புள்ளிவிபரப்பட்டியலை மெயில் செய்திருக்கிறேன்.

பா.சீனிவாசன் said...

உங்கள் விமர்சனம் அருமை!

நீங்கள் எதிர்ப்பார்த்தது போல் சீனிவாசன் மனசுல செல்வா (SMS) இடம் பிடித்து விட்டார்.

Joe said...

//கதாநாயகி பார்க்க சுமாராக இருக்கிறார் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது.//

தமிழக, இந்திய சினிமா மரபுகளின்படி "சிவப்பான" பெண்ணாக இருக்கிறார், பிறகு அழகில்லை என்று எப்படி சொல்ல முடியும்?

Joe said...

//இயக்குனர் ராஜேஷ்வரிடமிருந்து தமிழ் சினிமா ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துவிடவே முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்.//

சரியா சொன்னீங்க!

பைத்தியக்காரன் said...

//இயக்குனர் ராஜேஷ்வரிடமிருந்து தமிழ் சினிமா ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துவிடவே முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்.//

செல்வா,
தகவலுக்காக.
'எஸ்.எம்.எஸ்.' படத்தின் இயக்குநர் ராஜேஷ். எம்.

எதற்காக சொல்கிறேன் என்றால், ராஜேஷ்வர் என்று ஒரு இயக்குநர் இருக்கிறார். 'அமரன்', 'இதயத்தாமரை' போன்ற படங்களை இயக்கியவர். இப்போது 'இந்திர விழா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர், உலக சினிமா குறித்து பேசக் கூடியவர். வண்ணநிலவன், சாரு நிவேதிதா உட்பட சிறுபத்திரிகை எழுத்தாளர்களின் நண்பர்.

இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டது இவருக்கும் பொருந்தும் :)

என்றாலும் ராஜேஷ் - ராஜேஷ்வர் இருவரும் வேறு வேறு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்