வரவேற்பு

கோவைப் புத்தகத் திருவிழாவின் அன்றைய நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. மேடையில் ஒருவர் முழங்கிக்கொண்டிருந்தார். மைக்கின் முன்னால் திமிரான உடல் மொழியுடன் ஆணவமான நடையில் பேச்சு தொடர்ந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் 'யார் சார் இவர்?' என்றேன். 'யாருன்னு தெரியல... ஆனா தானாமுனா ஆளுன்னு தெரியுது' என்றார் அவர்.

பேச்சினூடாக 'ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது', 'அரசியல் எனக்குப் பிடிக்கும்' போன்ற தலைப்புகளில் புத்தகம் எழுதி இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. சரிதான் எவனோ சலம்பல் எழுத்தாளன் என்று ஏகமனதாக முடிவெடுத்து இடத்தைக் காலி செய்தேன்.

அரங்கில் வாங்கிய 'உயிர்மை' இதழில் அந்த எழுத்தாளரின் பத்தி இருந்தது. எழுத்து வடிவில் எது இருந்தாலும் வாசிக்கும் வழக்கம் இருந்ததால் அதையும் படித்தேன். பரவாயில்லை... பேச்சை விட எழுத்து நன்றாகத்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.


அடுத்தடுத்த மாதங்களில் நான் தவறாது படிக்கும் பத்திகளில் ஒன்றாகிவிட்டது. அதிலும் 'எழுத்தைப் பின் தொடர்தல்' என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருந்தது. பிறகு, ச. தமிழ்ச்செல்வன் என்ற பெயர் என் அபிமான எழுத்தாளர்களின் பெயர்களுள் ஒன்றானது.

பின்னொருநாள் எழுத்தாளர் பாமரனைச் சந்திக்கப் போயிருந்தேன். அவர் ஒரு ஆஜானுபாகு இளைஞனைக் காட்டி 'இவரு யாருன்னு' தெரியுதா என்றார். நான் முகத்தைப் பார்த்துவிட்டு 'அசப்பில் தமிழ்ச்செல்வன் மாதிரி இருக்காருல்ல...' என்றேன். இது அவரது மகன் என்று பதில் வந்தது.

தமிழ்ச்செல்வன் என்றவுடன் இதெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருகிறது. இனி அவரது எழுத்துக்களை ஓசியிலும் படிக்கலாம். வாசகன் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு உரையாடலாம். ச. தமிழ்ச்செல்வனுக்கு பத்தொன்பது கேள்விகள்னு பகிரங்க பதிவு போடலாம். அணானியாய் வந்து அசிங்க பின்னூட்டங்கள் போட்டு விட்டு ஓடிவிடலாம். ஆஹா எத்தனை வசதிகள் இருக்கிறது.

Comments

Karthikeyan G said…
//வாசகன் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு உரையாடலாம். ச. தமிழ்ச்செல்வனுக்கு பத்தொன்பது கேள்விகள்னு பகிரங்க பதிவு போடலாம். அணானியாய் வந்து அசிங்க பின்னூட்டங்கள் போட்டு விட்டு ஓடிவிடலாம். ஆஹா எத்தனை வசதிகள் இருக்கிறது.//

ஆம். :)
தமிழ்ச்செல்வன் ப்ளாக்கை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி செல்வேந்திரன்.

Popular Posts