Friday, March 27, 2009

எமில் தூர்க்கேமின்

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முதல் தளத்தில் திருக்குறள் காட்சிகளை விளக்கும் பல்வேறு ஓவியங்கள் பராமரிப்பின்றி அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழின் ஓவிய ஆளுமைகளான ம.செ, கோபுலு, மருது, ஆதிமூலம், மாருதி, மனோகர், வி.ராஜேந்திரன், பெருமாள், ஜீவானந்தம் போன்ற மகா கலைஞர்களின் ஓவியங்கள் சீரழிந்துகொண்டிருப்பதைக் காணச்சகிக்காமல் நான் சென்னையில் இருந்த காலத்தில் தமிழக அரசுக்கு மனு எழுதி இருந்தேன். சர்வ நிச்சயமாய் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது. சென்னைவாழ் நண்பர்கள் அவை முற்றிலும் அழிவதற்கு முன் ஒரு நடை பார்த்துவிட்டு வாருங்கள்.

***

"சமுதாயக் கூட்டு உணர்வு இல்லாத இனம் தனக்கு உள்ளதை இழக்கும்; தன் உரிமையை இழக்கும்; முடிவின் தன்னையே இழக்கும்." - சமூகவியல் தந்தையெனக் கொண்டாடப்படும் 'எமில் தூர்க்கேமின்' இந்தக் கோட்பாடு இன்றைய தமிழ்ச் சூழலுக்கு எத்தனைப் பொறுத்தம் பார்த்தீர்களா?!

***

இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் இருக்கிறது உத்திரகோசமங்கை. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரதப் பழசான கோவில். மூவாயிரம் ஆண்டுகள் வயதான இலந்தை மரம் அதன் பழமைக்கு வலுவான சான்றாய் காலத்தை அசை போட்டபடி மவுனாய் நின்று கொண்டிருக்கிறது.பச்சைப் பெயிண்டைக் கொட்டி நிறைத்தது போல தெப்பக்குளம் ஒன்று கோவிலுக்குள் இருக்கிறது. மொத்த ஊருக்கும் அந்தப் பாசி அடர்ந்த நீர்தான் ஆதாரம். கோவில் நடை திறப்பதற்கு முன் பெருங்கூட்டமே கூடி இருக்கும் தண்ணீர் எடுக்க. ராமநாதபுரத்தின் வறட்சி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

விக்கிரக தோற்றத்தில் (மனித உருவில்) உமா மகேஸ்வரனும் பார்வதியும் தமிழ்நாட்டில் இரண்டே கோவில்களில்தான் இருக்கிறார்களாம். மற்றொரு கோவில் சீர்காழி. உமாபதி விக்கிரகம் அத்தனை அழகு. சுமார் பத்துவருடங்களுக்கு முன்பு ஒரு அமெச்சூர் கிரிக்கெட் போட்டியில் வென்ற பரிசுத் தொகையுடன் ராமேஸ்வரம் செல்கையில் கண்ட கோவில் இன்னும் நினைவில் மாறாத பசுமையுடன் இருக்க அந்தச் சிலைதான் காரணம்.

ஓரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் சிற்பமும் கோவிலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. இங்குள்ள மரகத நடராஜருக்கு ஆருத்திரா தரிசனத்தின்போது செய்யும் சந்தனக் காப்பு அலங்காரம் விசேஷ புகழை அடைந்திருக்கிறது. ஒவ்வொரு திருவாதிரைக்கும் சுமார் மூன்று லட்சம் பேர் வருகிறார்களாம்.

ஆன்மீகப் பதிவுகளும் எழுதி இருக்கிறேன் என்று வரலாறு நம்மை பதிவு செய்து கொள்ள வேண்டுமல்லவா?!

5 comments:

பைத்தியக்காரன் said...

செல்வா,

உத்திரகோசமங்கை எனக்குள் வேறொரு அதிர்வை தந்துவிட்டது. காரணம், அதனுள் இருக்கும் காதல். உலகமே நடராஜரின் நாட்டியத்தை பார்த்து மயங்கி நிற்க, உமையவள் மட்டுமே பார்ப்பதற்காக நடராஜர் ஸ்பெஷலாக ஆடிய இடம் அதுதான். தன் காதலி மட்டுமே ரசிப்பதற்காக ஒரு காதலன் தன்னை மறந்து நாட்டியமாடிய நிகழ்வு ஒரு பெரும் காதலின் மயக்கம்.

அதனால்தான் கவிஞர் விக்கிரமாதித்தன், தனது ஒரு கவிதை தொகுப்புக்கு 'திரு உத்திரகோசமங்கை' என பெயரிட்டார். வாய்ப்பிருந்தால், அந்தத் தொகுப்பை வாசித்துப் பாருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் said...

உத்திரகோசமங்கை ஆவலை தூண்டிவிட்டது

தமிழன்-கறுப்பி... said...

பதிவும், பின்னுட்டமும்

பகிர்வுக்கு நன்றி..!

மங்களூர் சிவா said...

/
ஆன்மீகப் பதிவுகளும் எழுதி இருக்கிறேன் என்று வரலாறு நம்மை பதிவு செய்து கொள்ள வேண்டுமல்லவா?!
/

:))))

செல்வேந்திரன் said...

அன்பின் பைத்தியக்காரன், தங்களது பின்னூட்டங்கள் (எனக்கும் பிறர்க்கும்) மூலமாகவும், தங்களது பதிவுகளின் மூலமாகவும் உங்களது கனத்த வாசிப்பனுவம் வெளிப்படுவதைக் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பிரமிக்கிறேன். உங்கள் பதிவுகள் அனைத்தையும் முழுவதுமாக படித்துவிடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

முரளிகண்ணன், கொஞ்சம் வெயிலை சகித்துக்கொண்டு போய் வரலாம். அருமையான கோவில்.

வாங்க தமிழன் - கறுப்பி, மங்களூர் சிவா.