ராயல் சல்யூட்!


நாடோடிகள் பார்க்க பெரும் ஆவல்! காரணம் சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ அல்ல. அபிநயா! வாய் பேச முடியாத அந்த தேவதையின் முதல் படம். படத்தைப் பார்த்த எவருக்கும் அபிநயா வாய் பேச முடியாதவர் என்ற சந்தேகம் வர கடுகளவும் வாய்ப்பில்லை. தேர்ந்த இயக்கத்திற்கும், திறமையான நடிப்பிற்கும் ஒரு ராயல் சல்யூட்!

தாத்தா பெயர் தெரியாத மகள், பாட்டன் பெயர் தெரியாத தகப்பன், பூட்டன் பெயர் தெரியாத பாட்டி... வேர்களைத் தேடும் கதாநாயகன் தன் பூட்டன் பெயர் ரங்கா என்றும் அவர் பர்மாவிலிருந்து வந்தவர் என்று சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது. படத்தின் துவக்க காட்சியிலே என்னுடைய ஆதார பிரச்சாரங்களுள் ஒன்றான 'குடும்ப வரலாறு அறிதல்' குறித்த அருமையான, அழுத்தமான பதிவு இருந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளித்தது. மீண்டும் ஒரு ராயல் சல்யூட்!

மத்திம வயதைக் கடந்த எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் ஜோடிக்காவது உதவி செய்த அனுபவம் இருக்கும். பேயோட்டம் ஓடி, பேருந்தை மறித்து, புதுமண தம்பதிகளை பஸ் ஏற்றி, அடுத்த நொடியிலே தங்கச் சங்கிலி, கைவசம் இருக்கிற பணமெல்லாம் கொடுத்து அப்பாடா என பெருமூச்செறியும் காட்சியில் கண்ணீர் துளிர்த்தது. சசிகுமாரின் யதார்த்த நடிப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்!

சின்னமணி கதாபாத்திரம் ராமநாதபுரம் வள்ளலை மனதில் வைத்துப் பின்னப்பட்டது போலத் தோன்றுகிறது. சிறுபத்திரிகைகளில் 'பிம்ப அரசியல்' என்று சிக்கல் பண்ணுகிற சமாச்சாரத்தை எத்தனை கேலி செய்திருக்கிறார்கள்?! வெடிச்சிரிப்பு காட்சிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!

மிஷ்கின் கூட்டணி இல்லாமலும் ஜெயக்கொடி நாட்டமுடியும் என நிரூபணம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர். 'சம்போ சிவ சம்போ' நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது. படத்திற்கு ஒரு குத்துப்பாட்டு எனும் டெம்ப்ளேட்டில் இருந்து சீக்கிரம் தப்பிக்க ஐநாக்ஸ் அய்யனார் அருள் புரிய வேண்டும். பின்னணி இசை பலரும் சொல்வது போல ஏ க்ளாஸ்! அதற்கும் ஒரு ராயல் சல்யூட்!

கோவிலில் பார்த்து தகவல் சொன்னதும் "வாம்மா மின்னல்" மாதிரி பட்னு கிளம்பும் பெண்ணை இப்படியா கையை, காலை இழந்து கடத்துவது?! அரும்பாடுபட்டு சேர்த்து வைத்தார்கள் என்கிற ஓரே காரணத்திற்காக இரண்டு பேரும் பிடிக்கவில்லையென்றாலும் கூட வாழ்ந்தேதான் தீரவேண்டுமா?! ஒரு காதில் அடிபட்ட பரணிக்கு ஏன் இரண்டு காதிலும் பஞ்சை வைத்து அடைக்கிறார்கள்?! இருதரப்பு அரசியல் அழுத்தமும் இருக்கிற குற்றவாளிகளை காவல்துறை இத்தனைக் கண்ணியமாகவா விசாரிக்கும்?! என்பது மாதிரியான எனது முந்திரிக்கொட்டை கேள்விகளைத் திரைக்கதையின் விறுவிறுப்பும், பரபரப்பும் முழுங்கித் தின்றுவிடுகிறது. ராயல் சல்யூட் பாலோஸ்...!

சசிக்குமாரின் தனிப்பட்ட நட்பினால் ஒருத்தி காதலனை இழக்கிறாள், ஒருவன் காலை இழக்கிறான், மற்றொருவன் கேட்கும் திறனை இழக்கிறான், பாட்டி உயிரை இழக்கிறாள், அனைவரது பெற்றோர்களும் நிம்மதியை இழக்கிறார்கள், காவல்துறைக்கும் அடியாட்களுக்கும் அவதி....கூடா ஒழுக்கம் கேடாய் முடியும் என்பதுதான் படத்தின் சப்-டெக்ஸ்டாக எனக்குப் படுகிறது.

எந்த படத்தையும் திருட்டு விசிடியில் மட்டுமே பார்க்கும் என் நண்பரொருவர் 'நாடோடிகள்' கிடைக்கவில்லையென அங்கலாய்த்தார். என்னய்யா காரணம் என்றால், "நல்ல படங்களை தியேட்டரில் போய் பாருங்க சார்" அப்படின்னு ரெகுலர் சப்ளையர் சொல்லிட்டானாம். கடுமையான சட்டங்களால் ஒருபோதும் திருட்டு விசிடியைத் தடுக்க முடியாது. நல்ல படங்கள் மட்டுமே அதைச் செய்யும். சசிகுமார், சமுத்திரக்கனி போன்ற நல்லசினிமாவின் நண்பர்கள் அதைச் சாதிப்பார்கள்

Comments

நல்ல விமர்சனம்.
நாகா said…
//என்னய்யா காரணம் என்றால், "நல்ல படங்களை தியேட்டரில் போய் பாருங்க சார்" அப்படின்னு ரெகுலர் சப்ளையர் சொல்லிட்டானாம். கடுமையான சட்டங்களால் ஒருபோதும் திருட்டு விசிடியைத் தடுக்க முடியாது.//

இதற்காகவே நேற்று துபையில் திரையரங்கில் சென்று பார்த்தோம், ஆனால், 200 பேருக்கும் குறைவான பார்வையாளைக்கொண்ட அரங்கில் பாதி கூட நிரம்பவில்லை. தமிழகத்தில் பெருவெற்றி பெருமென்று நினைக்கிறேன். நல்ல விமர்சனம்..
வாய் பேச இயலாதவரா!

ஆச்சர்யம் தான்.

நல்லா சொல்லியிருக்கீங்க ...


அந்த குத்து பாட்டு தேவை தானா ...

இந்த கேள்வி இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் இருக்குமோ ...
//வாய் பேச முடியாத அந்த தேவதையின் முதல் படம். //

ஆச்சரியமான தகவல்!
Unknown said…
இந்தப் பொண்ணுதானே ஒரு முறை மஸ்தானா மஸ்தானாவில லாரன்ஸ் கூட்டிட்டுவந்து காட்டின பொண்ணு?
மிக நன்றாக இருந்தது...படமும் உங்க விமர்சனமும்.


அமாம்... இதனையும் படியுங்க...
ஒலக அளவிலான விமர்சனப்பார்வை உங்களது..!
//அபிநயா! வாய் பேச முடியாத அந்த தேவதையின் முதல் படம். படத்தைப் பார்த்த எவருக்கும் அபிநயா வாய் பேச முடியாதவர் என்ற சந்தேகம் வர கடுகளவும் வாய்ப்பில்லை. தேர்ந்த இயக்கத்திற்கும், திறமையான நடிப்பிற்கும் ஒரு ராயல் சல்யூட்!//

புதிய செய்தி செல்வா..!
selventhiran said…
வாங்க கேபிளார், வருகைக்கு நன்றி!

நாகா, கோவையில் அத்தனை டிக்கெட்டுகளையுமே பிளாக்கில் விற்றுவிடுகிற அளவிற்கு கூட்டம் அம்முகிறது.

நட்புடன் ஜமால், குத்துப்பாட்டு குழந்தைகள், பெரியவர்கள், உழைப்பாளிகள் என சமூகத்தின் அத்தனைத் தரப்பினரையும் ரசிக்க வைக்கிற ஒரு சமாச்சாரம். நாட்டுப்புறப் பாடல்களின் வேறொரு வடிவமாகத்தான் நான் குத்துப்பாட்டுகளைக் கருதுகிறேன். ஆனால், அதை ஒரு டெம்ப்ளேட்டாக செய்யும்போது கொஞ்சம் அயற்சி வருகிறது.

வாங்க சரவணகுமரன்.

தெரியவில்லையே குமாரசாமி.

வாங்க நகைக்கடை நைனா.

சென்ஷி, ஏன் இத்தனை கோபம்?!
TAARU said…
//தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளித்தது//
எனக்கும் மகிழ்ச்சியே..ஆதார பிரச்சாரம் பண்ணுற செல்வாவுக்கு இங்க ஒரு ராயல் சல்யூட்..

//அப்பாடா என பெருமூச்செறியும் காட்சியில் கண்ணீர் துளிர்த்தது.//
முன்னனுபவம் இருக்குறவங்களுக்கு தான் இது நடந்து இருக்கு? அனுபவமோ? :-)

//ஒரு காதில் அடிபட்ட பரணிக்கு ஏன் இரண்டு காதிலும் பஞ்சை வைத்து அடைக்கிறார்கள்?! ///
இடது பக்கம் வீங்கி இருக்கும்; வலது காதுல ரத்தம் வரும்..[Reference: Hospital Scene]..

// நல்ல படங்கள் மட்டுமே அதைச் செய்யும்//
சீர்மிகு பார்வை... நன்றி செல்வா.. & சமுத்திரகனி;சசிகுமார்;கதிர்; மேலும் பலர்.
selventhiran said…
ஆமாம் டாரு, அனுபவம்தான்.

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் போனில் தகவல் சொல்லி, தெருமுனையில் ஆட்டோவை நிறுத்தி... பெண்ணாகப்பட்டவள் குற்றாலத்திற்கு டூர் போவது போல ஏர்-பேக் சகிதம் கிளம்பி... மூன்று மாசம் கேரளாவில் வசிக்க ஏற்பாடும், கைச்செலவிற்கு பணமும் கொடுத்து அனுப்பி வைத்தால்... மறுநாளே மகளிர் காவல் நிலையத்தில் சரண்டராகி மானத்தை வாங்கினான்.

இன்னொரு விவகாரத்தில் உடன்போக்கு செய்த லட்சிய காதலர்கள்...சம்பந்தமே இல்லாத என்னை அதில் கோர்த்துவிட்டு போன ஒரு நோஸ்டால்ஜியாவும் இருக்கிறது...

பொறவாட்டி எழுதலாம்னு இருக்கேன்.
மணிஜி said…
செல்வா..வாய் பேச இயலாதவர் மட்டுமல்ல..தேவதைக்கு செவித்தினும்
பாதிப்பு..ஈடு கட்டத்தான் அழகை அள்ளி கொடுத்தானோ?(கரப்பான் பூச்சி மேட்டர் கேள்விபட்டீங்களா?)
நாடோடிக் கதைகள் உங்க கிட்ட ரொம்ப இருக்கும் போல இருக்கே!
/
கடுமையான சட்டங்களால் ஒருபோதும் திருட்டு விசிடியைத் தடுக்க முடியாது. நல்ல படங்கள் மட்டுமே அதைச் செய்யும்.
/

மிக அருமை!
//வாய் பேச முடியாத அந்த தேவதையின் முதல் படம். //



படம் இன்னும் இங்கு வரவில்லை. பார்க்கணும்.
வண்டி வண்டியா இருக்கு, ஓராயிரம் ஓடிப்போன கதைகள்... ஆனால், ஓடிப்போனவர்கள் பின்னால் இறந்தவர்களை யார் நினைத்துப் பார்ப்பார்கள். - நன்றி சமுத்திரக்கனி. ஆமா தெரியாமத்தான் கேக்குறேன் எங்கய்யா? இருந்தீர் இவ்வளவு நாள்?
Thamira said…
தொடர்ந்து நல்ல படங்கள் வருவது மகிழ்வளிக்கிறது. சசிக்குமார் பஞ்ச் வசனம், பல்லி சண்டை என கமர்ஷியல் ரூட்டில் திரும்பாமல் இருக்க எல்லாம் வல்ல மடிப்புரம் மங்காத்தாவை வேண்டிக்கொள்கிறேன்..
iniyavan said…
நல்ல விமர்சனம்.

ஆமா, தெரியாமத்தான் கேட்கறேன், ஏன் அடிக்கடி டெம்ப்ளேட்டை மாத்திட்டே இருக்கீங்க?

போன டெம்ப்ளேட் நல்லாதானே இருந்துச்சு?
எனக்கு தோன்றிய சப் டெக்ஸ்டு அதுதான்..
விமர்சனம் ராயல் சல்யூடுக்குரியதுதான்
ஆச்சர்யமான விசயம்

இதுவரை யாரும் அது பற்றி சொல்லவில்லை!
ஷங்கி said…
நல்லா எழுதியிருக்கீங்க! உங்களுக்கு அனுபவம் இருக்குன்னு சொல்றீங்க. அதோட சேர்த்துச் சொல்லியிருந்தீங்கன்னா ஒரு மாறுபட்ட அனுபவமாயிருந்துருக்குமோ?
நன்றி
உங்கள் அழகான விமர்சனத்துக்கு என் ராயல் சல்யூட்!
TAARU said…
// படத்திற்கு ஒரு குத்துப்பாட்டு எனும் டெம்ப்ளேட்டில் இருந்து சீக்கிரம் தப்பிக்க ஐநாக்ஸ் அய்யனார் அருள் புரிய வேண்டும். //

இப்புடி சொல்லிட்டு... ஒரே டெம்ப்ளேட்டுக்கு உள்ள செல்வே. இருக்க மாட்டாரு... என்ன செல்வே?!!

அறிவிப்பு: trend setting டெம்ப்ளேட்s are selling here......
by செல்வேந்திரன்... :-))))
[உங்க காதல் அனுபவம் [ I mean காதலர்கள சேர்த்து வைத்த அனுபவம்] ரசிச்சு சிரிச்சேன். பொறவாட்டி பொலந்து கட்டி எழுதிருங்கண்ணே...]

புதியவன் எனக்கு உங்க பதில்..ரொம்ப நன்றி பாசு... நான் எதிர்பாக்கலண்ணே ... தமிழ்ல ஒரு தடவ!!! THANKS...
அபிநயாவைப்பற்றி யாருமே சொல்லலைன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் படம்பாக்கலை அதனால நான் சொல்லலாம இருந்துட்டேன்
நன்றி..!

வாய்பேச முடியாத பெண்களின் மோனரிசம் தனி அழகியல், அது படத்துல இருக்கும்னு நம்புறேன்.

நான் இன்னமும் படம் பாக்கலை...
கட்டாயம் பார்த்திடுவோம்.
shanmuga raman said…
உங்கள் விமர்சனத்துக்கு ராயல் வண்க்கம்
//எங்கய்யா? இருந்தீர் இவ்வளவு நாள்?//
விசயகாந்தை வச்சு நெறஞ மனசு எடுத்தாரே பார்க்கலியா?

நன்றி செல்வாண்ணே... தம்பட்டமே இல்லாம அழகான இயல்பான விமர்சனம்!
நல்ல விமர்சனம்.
படம் இன்னும் பாக்கலை. பார்க்கணும்.
Sanjai Gandhi said…
அட.. அபிநயா நடிச்சிருக்காங்களா?
இந்தப் படத்தை பார்க்க வேணாம்னு இருந்தேன். அபிக்காகவே பார்க்கப் போறேன்.

செல்வா.. விட்டுட்டு சினிமா போற அளவுக்கு வளர்ந்தாச்சா?
Sanjai Gandhi said…
என்னாதிது? செல்வேந்திரன் பதிவுக்கு கூட்டம் அம்முது.. செல்வேந்தரனை எல்லாரும் நலல்வர்ன்னு ஏத்துக்கிட்டாங்களா? :)))
selventhiran said…
தண்டோரா, அறுவைச் சிகிட்சை ஒன்றின் மூலம் கேட்கும் திறன் பெற்றிருக்கிறாரென நடப்பு இதழ் விகடனில் செய்தி வெளியாகி உள்ளது.

வெயிலான், பொறவாட்டி ஒண்ணு, ஒண்ணா அவுத்து வுடலாம்னு இருக்கேன்.

மங்களூரார், ரெட்மகி, நாஞ்சில் நாதம், நியாஸ், மங்காத்தா பக்தன், நேசமித்திரன், வால்பையன், சங்கா, சுரேகா, தமிழன் கறுப்பி, விக்கி, ட்றாரு (இப்படி உச்சரிக்கலாமா?), சண்முகராஜன், வெங்கிராஜா, பட்டாம்பூச்சி வருகைக்கு நன்றி!

இனியவன் உலகநாதன், பல பேர் படிக்கச் சிரமமாக இருக்கிறது எனச் சொன்னதால் மாற்ற வேண்டியதாயிற்று.

சஞ்செய் அண்ணா, நம்ம இதயக்கனி இழுத்துக்கிட்டுப் போனதால படம் பார்க்க முடிந்தது. ஆனால், காதலியோடு இப்படத்தைப் பார்ப்பது தர்மசங்கடமான அனுபவம்.
அருமையான அலசல். திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
/அப்பாடா என பெருமூச்செறியும் காட்சியில் கண்ணீர் துளிர்த்தது.//
முன்னனுபவம் இருக்குறவங்களுக்கு தான் இது நடந்து இருக்கு? அனுபவமோ? :-)

உண்மைதான்! எனக்கும் இருக்கு!

http://pithatralgal.blogspot.com/2006/05/84-1.html
நல்ல விமர்சனம்!
//மத்திம வயதைக் கடந்த எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் ஜோடிக்காவது உதவி செய்த அனுபவம் இருக்கும். பேயோட்டம் ஓடி, பேருந்தை மறித்து, புதுமண தம்பதிகளை பஸ் ஏற்றி, அடுத்த நொடியிலே தங்கச் சங்கிலி, கைவசம் இருக்கிற பணமெல்லாம் கொடுத்து அப்பாடா என பெருமூச்செறியும் காட்சியில் கண்ணீர் துளிர்த்தது. சசிகுமாரின் யதார்த்த நடிப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்!//

ம்ஹூம்! அதுல எவ்வளவு பெரிய நிறைவு இருக்கும் தெரியுமா!

போன வருஷம் கூட ஒரு காதல் திருமணத்துக்கு உதவி செஞ்சேன்! நானும் என் தங்கமணியும் சேர்ந்து பொண்ணு மாப்பிள்ளையை எங்க வீட்டுக்கே கூட்டி வந்து நலுங்கு எல்லாம் வெச்சி... என்னவோ எங்க வூட்டு புள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்ச திருப்தி அது!

காதல் ஈஸ் ரியல்லி கிரேட் நோ!
selventhiran said…
ஊர்சுற்றி வருகைக்கு நன்றி!

நாமக்கல்லார், உங்களுக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகுமா?!

Popular Posts