ம்

வெறுமை சூழ்ந்திருக்கிற இரவுகளில் மட்டும்தான் உன்னை நினைத்துக்கொள்கிறேனென கணிணித் திரை என்னைக் கேள்வி கேட்கிறது. சத்தியமாக இல்லை. மப்ளரை சுற்றிக்கொண்டு வேர்த்திரைப்புடன் காலைநடை பயில்பவர்கள், பேப்பர் போடும் பெரியவர், 'சார் டீ வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்கும் மேன்சன் வாட்ச்மேன், அலுவலக் கேட்டுக்குள் பைக்கை நுழைக்கும்போது விரைப்பாகி சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி, உடலெல்லாம் வியர்வையில் ஊறித் திளைக்க அரிசி மூடைகளை முதுகில் சுமக்கும் கூலியாள், ஆர்யாஸில் சாப்பிட்டு வாய் துடைத்து வெளிவரும்போது கை நீட்டும் வயோதிக யாசகன், உபன்யாசத்தில் முன்னிருக்கை வெள்ளி முடிவேந்தர்கள், என எல்லோருக்குமே உன் வயது. ஒவ்வொரு வயசாளியைப் பார்க்கையிலும் எனக்கு உன் நினைவு வருகிறது.

ஜன்னல் வழி முகத்தில் விழும் தினமணி. தினமும் உன் நினைவெனும் செய்தியைத் தாங்கி வருகிறது. படித்து முடித்தவுடன் கவனமாக உன்னைப் போலவே அதன் ஓரத்தில் ஒரு 'V' வடிவம் கிழித்து படித்த பேப்பர் எனும் அடையாளம் இடுகிறேன். கட்டுரைகளில் இருந்து கவனமாகக் குறிப்புகள் எடுத்துக்கொள்கிறேன்.

சுடுசோறு அதை விடச் சூடான குழம்பு. பிஞ்சுக் கைகள் அதை பிசையத் தவிக்கும் ஆரம்ப காலம் தொட்டு நீதான் ஊட்டி விட ஆரம்பித்தாய். உன்னையும், ஊரையும் விட்டுப் பிரிகிற முந்தைய இரவுவரைக்கும் அதுதானே வாடிக்கை. இங்கே அத்திப்பூத்த கணக்காக எப்போதாவது என் இலையில் வந்து விழும் பால் வெள்ளைச் சுடுசோறைப் பார்க்கையில் நீ இந்நேரம் சாப்பிட்டிருப்பாயா என்ற யோசனையில் சுடுசோறு ஆறிவிடுகிறது.

உனக்கு நாக்கு இழுத்துக்கொண்டது என்று ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்தபோது ராஜா சொன்னான். காலுக்கடியில் பூமி நழுவி, நாக்குழறி, தலை சுற்றி தண்டவாளத்தில் வீழ்ந்தேன். எல்லா ரயில்களும் என் மீது ஏறி இருந்தாலும் உறைத்திருக்காத நிலை அது. 'அட அதெல்லாம் ரெண்டு நாளில் சரியாயிடுச்சிப்பா. இதுக்கே மயங்கிட்டா எப்படி. அவருக்கு வயசாவுதுங்கறத அவரும், நீயும் மறந்துடுறீங்கடே' என்ற ராஜாவிடம் 'அவரு யுலிஸஸ்டா...! ரெஸ்ட்லெஸ் ஸ்பிரிட்டா... அவருக்கு எதுனா ஒண்ணுன்னா சத்தியமா எனக்கு உலகம் இல்லைடா' என்று கதறிக்கொண்டிருந்தேன். மொத்த ரயில் நிலையமும் என்னை வேடிக்கை பார்த்தது.

உன்னோடு பேசியும், கடிதங்கள் எழுதியும் வருடங்கள் ஆகிவிட்டன. உன்னிடமிருந்து கடிதங்களும், மூலநோய்க்கான லேகியமும், முதலூர் அல்வா பார்சல்களும், விநாயகர் கோவில் விபூதியும் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோலவே நான் அனுப்பும் பணவிடையும் உங்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி நிகழும் மாற்றங்களையாவது எனக்கு எழுதி வருவது கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கொண்டு என்னை ஊருடன் பிணைக்கச் செய்வதற்கான முயற்சி என்பதை நானறிவேன். 'எத்தனைச் சம்பாத்தியம் வந்தாலும் வெளியூரில் நீ அன்னியனும் பரதேசியும்தானே' என்பதைத்தான் உங்கள் கடிதங்கள் குறிப்பால் உணர்த்துகின்றன.

நான் இடது கையால் அவ்வப்போது சிப்ஸ்களை கொறித்துக்கொண்டு, ஈரம் நிரம்பிய கோயம்புத்தூர் காற்றை அனுபவித்துக்கொண்டு கணிணி தட்டிக்கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் நீ திசையன்விளை பேருந்து நிலையத்திலோ, உடன்குடி பேருந்து நிலையத்திலோ சாத்தான்குளத்திற்குச் செல்லும் கடைசிப் பேருந்திற்காய் காத்திருந்து கொண்டிருப்பாய். கடந்து செல்லும் காவலன் "யாருய்ய்யா அது?" என விசாரிக்க 'வியாபாரிங்கய்யா' என பவ்யமாகச் சொல்லி அமைதி காப்பாய். அவன் வம்படியாக பத்து ரூபாயையோ அல்லது ஒரு டஜன் தீப்பெட்டியையோ பிடுங்கிச் செல்வான். அன்றைய தினத்தின் சம்பாத்தியத்தில் சாத்தானுக்கு பங்கு கொடுக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் வேளையில் "சாத்தான்குளம்" எனும் போர்டு அணிந்த பஸ் நுழைந்தால் சுமைகளோடு ஓடி ஏறி இடம்பிடித்து ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து மகன் இந்நேரம் தூங்கி இருப்பானா என்ற கவலையோடு பயணிக்கத் துவங்கி இருப்பாய். உன் கவலைகள் வீணாக வேண்டாம். நான் உறங்கச் செல்கிறேன்.

Comments

பாசகி said…
எனக்கு என் அம்மா நியாபகம் வந்துடுச்சு :(((
Anonymous said…
ஒரு நடை ஊருக்கு போயிட்டு வாங்க... சரியாயிடும்....
நெகிழ்ச்சியான “ம்”
கண் கலங்கிருச்சு செல்வா.
//அன்றைய தினத்தின் சம்பாத்தியத்தில் சாத்தானுக்கு பங்கு கொடுக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் வேளையில்//

அழுக்கான சமுதாயத்தில் ஓர் அழகான ஆதங்கம்.

//உன் கவலைகள் வீணாக வேண்டாம். நான் உறங்கச் செல்கிறேன்.//

உனக்கான நிம்மதி என்னால் கொடுக்கப்படும்.

நன்றி.
//மகன் இந்நேரம் தூங்கி இருப்பானா என்ற கவலையோடு பயணிக்கத் துவங்கி இருப்பாய். உன் கவலைகள் வீணாக வேண்டாம். நான் உறங்கச் செல்கிறேன்.//

தந்தை
“நினைப்பதை முடிப்பவன்” நீங்க தாங்க!
தவமாய் தவமிருந்து பார்த்த எஃபெக்ட்!
பல வரிகள் உலுக்கிவிட்டன
RaGhaV said…
அருமையான பதிவு செல்வா.. :-)
Karthikeyan G said…
மிக அருமை..
என்ன சொல்றதுனே தெரியல. ஒவ்வொரு வரியும் ரசித்தேன். அருமை செல்வா. ஆரம்பமும் முடிவும் நெகிழ்ச்சி. Great.
பல நாட்களுக்குப் பிறகு நான் ஒரு பதிவை ஒரு முறைக்கு மேல் படிப்பது இப்போதுதான் செல்வா.

இது உங்கள் டாப் டென்களில் ஒன்றாக வந்திருக்கிறது!
நல்ல உள்மனப்'பதிவு' செல்வா!
வார விடுமுறையில்
ஊருக்குச் சென்றுவர
பித்தம் தெளியும்;
ரத்தம் புது வேகம் பிடிக்கும்....
அருமையான பதிவு .
ரொம்ப நாளா அழனும் போல இருந்துச்சு
உங்க புண்ணியத்துல அணை ஒடஞ்சுருச்சு
சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் தனிமை போய் விடும்
ஏதோ என்னால் முடிந்ததது
இந்த உபதேசம்,
எப்படி நம்ம கொலைவெறி
திருமணமாகி 10 வருடம் வெற்றிகரமாக முடித்த வேதனையுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
//பல நாட்களுக்குப் பிறகு நான் ஒரு பதிவை ஒரு முறைக்கு மேல் படிப்பது இப்போதுதான் செல்வா.//

பல நாட்களுக்குப் பிறகு நான் ஒரு பதிவை முழுதாய் படிப்பது இப்போதுதான் செல்வா.

என்றல்லாவா இருக்க வேண்டும்!
அதிலை said…
ம்ம்ம்ம்ம்ம்ம்
Unknown said…
நல்லா வந்திருக்குங்க.
செல்வெந்திரன்,

நெகிழ்வான பதிவு...

ஒவ்வொரு வயசாளியையும் பார்க்கும் போது உன் ஞாபகம் வருகிறது...

நிச்சயமாக....

வரிகளில் நெகிழ்வான உணர்வு வெளிப்பட்டுகொண்டே இருகிறது.. இறுதிவரை !

வாழ்த்துக்கள் !

நட்புடன்,
மறத்தமிழன்
Anonymous said…
//ரொம்ப நாளா அழனும் போல இருந்துச்சு
உங்க புண்ணியத்துல அணை ஒடஞ்சுருச்சு//

எனக்கும்
RAMYA said…
நல்ல நெகிழ்வான பதிவுங்க. படிக்கையில் மனசு கனத்து விட்டது.
Karthik said…
க்ரேட் ஒன்!
பாபு said…
என்ன சொல்றதுனே தெரியல.
ம்.
உருக்கம்.
PPattian said…
பையன் பொட்டி தட்டும் நிலையில் இருக்கும்போது.. அவர் ஏன் பாரம் சுமந்து சாத்தானுக்கு பங்கு அழ வேண்டும்? ரொம்ப பிடிவாதக்காரரோ?

மன்னிக்கவும்.. அழகா எழுதியிருந்தாலும், ஏனோ இந்த பதிவு இயல்பானதா எனக்கு தெரியலை..
வாசிப்பனுபவம் எவ்வளவு இருந்தாலும் நம் ரத்த உறவுகளுடனான தொடர்பு, நெருக்கம், பிரிவு, வலி என்பவை வார்த்தைகளுக்கெட்டாத உணர்வாகவே இருக்கிறது. பல சமயங்களில் அது நூறு பக்கங்களுக்கொப்பான கண்ணீர் துளிகளாகவும், சில சமயங்களில் மட்டும் மிகப்பொருத்தமான வார்த்தைகளாகவும் வெளிப்படுகிறது. உங்களின் இந்த பதிவு அந்த விதத்தில் முக்கியமானது! அப்படியிருக்கலாமே, இப்படியிருக்கலாமே என்கிற அர்த்தமற்ற கேள்விப்பின்னூட்டங்களை விடவும்; எனக்கும் உன் மாதிரியே வலிகள் உண்டு நண்பா என்கிற பகிர்தல் பொருத்தமாயிருக்குமோ?
கடந்த 12 வருடங்களாக அப்பாவின் நினைவுநாளில் மற்றவர் எதிபார்க்கும் தருணங்களில் மட்டும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்கிறேன்!
நீளமான பின்னூட்டம் கேலிக்குரியதாகயிருப்பினும், என்னை மாதிரி கிராமத்தானுக்கு சுருக்கப் பேசத்தெரியாது! இருந்தாலும் சுருக்க....."மனதை தொட்டு, உள்ளே ஒளிந்திருந்த கன்ணீர் துளியை மளுக்கென விழவும் வைத்த பதிவு". வாழ்த்துக்கள்!
selventhiran said…
பாசகி, மயில், சென்ஷி, அமிர்தவர்ஷிணி அம்மா, நாடோடி இலக்கியன், பாலாஜி, வால், முரளிக்கண்ணன், டி. ராகவேந்திரன், கார்த்திகேயன், கோபிநாத், விக்கி, பரிசல், வெயிலான், நாஞ்சில், நியாஸ், சீரிதர், நேசமித்திரன், ராகவேந்திரன், அதிலை, செல்வராஜ் ஜெகதீஸன், மறத்தமிழன், இரா. சிவக்குமரன், விஜய்கோபால்ஸ்வாமி, ரம்யா, மங்களூர் சிவா, வசந்த் ஆதிமூலம், கார்த்திக், பாபு, வெங்கிராஜா, புபட்டியன், தங்கமணி பிரபு என் இணைய சொந்தங்களே... வருகைக்கு நன்றிகள் பல!
ம்ம்ம்ம்ம்...sooooppprrrr
ஊர்விட்டு வந்து ஊரை நினைக்கும் போது இப்படி மனம் சஞ்சலப் படுவது அனுபவித்தவர்களுக்கே புரியும்...எனக்குப் புரிகிறது..பூங்கொத்து!!!
Rajesh said…
Selva, It was really amazing... May Gob Bless You and Your Family.. RAJESH

Popular Posts