மிஷ்கின் எனும் சைக்கோ!


2009

தஸ்தாயெவ்ஸ்கின்னா பெரிய இவனா? என்று திருக்குறளரசியிடமிருந்து எஸ்ஸெம்மெஸ் வந்தபோது நான் கோவையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வீடாக ஏறி என்ன செய்தித்தாள் படிக்கிறீர்கள் என சர்வே எடுத்துக்கொண்டிருந்தேன். அவள் சென்னையில் ஆனந்தவிகடனில். எங்களுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. ஈதென்னடா மட்டமத்தியானத்தில் மானினன் விழியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம். ‘என்ன திடீர்னு?’ என ரிப்ளை அனுப்பினேன்.

‘பதில் சொல்லுடா பன்னாடை… தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ்லாம் பெரிய இவனுங்களா?’

‘நான் வாசிச்சமட்டுக்கும் பெரிய எழுத்தாளர்கள். இப்ப என்ன பிரச்சனை?’

‘நாஞ்சில் நாடனை விட பெரிய இவனுங்களா?’

‘என்ன கம்பேரிஸன் இது…அவங்க உலகம் முழுக்க அறியப்பட்டவங்க. நாஞ்சில் நம்ம மண்ணின் கதைசொல்லி. அவங்க ஓபரான்னா நாஞ்சில் வில்லடி. ரெண்டு கலைவடிவங்களுமே அதனதன் அளவில் முக்கியம். வில்லுப்பாட்டு நம்ம பெருமிதம்லா’ அன்று எனக்கிருந்த அறிவுக்கொப்ப ஒரு பதிலை அனுப்பினேன்.

‘அப்போ அசோகமித்திரன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், புதுமைப்பித்தன், ஜேகேல்லாம் சின்ன எழுத்தாளர்கள்தானா?’

‘எவஞ் சொன்னது. பல்லைப் பேத்திடுவேன். இந்த ஒலகத்துல எழுதற எவனோடயும் இவங்க குறைஞ்சவங்க இல்ல. சொல்லப்போனா ஒருபடி மேல…’

‘ஓகே தேங்க்ஸ்’ என உரையாடலை முடித்துக்கொண்டாள். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏன் திடீரென்று இப்படி கேட்கிறாள். போனில் அழைத்தேன். எடுக்கவில்லை. அழைக்க அழைக்க துண்டித்தாள். ‘போடி நாயே’ என ஒரு மெஸெஜ் அனுப்பிவிட்டு மீண்டும் கதவுகளைத் தட்ட துவங்கினேன்.

மறுநாள் கார்த்திகா சொல்லிதான் நடந்ததைத் தெரிந்துகொண்டேன். ஞாநி விகடன் ஆசிரியர் குழுவிற்கு ஆலோசகராக இருந்த சமயம் அது. பத்திரிகையாளர்கள் தங்களை அபிவிருத்தி செய்துகொள்ளும்பொருட்டு வாராவாரம் பிற துறை ஆளுமைகளுடன் கலந்துரையாட வேண்டும். உலக சினிமா பார்க்கவேண்டும். இலக்கிய ஆக்கங்களை வாசித்து விவாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். அதன் ஒருபகுதியாக அன்றைய சிறப்பு விருந்தினர் மிஷ்கின்.

இயக்குனர் பேசுகையில் அவரது பெண் உதவியாளர் எடுத்த ‘பைங்கிளி’ திரைப்படத்தையும் ‘கர்ட் லாக்கரையும்’ ஒப்பிட்டு பெண் என்றால் மென்சோக படங்களைத்தான் எடுக்க வேண்டுமென என்ன அவசியம் வந்தது என்பதை அவருக்கேயுரிய எம்மெஸ்பி பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார். நம்மாள் பெண்ணியப் போர்வாளாயிற்றே. கொதித்தெழுந்து இது ‘செக்ஸிஸ்ட் ரிமார்க்ஸ்’. விவாதம் முற்றிய தருணத்தில், எரிச்சலான மிஷ்கின் ‘நீங்க தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய்.. வாசிச்சிருக்கீங்களா.. இல்லைன்னா இதெல்லாம் வாசிங்க.. அப்புறம் வந்து என்கிட்ட பேசுங்க..’ வாயடைத்து அமர்ந்துவிட்டாள்.

ஒன்றரை நிமிடங்கள் கழித்து மீண்டும் எழுந்து ‘மிஷ்கின் நீங்க சொல்ற ஆத்தர்ஸெல்லாம் நான் படிச்சதில்ல. படிக்கணும்தான். ஆனால், நீங்க புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், அழகிரிசாமி, ராஜநாராயணனெல்லாம் படிச்சிருக்கீங்களா? இந்த மண்ணோட உப்பு அவங்க. இந்த மகத்தான எழுத்தாளர்களையெல்லாம் படிக்காம இங்க வந்து படம் எடுக்கறீங்க?’ விவாதம் தனிப்பட்ட தாக்குதலாகச் செல்வதை உணர்ந்த ஞாநி விவாதத்தினை மட்டுறுத்தினார். போன பாராவுக்கும் இந்த பாராவுக்கும் இடையேதான் எஸ்ஸெம்மெஸ் உரையாடல் நிகழ்ந்திருக்கக் கூடும் என யூகித்துக்கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்தபின் திருக்குறளரசியை சந்தித்த மிஷ்கின், ‘நான் சொன்னதை பெர்சனலாக எடுத்துக்கிட்டீங்க போலருக்கு… இயக்குனர் பெண் என்பதாலேயே போலியான உணர்ச்சிகளுடன் சல்லிசான  படைப்புகளையே கொடுக்கவேண்டுமென்பதில்லை என்பதைச் சொல்வதே என் நோக்கம். தமிழில் அசோகமித்திரன், ஜி.நாகராஜனையெல்லாம் வாசிச்சுருக்கேன். ஆனால் மிகக்குறைவாகத்தான். தமிழ் எழுத்தாளர்களை நிறைய வாசிக்க ஆரம்பிச்சுருக்கேன். நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு ‘பொலிட்டிகல் கரெக்ட்னெஸை’ மட்டும் விவாதிச்சிங்க. அதனால கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்’ என்றாராம்.

*

2011 – நவம்பர்  

நல்ல மழைக்காலம். ஈரோட்டில் அறம் புத்தகத்திற்கு அறிமுக விழாவிற்கு ஏற்பாடாகி இருந்தது. கோவைக்கு விமானத்தில் வரும் மிஷ்கினையும், நாஞ்சில் நாடனையும் ஈரோட்டிற்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்கு. வாகன ஏற்பாடு அரங்கசாமி. அரங்கா மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு சொதப்புபவர். வரவேண்டிய இன்னொவா வரவேண்டிய தினத்தில், வரவேண்டிய நாளில் எதிர்பார்த்தபடியே வந்துசேரவில்லை. அவசரம் அவசரமாக ஒரு ஸ்பார்க்கை ரெடி செய்து தன்னுடைய புதிய டிரைவரிடம் கொடுத்து அனுப்பினார்.
சிரித்த முகத்துடன் ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்த மிஷ்கின் காரைப் பார்த்ததும் கலவரம் ஆனார். நந்தலாலாவிற்காகப் பருத்த உடலுடன் இருந்த அவர் தன்னை எப்படி இந்தச் சிறிய காருக்குள் புகுத்திக்கொள்வது என அஞ்சினார். இதை கேன்சல் செய்துவிட்டு பெரிய காரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றேன். உடனே மறுத்தார். விழாவே ஒரு அரசுப்பள்ளியில்தான் நடக்கிறது. தேவையற்ற செலவு என்றார். நானும் நாஞ்சிலும் பின் சீட்டில் ஒதுங்கிக்கொண்டபின் முன் சீட்டை முற்றிலுமாகப் பின்னால் இழுத்து தன் உடலைத் திணித்துக்கொண்டார். லேசான தூறலுடன் பயணம் துவங்கியது.

நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு இசை, இலக்கியம், சினிமா என உரையாடத் துவங்கினோம். நாஞ்சில் மிஷ்கினின் படங்கள் எதையும் பார்த்திருக்கவில்லை. அதைத் தயக்கத்துடன் சொன்னார். அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்றார். தான் வாசித்திருந்த நாஞ்சில் நாடனின் ஓரிரு கதைகளைச் சுட்டி பேசிக்கொண்டிருந்தார். கார் நேராகச் செல்லாமல் புழு போல நெளிந்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றியது. முன்னால்  செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைத்தால் இடிப்பது போல சென்று நூலிழையில் ஓட்டுனர் பிரேக் அடித்தார். ஒரு பைக் ஓவர்டேக் செய்தாலும் கார் ரோட்டை விட்டு இறங்கியது. பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காது வண்டி ஒதுங்குகையில், சக வண்டியொட்டிகள் கைகாட்டி வைதார்கள். தார்ச்சாலையில் தனித்து விடப்பட்ட கோழிக்குஞ்சு போல கார் பதறிக்கொண்டே இருந்தது. ஒரொரு முறை சிக்னலில் வண்டி நிறுத்தி கிளம்பும்போதும் இடித்திடித்து வண்டி அணைந்தது.  மிஷ்கின் பார்த்து ஓட்டுங்க. ஒண்ணும் அவசரம் இல்ல. பதட்டப்படாதீங்க என அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.

மழை வலுத்தது. சாலை சரியாகத் தெரியவில்லை. டிரைவரிடம் நடுக்கம் மேலும் அதிகரித்தது. வண்டி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியும் நாங்கள் கருமத்தம்பட்டியைத் தாண்டியிருக்கவில்லை. கடக்கும் வாகனங்கள் சாலையில் தேங்கிய கலங்கிய நீரை எங்கள் காரின் மீது வாரியடித்தபடி சென்றன. அச்சமயங்களில் வண்டி கட்டுப்பாடை இழந்து தடுமாறி அங்குமிங்குமாக ஓடியது. அவர் ஒவ்வொருமுறை பிரேக் அடிக்கும்போதும் பின்னால் வரும் வண்டி மோதி விடுமோ எனும் பதட்டத்தில் எனக்கு மூத்திரம் முட்டியது. மிஷ்கின் எரிச்சலுடன் வைபரை ஆன் பண்ணுங்க என்றார். டிரைவர் அது எங்கு இருக்கு என தேடியபோது நான் செல்லப்பிள்ளை அய்யனாரை நினைத்து நெக்குருகினேன்.

மிஷ்கினின் கவனத்தைத் திசை திருப்பும் பொருட்டு, சார் உங்களுக்கு திருக்குறளரசின்னு ஒரு ஜர்னலிஸ்ட் ஞாபகம் உண்டா? விகடன்ல இருந்தாங்க? என்று கேட்டேன். ‘நல்லாத் தெரியுமே… வைல்ட் லேடி… ஒருநாள் கேட்டா பாருங்க ஒரு கேள்வி ‘நீ எந்தத் தமிழ் எழுத்தாளனய்யா படிச்சிருக்கன்னு… அந்தத் திமிர் இருக்கணுங்க’
‘அவளோடதான் சார் நான் வாழறேன்’. திடுக்கிட்ட மிஷ்கின் திரும்பி ‘என் வாழ்த்துக்களும் அனுதாபங்களும்’ என்றார். காருக்குள் சிரிப்பொலி எழுந்தடங்கியது. டொம் என ஒரு சத்தம்.  பெரிய குழிக்குள் வண்டியைப் போட்டு விட்டார் டிரைவர். சீட்டிலிருந்து வீசப்பட்டு காரின் உட்கூரையில் இடித்துக்கொண்டோம். மிஷ்கின் வண்டியை அடுத்து வரும் பெட்ரோல் பங்கில் நிறுத்தும்படி கத்தினார். இல்லை சார் ஓட்டிடுவேன் சார். இந்த வண்டி புதுசு சார். அதாம் செட்டாகலை. சொல்லிக்கொண்டிருக்கும்போதே எதிரே வந்த சரக்கு லாரியை நோக்கி இழுத்துக்கொண்டு சென்றது வண்டி. லாரிக்காரன் கடைசி நொடியில் வண்டியை ஒடித்து இறைவனனான். ‘டேய் ஓத்தா… வண்டியை ஒதுக்கி நிறுத்துறா’ என கத்தினார் மிஷ்கின்.

வண்டி ஒதுங்கியது. டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். ‘வண்டியாடா ஓட்டற… கிளம்பி மூணு மணி நேரம் ஆச்சு… அவிநாசி தாண்டலை. நூறு இடத்துல கொல்லப் பாக்கறீயேடா… மூச்சிரைத்தது மிஷ்கினுக்கு. “ சாவுறது எனக்கு மயிரு மாதிரி… இன்னும் நாலு படம் எடுக்கணும்டா. அதுக்கப்புறம் செத்துக்கறேன்டா…’ கனத்த உடலுடன் ஆக்ரோசத்துடன் இரையும் போது இரு மடங்கு பருத்து அரக்கனைப் போல தெரிந்தார் மிஷ்கின். டிரைவர் பூனையைக் கண்ட புறாக்குஞ்சைப் போல வெட வெடத்துக்கொண்டிருந்தார். ‘டேய் ஓத்தா.. உண்மைய சொல்லு.. நீ இதுக்கு முன்னாடி கார் ஓட்டிருக்கியா…’

ப்ளைய்ன்ஸ்ல ஓட்டுனதில்ல சார்.. தட்டுத்தடுமாறி பதில் வந்தது. ‘அப்படின்னா’ உறுமினார் மிஷ்கின். அவர் முகம் வெறி பிடித்த கரடியினுடையதைப் போல இருந்தது. இருபத்தஞ்சு வருஷம் ஊட்டில ஒரு எஸ்டேட்டுல ஜீப் ஓட்டினேன் சார். வண்டித் தடம் சார். தினம் ஒரே ரூட்டுல போவேன் வருவேன். பின்னால முன்னால ஒரு வண்டி வராது சார். திடீர்னு எஸ்டேட்டை வித்துட்டாங்க. குடும்பமே அங்கதான் வேல பார்த்தோம். எல்லாருக்கும் வேல போயிடுச்சி சார். வேற பொழைப்பு தெரியாது சார். ஒரு ரெஃபரன்ஸ் பிடிச்சி அரங்கசாமி சார்கிட்ட வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம்தான் ஆச்சு. அவர் வெளியூர்ல இருக்கிறதுனால இன்னும் என்னை பார்க்கலை. என் வாழ்க்கைலயே ஹைவேய்ஸ்ல இப்பதாம் சார் ஓட்டறேன். ப்ளைய்ன்ஸ்ல இவ்வளவு வண்டிகள் ரோட்டுல போகும்னு நான் கற்பனை கூட பண்ணினதில்ல சார் நடுங்கியபடியே சொன்னார் டிரைவர்.

சட்டென்று மிஷ்கின் எனும் பலுனில் ஒரு ஆணி தைத்தது. டிரைவரை இறுக்கி அணைத்துக்கொண்டார். கைகள் டிரைவரின் முதுகைத் தடவிக்கொடுத்தன. இருவர் உடலும் அதிர்ந்தது. நானும் நாஞ்சிலும் பேச்சற்று நின்று கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குப் பின் கண்களைத் துடைத்துக்கொண்ட மிஷ்கின் ‘ஈரோடு போக ராத்திரி ஆனாலும் பரவால்லை.. நீ வண்டி ஓட்டு’ என காரில் ஏறிக்கொண்டார்.
தன் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை போட்டுக்கொண்டார். ஈரோடு செல்லும் வரை ஸ்லோ பண்ணிக்கோ, கியரை டவுண் பண்ணு, லைட்டை அடிச்சு சிக்னல் கொடு, மெல்ல திரும்பிக்கோ, அப்படி திருப்பு, இப்படி ஒடி, படக்குன்னு பிரேக்கை மிதிக்காதே என பாடம் எடுத்தபடியே ஒரு வழியாக ஈரோடு வந்து சேர்ந்தோம். எஸ்கேபி அருணா, பவா குடும்பத்தினர் முன்னமே ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தார்கள். நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தன. நாங்கள் வந்ததும் சாப்பிடலாமென காத்திருந்து காத்திருந்து அனைவரும் பசியோடிருந்தனர்.  ஷைலஜா மீன் சமைத்துக்கொண்டிருந்தார். அப்படியொரு மீன் குழம்பு வாழ்நாளில் சில தடவைதான் வாய்க்கும். மிஷ்கின் தனது இடுப்பு பெல்டுகளைத் தளர்த்திக்கொண்டு சாப்பாடு மேஜையில் அமர்ந்தார். அவர் சாப்பிடுவதைப் பார்க்கையில் நாளை முதல் இந்த மனிதர் சாப்பிடவே போவதில்லை போல என்று தோன்றியது. நானும் வயிறு மோவாயில் இடிக்கும் வரை உண்டேன். சமைக்கையில் பவா வீட்டுப் பெண்மணிகள் விஸ்வரூபிணிகள்.

மிஷ்கின் டிரைவரை அழைத்து மேஜையில் இருத்தி சாப்பிட வைத்தார். இருப்பதிலேயே பெரிய மாந்தல் மீன் துண்டை அவருக்கு எடுத்து வைத்தார். டிரைவர் சாப்பிட்டு முடித்த பிறகு அவர் தோளில் கைபோட்டபடி இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றார். என் பார்வை ரகசியமாக அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தது. ஒரு கத்தை பணத்தை எடுத்து டிரைவர் கையில் திணித்தார். நீயெல்லாம் மலைக்குறிஞ்சி. அங்கேயேதான் இருக்கணும். கீழே இறங்காதே. கிளம்பு என்றார். டிரைவர் ஒரு கணம் தயங்கினார். பிறகு மிஷ்கினை ஒருமுறை தழுவிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

மாலையில் விழா ஒரு அரசுப்பள்ளி மாடியில் கொசுக்கடிகளுக்கு மத்தியில் நிகழ்ந்தது. அறம் தொகுப்பில் இரண்டு சிறுகதைகளைத்தான் மிஷ்கின் வாசித்திருந்தார். வழக்கம்போல உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசினார். கையோடு வாட்சுகள் சில வாங்கி வந்திருந்தார் என நினைவு. பவாவிற்கு அணிவித்தார். எஸ்கேபிக்கு முத்தம் வைத்தார். ஜெயமோகனை கட்டியணைத்தார். எனக்கு அவர் ஒரு காமிக்கலான மனிதர் என்று தோன்றியது.

விழா முடிந்த இரவு தீர்த்தவாரி. வட்ட மேஜையைச் சுற்றி எஸ்கேபி, பவா, நாஞ்சில், மிஷ்கின் மற்றும் நான். பாட்டிலுக்குள் ஏசுவின் ரத்தம் சுடரொளி விட்டுக்கொண்டிருந்தது. மூன்றாவது ரவுண்டிற்கு மேல் நாஞ்சில் நாடனுக்கு கண்கள் பனித்து இதயம் இனித்து விடும் - ‘தேவுடியா மவன் என்னமா பாடியிருக்கான்…’ - ஆகவே அவரை மீட்டுச் செல்லும் கடமையுணர்ச்சியுடன் சம்பூர்ண யோக்கியனான நானும் அந்தச் சபையில் பொறித்த கோழிகளைத் தின்றபடி பராக்கு பார்த்தபடி இருந்தேன்.

பேச்சு முழுக்க முழுக்க இசை சினிமா இலக்கியம் சுற்றியே இருந்தது. வாசித்த பேரிலக்கியங்களின் மைய விசையையும் நுட்பமான தருணங்களையும் நாடகீயமாக சிலாகித்துக்கொண்டிருந்தார் மிஷ்கின். பவா எழுத்தாளர்களுடனான சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். நாஞ்சில் தனக்குப் பிரியமான ஹிந்துஸ்தானி கலைஞர்களைப் பேசிக்கொண்டிருந்தார். எஸ்கேபி கருணா இளையராஜாவைப் பற்றி. நான் பதனீர்ப் பானைக்குள்  கிடக்கும் தேனீயைப் போல அவர்களது பேச்சில் மயங்கிக் கிடந்தேன்.

அது சாருவிற்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்திருந்த காலம். சாரு மிஷ்கினை அறுத்துக் கிழித்து அன்றாடம் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். பேச்சு சாருவைப் பற்றி வந்தது. மிஷ்கின் அவருடனான குடியிரவு கொண்டாட்டங்களைச் சொல்ல ஆரம்பித்தார். இருவரும் இசை கேட்டபடி நடனமாடுவோம் என்றார். அவரது கண்கள் பனித்தன. தொடர்ச்சியாக சாருவின் ரசனையைப் பற்றி, எழுத்துக்களைப் பற்றி, அர்ப்பணிப்பைப் பற்றி, வாழ்க்கை முறை பற்றி மிக மிக உயர்வான அபிப்ராயங்களைச் சொன்னார். அரை மணி நேரமாவது சாருவைப் பற்றி பேசியிருப்பார். ஒரு சொல் குறைத்துச் சொல்லவில்லை. ‘சார் என்ன வேணா சொல்லுங்க.. அவனளவுக்கு வறுமையை நக்கிப் பார்த்தவன் எவனும் இல்ல சார்… அவர் என்னை என்ன வேணா சொல்லட்டும். எழுதட்டும். திட்டட்டும். கிழிக்கட்டும். ரைட்டருக்கு அந்த ரைட்ஸ் இருக்கு சார்’ என்றார்.

இரண்டு நாட்கள் அந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தோம். அங்கிருந்த டிரைவர்கள், சமையல்காரர்கள், காவலாளிகள் இன்ன பிற ஏவல்காரர்கள் அனைவரும் வேளாவேளைக்கு சாப்பிட்டார்களா, தங்கும் வசதிகள் சரிவர உண்டா, கைச்செலவுக்கு அன்பளிப்புகள் அளிக்கப்படுகிறதா என்பதை மிஷ்கின் தொடர்ந்து சரிபார்த்துக்கொண்டே இருந்தார். அவரது இயல்பே எளியவர்களை நோக்கித்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த இயல்பு அவரது பல படங்களின் எதிரொலிப்பதை எவரும் உணரமுடியும். அவரை நெருங்கியறிந்த எனது சினிமா நண்பர்கள் அவரது குணமேன்மை குறித்துச் சொன்ன பலவிஷயங்கள் நினைவுக்கு வந்தன. இக்கட்டுரை மிஷ்கினின் அன்புணர்ச்சியின் மீது பூப்போடுவதல்ல. நான் மிஷ்கினின் ரசிகன் அல்ல. சினிமா என் முதன்மை ஆர்வங்களுள் ஒன்றுமல்ல. அவரது ஓரிரு படங்களையே பார்த்திருக்கிறேன். நான் யாரென்று கூட அவருக்கு அன்றும் இன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது வேண்டியதுமில்லை.

கடந்த இருநாட்களாக சமூக வலைதளங்களில் மிஷ்கின் மீண்டும் பேசப்பட்டார். விஜய் டிவியில் சைக்கோ திரையிடப்பட்டிருந்ததன் தொடர்ச்சியாக. ‘மிஷ்கினே ஒரு சைக்கோதான்’ எனும் கமெண்டுகளைப் பலர் போட்டிருந்தார்கள். அவர்களது ப்ரொபைல்களுக்குள் ஆர்வத்துடன் சென்று பார்த்தேன். வாழ்நாளில் ஒரு நூலைப் பற்றியோ, எழுத்தாளனைப் பற்றியோ ஒரு சொல் சொல்லாதவர்கள். திரைப்படங்களின் அழகியல் பற்றியோ நுண்மைகளைப் பற்றியோ ஒரு வரி எழுதியவர்கள் அல்லர். ஒரு புதிய சிந்தனையையோ பார்வையையோ முன் வைத்து விவாதித்த தடங்களே இல்லை. தனி வாழ்வில் குருட்டாம்போக்கில் தப்பித்துக்கொண்டவர்கள். ஏதேனும் கட்சி அரசியலுக்குத் தாலி கட்டிக்கொண்டவர்கள். கையில் ஒரு செல்போன் இருப்பதொன்றே தகுதியென கொண்டவர்கள்.

மிஷ்கினின் எந்தத் திரைப்படத்தைப் பற்றியாவது விரிவான விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்களா என தேடினேன். அவரது கலையின் நுட்பங்கள் குறித்து? அழகியல் குறித்து? போதாமைகள் குறித்து? நஹி. மிஷ்கினை விடுங்கள் வேறெந்த படத்திற்காவது எழுதியிருக்கிறார்களா? திரைக்கலை ரசனை குறித்த தன் வரையரைகளை திட்டவட்டமான சொற்களில் எங்காவது முன்வைத்திருக்கிறார்களா? ஸ்டைலுக்கும் க்ளிஷேவுக்குமான வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளதா? கதைசொல்லியின் உள்ளுறையும் ஆன்மிகம் சுட்டப்பட்டுள்ளதா?

மிஷ்கினின் எந்த அம்சம் இவர்களை எரிச்சலூட்டுகிறது? அவரது நேர்காணல்கள் வெளியாகும்போது இவர்கள் ஏன் சினம் கொள்கிறார்கள்? அவர் சற்று மிகையாக நடந்துகொள்ளும்போது ஏன் நக்கலடிக்கிறார்கள். காரணம் எளிது. அவர் தொடர்ச்சியாக உலகின் மகத்தான புத்தகங்களை, எழுத்தாளர்களை, திரைப்படங்களை, இயக்குனர்களை, இசைக்கலைஞர்களை, ஓவியர்களை, அறிஞர்களை, கலை வடிவங்களை முன் வைத்துக்கொண்டே இருக்கிறார். இதில் ஒன்றைப் பின் தொடரவும் ஒருவன் தன் ஆயுளையே அவிர்பாகமாகக் கொடுக்க வேண்டும். இணைய மொன்னைகளால் ஒருபோதும் ஆகாத காரியம் அது. உழைப்பை ஒழித்துவிட்டுத்தான் இங்கே உழண்டு கொண்டிருக்கிறார்கள். மிஷ்கினின் அறிவு மூர்க்கம் இவர்களை அச்சமூட்டுகிறது. வித்யாகர்வத்தை திமிரென சுருக்கிக்கொள்கிறார்கள். கலைஞர்களின் உணர்வு நிலைகளைப் புரிந்துகொள்ள முதலில் எந்த கலையுடனாவது அடிப்படைப் பயிற்சி இருந்திருக்க வேண்டும்.

 எளிய நக்கல்களின் வழியாக இங்கே எந்த சுரேஷனும் தன்னை ஓர் அறிஞன் போல காட்டிக்கொள்ள முடியும். அசத்தல், அப்படிப்போடு தலைவா, வாழ்த்துக்கள், விளாசல், பின்னிட்டீங்க என பிஞ்சு போன கமெண்டுகளைப் போட பஞ்சுத்தலையர்கள் உண்டு. பதினாறு லைக்ஸ் பைத்தியங்கள். முட்டாள்களின் மடாதிபதியாக வாழ்ந்து மடிய முடியும். எந்தத் தகுதியும் இல்லாமல் எந்த ஆளுமை மீதும் பீயடிக்க முடியும். மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைக்கப்பட வேண்டிய கஞ்சா குடிக்கிகள் இங்கே போலி பாவனைகள் மூலம் விமர்சன பீஷ்மர்களாக முடியும்.

மிஷ்கின் சைக்கோவாகவே கூட இருக்கலாம். ஆனால் அதை மெண்டல்கள் முடிவு செய்யக்கூடாது.


I need your support so I can keep delivering good content. Every contribution, however big or small, is so valuable for my literary attempts. Thanks. Support Good Content

-       செல்வேந்திரன்


Comments

RAGUNATHAN said…
கடைசி வரிகள் சிறப்பு...

Popular Posts