நகுமோ லேய் பயலே
புதுசாக
மாற்றலாகி வந்தவன் “இந்த ஊரு எப்படி” என்று விசாரித்தான். “உன் வாய் ஒழுங்கா இருந்தா எல்லா ஊரும் நல்ல ஊருதான்” என்று பதில் வந்ததாம். விபரம் தெரிந்த நாள்
முதல் இந்தக் கதையை அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார். ‘உன் வாயி இருக்கே வாயி…’ என்பதை
ஒரு தடவையாவது என்னிடம் அங்கலாய்க்காத உற்றார் உறவினர் சுற்றத்தார் இல்லை. எந்த
நெருக்கடியிலும் எவ்வளவு அடக்கினாலும் பால் பொங்கிவிடும். எழுத்திலும்
அப்படித்தான். படு சீரியஸாக எழுதிக்கொண்டிருப்பேன். திடுதிப்பென்று ஒரு
கதாபாத்திரம் கோளாறாகிவிடும். துக்கம் நீங்கள் பார்க்கவே விரும்பாத பக்கம் என்பார்
பார்கவி. உண்மைதான். ஆனால், தனி
வாழ்வில் நான் மிகப்பெரிய ரெளடி. என்னைக் கட்டிவைத்து உதைக்காதவரென ஒருவர்கூட என்
சொந்த ஊரில் இல்லை.
பல்லாண்டுகளுக்குப்
பிறகு நான் தொடர்ச்சியாக எழுதிவரும் நாட்கள் இவை. “கொரோனாவால் திட்டுமுட்டு ஆகியிருக்கிறோம். உன் லைட்டர் கட்டுரைகளைப் புத்தகமாகப் போடேன்” என திவ்யா துரைசாமி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார். சரி நீங்கள்
நம்பவில்லை. போட்டு.
இந்நூல்
அதிகமும் இலக்கிய பாவனைகளை கிண்டல் செய்கிறது. அவ்வப்போது எனக்கு நேரிட்ட
அனுபவங்களைச் சொல்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரின் குணச்சித்தர்கள்
சிலர் அவ்வப்போது மின்னி மறைகிறார்கள். என் பிரியத்திற்குரிய எழுத்தாளர் பி. மாசானமுத்து
கும்பமுனிக்கும் பேயோனுக்கும் சீனியர். அவரது எழுத்துக்களும் இந்நூலை
அலங்கரிக்கின்றன. எவ்வளவு யோசித்தாலும் இந்நூலுக்கு ஏன் ‘நகுமோ… லேய் பயலே’ என தலைப்பு வைத்திருக்கிறேன் என்பதை என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை.
கட்டுரைகளைத்
தேர்ந்தெடுத்து எடிட் செய்யுங்கால் என்னிரு கால்களையும் திசைக்கொன்றாய்ப்
பிடித்திழுத்து இலக்கியப் பணிக்கு இன்பம் சேர்த்த இளவெயினிக்கும் இளம்பிறைக்கும்
என் முத்தங்கள். “நீ என்னமும்
எழுதித் தொலை… ஆனா மவனே என்னைப்
பத்தி எதுனா எழுதுன... உனக்கு ரசம்
வைச்சுடுவேன்” என மிரட்டிய
திருக்குறளரசிக்கு என் அன்பு.
இத்தொகுப்பின்
பல கட்டுரைகள் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியானவை. சில கட்டுரைகள் விகடன், குமுதம், சூரியக்கதிர் உள்ளிட்ட வார இதழ்களில். அவர்களுக்கு என் நன்றி. இந்த நூலினை
மெய்ப்பு நோக்கிய கிண்டில் இவாஞ்சலீஸ்ட் நண்பர் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும், அழகிய அட்டைப்படம் வரைந்த சந்தோஷ்
நாராயணனுக்கும் என் பிரியங்களும் நன்றியும்.
எழுதியே
வாழ்ந்து காட்டியவரும், எழுத்தார்வம்
கொண்டவர்களை உற்சாகமூட்டுவதைத் தொடர்ச்சியாக செய்துவருபவருமான எழுத்தாளர் பா. ராகவனுக்கு
இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன்.
புத்தகத்தை வாங்க: https://www.amazon.in/dp/B086YNSY89
Comments