பாட்டில் நெக்
ஹூலியோ
கொர்த்தசார் எழுதிய The Southern Thruway (1967) எனும் சிறுகதை தமிழில் எம்.எஸ் அவர்களால்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. All fires the fire தொகுப்பில் இடம்பெற்றிருந்த கதை. தெற்கு
பிரான்ஸிலிருந்து பாரிஸூக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் – ஆறு வரிசைகளாக வாகனங்கள்
நகருமளவிற்கு அகலமுள்ள சாலை – ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏற்படும் போக்குவரத்து
நெரிசலில் பல்லாயிரக்கணக்கான கார்கள் சிக்கிக்கொள்கின்றன.
விதம்
விதமான கார்களில் விதம் விதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகப்
பாரிஸூக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு காரில் காத்திருக்கும் எஞ்சீனியரின் பார்வையில்
கதை சொல்லப்படுகிறது. காத்திருப்பு நாட்கணக்காக நீடிக்கிறது. பருவ காலங்கள் மாறுகின்றன.
நெருக்கடி மானுட அகத்திலும் புறத்திலும் உருவாக்கும் மாற்றங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
புதிய உறவுகள் தழைக்கின்றன. ஒரு தற்கொலை நிகழ்கிறது. ஒருவர் நோயுற்று மடிகிறார். காதல்
உருவாகிறது. கலவி நடக்கிறது. புதிய வாழ்க்கையின் கனவுகள் கொப்பளிக்கின்றன. சிறுவர்கள்
வினோதமாக நடந்துகொள்கிறார்கள். புதுப்புது வதந்திகள் காற்றில் அலை போல கிளம்பி வந்துகொண்டே
இருக்கிறது.
ஒருவருக்கொருவர்
உதவிக்கொள்ளும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைமை உருவாகிறது. ஒரு தற்காலிக
சமுதாயம் உருப்பெற்று எழுதுகிறது. தனக்கென்று எதுவும் தக்கவைத்துக்கொள்ளாத சமதர்ம சமுதாயம்.
குழந்தைகள், பெரியவர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், மருத்துவர், ராணுவ வீரன், பொறியாளன்
என அனைத்து சாம்பிள்களும் கொண்ட ஒரு சமுதாயம். ஆனால், மெல்ல குழுக்கள் ஒன்றுக்கொன்று
மோதிக்கொள்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. அநியாய விலைக்கு விற்கப்படுகின்றன.
பதுக்குபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். எங்கும் தட்டுப்பாடு
நிலவுகிறது. அருகிலிருக்கும் கிராமத்து விவசாயிகள் உதவ மறுக்கிறார்கள். காரிலும் சாலையிலும்
படுத்துறங்குகிறார்கள். சில நாட்களுக்குப் பின் நிலைமை சீரடைந்ததும் அவரவர் கார்களுக்குப்
பாய்ந்தேறி திசைக்கொன்றாய் பறக்கிறார்கள். பந்தயம் போல பாய்கிறார்கள். உறவுகளும் கனவுகளும்
சிதறுகின்றன. அதுகாறும் அவர்களைப் பிணைத்த சாலை இப்போது அனைத்தையும் தனித்தனித் துளிகளாக்குகிறது.
மானுடம் எப்போதும் தற்காலிகமானப் பாவனைகளை உருவாக்கி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க
எத்தனிக்கிறது. மறுகணம் தன் குரூர இயல்புக்குத் திரும்புகிறது. சென்னை பெருவெள்ள நாட்களில்
ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்களெல்லாம் நிலைமை சீரான சின்னாட்களிலேயே அற்ப அரசியல்
நிலைப்பாடுகளுக்காக ஃபேஸ்புக்கில் ரத்தவெறியுடன் அடித்துக்கொண்டதைக் கண்டிருக்கிறேன்.
ஹூலியோ
கொர்த்தசார் பெல்ஜியத்தில் அர்ஜென்டினிய தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். உலகப்போருக்குப்
பின் அவரது பெற்றோர்கள் அர்ஜென்டினாவிற்குத் திரும்பினார்கள். அங்கு கொர்த்தசார் புனைவிலக்கியம்
பயின்று ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பல படைப்புகளை
மொழிபெயர்த்தார். அரசியல் நிலைப்பாட்டினால் அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி
உயர்வுகள் மறுக்கப்பட்டன. பிரான்ஸூக்குப் பெயர்ந்தார். வாழ்வின் பெரும்பகுதி பாரீஸ்
நகரில் கழித்தார். போர்ஹேஸின் புனைவுலகமும், கீட்ஸின் கவிதைகளும் இவரில் ஆதிக்கம் செலுத்தின.
நூல்களுக்குக் கிடைத்த பரிசுத்தொகையை அரசியல் புரட்சிப் போராட்டங்களுக்கு அளித்தார்.
மிகச் சாதாரணமான கதைக்களன்களைக் கொண்டு அசாத்தியமான உணர்வெழுச்சியை உண்டாக்கும் கதைகளைப்
படைத்தார். தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் படைப்புகளை எழுதினார். சர்ரிலியஸத்தின் கூறுகள்
அதிகம் கொண்ட இவரது படைப்புகள் மாயா யதார்த்தவாதம் எனும் வகைமையை நெருங்கிவருபவை. பல
கதைகளின் கட்டுமானத்தில் ஜாஸ் இசையின் வெளிப்பாட்டுத்தன்மையை கைக்கொண்டுள்ளார். ஜாஸ், குத்துச்சண்டை, புகைப்படக்
கலை, பயணங்கள் ஆகியவை இவரது பிறதுறை ஆர்வங்களாக இருந்தன. அசப்பில் சேகுவேராவை நினைவூட்டும்
வசீகர அழகுடன் குறிப்பிடத்தக்க லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தார்.
நூற்றுக்கணக்கான
பாத்திரங்கள் உலவும் இந்தக் கதைவெளியில் எவருக்கும் பெயர் கிடையாது. அவரவர் கார் வகைமைகள்
மற்றும் தொழிலின் பெயராலேயே இப்பெயரிலிகள் விளிக்கப்படுகிறார்கள். கார்கள் தனித்தனி
குகைகளாக உருவகம் கொள்கின்றன. மோட்டார் தொழில்கள் உலகை வென்று கொண்டிருந்த காலகட்டத்தில்
அந்தஸ்தின் அடையாளங்களாக கார்கள் வெறிகொண்டு வாங்கப்பட்டன. உரிமையாளரின் வாழ்க்கைப்
பின்புலத்தைச் சுட்டுவதாக கார்கள் அமைந்தன. பற்றியிருக்கும் ஸ்டீயரிங்கின் இயல்பே மனிதர்களின்
இயல்பாகவும் ஆயிற்று.
உடலிலிருந்து
கெட்ட ஆவியை வெளியேற்றுவதுப் போல கதைகளை வெளியேற்றுகிறேன் என்பது கொர்த்தசாரின் புகழ்மிக்க
வாக்கியங்களுள் ஒன்று. கெட்டிக்காரத்தனமான அறிவுப்பூர்வமான கதைகளுக்கு எதிரான அங்கலாய்ப்பை
தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தவர். எளிமையான கதைக்களத்தின் மீது அசாதாரணத்தன்மை
வந்து மோதும் கதைகளில் தன் ஆழ்மனதின் கனவுத்தன்மையை கதைகளுக்குள் சுதந்திரமாக உலவவிட்டவர்.
கதையோட்டத்தில் எப்போதும் ஒரு லயம் நீடிக்கும்.
விதம்
விதமாய் கிளம்பிவரும் வதந்திகள், தனிநபர்களுக்கு விளைபொருட்களை விற்க மறுக்கும் விவசாயிகள்,
காரணமின்றி கிராமங்களிலிருந்து பறந்து வந்து கார்களின் மீது விழும் கற்கள், தற்காலிகமான ஆம்புலன்ஸாக மாறிய வண்டியில் சிறுவர்கள்
மாட்டும் செஞ்சிலுவை கொடியும், நாற்புறமும் உணர்ச்சிகள் மறைந்து வெறிகொள்ளும் தருணத்தில்
செஞ்சிலுவை கொடி அபத்தமாக அசைவதும், கன்னியாஸ்திரீக்கு ஏற்படும் திடீர் சன்னதம், வாய்ஜால
விற்பனைப்பிரதியாளனிடமிருந்து யுவதியை மீட்டு தன் காதலியாக்கிக்கொள்ளும் எஞ்சினீயரின்
கனவுகளும், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் காரில் ஒரு சிறுமி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருப்பதும்,
பெரியவரின் தற்கொலைக் குறிப்பும் கதையின் மிக நுண்ணிய தருணங்களாக விரிவு கொள்கின்றன.
டிராஃபிக் ஜாமில் காத்திருக்கும் ஒரு அமெரிக்கன் எதனுடனும் பட்டுக்கொள்வதில்லை. ஏதாகிலும்
நிகழ்ந்து நிலைமை உடனே சீரானால் போதும் அவனுக்கு.
3 நிமிடத்திற்குள்
மிகச்சிறந்ததை நல்ல இசைஞன் தந்து விடவேண்டும். இலக்கியத்திற்கும் இது பொருந்தும் என்கிறார்
கொர்த்தசார். கொரானாவிற்கும் இப்படி ஒரு கால எல்லை இருக்குமானால் எத்தனை நன்றாக இருக்கும்?
I need your support so I can keep delivering good content.
Every contribution, however big or small, is so valuable for my literary
attempts. Thanks. Support Good Content
Comments