உறைப்புளி - புதிய நூல்


கிண்டிலில் வெளியான நூல்கள் அடைந்த வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகிறது உறைப்புளி. தொழில் முனைவு, சூழியல், இதழியல், இலக்கியமென என்னுடைய ஆர்வங்கள் செல்லும் துறைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளும், மேடை உரைகளுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இவற்றுக்கான பொதுவான அம்சங்கள் இரண்டு. பெரும்பாலான கட்டுரைகள் தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்தன. இவற்றின்மீது எழுதப்பட்ட நாட்களில் பெருவாரியான வாசிப்பும், விவாதங்களும் நிகழ்ந்தன.
அரங்கசாமி, ஜிவி ஆடியோஸ் அருண், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நரேன் ஆகியோருடனான என்னுடைய தொடர்ச்சியான உரையாடல்கள்தான் இக்கட்டுரைகளில் பிரதிபலிக்கின்றன. தி இந்து தமிழ் திசை நாளிதழின் ஆசிரியர் இலாகாவைச் சேர்ந்த கே. அசோகன், சமஸ், கவிஞர் ஆசை, மண்குதிரை ஜெயகுமார் ஆகியோர் அளித்த ஊக்கம் நினைவுக்கு வருகிறது. துணை நின்ற அனைவருக்கும் என் அன்பு.
இந்நூலினை மெய்ப்பு நோக்கிய தோழி புனிதா கஜேந்திரனுக்கும், கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்த திருக்குறளரசிக்கும், கிண்டில் வடிவத்துக்காகச் செம்மை செய்து கொடுத்த நண்பர் ஸ்ரீனிவாச கோபாலனுக்கும், அட்டகாசமான அட்டைப்படங்களால் என் புத்தகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சகாவு சந்தோஷ் நாராயணனுக்கும், இந்நூலைப் பதிப்பிக்க இருக்கும் முகமறியாப் பதிப்பாளருக்கும் என் நன்றிகள்.
2007- நான் வலையெழுதத் தொடங்கியிருந்தக் காலம் அது. அன்றெல்லாம் சாரு நிவேதிதாவை இழிவு செய்வது பெரும்பான்மை வலைப்பதிவாளர்களின் வழக்கமாக இருந்தது. நானும் அக்கும்பலில் ஒருவனாக இருந்தேன். கலைஞர்களைப் புரிந்துகொள்வதற்கு நம் அறிவு மேலும் விசாலமாக வேண்டியுள்ளது. நாம் மேலும் கனிய வேண்டியுள்ளது. இன்று அவர் ஒரு சூஃபி ஞானி எனும் எண்ணமே என்னுள் ஆழமாக உள்ளது. பதிமூன்றாண்டுகளாக சாருவை அன்றாடம் வாசித்து வருகிறேன். புனைவிலக்கியம் குறித்த என்னுடைய மதிப்பீடுகளும், அவரது ஆர்வங்களும் வெவ்வேறானவை. ஆனால், அவரது எழுத்துக்கள் எனது ரசனையில், சிந்தனையில், எழுத்தில், வாழ்க்கை முறையில் கணிசமானப் பாதிப்புகளை நிகழ்த்தியுள்ளது. தமிழர்களின் முதன்மை ஆர்வங்களான அரசியல், சினிமா, இலக்கியம், இசை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான எழுத்துக்கள் ஏராளமான இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. எதிலும் மேம்போக்கு அல்ல தீவிரத்தன்மையே முன்னகர்வதற்கானப் பாதை என்பதைக் காட்டியிருக்கிறது. தன்னுடைய அர்ப்பணிப்பிற்கும், பண்பாட்டுப் பங்களிப்பிற்கும் உரிய இடம் அவருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை என்கின்ற ஆதங்கம் எனக்கு உண்டு. காலம் கடந்தேனும் அவை நிகழவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
இச்சிறுநூலை சாருநிவேதிதா அவர்களுக்குப் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.
நூலினை வாங்க: https://www.amazon.in/dp/B087PKBZ9T

Comments

Popular Posts