இறக்கும்போது சிரிப்பை விரும்புகிறவர்களுக்கான நூல் - கடலூர் சீனு

பொதுவாக எனக்கும் நகைச்சுவை எனும் உணர்வுக்கும் பாரதூரம். கடலூர் தண்ணி குடிச்ச கோளாறு என்பார் அப்பா. என் போன்றவர் அல்ல அப்பா. தின்னவேலி தண்ணி குடிச்சு வளந்த ஆளு. நீண்ட கால தவத்தின் பிறகு பிறந்தேன் நான். நான் பிறந்து என்னையும் அம்மாவையும் பார்த்தகணம் ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் என படுக்கையை சுற்றி வந்து பாடி ஆடிய ஆசாமி அவர். நான் நேர் எதிர். என் வசம் அருமையான நகைச்சுவை ஒன்று சொல்லப்படுமானால். அதுக்கு என்ன இப்போ என்ற ரீதியில் பேந்த பேந்த பார்த்துக்கொண்டு நிற்பேன். அப்பிடியாக்கொத்த கடலூர் சீனு தி க்ரேட், அவரையே ஒரு பகடி நூல் சிரிக்க வைத்திருக்கிறது என்றால், இட்ஸ் எ லிட்ரரி மிர்ராக்கிள் என்றுதான் சொல்லவேண்டும்.

எனக்குத் தெரியாத பலவற்றில் கிரிக்கெட்கும் ஒன்று. எழுத்தாளர் அபிலாஷ் விமர்சன பீஷ்மர் சுரேஷ் வெங்கடாத்ரி இவர்களின் கிரிக்கெட் பதிவுகள் காணக் கிடைக்கயில் கண்ணீர் மல்குவேன். இருவரும் பேசுவது ஒரே கிரிக்கெட்தானா. இப்படி கிரிக்கெட் தெரியாத கபோதி ஆக்கிட்டேனே. மறுகுவேன். இவர்களும் என்னைப்போலவே இனிமேலாதான் கிரிக்கெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று (இவருக்கு கிரிக்கெட் தெரியும் என நான் நம்பும்) ஆளுமை ஒருவர் சமீபத்தில் என்னை ஆறுதல்படுத்தினார். இதே அறியாமையின் தன்னம்பிக்கையுடன் தூஸ்ரா வாசித்தேன். நல்ல வேளை. விளையாட்டின் கலை சொற்களுடன் அதன் விளக்கமும் பதிவுக்குள்ளேயே இருந்தது. அசோகமித்திரன் சில கிரிக்கெட் அனுபவங்களை வாசிக்கையில் புன்னகை ததும்பும் வண்ணம்

//அவன் பந்தை கல்கத்தாவிலிருந்து ஓடி வந்து கராச்சி நோக்கி வீசுவான், நான் மையமாக தில்லியிலிருந்து அதை எதிர்கொள்வேன்//

இப்படி எழுதித் செல்வார். இந்த தூஸ்ரா பதிவோ இறுதியில் வெடித்து சிரிக்க வைத்து விட்டது.

வாசகர் எழுத்தாளர் என இலக்கியத்தில் இவர்கள் காட்டும் பாவனைகள், ஆடும் போக்கு ஆட்டங்கள் இவைகளை மசான முத்து சும்மா அடிச்சு பேயோட்டுகிறார். இவர் துணைவி பேர் தாட்ஷாயணி. இதை வாசித்த பிறகு பின்னால் தேடித் சென்று வெண் புலி இலக்கியப் பதிவுகளை வாசித்தேன். ( இந்த கட்டுரையை பின்னிணைப்பாக வைத்து அவை முழுவதையும் தொகுக்கும் திருவுளம் கொண்டிருக்கிறேன்). ஒரு வெள்ளைக்கார நாட்டுப்புரக் கதை ஒன்று உண்டு. ஒரு புலி சாகா வரம் வேண்டி தவம் புரிந்ததாம். முன் தோன்றிய கடவுள் . உயிர் கொண்ட எதுவும் மரித்தே தீரும். சிரஞ்சீவி நிலைக்கு ஈடாக வரும் வேறு ஏதேனும் கேள் தருகிறேன் என்று சொன்னாராம். புலி கேட்டதாம். பெருங்கவி கதே அவரது காவியத்தில் என்னை ஒரு பாத்திரமாக்கி விடுங்கள் என்றதாம். இங்கே இப்படி ஒரு புலிக்கு தமிழ் இலக்கியம் சாகாவரம் அருளி இருக்கிறது.

ஈரட்டி அனுபவம், திருடனை பிடித்து பேப்பரில் பேர் வரும் நாளுக்கு தேவிடு காக்கும் அனுபவம், பேருந்து தொடர்வண்டி அதன் மக்கள் மொழி என எல்லாமே எதிர்பாரா நகைச்சுவை தருணம் ஒன்றின் தெரிப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நூதன கேட்ட வார்த்தை வசவுகள். " தாயொளி ட்ரைவராடா நீ. இதுக்கு முன்ன எங்கனா தேவுடியாளுக்கு பல்லு வெளக்குற வேலை பாத்துகிட்டு இருந்தியா" " ஒம்மாள உம் புத்தில ஐயனார் ஓக்க " இப்படி குறைந்தது பல பத்து தனித்துவமான ஏச்சுக்களை நெல்லையில் கேட்டிருக்கிறேன். சொல்லகராதி போல ஒன்று தொகுக்கலாம். அவ்வளவு உண்டு அங்கே. ரொம்ப ஆச்சாரமான நெல்லை எழுத்தாளர்கள் புழங்கும் தமிழ் இலக்கிய வெளி இது. ஆனாச்சாரமான வேறு நெல்லை எழுத்தாளரால் அவை எழுதப்பட நீண்ட காலமாக காத்திருக்கின்றன.

தமில் வகுப்பு குறித்த பகடிப்பதிவு பல நினைவுகளை கிளறி விட்டது. என் அத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் அப்பாவை வரும்போது வாங்கி வர சொல்லி எழுதி தந்த குறிப்பை அப்பா நீண்ட நாள் வைத்திருந்தார்.

கேடு பேட நேடு 1, கேடு பேடாத நேடு 2. இப்படிப் போகும் பட்டியல்.

மொழி, மண், மனிதர்கள், இலக்கியம் குழந்தை குடும்பம் வேலை புகழ்மயக்கம் என அடிப்படையான இவற்றின் பாவனைகளை அசட்டுத்தனங்களை,( உலகின் ஒப்பாரி உள்ளே வந்து விடா வண்ணம், காதவடைத்து உள்ளிருக்கும் இன்றைய சூழலில்), சிரிக்க சிரிக்க வாசிக்க நேர்ந்தது இந்த நாட்களின் இனிய நினைவுகளில் ஒன்று. சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் க்ரிஷ்ணராக வரும் என் டி ராமாராவ் சொல்வார். "இறக்கும்போதும் சிரிப்பை விரும்புகிறவன் நான்" ஒரு ஒரிஜினல் சூப்பர் ஹீரோவுக்கான கச்சிதமான பன்ச் டயலாக். அப்படிப்பட்ட விருப்பம் கொண்ட எளிய ஆசாமிகளும் இருக்கக் கூடும். அவர்களுக்கான நூல். வாழ்த்துக்கள் செல்வா.

 புத்தகத்தை வாங்க: https://www.amazon.in/dp/B086YNSY89

Comments

Admin said…
Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in