சொல் முகம்
ஒரு புக்
க்ளப் ஆரம்பிக்கலாம் எனும் யோசனையை மொழிபெயர்ப்பாளர் நரேன்தான் முதலில் சொன்னார். அமெரிக்காவில்
பல காலம் வாழ்ந்தவர். அங்கே புத்தகச் சங்கங்கள் பலவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டவர்.
ஜெயமோகனின் வாசக நண்பர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி, சென்னை, காரைக்குடி, ஈரோடு உள்ளிட்ட
பல நகரங்களில் மாதாமாதம் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். கோவையிலும் கூடுகைகள் நிகழலலாம்
என்பது நரேனின் எண்ணமாக இருந்தது.
‘கோயம்புத்தூர் புக் க்ளப்’ என்பது இந்தியாவின் புராதன
வாசக அமைப்புகளுள் ஒன்று. 1966-ல் துவங்கி இன்றளவும் மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று
சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிகமும் ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள். இவை
தவிர இலக்கியச் சந்திப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கூடுகைகள் மாதம் தவறாமல் நடந்துகொண்டுதானிருந்தன.
எதிலும்
உடனடியாக சலித்துவிடுவது என்னுடைய இயல்பு. எம்போன்ற மண்குதிரைகளை நம்பி ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டு விரைவில் தேய்ந்தழிந்து
விடக் கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள்.
நான் சுரா துவங்கி நடத்திய காகங்கள் கூட்டத்தொடர்
பற்றி வாசித்திருந்தேன். ஞாநியின் கேணிக்கும் அவ்வப்போது சென்றதுண்டு. ஆகவே யாரெல்லாம்
உறுப்பினராக இருக்கலாம், சந்திப்பின் நோக்கம், எதை வாசிக்கப்போகிறோம், விவாதத்தின்
நெறிமுறைகள், நிகழ்முறை ஆகியவற்றைப் பற்றிய நெறிகள் துல்லியமாக வகுத்துக்கொள்ளும்படி
நரேனிடம் கேட்டுக்கொண்டேன்.
தமிழிலும்,
இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் உள்ள செவ்விலக்கிய நாவல்களை வாசிப்பது, அவரவர் வாசிப்பை தலா பத்து நிமிடங்கள் முன் வைத்து
விவாதிப்பது, படைப்பின் அத்தனை நுட்பங்களையும் கூடுமானவரை அள்ளிக்கொள்ள முயற்சிப்பது,
பல்கோண வாசிப்பின் வழியாகத் தவறவிட்டவற்றை நிரப்பிக்கொள்வது என்றும் தீர்மானமாகியது.
தேர்ந்தெடுக்கப்படும் நூல் முன்னரே அறிவிக்கப்படும். வாசிக்காதவர்கள் கூட்டத்திற்கு
வரக்கூடாது. ஜெயமோகன் ஒருங்கிணைக்கும் கூடுகைகளுக்கென்று ஆகிவந்த விதிகளும் விழுமியங்களும்
கடைப்பிடிக்கப்படவேண்டும் என முடிவாகிற்று. தத்தம் வாசிப்பை கட்டுரையாக்கி ஒரே இணையதளத்தில்
தொகுப்பது பிற்காலத்தில் அந்நூல்களைப் பற்றி தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் என்றும்
முடிவு செய்தோம்.
அதன்படி
சொல்முகம் வாசகர் குழுமம் உருவாகியது. டைனமிக் நடராஜனுக்குச் சொந்தமான தோட்டம் தொண்டாமுத்தூரில்
இருந்தது. அங்கே ஒரு கெஸ்ட் ஹவுஸூம் உண்டு. அங்கு சந்திப்பை நடத்திக்கொள்ள மனமுவந்தார்.
ஓரொரு மாதமும் இறுதி ஞாயிறென்று முடிவாகியது. காலையில் பத்து மணிக்குத் துவங்கி மதியம்
ஒரு மணி வரை. கொறிக்க கடிக்க இனிய தின்பண்டங்களை ஓரொரு மாதமும் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்வது.
மேமாதம் நடந்த முதல் கூட்டத்தில் தொழிலதிபரும் இலக்கிய ஆர்வலருமான டி. பாலசுந்தரம்
கலந்துகொண்டு உலகளவில் புக் ரீடர்ஸ் க்ளப்புகள் எங்ஙனம் செயல்படுகின்றன என துவக்க உரையாற்றினார்.
அதன் பிறகு, கொரானா வீடடங்கு வரை மாதம் தவறாமல் சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
துவக்கம் முதலே 15 முதல் 25 நபர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில்
இருந்து கூட ஒருவர் மாதாமாதம் வந்து கொண்டிருக்கிறார்.
படைப்பு
உருவான சூழல், அதன் வரலாற்றுப் பின்னணி, எழுத்தாளரின் ஆளுமை மற்றும் பிற படைப்புகள் குறித்த குறிப்புகள், இலக்கிய வகைமை,
நுட்பங்கள், நுண்ணிய உள்மடிப்புகள், நாடகீயமான
தருணங்கள், ஆன்மீகமான கேள்விகள், பாத்திர உருமாற்றம், பாத்திரங்களுக்கிடையேயான ஒப்புமைகள்,
நூல் முன் வைக்கும் தரிசனங்கள், விவாதிக்கும் நூலையொட்டி வாசிக்க வேண்டிய துணை நூல்கள்
என ஒரு வைரக்கல்லின் அத்தனைப் பட்டைகளின் வழியாகவும் ஊடறுத்துச் செல்லும் ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்
முயற்சி.
இதுகாறும்
புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால், ஓநாய் குலச் சின்னம், மண்ணும் மனிதரும், மதகுரு,
மீசான் கற்கள், அக்னி நதி, என் பெயர் சிவப்பு, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் உள்ளிட்ட
நாவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்கு கோரா, ஏப்ரலுக்கு கொற்றவை என முடிவு
செய்திருந்தோம். கொரானாவினால் சந்திக்க இயலாமற் போய் விட்டது.
நண்பர்கள்
சந்தித்து நெடுநாட்களாகி விட்டதால் இன்று ஸ்கைப்பில் சந்தித்து உரையாடலாம் என முடிவு
செய்தோம். கொரானா தினங்களில் நண்பர்கள் வாசித்த நூல்களைப் பற்றிய விவாதமாக அமைத்தோம்.
ஜெயமோகனின் புனைவுக்களியாட்டு கதைகள், நாஞ்சில் நாடனின் சங்கிலி பூதத்தான், சுதந்திரத்தின்
நிறம், சுமித்ரா, கங்கை கொண்ட சோழ புரம், புன்னகைக்கும் பிரபஞ்சம், பின் தொடரும் நிழலின்
குரல், தாய் மண் (குட் எர்த்), சம்ஸ்காரா, கதை கேட்கும் சுவர்கள், ஹிஸ்டரி ஆஃப் தி
வேர்ல்டு பை சிக்ஸ் க்ளாஸஸ், ரினாய்சன்ஸ் ஆஃப் இந்தியா, வரப்புகள், நைவேத்யம், வண்ணநிலவன்
கதைகள் என அவரவர் வாசித்த நூல்களைப் பற்றிய அபிப்ராயத்தை 12 பேர் விவாதித்தோம். ஆச்சர்யகரமாக எவ்வித இடையூறுமின்றி விவாதங்கள் துல்லியமான
தொழில்நுட்பத் தரத்துடன் இணைந்திருந்தது. ஒருவர் பேசுகையில் பிறர் தங்களது வீடியோ மற்றும்
ஆடியோக்களை அணைத்து வைக்கும் வழக்கம் இருந்தால் இது போல பயனுள்ள விவாதங்களை மேற்கொள்ள
முடியும்.
சுராவின்
காகங்கள் 77-ல் துவங்கி 83ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. மொத்தம் 88 கூட்டங்கள். ஒருவர்
கட்டுரை வாசிக்க அதன் மேல் பிறர் விவாதங்களை முன்வைக்க எனும் வடிவில். பெரும்பாலான
கூட்டங்களைப் பற்றி அ.கா. பெருமாள் குறிப்பெடுத்து வைத்துள்ளார். காகங்களின் கதை என
அக்குறிப்புகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. இத்தகையச் சந்திப்புகளின் பயன்மதிப்பு என்ன
என்பதை அங்கிருந்து உருவாகி வரும் மதிப்பீடுகளும், படைப்பாளிகளுமே காலத்திற்கு காட்டிச்
செல்கிறார்கள். சொல் முகத்தின் முதல் கூட்டத்தில் தன் அபிப்ராயங்களைத் தயங்கித் தயங்கி
முன் வைத்தவர்கள், உதிரி உதியாக சொற்களை உதித்தவர்கள் பலரும் இன்று தீவிரமாக எழுதத்
துவங்கியுள்ளார்கள் என்பது மகிழ்வளிக்கக் கூடியது.
இலக்கியத்தில் தீவிரம் கொண்ட, கோவையைச் சேர்ந்த எவரும் சொல் முகத்தின் அங்கத்தினராக முடியும். ஆர்வம் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய சுய அறிமுகத்தை இந்த எண்ணிற்கு வாட்ஸாப் செய்து குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்: 7339055954
Comments