ஸ்கார்பியோ

தமிழ்நாட்டிலேயே அதிகம் சம்பாதிக்கும் அரசு ஊழியர்கள் யார் எனக் கேட்டிருந்தேன். நண்பர்களுள் சிலர் மிகச்சரியாக 'டாஸ்மாக் ஊழியர்கள்" எனச் சொல்லி இருந்தார்கள். அவர்களது பொது அறிவினைக் கண்டு வியக்கிறேன்.

கேப்டன் பிராந்தி எனும் கருமாந்திரத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலை ரூ.57/- ஆனால் வடக்குப்பட்டியிலிருந்து வடபழனி வரை விற்பது அறுபது ரூபாய்க்கு. முள்ளங்கிப் பத்தையாய் மூன்று ரூபாய் லாபம். முப்பதாயிரம் பேர் இருக்கும் சாத்தான்குளத்தில் ஐநூறு பாட்டில் விற்கிறது. ஒரு ஐட்டத்திலேயே சுளையாய் ஆயிரத்து ஐநூறு ரூபாய் லாபம்.

கிங்க்பிஷர் பியருக்கு நிர்ணய விலை ரூ.66/- விற்கின்ற விலை ரூ.70/- லாபம் நான்கு ரூபாய். நான் குடியிருக்கும் ராம் நகரில் ஒரு நாளைக்கு ஆயிரம் பியர்கள் விற்பனையாகிறதாம். நான்காயிரம் ரூபாய் லாபம். உதாரணங்கள் போதுமென நினைக்கிறேன். இத்துடன் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள விலைப்பட்டியலை இணைத்துள்ளேன். எல்லா விலையும் 'ரவுண்டு ஆஃப்' செய்து கொள்ளையடிக்க எதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கடையில் சுமார் 117 அயிட்டங்கள் விற்கிறார்கள். எல்லாவற்றிலும் முரட்டு லாபம். குடிக்க வரும் எவனுக்கும் மிச்சச் சில்லறையைக் கேட்டுப் பெறும் அவகாசமும் இல்லை. அவசியமும் இல்லை. சிறு கிராமத்துக் கடையில் வேலை பார்ப்பவன் தினமும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரையும் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். "சென்னையில் டாஸ்மார்க் ஊழியர்கள் ஸ்கார்பியோ கார்களில் வேலைக்கு வருகிறார்கள்" என்று நண்பரொருவர் தகவல் சொன்னார். மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவன் 'ஸ்கார்பியோவில்' வேலைக்கு வருவதில் என்ன தவறு இருக்க முடியும்?!

இவை தவிர பார் உரிமையாளர்களிடம் கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளைகளுக்கும், பக்கத்து ஊர்களில் இருந்து மொத்தமாக வாங்கி விற்க வருபவர்களிடமும் (சட்டப்படி மொத்தமாக விற்க அனுமதி இல்லை) அடிக்கிற பணத்திற்கும் அளவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பத்துமணிக்குத்தான் திறக்கின்றன. ஆனால், விற்பனை அதிகாலை ஆறுமணிக்கே துவங்கி விடுகிறது. இரவு கடையடைக்குமுன் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடைக்காரன் முப்பது நாற்பது பாட்டில்களை வாங்கி வைத்து விடுகிறான். அதிகாலைத் திருப்பள்ளியெழுச்சிக்குப் பின் பக்தர்களுக்கு ஏற்படும் தாகசாந்தியை தணித்தாக வேண்டுமே!

மேற்படி நபர்களுக்கு பான் கார்டு தேவையில்லை. வருமான வரி இல்லை. புரொபஷனல் வரி கிடையாது. குவித்து வைத்திருக்கும் பணத்திற்குக் கணக்குச் சொல்லவும் அவசியம் இல்லை. சமூக வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்கள் ஆச்சே... அவர்களிடம் போய் இதையெல்லாம் கேட்கலாமா?!

Comments

டாஸ்மார்க் ஊழியர்கள் தானே சம்பளம் உயர்த்தப் படவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக பேரணி நடத்தினார்கள்.

டாஸ்மார்க்கில் வேலை வாங்குவதற்கு அவர்கள் செலவு செய்துள்ளதை, இப்படித்தான் வாங்குவார்கள்.

எல்லாம் நம் குடிமக்கள் செய்யும் புண்ணியங்கள்..

வாழ்க ஜனநாயகம்.
இவைமட்டுமில்லாமல் சில குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் விற்பதிலும் இவர்களுக்கு பங்கு உண்டு,
ஒரு பாட்டிலுக்கு இன்செண்டிவ் வீதம் இவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகமும்!? கணக்கில் கொள்ள வேண்டும்.

என்னை போன்ற குடிமகன்களுக்கு இதனால் குடியின் மீதே வெறுப்பு ஏற்படுகிறது.

Popular Posts