செம்மலர், கல்கி மற்றும் நான்

தினமணியை அப்பா மிகவும் நேசித்தார். நேசிக்கிறார். இந்த உலகின் போக்கினை அவர் ஐம்பதாண்டுகாலமாக தினமணி வாயிலாகத்தான் தெரிந்து கொள்கிறார். வீட்டில் வாங்கவும் படிக்கவும் அனுமதி இருக்கிற ஓரே பேப்பர் அதுதான். அப்பாவைத் தவிர வேறு யாரும் புரட்டிக்கூடப் பார்க்கத் தயாராக இல்லாத பேப்பர் என்பதால் அவர் வெளியூர் பயணம் போய்விட்டால் வரும்வரை வராந்தாவில் தூசு ஏறிப்போய் கிடக்கும். வந்தவுடன் முதல் வேலையாக நாள் வாரியாக பேப்பரைப் படிக்கத் துவங்கி விடுவார்.

வார இதழ்களும், பாக்கெட் நாவல்களும் அவருக்கு ரத்தக்கொதிப்பை ஏற்படுத்தவல்லன. 'அவற்றால் சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் யாதொரு பயனும் இல்லை மாறாக அறிவைக் கெடுக்கும்' என்பது அவரது அசைக்க முடியாத அபிப்ராயம். எனவே அவைகளுக்கு எப்போதும் தடா. ஆனால், வீட்டுப்பெண்களோ தினமலருடன் வந்துகொண்டிருந்த கதைமலர், ராணி, தேவி, கண்மணி போன்ற இதழ்களின் தீவிர வாசகிகளாக இருந்தனர். அப்பாவிற்குத் தெரியாமல் அவர்களுக்குக் கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் பணியை நான் செவ்வனே செய்து வந்தேன். கையூட்டாக சர்பத், ரஸ்னா மற்றும் கரும்புச்சாறு வகையராக்களை வாங்கிக் குடிக்க பணம் கொடுப்பார்கள்.

அப்பாவின் நண்பரான சொக்கலிங்கம் ஒரு பணக்கார கம்யூனிஸ்ட். அவரும் எங்களைப் போலவே தீப்பெட்டிக் கம்பெனி நடத்தி வந்தார். கூடுதலாக 'செம்மலர்' இதழின் முகவாண்மையையும் பெற்றிருப்பார் போல, அப்பாவை இம்சை செய்து மாதாமாதம் 'செம்மலர்' வாங்க வைத்து விட்டார். அப்போது குமுதம் சைஸில் வெளி வந்து கொண்டிருந்தது. சிறுவர்களுக்கும் சில பகுதிகள் இருந்ததாக ஞாபகம். பாடப் புத்தகத்தைத் தவிர மீத அனைத்து புத்தகங்களையும் வெறி கொண்டு படித்து வந்த என் பசிக்கு செம்மலரும் இரையாகியது. அதில் இடம்பெற்றிருக்கும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துவிட்டு அவற்றோடு சொந்த 'உல்டாக்களையும்' சேர்த்து பள்ளி 'மாரல் பீரியடில்' சக மாணவர்களுக்குக் கதைகள் சொல்லி இருக்கிறேன்.

கோவையில் என் ஆஸ்தான நாவிதர் ஒரு தமிழறிந்த மலையாளி மற்றும் கம்யூனிஸ்ட். அவரது கடையில் மலையாள மனோரமா, தினத்தந்தியோடு செம்மலரும் வாங்கிப் போட்டிருப்பார். ச்சும்மாவேனும் அவரது கடைக்குப் போய் செம்மலர் படித்துவிட்டு வருவது வழக்கம். அவரும் திடுமென நிறுத்தி விட்டார். ஏனய்யா என்று கேட்டால் 'ரிஷெசன்' என்று சிரிக்கிறார்.

நடப்பு இதழ் செம்மலரில் அடியேனின் வலைப்பதிவு குறித்த பத்திகள் இடம் பெற்றுள்ளது. என் தந்தை கேள்வியுற்றால் மகிழ்வார் என்பதற்காக மொத்த கோவையையும் சலித்து விட்டேன். இதழ்கள் கிடைத்தபாடில்லை. மாதவராஜ் அவர்களிடம் வாங்கி அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டுள்ளேன்.

***

ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழெட்டு வருடங்களுக்கு முன்பு 'கோகுலம் ஆங்கில இதழ்களை' வாங்கத் துவங்கினேன். அறிவு வளர்ந்ததோ இல்லையோ... அனோஜா, பிரதீபா போன்ற இலங்கை வாழ் பேனா நண்பர்களோடு நட்பு நன்றாக வளர்ந்தது.

பரதன் பப்ளிகேஷன்ஸின் இதர வெளீயிடுகளான மங்கையர் மலர், கல்கி போன்றவற்றை வாங்கியதில்லை. லதானந்த் கதைக்காக ஒருமுறையும், உமா சக்தியின் கதைக்காக ஒருமுறையும் கல்கி வாங்கி இருக்கிறேன். இப்போது மூன்றாவது முறையாக... காரணம் அடியேனின் வலைப்பூ குறித்த அறிமுகம் ஒன்று நடப்பு இதழ் கல்கியில் என் வெட்கச் சிரிப்போடு (நன்றி: தாமிரா) வெளியாகி இருக்கிறது.

***

நண்பர்களே தகவலுக்காகப் பகிர்ந்துகொண்டேன். பின்னூட்டத்தில் வாழ்த்துவதைத் தவிர்த்துவிட்டு ஏதேனும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைக்கலாமா என்று யோசியுங்கள். :)

Comments

Unknown said…
செல்வா, கல்கியில் இன்னும் உன் வெட்கச் சிரிப்பை பார்க்கவில்லை. விகடன்.காமில் வெகு விரைவில் குட் ப்ளாக் லிஸ்டில் உன் பெயர் வரப்போவதாக பட்சி சொல்கிறது. நீ அடையப் போகும் உயரத்தை என்னால் இப்போதே மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள்
ஒற்றிடாப் பிழைகள் ஆறு.
தேவையற்ற ஒற்றிட்ட பிழை ஒன்று.

பன்மையில் உள்ளனவற்றுக்கு ஒருமையில் முடித்த பிழை ஒன்று.

செட்டிநாடு பரவாயில்லையா?
Anonymous said…
//பின்னூட்டத்தில் வாழ்த்துவதைத் தவிர்த்துவிட்டு ஏதேனும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைக்கலாமா என்று யோசியுங்கள். :)//

ராமசேனாக்கு பெண்ணிய அமைப்புகள் அனுப்பி வைத்தார்களே அதை அனுப்பவா. ஏதாவது கதை எழுத வசதியாயிருக்கும். :)

அய்யா சாமி புண்ணியமா போகும். உங்க ப்ளாக்கர் கோடுல இருக்கிற "பிங் தேன்கூடு" வோட கோடிங்கை ரிமூவ் பண்ணுங்க. ஒவ்வொரு தடவை பின்னூட்டப் பகுதியை திறப்பதற்குள் உயிரே போயிடுது.
பின்னூட்டத்தில் வாழ்த்துவதைத் தவிர்த்துவிட்டு ஏதேனும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைக்கலாமா என்று யோசியுங்கள். :)

வாழ்த்துக்கள்
(நான்) எப்பவுமே எதையாவது ஒன்னை சொன்னா அதற்கு எதிர்ப்பதமாவே செய்து பழக்கம் உள்ளவள்)
வாழ்த்துக்கள் நாங்க சொல்றோம்,
பரிசை நீங்க அனுப்பி வையுங்க!
Thamira said…
அதே போல நீங்களும் தாமிராவுக்கு நன்றியெல்லாம் சொல்வதை விட்டு விட்டு வேறென்ன செய்யலாம் என்று யோசிக்கலாமே..
RR said…
This comment has been removed by the author.
Karthikeyan G said…
வாழ்த்துக்கள்!!

//ஒவ்வொரு தடவை பின்னூட்டப் பகுதியை திறப்பதற்குள் உயிரே போயிடுது.// Same blood.
Saminathan said…
//பின்னூட்டத்தில் வாழ்த்துவதைத் தவிர்த்துவிட்டு ஏதேனும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைக்கலாமா என்று யோசியுங்கள். :)//

சாருக்கு ஒரு ப்ளாக் லேபிள் பார்சல்....!
Anonymous said…
வாழ்த்து சொல்லவேண்டாம்னு சொன்னதால, சிக்கிம் பம்பர் குலுக்கல் பரிசுச்சீட்டு ஒன்னு அனுப்பியிருக்கேன். பெற்றுக் கொண்டு தகவல் அனுப்பவும்.








என்னது குலுக்கல் தேதியா?












பிப்ரவரி 29, 2009
தம்பி!

செம்மலர் நேற்றே அனுப்பி விட்டேன். பரிசாகத்தான்!
Ramesh said…
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_6139.html

See there...

Congrats!
//அதே போல நீங்களும் தாமிராவுக்கு நன்றியெல்லாம் சொல்வதை விட்டு விட்டு வேறென்ன செய்யலாம் என்று யோசிக்கலாமே..//

அதானே. ஏதேனும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைக்கலாமே. :)

Popular Posts