வனம் புகுதல்
வழக்கத்திற்கு மாறாய்ச் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்தும், அலுப்பூட்டும் அன்றாடங்களிலிருந்தும் தப்பியோட வழியின்றி தவித்திருந்த பொழுதொன்றில் 'ஊட்டிக்குச் சென்றே தீரவேண்டும்' என்ற வேண்டுகோள் (அ) கட்டளையோடு வந்தாள் கேண்டி.
சாத்தான்கள் விடுப்பிலிருந்த தினமொன்றில் ஊட்டிக்குக் கிளம்பினோம். லதானந்த் வீட்டில்தான் ஜாகை. அவரும் அவரது மனைவியும் காட்டிய உபசரிப்பில் பேச்சு வரவில்லை. "உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்" என்ற அவ்வையின் வார்த்தைகளைக் கேண்டியிடம் அடிக்கடிச் சொல்வேன். வாய்க்கும் வார்த்தைக்கும் ஒரு நிமிட இடைவெளி இருந்தால் எதாவது திண்பண்டங்களைத் திணித்துவிடும் பேரன்பு கொண்ட தம்பதியர்.
பாலுமகேந்திரா படங்களில் வரும் வீடுகளைப் போல அழகாய் இருக்கிறது லதானந்தின் வீடு. ஓங்கி உலகளக்கும் ஆவேசத்தோடு வீட்டைச் சுற்றி வானுயர்ந்த மரங்கள். வீட்டு முற்றத்தில் விதம்விதமான பூக்கள். காதுமடல்களில் தேன் நிரப்பும் பறவைகளின் சங்கீதம். காவலுக்கு கென்சி, மாலதி மற்றும் சிலர். ரசனையான வாழ்க்கையென்றால் 'விருந்தாளிகளுக்கு மட்டும்' என்று சமையலறையில் இருந்து பதில் வருகிறது. உண்மைதான். பக்கத்து வீட்டு நாயைச் சிறுத்தை அடித்து இழுத்துச் சென்றுவிட்டதாம். கேள்விப்பட்ட உடனேயே 'கிளம்பிரலாமா?!' என்றாள் கேண்டி.
சாமான்யர்கள் நூழையவே முடியாத அடர்வனங்கள் பலவற்றிற்கு அழைத்துச் சென்றார். பச்சைப்பசேல் புல்வெளிகள், பேரமைதி உறைந்துகிடக்கும் சமவெளிகள், விஸ்வரூப மரங்கள், விதம்விதமாய் பூக்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சிகள். 'அவிலாஞ்சி இயற்கையின் பெருநிசப்தம்' என்றாள் கேண்டி. காடு தனிச்சையானது. அதை எதோடும் ஒப்பிட முடிவதில்லை. அது தரும் அனுபவங்களை முற்றாக எழுத்தில் வடித்துவிடவும் முடிவதில்லை. காட்டிடம் தோற்றுத் திரும்பினோம்.
வழி நெடுக தாவரங்கள், மிருகங்கள் குறித்த வியப்பூட்டும் செய்திகளை வாரி இரைத்தபடி இருந்தார் லதானந்த். இவரளவிற்குத் தெரிந்த வேறு நபர்கள் வனத்துறையில் இருப்பார்களா என்ற மெல்லிய வியப்பு எழும்பிக்கொண்டே இருந்தது. ஒரு உதாரணம்: மஞ்சனத்தியை நினைவூட்டும் ஒருவகை மஞ்சள் நிற பூச்செடிகள் அங்கங்கே வளர்ந்து நிற்கின்றன. விடுதலைக்கு முன் கணவன்மார்களின் வேலை நிமித்தம் ஊட்டியில் குடியேறியிருந்த துரைசாணிமார்கள் தங்களது 'ஹோம் சிக்'-ஐ போக்க இங்கிலாந்தின் செடிகள், மரங்களை வரவழைத்து வீட்டு வாசலில் நட்டார்களாம். பூத்துக்குலுங்கும் செடிகளைப் பார்த்து இங்கிலாந்தில் இருப்பதைப் போல நினைத்துக்கொள்வார்களாம். அப்படி வளர்க்கப்பட்ட செடிகள்தான் பரவி காட்டிற்குள்ளும் வந்துவிட்டது என்றார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் லதானந்த் சிக்கன் பரிமாறினார். தட்டில் விழாமல் சாப்பாட்டு மேஜையில் விழுந்தது. 'இதுலருந்தே நாங் நெம்ப சிந்திக்கிறவன்னு தெரியலயா...' என்றார். லதானந்த் டச்!
Comments
உங்களிடமிருந்து மேலும் அனுபவ பதிவை எதிர்பார்க்கிறேன்!
அன்புடன்
சிங்கை நாதன்
மனிதர்களின் எண்ண அலைகள் காட்டில் குறைந்துக் காணப்படுவதால் அந்த பேரமைதிக் கிட்டுவதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். :)
ஒற்றுப்பிழைகள்
வழியின்றி தவித்திருந்த
காவலுக்கு கென்சி
ஹோம்சிக்கை போக்க
விதம் விதமாய் பூக்கள்
நெடுக தாவரங்கள்
மஞ்சள் நிற பூச்செடி
தேயையற்ற ஒற்று
அடிக்கடிச் சொல்வேன்
தனிச்சையானது அல்ல தன்னிச்சையானது
பகிர்வுக்கு நன்றி நண்பா.
'இதுலருந்தே நாங் நெம்ப சிந்திக்கிறவன்னு தெரியலயா...' என்றார். லதானந்த் டச்!
/
haa haa
nice!