எந்தை

'தவமாய் தவமிருந்து' வெளியான நேரம். அப்போது நான் விகடனில் இருந்தேன். வழக்கமாக விகடனில்தான் சினிமா விமர்சனம் வெளிவரும். ஆனாலும், வியாழன்வரை காத்திருக்காமல் சனிக்கிழமை ஜூனியர்விகடனிலேயே எஸ். ராமகிருஷ்ணன் படத்தைப் புகழ்ந்து எழுதி இருந்தார். மக்கள் சாரை, சாரையாய் படத்தை பார்த்துவிட்டு, தாரை தாரையாய் கண்ணீர் சிந்தினார்கள். விகடன் விமர்சனத்திலோ 'படத்திற்கு மார்க் போடலாம். பாடத்திற்கு?!' என்று கெளரவப்படுத்தி இருந்தார்கள்.

படம் வெளியான வாரத்திலேயே அலுவலக அதிகாரிகளோடு காரில் பயணிக்க நேர்ந்தது. அரசியல், விளையாட்டு, வணிகம், தொழில்நுட்பம் என அரட்டைக் கச்சேரியோடு தொடர்ந்தது பயணம். பேச்சு 'தவமாய் தவமிருந்து' படம் குறித்து துவங்கியது. டிரைவர் உட்பட அனைவரும் படத்தை சிலாகித்துக்கொண்டிருந்தனர். நான் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே விரையும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரில் இருந்த அனைவருமே தியேட்டரில் கண்ணீர் சிந்தியவர்கள்தான் போலும். ஒருவர் படம் பார்த்தபின் ஊருக்குப் போய் அப்பாவைப் பார்த்து வந்தேன் என்றார். மற்றொருவர் இடைவேளையில் அப்பாவுக்கு போன் செய்து பேசினேன் என்றார். இன்னொருவர் ஒரு நாள் முழுக்க அப்பாவை அழைத்துக்கொண்டு பெருநகர் முழுக்க சுற்றினேன் என்றார். நான் அசுவாரசியமாகவே இருந்தேன்.

"யோவ்... நீ என்னய்யா அமைதியா இருக்கே...?! படம் இன்னும் பாக்கலீயா...? என்றார் உயரதிகாரி ஒருவர்.
"இல்லீங்க பாத்துட்டேன்..."
"ஏன் படம் உனக்கு புடிக்கலியா...?!"
"நல்ல படம். அவ்வளவுதான். பெருசா ஒன்னுமில்ல..."
"என்னது பெருசா ஒன்னுமில்லயா... நானே தியேட்டர்ல உக்காந்து அழுதேன்யா..."
"பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல..."

என் வார்த்தைகளின் கடுமை அவர்களை உலுக்கி இருக்க வேண்டும். பின் வெகு நேரத்திற்கு மெளனம் மட்டுமே நிலவியது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து என் ஓரே கதாநாயகன் அப்பாதான். ஏன் இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அப்பா வெற்று வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத கடின உழைப்பாளி. அறத்தை மீறிய செயல்கள் எதையும் செய்தறியா உத்தமர். குடும்பத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும், என் மீதான நிபந்தனைகளற்ற தூய பேரன்பையும் நான் அறிவேன். பதினைந்து வரை அவர் என்னைத் தாங்கினார். அன்றிலிருந்து இதோ இந்த வரிகளை தட்டச்சு செய்யும் நிமிடம் அவரை நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன். தாங்குவேன். என் தகப்பனின் மேன்மையையும், அவரைப் பேண வேண்டும் என்பதையும் எனக்கு இன்னொருவன் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'தவமாய் தவமிருந்து' சமரசங்கள் ஏதுமின்றி மிகுந்த நேர்மையுடன் எடுக்கப்பட்ட உணர்ச்சிக்காவியம் என்பது மட்டும்தான் இன்று வரை என்னுடைய அபிப்ராயமாக இருந்து வருகிறது.

நேற்று 'வாரணம் ஆயிரம்' பார்க்க கேண்டியுடன் சென்றிருந்தேன். படம் முடிந்தவுடன் 'உங்கள் அப்பாவை கொஞ்ச நேரமாவது நினைத்துப்பாருங்கள்' என்று டைட்டில் போட்டார்கள். இந்த டைட்டிலின் மூலம் ஒரு நல்ல படத்தையும், படம் பார்க்க வந்தவர்களையும் கேவலப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன்.

Comments

//பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல..."//

நச்சுன்னு ஒரு கும்மாங்குத்து கொடுத்தது போல் கொடுத்து இருக்கீங்க!!!
நான் இன்னமும் படத்தை பார்க்கவில்லை...

எல்லோரையும் நீங்கள் சொல்வது போல் செல்லிவிட முடியாது... உணர்சிவசபடுபவர்கள் கூட அப்படிபட்ட கூட்டத்தில் இருக்கலாம்... அதற்காக அவர்களை தந்தையை கவனியாதவர்கள் என கூறிவிட முடியாது...
கபீஷ் said…
//. என் தகப்பனின் மேன்மையையும், அவரைப் பேண வேண்டும் என்பதையும் எனக்கு இன்னொருவன் சொல்லித் தெரியவேண்டியதில்லை. //

நச்!!!
selventhiran said…
வாங்க குசும்பன், பரிசல், நாடோடி, கபீஷ்...

விக்கினேஸ்வரன் நீங்களும் தியேட்டரில் கைக்குட்டையை நனைத்தவரா?!
கைக்குட்டை கைநெட்டையெல்லாம் நனைத்தது கிடையாது. :)சாதாரணமாகவே சிலர் உணர்ச்சிவச படுவார்கள் என்றே சொல்கிறேன். குசும்பனுக்கு கும்மாங்குத்துலாம் போதாது. கூடவே வெடியும் சேர்த்து வைங்க... :P

படத்தை விட படத்தில் வரும் 'உன்னைச் சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்'எனும் பாடல் எனை மிகவும் கவர்ந்தது.
//படம் முடிந்தவுடன் 'உங்கள் அப்பாவை கொஞ்ச நேரமாவது நினைத்துப்பாருங்கள்' என்று டைட்டில் போட்டார்கள். இந்த டைட்டிலின் மூலம் ஒரு நல்ல படத்தையும், படம் பார்க்க வந்தவர்களையும் கேவலப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன்.//


இந்த வரிகளில் படத்தின் தரம் முழுவதும் தெரிந்து விட்டது
selventhiran said…
விக்கினேஷ்வரன் அநேகமாக அந்தப் பாடல் தேன்மொழி தாஸால் (என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்ப...) எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்.
ஏன் இந்த கொலைவெறி???
Nithi said…
//பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல..."//

நச்!!
பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல... ///

நீ வார்த்தை வித்தகன்.
எங்கும், எந்த விதமான கலந்துரையாடலிலும் உன் பக்கம் அனைவரையும் திசை திருப்ப உனக்கு தெரியும்.

வாழ்த்துக்கள் செல்வா.
manitharhal said…
ஒரு படத்தை எந்த விதத்தில் எடுப்பது என்பது இயக்குனரின் பார்வை அவர் நாட்டில் உள்ள அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் உன்னைப்போன்ற ஒவ்வொருவருக்கும் தனித்த்னியாக படம் எடுக்கவேண்டும் அவ்ர் எடுத்ததே தவறு என்று சொல்ல உன்க்கு எந்த தகுதியும் கிடையாது வேண்டும் என்றால் நீ ஒரு படம் எடுத்துவிட்டு அதன்பிறகு இதை சொல் அப்போது உனக்கு தெரியும் அந்த வேலை கணிணி முண் உட்கார்ந்து கொண்டு வியாக்கியாணம் பேசுவதுபோல் சுலபமானது இல்லை என்று நீ உனது கண்ணோட்டத்தை மட்டுமே சொல் அதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு.

Popular Posts