செல்வேந்திரனின் ஒரு நாள்
தோராயமாக
காலை 7 மணி வாக்கில் எழுகிறேன். நேரடியாக குளியல். கொரானா ஒழிய வேண்டுமென மனமுருக பிரார்த்தனை.
வேட்டி உடுத்தி எழுத்து மேஜைக்குச் சென்று பத்து மணி வரை ஜெயமோகன் தளம், ஃபேஸ்புக்கில்
அரிய கருத்துக்கள், இன்ஸ்டாவில் லைக்குகள்.
காலை உணவு பத்து மணி வாக்கில். பின் அலுவலகப்
பணிகள். நேரடியாக வாடிக்கையாளரை கண்ணுக்குக் கண் பார்த்து வியாபாரம் செய்வதுதான் என்
தொழில். வீசும் காற்றில் வீசம் பரவும் நாட்களில் சாத்தியமில்லை. ஆகவே வாடிக்கையாளர்கள்,
கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், புரவலர்கள் ஆகியோரை அழைத்துப்
பேசுதல். வாராக்கடன்களைக் கோருதல். ஓரிரு முகவர்கள், வாசகர்களை அழைத்து நாளிதழ் கிடைப்பதில்
ஏதும் சிரமம் உள்ளதா என விசாரித்தல்.
மதிய
விருந்து. சுவற்றுக்கு அப்பால் அறிவொளி நகரில் பசித்திருப்பவர்கள், அடுக்ககத்தில் தெருநாய்க்குப்
பிறந்து கைவிடப்பட்ட குட்டிகளின் அரற்றல் ஆகியவற்றைப் பற்றிய குற்றவுணர்வோடு மூவகைக்
கூட்டுடன் அல்லது சிக்கன் மட்டனுடன். இந்த உலகடங்கு நாட்களிலும் திருக்குறளரசிக்கு
அன்றாடம் மட்டனும் சிக்கனும் மீனும் எப்படி வருகிறதென்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
மதிய
உணவிற்குப் பின் கண்களை சுழட்டிக் கொண்டு வரும். ஆனால் குருநாதா அதிஷாவை நினைத்துக்கொண்டு
எழுத்து மேஜையில் அமர்ந்து வாசிப்பேன். மனம் எதிலும் ஒட்டுவதில்லை. உங்களிடம் சொல்வதற்கென்ன
அத்தனை மானுடர்களும் அழிந்து விடுவோமோ எனும் அச்சம் இருக்கிறது. மாலை மூன்று மணி வாக்கில்
அலுவலக நண்பர்கள், பிற கிளை ஊழியர்களை அழைத்து சந்தை நிலவரங்கள் நீக்கு போக்குகள் குறித்த
உரையாடல்.
மாலையில்
இரண்டு மணி நேரங்கள் ஷட்டில். திருவும் இளவெயினியும் முறையான பயிற்றுனர் வைத்து பேட்மிண்டன்
கற்றுக்கொண்டவர்கள். இந்த வீடடங்கு தினங்களில் பேட்மிண்டன் கற்றுக்கொண்டு அவர்களை விட
வெறித்தனமாகி விட்டேன். ஷட்டில் என் வாழ்க்கையில் ஓர் அங்கமாகி விட்டது. விளையாடி வீடு
திரும்பும்போது ஊரே கூடி உதைத்தது போல உடலில் வலி இருக்கும். மீண்டும் ஒரு வென்னீர்
குளியல். பிள்ளைகள் இருவரையும் குளிப்பாட்டுதல். இளம்பிறையெல்லாம் விளக்கு வைக்கும்
நேரத்தில்தான் பல் விளக்குகிறாள்.
அடுத்த
நான்கு மணி நேரங்களுக்குப் பிள்ளைகளின் சுற்றி வளைப்பு. கூத்தடிப்பு. பத்து மணிக்கு
மேல் எழுத ஆரம்பித்தால் திக்கித் திணறி தடவித் தடவி ஒரு மணி நேரம் எழுதுவேன். பிட்டியை
ஓரிடத்தில் இருத்தி காவியம் படைப்பதெல்லாம் எவ்ளோ பெரிய காரியங்கள். அப்படியும் இந்தத்
தற்சிறை நாட்களில் இரண்டு புத்தகங்கள் எழுதி விட்டேன். அடுத்த இரண்டு மணி நேரங்கள்
வாசிப்பேன். மேற்படி இரு காரியங்களுக்கு மத்தியில் எட்டு தடவை உச்சா போவேன். பத்து
தடவை தண்ணீர் குடிப்பேன்.
கரங்கள் செல்போனை எடுத்து திவ்யா துரைசாமியைப் பாரேன் பாரேன்
எனத் துடிக்கும். பத்தாண்டுகளுக்கு முன் ஸ்டீவர்ட் என முடியும் அல்லது துவங்கும் பெயர்
கொண்ட வெள்ளை நடிகைகள்தான் இப்படி பாடாய்ப் படுத்தினார்கள். இப்போது திவ்யாக்களின்
சீசன். திவ் துரை, திவ் திராவிடமணி, திவ் பிரவீன், திவ் பார்த்தா. நடுநிசியில் ஜெயமோகன்
கடை திறந்திருக்கும். எட்டிப் பார்த்துவிட்டு யூ ட்யூபுக்குள் போய் பவா அல்லது எஸ்ரா
அல்லது திருச்சி கல்யாணராமன். ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களுக்குள் கனவு.
ஒரு நாளாவது
பாத்திரம் கழுவி வீடு துடைத்துக் கொடுக்கலாமென நினைப்பேன். இதுவே வாடிக்கையாகி விட்டால்.
நானெல்லாம் ஆணியத்திற்குத் தாலி கட்டிக்கொண்டவன். நான் பாத்திரம் விளக்குகிறேன் என்பதறிந்தால்
ஆமீரகத்திலிருக்கும் ஆசிப் மீரானுக்கு திட்டுமுட்டு அடிக்கும்.
சினிமாவோ
அல்லது வெப் சீரிஸோ எனக்குக் கட்டுப்படியாவதில்லை. முக்கி முக்கி பசி, நாலு வேலி நிலம்,
சத்யா, செஃப் ஆகிய படங்களைப் பார்த்தேன். பக்குரா முபியில் என்னை விட முக்கியது. தூக்கி
போட்டுவிட்டேன். பின் தொடரும் நிழலின் குரல், அபிப்ராயசிந்தாமணி, புன்னகைக்கும் பிரபஞ்சம்,
இன்றைய காந்தி, காயத்ரி, இந்தக் கதையை சரியாக சொல்வோம் ஆகிய நூல்களை வாசித்தேன். புத்துயிர்ப்பு
பாதியில் கிடக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நடந்த ஜாதிக் கலவரங்கள்
குறித்த ஆய்வுரைகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள், நூல்கள் என இணையத்தில் மிக மிக விரிவாக
வாசித்தேன்.
நல்லவை:
வீட்டில்
ராஜஸ்தான் பத்திரிகா உள்பட கோவையில் கிடைக்கும் அனைத்து நாளிதழ்களும் வாங்கப்படுகிறது.
திருக்குறளரசி தினமும் எட்டு நாளிதழ் வாசிப்பவள். நானும் துட்டு போகிறதேயென்று ஒரே
செய்தியை எட்டு கோணங்களில் வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தனக்கிணை
இல்லாத தி ஹிண்டு ஆங்கிலத்துடன் செய்திப்பசியை நிறுத்திக்கொண்டு விட்டேன். தொலைக்காட்சியா?
அது எப்படி இருக்கும்.
மாவீரன்
எடப்பாடியார் வீடடைடா மரமண்டை என உத்தரவிடும்போது எடை 73. இப்போது 69. அளவாய் உண்டு,
அதிகமாக விளையாடியதன் வினைப்பயன். ஜெய் அதிஷா குருராயா.
போன்
பண்ணினால் எடுக்க மாட்டான் எனும் அவப்பெயர் இருந்தது. அழைக்கும் நண்பர்களிடம் ஆற அமர
பேசுகிறேன். வேலை முடித்து வீடு திரும்பிய பின் எரிந்து எரிந்து விழுவேன். எப்படியும்
ஒரு சண்டை வரும். இப்போதெல்லாம் சிரித்த முகமும் சீதேவியுமாக இருக்கிறேன். வாட்ஸாப்
கிடையாதென்பதால் மெண்டல்களின் தாக்குதல் இன்றி முன்னூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.
அல்லவை:
வீட்டிலிருப்பவர்
தவிர பிறிதொரு மானுட முகத்தைப் பார்த்து இருபது நாட்களாகிறது. வெளிவேலைகள் எல்லாம்
திருக்குறள்தான். அபார்ட்மெண்டுக்குள்ளேயே எனக்கு ஆர்ப்பாட்டமான நட்பு வட்டம் உண்டு.
யாரும் அன்னந்தண்ணி புழங்காமல் இருப்பது ஏக்கமளிக்கிறது.
இன்ஸ்டாகிராமில்
நடிகைகளின் வாழ்க்கைமுறையைப் பார்த்து வயிறெரியும் புது வழக்கம் ஒன்று உருவாகியுள்ளது.
வீடென்ன, காரென்ன, தோட்டமென்ன, வீட்டுக்குள்ளே ஜிம்மென்ன, ஜிம்மியென்ன. ஒரு படம் நடித்தவரெல்லாம்
கூட. சரி வேண்டாம்.
மேனாள்
தோழியர்கள் ஏதோ போப்பாண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்பது போல அர்த்தராத்திரிகளில் அனுப்பும்
குறுஞ்செய்திகளுக்கெல்லாம் நான் வீட்டம்மனிடம் முழந்தாளிட்டு விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
ஏம்மா மனுஷனுக்கு ஒரு கொரானா பத்தாதாம்மா?
திட்டங்கள்:
தமிழகத்தில்
கிறித்தவம் வந்த கதையும் வளர்ந்த கதையும் குறித்து துப்புரவாக வாசிக்க வேண்டும். கோரா,
கொற்றவை, புத்துயிர்ப்பு ஆகிய மூன்றும் அடுத்த முப்பது நாட்களுக்குள் முடித்தாக வேண்டும்.
சொல்முகத்திற்குக் கொடுத்த சத்தியம் அப்படி. நாஞ்சில் பேரன் சித்தார்த் மகாபாரதம் பார்க்கிறான்.
அவனுக்கு முன்பு அவற்றைப் பார்த்தாக வேண்டும். ஜெயமோகனின் புனைவுக்களியாட்டு கதைகள்,
சாருவின் பூச்சி தொடர் கட்டுரைகள், அரூ அறிவியல் புனை கதைகள், அயோத்திதாசர், கோகுல்
பட்டியலிட்டுள்ள படங்களில் இயன்றவை, ஓபரா, கீதை உரை என சில திட்டங்கள் கழுத்திற்கு
உள்ளது. எழுதுவதற்கான திட்டங்கள் யோசனை சும்மா மஞ்சு வாங்குதாம் ரகங்கள்.
கையிருப்பு
தீரும் மட்டும் கவலை இல்லை.
Comments