பக்கத்து இலைக்கு பாயாசம்

மாவட்ட நூலகரை, சந்தித்து ஒரு ஆர்டர் வாங்க வேண்டிய வேலை. தேவையான கோப்புகளை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். வெறிச்சோடி போயிருந்த அலுவலகம்தான் என்றாலும் அது அரசு அலுவலகம் ஆச்சே...! லேசில் சுவாமி தரிசனம் கிடைக்குமா என்ன?

ஹெட் கிளார்க் என்னும் துவாரபாலகரை கவனிக்காவிட்டால் சுவாமி தரிசனம் ஆகாது என்பது தெரிந்தும் ஒரு நப்பாசையில் எனது பிரஸ் அடையாள அட்டையை காண்பித்தேன். உலகத்திலேயே படு அலட்சியமான ஒரு பார்வை பார்த்துவிட்டு காத்திருக்க சொன்னார். அரசு அலுவலகங்களில் காலதாமதம் தவிர்க்க முடியாதது என்பதால் கையோடு கொண்டு போயிருந்த 'எட்டுத் திக்கும் மதயானை'யை படிக்க ஆரம்பித்தேன். மாவட்ட நூலகர் அவரது அறைக்குள்ளே தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்தது அவரது தொலைபேசி உரையாடல். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய தலைவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ..?!

பொறுமை திவாலாகி பலமணி நேரம் கழித்தபின் உள்ளே வரச்சொன்னவர் எனது சுய அறிமுகம் குறித்த எந்த கவலையும் இல்லாமல் மேஜையில் இருந்த தமிழன் எக்ஸ்பிரஸை புரட்டிக்கொண்டிருந்தார். நான் பேசி முடித்ததும் இன்று முடிக்க வேண்டிய பணிகள் (?!) அதிகமாக இருப்பதால் நாளை வந்து பாருங்களேன் என்றார். 'மிக்க நன்றி' என அலுவலகம் கற்றுத் தந்த புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்தேன். வெளியே ஒரு பெண் ஊழியர் ஹெட்கிளார்க்கிடம் கணபதி சில்க்ஸில் எடுத்த காட்டன் புடவையை காட்டி அபிப்ராயம் கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொரு மேஜையாளரிடம் ஒரு இன்ஸீரன்ஸ் ஏஜெண்ட் பாலிசிக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். இன்னொரு மேஜை செல்போனை நோண்டிக்கொண்டிருந்தது. கடைசி மேஜையோ "ஸ்டென்சில் இல்லைங்க... அதான் லேட்டுங்க..." என யாரிடமோ போனில் கதறிக்கொண்டிருந்தது. வாழ்க.... வளமுடன்..!

மறுநாள் காலை, கொஞ்சம் நன்றாக உடுத்திக்கொண்டு, கோப்புகளோடு ' ஊருக்கு நல்லது சொல்வேன்' எடுத்துக்கொண்டு கிளம்பினேன். தெருமுக்கில் இருக்கும் பாய் கடையில் மூன்று வெள்ளைக்கவர்கள் வாங்கினேன். "யாருக்கு ஓய் கல்யாணம்?" என்றார் பாய். "கல்யாணம் இல்லை பாய்... ஆனாலும் மொய் எழுத வேண்டி வரும்" என்றேன். அலுவலகத்தில் எனக்கு முன்பாகவே சிலர் காத்திருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்ததில் அவர்கள் நூலகர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கட்டிட, மர, மின்சார வேலைகளை காண்டிராக்ட் எடுத்தவர்கள், அது தொடர்பாக அவரை சந்திக்க வந்திருக்கின்றனர் என்பது தெரிந்தது. மரக்கதவு, ஜன்னல்கள் குறித்த விசாரணைகளில் படுதீவிரமாக இருந்தார் ஹெட்கிளார்க்.

முதல் ஆளாக உள்ளே வரச்சொன்னார்கள். வணக்கம் சொல்லி அமர்ந்தேன். பெயர், படிப்பு, சம்பளம், எந்த ஊர் என பரஸ்பரம் இருவருக்கும் பிரயோசனமில்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர் திடீரென குரலைத் தாழ்த்தி "தம்பி சிறு வயசு.. அதனால உங்களுக்குத் தெரியல... கவர்மெண்டு கிளார்க்னாலே நூறு, இருநூறு எதிர்பார்க்குறவய்ங்கப்பா... நீ ஹெட்ட கவனிச்சா உடனே நடக்கிற வேலைக்கி, ரெண்டு நாளா அலையிற... சரி நான் ஆர்டர் கொடுத்துடறேன் பாவம் அந்த ஹெட்ட கொஞ்சம் கவனிச்சுருப்பா..." என்றார். அடடே என்ன அற்புதமான மனிதர்..! தனக்கு எதுவும் கேட்டு டிமாண்ட் பண்ணாமல் அடுத்தவனுக்கு ஏதாவது கிடைக்கட்டும்னு நிணைக்கிறாரே பெருந்தன்மையான மனுஷன்னு ஆர்டரை வாங்கிட்டு வெளியே வந்தேன். துவாரபாலகரை (அதாங்க ஹெட் கிளார்க்) நெருங்கி விபரம் சொல்லி கவனித்தேன். என்னைக் கொஞ்சம் குனியச் சொன்ன ஹெட்கிளார்க் என் காதோரம் சொன்னார் "தம்பி டி.எல்.ஓவை தனியா, பெருசா கவனிச்சுடுங்க... அடுத்த வருஷமும் வரணும்ல..."

அடங்கொக்காமக்கா...! இதுக்கு எங்க ஊர்ல "பக்கத்து இலைக்கு பாயாசம்னு" பேருடான்னு... விதியை நொந்தபடி விஜிலென்சுக்கு போனை போட்டேன். ஏதோ நம்மால முடிஞ்ச கவனிப்பு...!

Comments

selventhiran said…
நண்பர்களே நான் சிறுகதை என்றுதான் லேபிள் போட்டாக வேண்டிய அவசியம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நிணைக்கிறேன்.
அப்போ இது சிறுகதையில்லையா.
நிஜமா:)))
நீங்கள் சிறுகதை என்று லேபில் போட்டாலும், நடைமுறையில் உள்ளவற்றைத்தானே சொல்லியிருக்கீர். உண்மைச் சம்பவம்னு சொல்றதுக்கு press காரவுகளே பயந்தா எங்கள மாதிரி பொதுசனம் என்ன பண்ணும் ? :))

//நிணைக்கிறேன்//

ரெண்டு சுழியா, மூனு சுழியா ?
Voice on Wings said…
'சிறுகதை' நல்லா இருக்கு :)
Boston Bala said…
ஏதோ கதை விடறீங்கன்னு நெனச்சேன் ;)
-L-L-D-a-s-u said…
முதல் கமெண்ட் பன்ஞ்.
"வேண்டிய அவசியம் "
வாழ்க பாரதம்.
Anonymous said…
சிவாஜி படத்தில் இது போன்று வரும் காட்சி உண்மை தானா? ஒரு வேலை அரசாங்கம் கொடுக்கும் ஊதியம் கட்டுபடியாகவிலையோ?
*********************************
விஜிலென்சுக்கு போனை போட்டேன். ஏதோ நம்மால முடிஞ்ச கவனிப்பு...!
*********************************

ஒரு போன் கால் வேஸ்ட்டு.

நம்ப நண்பர் கூட வட்டார போக்குவரத்து அலுவலகத்துல வேல பாக்குறாரு அங்க நடக்குறத கேட்கிறப்ப கடவுளால கூட இந்த நாட்டை காப்பாத்த முடியாதுன்னு தான் தோனும்.
Chandravathanaa said…
சிறுகதை போன்ற சுவாரஸ்யம் ஒரு புறமும், இதுதான் நிலை என்ற நயம் இன்னொரு புறமுமாய்...
பதியப் பட வேண்டிய பதிவு.
அது என்னவோ அவுங்க பிறப்புரிமை மாதிரியே நினைச்சிக்கிட்டு கையூட்டு கேக்குறாங்க.

பெற்றோர்களால் நிச்சயித்து முறைப்படி நடைப்பெற்ற ஒரு திருமணத்தை பதிவு செய்ய போனால், எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து முடித்து அலுலரிடம் சமர்ப்பிக்கும் வேளையில் எங்கிருந்தோ ஒரு பெண்மணி (கடைநிலை ஊழியர்) வந்து 'எல்லா சர்டிப்பிகேட்டும் சரியா இருக்கான்னு' ஒரு பார்வை பாத்துட்டு எங்கள் பக்கம் திரும்பி 'பதிவு கட்டணம் : 15 ரூபாய், அய்யாவுக்கு 300 ரூபாய்' என சொன்னாரே பாக்கனும்.

அவரு கழட்டுன கழுட்டுக்கு 300 ரூபாய் குறச்சல் தான்னு நினைச்சுக்கிட்டேன்
உண்மையா? கதையா? என்று கேட்க நினைத்தாலும், தேவையில்லை என்று சமாதனம் அடைந்தேன். :-)

உண்மை (க் கதை) தானே?? ;-)
Jazeela said…
உங்க அறிமுகத்தில் முன்னனி பத்திரிகையில் வேலை செய்வதாக எழுதியிருந்தீர்கள். உங்கள் பதிவுகளின் மூலம் ஆ.வி. என்று நினைக்கிறேன். இந்த மாதிரி விஷயங்களை அம்பலத்திற்கு கொண்டு வந்தால் இப்படிப்பட்டவர்கள் திருந்த வாய்ப்புள்ளதே? திரைப்படத்தில் தட்டி கேட்பவர்கள் கதாநாயகர்களாகிறார்கள். அப்படியாக ஒரு முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதானே? வலைப்பதிவிலாவது சிறுகதை என்று போடாமல் அனுபவம்/ நிகழ்வுகளாக தைரியமாக போட்டிருக்கலாம்.
theevu said…
ஆவி யில் கைலைட் என்று ஒரு பக்கம் போடுகிறார்களே அது விளம்பரமா? அல்லது செய்தியா?
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

செல்வேந்திரன் நன்றாகவே எழுதுகிறீர்கள்.டிப்பார்ட்மென்ரை மாற்றுங்கள்.
selventhiran said…
சதங்கா: தொழில் பிரஸ் என்றாலும் நானும் உங்களைப் போன்ற மிஸ்டர். பொதுஜனம்தானே? உங்களது இரண்டாவது கேள்வியை தமிழ் தொட்ட ஒருவரிடம் கேட்டிருக்கிறேன் விரைவில் பதில் வரும்.

விக்னேஷ்: அரசாங்கத்திற்குதான் கட்டுபடியாகவில்லை என்று புதிய நியமனங்கள் செய்வதில்லை.

பிரேம்குமார்: கல்யாண வீட்டுக்காரவுகளுக்கு இதெல்லாம் ஒரு காசான்னு அந்தம்மா நெணைச்சுருக்குமோ?

ஜெஸிலா: உங்க கேள்விக்கு தனிமடலில் ஒரு பதிலனுப்பலாம் என்று இருக்கிறேன்..
மீண்டும் சென்றால் இவற்றை ஒலிப்பதிவு செய்து , ஒலிப்பதிவாகப் போடுங்கள்.
இது உண்மைக் கதை.

Popular Posts