பதிவுலக சிங்கங்களே போட்டிக்குத் தயாராகுங்கள்...!

பதிவராகி இன்னும் ஒரு போட்டிகூட நடத்தி, பரிசு வழங்கவில்லை என்றால் அது சமஸ்தானத்துக்கே அவமானம் என என் மதியுக மந்திரி மன்றாடியதால், என்னருமை பதிவர்களே உங்களது திறமைக்கு ஒரு சவால். கீழ்காணும் இந்த எளிய திருக்குறளுக்கான விளக்கத்தை மண் மணக்க அவரவர் வட்டார மொழி வழக்கியலில் பின்னுட்டமாக இடுங்கள். சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் என எந்த தமிழை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆனால் மறக்காமல் தங்களது ஊரையும், மாவட்டத்தையும் பின்னுட்டத்தில் தெரியப்படுத்திவிடுங்கள். தேர்வாகும் பின்னுட்டத்திற்கு பரிசு வீடு தேடி வரும். களத்துல குதிங்கப்பு....

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பின்குறிப்பு:
எக்காரணம் கொண்டும் கையூட்டு பெற மாட்டாது.

Comments

கொஞ்சம் பொருங்கள். . . .

பதில் சொல்ல கடைசி தேதி என்ன. . . . ?
இம்சை said…
solluga sollir payanudaya sollarka
sollir payanilach soll.
Anonymous said…
மொதச்சிங்கமா குதிச்சிறேனப்பு!
selventhiran said…
கடைசி தேதி: வரும் ஞாயிறு (29-07-07) நள்ளிரவு 12 மணி வரை (இந்திய நேரப்படி) - சமஸ்தானத்தின் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் எக்காரணம் கொண்டும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படமாட்டாது என மகாராணியார் முரசறைந்துள்ளார். எனவே ஓரேயொரு பரிசு மட்டுமே வழங்கப்படும் என்பதை அறிவித்துக்கொள்கிறேன். போட்டி முடிவுகளில் அதிருப்தி அடைந்து மூத்த பதிவர்களை பஞ்சாயத்திற்கு அழைத்து வரக்கூடாது எனப் போட்டியாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எல்லோரும் பலன் தரக்கூடிய அல்லது நன்மை தரக்கூடிய சொர்களையே சொல்ல வேண்டும்.
பலன் இல்லாத சொற்களை சொல்லக் கூடாது.

உதாரணத்துக்கு

ஒரு பதிவு எழுதுறோம்னு வச்சுக்குங்க அந்த பதிவு மத்தவங்களுக்கு உபயோகமானதா பலன் தரக்கூடியதா இருக்கனும்
உதாரணம் : http://birund.blogspot.com/2007/05/blog-post_09.html

பலன் இல்லாத பதிவுகளை யாரும் எழுதக்கூடாது.
உதாரணம் : (எதுக்குப்பா வம்பு எதயாவது உதாரணமா கொடுத்து செல்வேந்திரன் கிட்ட அடி வாங்க விரும்பல)

அதே போல் பின்னூட்டம் போடும் போதும் பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டமே போடவேண்டும்,

பதிவுக்கு பலன் இல்லாத பின்னூட்டங்களை போடக்கூடாது
உதாரணம்: காப்லாக் டாட் காம்

ஊர் : ராஜபாட்டை
மாவட்டம் : தமிழ்மனம்

டக்குன்னு தோனிச்சு போட்டுட்டேன்.

தஞ்சை மாவட்ட பானியில ஒன்னு போடுறேன் அப்புறமா . . . . .
மேட்டரு இன்னான்னு சுகுரா சொல்லிடு - இல்லாங்காட்டி
அப்பாலிக்கா வேலைக்காவாது.


ஊர் : மடிப்பாக்கம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
வட்டாரம் : சிங்காரச் சென்னை
Anonymous said…
ஒரு பதிவர் ஒரு கமெண்டு தான் போடலாம் என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள்
ங்ங்ங்கேகேகே...:(

விலாசம்
திருவள்ளூவர்
c/o மு.கருனாநிதி
ஆழ் கடல்
விவேகானந்தர் பாறை அருகில்
கண்ணியா குமரி மாவட்டம்
ஆகா மண்ணிக்க வேண்டுகிறேன் செல்வேந்திரன், நீங்க வச்ச அழைப்பை பார்க்காமல் போட்ட கமெண்ட் அது!

யோசிச்சு மெதுவாக இன்னொரு முறை வருகிறேன்.

மண்ணிக்கவும் :(
மதுரையில் திருக்குறள் கிடைக்காததற்கும் இங்கு போட்டி நடத்துவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? :-))
அழைப்புக்கு நன்றி செல்வேந்திரன்.
இப்ப நம்ம திருவள்ளுவர் என்னா சொல்கிறார் என்றால்

சும்மா ஓல பாய்ல ஓனானை விட்ட மாதிரி சும்மா லொட லொட லொடன்னு கத்திக்கிட்டு இருக்காத, ஒன்னு சொன்னாலும் சும்மா நச்சுன்னு சொல்லு அதுவும் மத்தவங்களுக்கு யூச் ஆவுற மாதிரி சொல்லுகிறார்.
selventhiran said…
"திருக்குறளை கேலி செய்யும் உள்நோக்கம்.. உடனே அழிக்காவிட்டால் ---யை பிதுக்கி விடுவேன்" என அணானியாய் வந்து மிரட்டல் விட்ட அன்பர் தமது முகவரியை தெரியப்படுத்தினால் கடந்த வார சிறுவர்மலரை அன்பளிப்பாக அனுப்பிவைக்கிறேன். (பி.கு: அது என்னடா அத போய் பிதுக்குவேன்ற...?! கழுதை வாயா!)
Anonymous said…
எல்லாருக்கும் பிரயோஜனமா இருக்கிறத மட்டுந் தேன் பேசணும். அப்பிடி இல்லங்கி ஒந்நும் பேசாத இருக்குதோ நல்லோ.

ஊர் : மார்த்தாண்டம்
மாவட்டம் : கன்னியாகுமரி
Anonymous said…
அழைப்பிற்கு மிக்க நன்றி...பதிலை சீக்கிரம் அனுப்பி வைக்கின்றேன் :)
நீ சொன்னா அது நடந்தாகணும்... இல்லேன்னா நீ சொல்லாத...அது..!

தல

நான் சொன்னா அது நடக்கும். அப்படி நடக்கலேன்னா நான் சொல்ல மாட்டேன். ஹா..ஹா..!

சூப்பர்ஸ்டார்

யார் யார் ஸ்டைல்ல சொல்லணுமோ அப்படி சொல்லிக்குங்க...
"னுங்க.. நான் ஒண்ணு சொல்றேன், கேக்கறீங்களா..?"

"சொல்லு அம்மணி.. கேக்காம இருப்பனா என்ன?"

"ஆயிரந்தேன் இருந்தாலும் நீங்க பொன்னுச்சாமி ஆயி, அப்பனப் பத்தி தப்பா பேசியிருக்கக் கூடாதுங்க.."

"என்ன பண்ணச் சொல்ற நீ? காச வாங்கிப் போட்டு, இன்னும் வட்டிய மட்டும் கட்டிக்கிட்டு இருக்கான். அசல எப்படா கட்டுவனு கேட்டா, அறுவட முடியட்டும். அசலக் கடறனு சொல்றான்..."

"இருக்கட்டுமுங்க. அதுக்காக அவன் அப்பனாத்தாளப் பத்தி நீங்க அந்த வார்த்த சொல்லியிருக்கக் கூடாதுங்க. அவுக என்ன செய்வாக.. பாவம். பெருசுங்க மனசு வருத்தப்படற மாரி சொல்லப்படாதுங்க. நமக்கும் ரெண்டு புள்ளங்க இருக்கு. அவுககிட்ட ஆராவது அப்படி வார்த்த வுட்டா நமக்கு பொறுக்குமாங்க? கொட்டின நெல்ல அள்ளிப்புடலாங்க. ஆனா சொன்ன சொல்ல அள்ள முடியுங்களா?"

"சரியாத்தா. இப்ப என்ன பண்ணச் சொல்ற என்ன..?"

"வூட்டுல அவன் இல்லாத நேரம் பாத்து, பெருசுங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்துருங்க. அப்ப தான் அவுக மனசு கொஞ்சமாவது ஆறும்"

"நான் போயி அவுக கால்ல வுளுந்து மன்னிப்பு கேக்கணுமா? ஏண்டி ஒனக்கு ஏதாவது புத்தி, கித்தி கெட்டுப் போச்சா..? என்னை என்ன ரோசம் மானம் இல்லாதவனு நெனச்சிட்டியா?"

"பாத்தீங்களா..? அவங்கள திட்டறதுக்கும், கேவலமாப் பேசற்துக்கும் வார்த்த வுட்ட உங்களுக்கு, நல்ல வார்த்த சொல்லி, அவுக மனசக் குளிர வெக்கோணுமுன்னு தோணல பாத்தீங்களா? அப்படி ஒரு கெட்ட வார்த்த எதுக்குங்க சொல்லோணும்? நல்ல வார்த்த மட்டும் பேசுனா என்னங்க..?

"புரியுது பொன்னாத்தா.இப்போவே அவுக வூட்டுக்குப் போயாறேன்.."

***

ஊர் : பவானி.
மாவட்டம் : ஈரோடு.
மொழி : கொங்குச் செந்தமிழ்.
Boston Bala said…
FWIW ASL என்று கேட்டால் GR8; Coz, KISS.

ஊர் : இணையம்
மாவட்டம் : அரட்டை
வட்டாரம் : IM
Anonymous said…
எலே! நீ சொல்லுத சொல்லு, நாலு பேருக்கு பெரோசனமா இருக்கணும்ல, அப்புடி இல்லைன்னா சொல்லாதலே கோட்டிக்காரா!

தின்னவேலி, தின்னவேலி ஜில்லா.
"சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காகப் பேசுகிறோம்..எந்த நோக்கம் நிறைவேறுவதற்காகப் பேசுகிறோம் என்ற் வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சைக் கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப்போவதில்லை.. அதனால் அமைதியாக இருங்கள்"

- சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார்..

"மொக்கை பதிவுகளால் எந்தப் பிரயோசனமும் யாருக்கும் இல்லை.. எனவே மொக்கைப் பதிவுகளைத் தவிருங்கள்..
"- ஒரு சீரியஸ் வலைப்பதிவர்

அன்புடன்
சீமாச்சு
SurveySan said…
"டெல் யூஸ்புல் வேர்ட்ஸ் ஒன்லி!"

திருக்குறளோட குட்டியா, தங்கிலீஷ்ல மேட்டரு சூப்பரா வருதே?

வாட் இஸ் த நெக்ஸ்ட் குரலு?
Yogi said…
சொன்னா எதாவது உருப்படியாச் சொல்லுங்கப்பு .. தேவையில்லாதத ஏன் சொல்றீக ?

(கொஞ்சம் இழுத்து பருத்திவீரன் ஸ்டைலில் சொல்லவும் :) )

எங்கூரு : இராமநாதபுரம்
Jazeela said…
எல பைத்தியார பயல, அவியக்கிட்ட சொல்லும் போது தேவ உள்ளத மட்டும் பேசுல. கோட்டிக்கார பய மாதிரி தேவயில்லாதத பேசி அவிய மனச கஸ்டப்படுத்திடாதல. நாம சொல்ற விசயம் பிரயோசனமா உண்டான்னு பாருல. அரப்படிச்சவ! சும்மா ஏம்ல தொணத்தொணன்னு தேவை இல்லாதத பேசிக்கிட்டிருக்கா?

ஊர்: உடன்குடி
மாவட்டம்: தூத்துக்குடி
Anonymous said…
எலே ஆக்கங்கெட்ட மூதிகளா!

சொல்லீட்டே இருக்கேன், எருமமாட்டு மேல மழ பேஞ்சமாரி உக்காந்திருக்கானுக பாரேன்!

தம்பி சொல்லுதத, எல்லாப் பயலுவளும் காதுல வாங்கி அதும்படி நடந்தாத்தான்லே பெரோசனம்.

அதான் அம்புட்டையும் செத்த சவம் மாரி இருத்தி வச்சிருக்கே!

தம்பி! சும்மா,சும்மா நீ சொல்லீட்டே இருக்க. இந்தப்பயலுவ கேக்காம கள்ளுக்குடிக்க போய்ட்டே இருந்தானுகன்னா, அது செகுடன் காதுல சங்கு ஊதுறமாரி தான.

இந்தப்பய புள்ளைகளோட உசுரக் கொடுக்கதுக்கு,சட்டுபுட்டுன்னு போய் ஆக வேண்டிய வேலயப்பாருலே!

ஊர் : பாளையங்கோட்டை
மாவட்டம் : திருநெல்வேலி
Anonymous said…
ஏங்கண்ணுகளா,
அதான் ஊர்க்கவுண்டரவுங் சொல்றாங்கள்ள, கேட்டு நடந்தாத் தான கண்ணு ஆவும்.

பொசு, பொசுன்னு இப்புடி உக்காந்துட்டே இருந்தா எப்புடி?

திரும்பத்திரும்ப அவுங் சொல்றதுல என்ன தானுங் பெலன்.

ஒங்க சொல், பேச்சு கேக்குறேனு மளார்னு சொல்றாங்களா பாருங்க!

வாங்க, கவுண்டரே, இந்த ஆகாவழிகளுக்கு சொல்ற நேரத்துக்கு வேற வேல பாக்கலாங்.

ஊர் : கைகாட்டிப்புதூர்
மாவட்டம் : கோவை
selventhiran said…
வெங்கட்ராமன், இம்சை, ஆர்வக்கோளாறு வெயிலான், லக்கி லூக், சேவியர், ஜெஸிலா, தூயா, சிந்தாநதி, வசந்தகுமார், பாஸ்டன் பாலா, சீமாச்சு, சர்வேசன், பொன்வண்டு என ஆட்டம் களை கட்ட ஆரம்பித்துவிட்டது. இதை தவிர்த்து அஞ்சலட்டையில் சுமார் ஐநுறு பேர் எழுதியிருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்... பல பெரும்தலைகள் ரூம் போட்டு யோசிப்பதாகக் கேள்வி. ஒருவரே எத்தனை பின்னூட்டம் வேண்டுமானாலும் போட அனுமதியுங்கள் என அரண்மனை வைத்தியர் கேட்டுக்கொண்டதால்... அதற்கும் அனுமதிக்கிறது சமஸ்தானம்
டேய் இங்க என்ன இராமயணமா கேக்றோம்?

திருக்குறள் மாதிரி "நச்"சுன்னு முடிடா சீக்கிரம்.

திருவண்ணாமலை.
எல மக்கா சொல்றாந்தா ஒழுங்கா சொல்லுல.. இல்லைனா சொல்லாதல...

- ரசிகவ் ஞானியார்
(பாபாவை யாரு போட்டிக்குள்ள விட்டது? :D )

சரி, ஒரு கவிதை போடலாமுங்களா?

*

மௌனத்தில் விளங்காததா?
பெருமூச்சில் புரியாததா?
சொல்லாதே சொல்லைச்
சொல்லாதே என்று
மௌனத்தின் சுவாசத்தில்
ஊமையாய் ஒரு கதறல்

செல்லாத சொல்லை வைத்து
என்னதான் செய்ய?
ஆம் சிலசமயம்
செல்லிடத்துச் சொல் தீது

பெயர்: சேதுக்கரசி
ஊர்: கவிதைக் களம்
மாவட்டம்: பொல்லாத மௌனம்
selventhiran said…
வாங்க நிலவுநண்பன், ஒப்பாரி, சேதுக்கரசி. கவுஜல்லாம் போட்டு .... அழுகை, அழுகையா வருதுங்க...
Boston Bala said…
Be cool dude. Don't piss with your mouth. Nuff with bakwas. Whip the gangstas ass in his own sound bite... really man...Words rock Maaaan!

ஊர் : அமெரிக்கா
மாவட்டம் : ஏபிசிடி
வட்டாரம் : தேசி
Jazeela said…
சத்த வாய மூடுறேள்ளா? வாய தொறந்துடாதீங்கோ. கனவான் மாதிரி நடந்துக்கோங்கோ. மனுஷா சம்பாக்ஷ்ணையில் மத்தவாளுக்கு பிரயோஜனப்படுறா மாதிரி பேசணும் இல்லன்னா பேசப்பிடாது, சிக்கப்பிடாது. பக்கத்து ஆத்து மாமி காதுல விழுறாப்புல இப்படியா சத்தம் போடுவா? வெளியிலேயும் மானம் போறது வீட்டிலேயும் மரியாதை போறது. அவா அவா மரியாதையை அவா அவாதான் காப்பாத்திக்கணும். தூத்தம் தெளிச்சு மடி கழிச்சா போதாதென்றேன் - முதல்ல உங்க வாய நன்னா ஜலத்தை விட்டு அலம்புங்கோ.

இடம்: மயிலை
ஊர்: சிங்கார சென்னை
Jazeela said…
அத்தியாவிஷயமுள்ள காரியமானங்கில் மாத்ரம் சொன்னால் மதி அல்லங்கில் பரையேண்டா.

கிராம மாவட்டம்: பாலக்காடு
தொபார்! வள்ளுவரு ஒரு தபா சொன்னா நூறு தபா சொன்னாமேரி
இன்னா சொன்னாறுனு உங்கைல சொல்கிறேன் யாராண்டையு பேசிக்னுனா குஜலா பேசிக்கொ அல்லாகாடி வாய பொத்திகினு காம்முனு குந்திக்கொ.இன்னாபா கரிக்கிட்டா?.
ஊர்-மட்றாஸ்
வட்டம்-நம்ப கண்ணாடி சேகரு
மாவட்டம்-கொசுறு கோவாலு.
என்னையகண்டி கண்டுகாம போனியோ நா பேஜராபூடுவே!,நீ தாராந்துறுவே.!
ஒரு சொல்ல சொன்னால் அதில, பிரயோசனம் இருக்கவேணும். இல்லாட்டி பிறகு என்னத்துக்கு அந்த சொல்ல சொல்லுறியள், சொல்லாமல் விடுறது நல்லது.

மாவட்டம்;- யாழ்மாவட்டம்
Anonymous said…
Ethnologue என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவணம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.


ஆகா.. இன்னும் கொஞ்சம் நேரம் குடுங்கள் சார்... :)
Anonymous said…
என்னப்பு, சத்தத்தையே காணோம்?
ஆர்வக்கோளாறுன்னு வேற பட்டம் கொடுத்திட்டீங்க, அப்புறம் நானே கேக்காட்டி எப்புடி!
//கவுஜல்லாம் போட்டு .... அழுகை, அழுகையா வருதுங்க...//

ஓ ஆமால்ல.. நீங்க(ளும்) 'சாத்தான்குளத்தான்' என்பதை மறந்துட்டேன்! ;-)

Popular Posts