பதுங்குகுழி

பெருநகரில் இரைதேடும் எம்போன்ற எலிகளின் பதுங்குகுழிகளாக இருப்பது மேன்சன்கள்தான். ஊரைப்புறக்கணித்தவர்களும், ஊரால் புறக்கணிக்கப்பட்டவர்களும் கலந்துகட்டிய கலவையாக அனுமாஷ்ய இருண்மைகளையும், விசித்திர கொண்டாட்டங்களையும் உள்ளடக்கியது மேன்சன் வாழ்க்கை. நான் குடியிருந்த திருவேங்கடம் மேன்சன் நகரின் மையப்பகுதியில் இருந்தது. என்னைப்போன்ற ஊடக துறையை சேர்ந்தவர்கள் பெருவாரியாக குடியிருந்ததால் ‘மீடியா ஹோம்’ என்ற செல்லப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தது திருவேங்கடம் மேன்சன்.

அன்று வழக்கத்திற்கு மாறான பரபரப்பில் இருந்தது திருவேங்கடம் மேன்சன். காரணம் நிஜாம். ஏதையாவது தொலைத்து விடுவதும் பின் நண்பர்கள் குழாமோடு மேன்சனையே பீராய்வதும் அவனது வழக்கமான வேலைகளுள் ஒன்றாகிவிட்டது. அன்றைக்கு நிஜாம் தொலைத்தது தனது செல்ஃபோனை. மொத்தமிருக்கும் இருபது ரூம்களையும், நாற்பத்துமூன்று உயிரினங்களையும் துழாவினால்தான் அவனுக்கு திருப்தி. அவனது பொருள் காணாமல் போனால் அதை தேடிக் கொடுப்பதுதான் தமது கடமையென்று குர்-ஆன் மீது ஆணையிட்டிருப்பார்கள் போலும் அவனது நண்பர்கள், விசித்திரமான புலன் விசாரணைக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தது. நான் அவர்களைக் கடக்கையில் பாசில் சொன்னான் “சார் எங்கேயும் போயிடாதீங்க உங்க ரூமையும் செக் பண்ணனும்”. “என்னது என் ரூமையா... நான் இப்பதானய்யா உள்ளேயே வர்றேன். உங்களுக்கே இது அநியாயமா இல்லையா?” இது நான். என்ன சொல்லி என்ன பயன் அவர்களது விசாரணையின் சுவாரஸ்யமே அடுத்தவர் ரூமில் அதிரடியாக புகுந்து முடிந்தவரை இம்சையைக் கொடுப்பதுதானே. இன்றைக்கு மட்டும் பீரோவைத் திறந்து வெளுத்த துணிகளை எவனாவது கலைத்துப் போட்டானேயானால் அவன் மொகரையை பெயர்க்க வேண்டும் என மனதில் கருவிக்கொண்டே எனது அறையை திறந்துவைத்து அவர்களது வருகைக்கு காத்திருந்தேன்.

நிஜாம் பணக்கார வீட்டுப்பையன். படிப்பைத் தவிர மீத எல்லா விஷயங்களிலும் அலாதியான ஆர்வம் உடையவன். ஆனால், அவனை நகரின் உயர்ந்த கல்லூரியில் சேர்த்து படிக்கும்படி இம்சித்துக்கொண்டிருந்தார் அவனது தந்தை. நிஜாம் ஒரு தனிமனித அலட்சியத்தின் உச்சம். அவன் அறைக்கதவு பூட்டப்பட்டிருந்ததை கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கண்டதேயில்லை. ஆகஸ்டில் துவைத்து கொடியில் காயப்போட்ட பேண்ட் அக்டோபரில் தன் சொந்த நிறத்தை இழந்து பரிதாப நிலையை அடைந்த பின்னும் அதை எடுக்கமாட்டான். வாயைத் திறந்தால் ஆர்க்குட், என்90 சீரிஸ், ரவி.கே. சந்திரன், பார்முலா ஓன் போன்ற சமாச்சாரங்கள்தான். கல்லூரி விடுதியில் தொடர்ந்து பலமுறை பணங்களை தொலைத்து விட்டுதான் இந்த விடுதிக்கே வந்து சேர்ந்தான்.

நான் மனதார அவர்களை திட்டிக்கொண்டே உடைகளை கழற்றிவிட்டு கைலிக்குள் புகுந்து கொண்டேன். காலையில் படிக்காமல் விட்டுச் சென்ற பேப்பரை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு வந்தபோது நிஜாம் அன் கோ ஹாரிலாலின் அறைக்குள் நுழைய எத்தணித்துக்கொண்டிருந்தது. அறை வாசலில் இருந்த ஹாரிலால் பெருங்குரலெடுத்து அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ஹாரிலால்தான் இந்த திருவேங்கடம் மேன்சனின் மூத்த பிரஜை. சுமார் இருபதாண்டு காலமாக ஓரே அறையில் தங்கி இருப்பவர். முதுமை தன் முகவரிகளை எழுத ஆரம்பித்துவிட்ட ஐம்பதை நெருங்கிகொண்டு இருக்கும் சரீரம். ஒரு காலத்தில் சொந்தமாக தொழில் செய்து பெரும்பணக்காரராய் இருந்தவராம். வாலிப மிதப்பில் சொந்தங்களைப் புறக்கணித்துவிட்டு ஊதாரியாய் திரிந்ததில் இன்று தொழில், உறவுகள், வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டு அந்திமத்தை மேன்சனில் கழித்துக்கொண்டிருக்கிறார். நரைத்த சொற்ப முடிகளுக்கு டை அடிப்பதில் ஆரம்பித்து அரை டிராயர் அணிந்து கொண்டு இரவு சினிமாக்களுக்கு சென்று வருவதுவரை தன் வயதான தோற்றத்தை மறைக்க ஹாரிலால் படும்பாடு அலாதியானது.

ஹாரிலால் அடித்து விளையாடும் பிரத்யேக ஏரியா ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘அறிவுரை’. பாபுலால் இந்த பக்கம் வருகிறார் என்றால் நிஜாம்&கோ ஆளுக்கொறு திசையாக தெறித்து ஓடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். எதிர்படும் யாருக்கும் யோசனைகளையோ அறிவுறைகளையோ சொல்லத் தயங்காதவர். எதிராளி அதை ரசிக்கிறானா? காது கொடுத்து கேட்கிறானா என்று கவலைப்படுபவர் அல்ல அவர். காலையில் எழுந்தவுடன் ஜாக்கிங் போங்கள், ஹிந்து பேப்பர் படியுங்கள், கரஸ்பாண்டன்ஸில் ஏம்.பி.ஏ சேருங்கள், மணிப்ளஸ்ஸில் பணம் போடுங்கள், நாச்சிமுத்துக்கவுண்டர் பல்க்கில் பெட்ரோல் அடியுங்கள் என அவர் அள்ளித்தூவும் அறிவுரைகளுக்கு அளவில்லை.

ஊரின் நிணைவுகள் உறுத்தி உறக்கம் தொலைக்கும் பின்னிரவுகளில் கதவைத் திறந்து வராண்டா பக்கம் வந்தால் ஹாரிலால் பால்கனியோரம் நின்று புகைத்துக்கொண்டிருப்பது தெரியும். ஒரு துன்பியல் நாடகத்தின் முடிவுத்தருவாய்போல அனுமாஷ்ய விசித்திரமாய் இருக்கும் அவர் நிற்கும் காட்சி. அந்த தருணங்களில் அவரது பார்வையில் மாட்டிக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. பால்யத்தில் அவர் ஆடிய ஆட்டங்களையும், அந்திமத்தின் அவதியையும் கண்களில் ஈரம் ததும்ப லேசான சாராய மணம் கமழ சொல்ல ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கதற ஆரம்பித்துவிடுவார். அவரை சமாதானப்படுத்திவிட்டு தூங்க செல்கையில் ஏறக்குறைய விடிந்துவிடும்.

ஹாரிலாலிடம் இருக்கும் சர்ச்சைக்குறிய இன்னொரு விஷயம் மூத்திரக்குடி. மொரார்ஜி தேசாயின் நேரடி வாரிசு போல தனது மூத்திரத்தை தானே குடிப்பதுடன், பிறரையும் குடிக்க சொல்லி வற்புறுத்துவார். தமக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் அருமருந்து மூத்திரம் என்றும் அதைக் குடிப்பதில் தமக்கு எந்த சிறுமையும் இல்லை என்றும் மூத்திரவாடையடிக்கும் அவரது வாயால் சொல்லக் கேட்காதவர்கள் ராம்நகரில் குறைவு. அவர் வயதையொத்தவர்கள் அவரைப் பரிகசிக்க உபயோகிக்கும் வார்த்தை ‘நாறவாயன்’ என்பதுதான்.

இன்றைக்கு நிஜாமின் அழிச்சாட்டியத்திற்கு பலியாகப் போவது பெருசுதான் என நிணைத்துக்கொண்டு அவர்களது ரூமை அடைந்தபோது உரையாடல் தன் விளிம்புகளைத் தாண்டி சச்சரவு என்ற நிலையை அடைந்துவிட்டிருந்தது.

‘டேய் பெரிய மனுஷன், சின்ன மனுஷன் இல்லையாடா? உங்க தாத்தன் வயசு எனக்கு... என் ரூமை சோதனை போடனும்றீயே உனக்கு அறிவிருக்காடா?’ என்றார் ஹாரிலால் ஆத்திரமாக. ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது எனக்கு என்னோட மொபைல்தான் முக்கியம். விசாரணைன்னு வந்துட்டா பெரியவனாவது? சின்னவனாவது? மொதல்ல வழிய விடுங்க தேடனும்’ - இது நிஜாம். நிஜாமின் வார்த்தைகள் அவருக்குள் கடும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது என்பதை அவர் முகம் சிவப்பதிலிருந்து அறிய முடிந்தது.

‘தேவடியா மவனே, யார் ரூமை யாருடா சோதனை போடுறது?’

‘யாருடா தேவடியா மவன்? நீதாண்டா தேவடியா மவன் அநாதைப்பயலே?’

வார்த்தைகள் தடித்துவிட்ட ஆத்திரத்தில் ஹாரிலால் கைநீட்டிவிட.... நடைபெறும் கலவரத்தின் அபாயம் உணர்ந்தவர்களாய் அத்தனைபேரும் ஓடிவந்து திமிறும் இருவரையும் பிடித்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தராதரமின்றி வார்த்தைகளை உமிழ்ந்தனர். யார் என்ன சமாதானம் சொல்லியும் இருவரும் கேட்பதாயில்லை. நிஜாம் அவர்தான் திருடன் அவருடைய ரூமை சோதனையிட்டால் உண்மை வெளியாகும் என உரத்தக்குரலெடுத்து கத்திக்கொண்டிருந்தான். அவரது ரூமை சோதனையிட அனுமதிக்காவிட்டால் தான் போலீஸிற்கு போக இருப்பதாக அறிவித்தான். தான் உயிரோடு இருக்கும் வரை தன் ரூமிற்குள் நிஜாமை அனுமதிக்க முடியாது எனப் பிளிறிக்கொண்டிருந்தார் ஹாரிலால்.

ஹாரிலாலுக்கு வேண்டியவரும் அவருடைய ஆத்ம நண்பருமான எதிர்கடை அண்ணாச்சி இருவரையும் சமாதானம் செய்துவிட்டு, தாம் ஒரு பொது ஆளாக உள்ளே போய் சோதனை செய்வதாக சொன்ன யோசனையை அனைவரும் ஆமோதித்தனர் பாபுலாலைத் தவிர... ஹாரிலாலின் செய்கை விநோதமாகவும் அவர் திருடியிருப்பார் என்பது போலவும் யாவருக்கும் தோன்றியது. நிஜாம்கூட போகலாம் ஆனால் அண்ணாச்சியை அனுமதிக்க முடியாது என புலம்ப ஆரம்பித்தார் ஹாரிலால். ஆனால் அவரது வார்த்தைகளைக் கேட்க யாருமே தயாராக இல்லை. அனைவரும் அண்ணாச்சியை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பினார்கள். அவரது அறையைக் குடைந்துவிட்டு வெளியே வந்த அண்ணாச்சியின் முகம் இருண்டிருந்தது. உள்ளே மொபைல் எதுவுமில்லை. யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என சுரத்தில்லாத குரலில் சொல்லிவிட்டு ஹாரிலாலை ஏறிட்டும் பார்க்காமல் படியிறங்கி போய்விட்டார் அண்ணாச்சி. அனைவரும் கலைந்து அவரவர் ரூமிற்கு திரும்பினர்.

மறுநாள் காலை ஹாரிலாலின் அறைக்கதவுகள் அகலத் திறந்திருந்தன. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஹாரிலால் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு இரவே போய்விட்டார் என்பது தெரிந்தது. எதிர்கடை அண்ணாச்சி அவரது ரூமில் பார்த்தது காண்டம் என்றும், செக்ஸ் புத்தகங்களாய் இருக்கலாம் என்றும், அண்ணாச்சி மனைவியின் புகைப்படம் என்றும் ஊகங்கள் மேன்சன் முழுவதும் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. பாபுலால் அறையின் சுவர்களில் இருந்த காந்தியும், மொரார்ஜி தேசாயும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அறையெங்கும் மூத்திரவாடை நிரம்பியிருந்தது.

- செல்வேந்திரன்

Comments

அருமை. . . .
சரி என்னதான் இருக்கு முதல் பாராவை மட்டும் படித்துவிட்டு மீதியை பிறகு படிக்கலாம் என்று தான் ஆரம்பித்தேன். . .

சரி அப்படி என்னதான் பார்த்தார் அண்ணாச்சி அவர் ரூம்ல. . . .
selventhiran said…
வாங்க வெங்கட்ராமன். அவர் பார்த்தது என்ன என்று அண்ணாச்சியைக் கேட்காமல் என்னிடம் கேட்டால் எப்படி?
நல்ல நடை. வாழ்த்துக்கள்
Indian said…
Good one.

//வாங்க வெங்கட்ராமன். அவர் பார்த்தது என்ன என்று அண்ணாச்சியைக் கேட்காமல் என்னிடம் கேட்டால் எப்படி?//

This too!!

Mandai kaayuthu
Indian said…
Good one.

//வாங்க வெங்கட்ராமன். அவர் பார்த்தது என்ன என்று அண்ணாச்சியைக் கேட்காமல் என்னிடம் கேட்டால் எப்படி?//

This too!!

Mandai kaayuthu
selventhiran said…
Karthikeyan, Indian, Kishore thanks for coming...
செல்வேந்திரன், கதை நல்லாயிருக்கு.. விகடன்லேயேப் போட்டிருக்கலாமே...

நல்ல தரம்.., நிஜமாவே நடந்ததா?

எனக்கு மட்டும் சொல்லுங்க.. அண்ணாச்சி எனன பார்த்தார்?
அருமை!

முடிவின் முடிச்சை வாசகனின் பார்வைக்கே விட்டுவிடும் யுக்தியில் வெற்றிகண்டிருக்கிறீர்கள்.

நடை மிகவும் அருமை..

//ஹாரிலால் அடித்து விளையாடும் பிரத்யேக ஏரியா ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘அறிவுரை’. பாபுலால் இந்த பக்கம் வருகிறார் என்றால் நிஜாம்&கோ ஆளுக்கொறு திசையாக தெறித்து ஓடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.//

//ஹாரிலாலுக்கு வேண்டியவரும் அவருடைய ஆத்ம நண்பருமான எதிர்கடை அண்ணாச்சி இருவரையும் சமாதானம் செய்துவிட்டு, தாம் ஒரு பொது ஆளாக உள்ளே போய் சோதனை செய்வதாக சொன்ன யோசனையை அனைவரும் ஆமோதித்தனர் பாபுலாலைத் தவிர.//

இதில்தான் ஹாரிலால்,பாபுலால் ஒருவரா , இருவரா என்ற சின்ன சந்தேகம்.

மற்றபடி..சூப்பர்.!
Anonymous said…
கதை ரொம்ப நல்லாருக்கு.

இதே போல் ஒரு கதையை திண்ணையில் படித்த நினைவு.

அந்தக் கதையில் அறையின் உள்ளே ஒரு பெண்ணின் ஆவி இருப்பதாக இருக்கும்.
selventhiran said…
வாங்க சீமாச்சு, சுரேகா, வெயிலான்.

சுரேகா சூப்பராக கண்டுபிடித்தீர்கள். முதலில் கதையை எழுதிவிட்டு பின்பு பெயர்களை மாற்றுகையில் ஏற்பட்டுவிட்ட கவனக்குறைவு.

வெயிலான், என்ன கொடுமை இது? நீங்களுமா:)

Popular Posts