வசதியாக மறந்துவிட்டோம்..!

ஈரோட்டில் ஒரு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய கொஞ்சம் ஆட்கள் தேவைப்பட்டது. நண்பரிடம் கேட்டிருந்தேன். அதிகம் உடலுழைப்பு தேவைப்பட்ட அந்த வேலைக்கு மூன்று சிறுவர்களை அனுப்பி வைத்தார் அவர். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் அவர்கள் மூவருமே வார இறுதிகளில் ஏதாவது பகுதி நேர வேலைகளை செய்பவர்களாம். அவர்களுள் ஒருவன் முன்னனி நாளிதழில் ஒன்றில் பார்சல்கள் கட்டும் பணி செய்து வருகிறானாம். தினமும் இரவு எட்டு மணிக்கு பார்சல்களை கட்ட ஆரம்பித்து, வேனில் ஏற்றி ஊர், ஊராக கட்டுகளை இறக்கி விட்டுத் திரும்பும் கடும் உழைப்பு தேவைப்படும் வேலை. வீட்டுக்கு காலை 6:30 மணிக்குதான் திரும்பமுடியும். இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி விட்டு பள்ளிக்கு சென்று வருகிறான் அந்த மாணவன்.

" வெறும் இரண்டு மணி நேரம் மட்டும்தான் உறங்குகிறாயா?" அதிர்ச்சி மேலிட அவனிடம் கேட்டேன். 'அதுவும் சில நாட்கள்தான் வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன்கள் வேலைக்கு கிளம்ப தயாராகும் களேபரத்தில் தன்னால் உறங்கவே முடியாது. பள்ளிக்கூடத்தில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் சாப்பிட போவார்கள். நான் வகுப்பறையிலேயே உறங்கி விடுவேன்' என்றான். ' அது சரி கிடைக்கும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலாவது உறங்கி ஓய்வெடுக்கலாமே?' என்றேன். 'ஒரு நாள் உறங்கிட்டாலும் காலேஜூக்கு பீஸூ சேர்க்க முடியாது சார். என் குடும்பத்தில நான் ஒருத்தனாவது படிக்கட்டும்னு எங்க அம்மா, அப்பா, அண்ணன்மாரெல்லாம் உழைக்கும்போது தூங்க மனசில்ல சார்' என பதில் வந்தது. எனக்கு கண்ணீர் வந்து விட்டது. அவனை ஒரு ஓரமா படுத்து உறங்க சொன்னேன். முடியவே முடியாது என மறுத்துவிட்டு பேனர்களை கட்ட போய்விட்டான். இறைவா! இவன் ஒரு நாள் நிச்சயம் இந்த உலகை வெல்ல வேண்டும். நான் பிரார்த்திக்க தொடங்கினேன்.

சாமான்யர்கள் அணுக முடியாத அளவிற்கு கல்வி வியாபாரமாகி விட்டது என்ற கூக்குரல்கள் எல்லா மட்டங்களிலும் ஓங்கி ஓலித்துக்கொண்டிருக்கும் காலமிது. அறிக்கைப் போர்கள் நடக்கின்றன. போராட்டம் நடத்துகிறார்கள். கவர்ஸ்டோரி ஆகிறார்கள். ஆனால், கவனிப்பார் இல்லை. தென்மாவட்டங்களில், சனி, ஞாயிறுகளில் கட்டிட வேலை பார்த்துக்கொண்டு, அரசு மாணவர் விடுதியில் தங்கி தங்களது கல்வியைத் தொடரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த அச்சிறுவர்கள் தங்களது இரண்டு நாள் உழைப்பைக் கொண்டு வாரத்தின் ஏழு நாட்களையும் ஓட்டி வருகிறார்கள். பிச்சை புகாமல் உழைத்து கற்கும் இவர்களுக்கு உதவ துப்பு இல்லாத இந்த அரசாங்கம்தான் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம்! குழந்தைகள் வருமானம் நாட்டின் அவமானம் என தொடர் முழக்கமிட்டு வருகிறது.

இன்றோடு கும்பகோணம் தீ விபத்து நடந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. நம்மைப் போன்ற சாமான்யர்கள் அன்றாட கவலைகளில் ஆழ்ந்து விட்டோம். அரசாங்கம், ஊடகங்கள் உட்பட நாம் எல்லாருமே மறந்துவிட்ட அந்த கொடிய துயரத்தின் தீர்க்கப்படாத கேள்விகளுக்கு இன்னும் விடைதான் கிடைத்தபாடில்லை. இன்றும் சிக்னலில் நிற்காமல் சீறிப்பாயும் ஸ்கூல் வேன்களையும், பத்திருபது குழந்தைகளைத் திணித்துக்கொண்டு செல்லும் ஆட்டோக்களையும் பார்க்கும்போது மனம் பதறாமலில்லை. நாளை என் குழந்தைக்கும் கல்வி கல்லில் நார் உரிக்கும் கடினமானதாகத்தான் இருக்குமா?

Comments

படிக்கவே கஷ்டமா இருக்குது செல்வேந்திரன்!

கல்விக்கட்டணங்கள் உயர்வைப் பார்த்தால் கல்வி என்பதே சாமானியனுக்கு எட்டாக்கனியாகி விடுமே என்று கவலையாக இருக்கிறது.

அப்படியும் படிச்சாகணும் என்ற ஆர்வத்தில் இப்படி லீவு நாளிலும் உறங்காம, ஓய்வெடுக்காம வேலை செஞ்சி (கவனிக்க: அவன் படிக்க அவன் குடும்பமே உழைக்குது அவனையும் சேர்த்து).. .ச்சே! என்ன உலகமடா இது!
Anonymous said…
காமாராஜர், எம்.ஜி.ஆர் போன்ற கல்வி குறித்து கவலைப்பட்ட தலைவர்களைக்குப் பின் வந்தவர்களின் கவலை வேறு மாதிரி இருந்ததுதான். கல்வி இந்தளவுக்கு சீரழிய காரணம்
selventhiran said…
வருகைக்கு நன்றி சிபி சார்
Anonymous said…
படிக்கும் போதே ரொம்ப வருத்தப்பட வைத்தது செல்வேந்திரன்.

கூடிய சீக்கிரத்தில் படிப்பு என்பதே பணக்காரர்களிற்குத்தான் என்று ஆகி விடுமோ என்று பயமாய் இருக்கிறது.
செல்வேந்திரன்,
மனதைக் கனக்க வைத்த பதிவு. இலவசத் தொலைக்காட்சி போன்ற விளம்பர அரசியலை விடுத்து அப் பணத்தை இந்தச் சிறுவர்களின் கல்வி/வாழ்வு மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். சிறுவர்களுக்கு வாக்குப் போடும் உரிமை இருந்தால் சில வேளைகளில் செய்வார்களோ என்னவோ! (-:
உண்மை செல்வேந்திரன்

இன்றைய தினம் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் ஒரு புனித பிம்பத்தை உருவாக்கி கொள்ள முயற்சி செய்கிறார்களே தவிர உண்மையாக உழைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை.

கர்ம வீரர் காமராஜரை பதவியில் இருந்து இருந்து இறக்கிய இவர்களா மக்களுக்கு நல்ல கல்வியை தரப் போகிறார்க்கள்.
selventhiran said…
நந்தா, கதிர்வேலன், வெங்கட்ராமன், வெற்றி தங்கள் வருகைக்கு நன்றி.

டிவி கொடுத்தா கேபிள் கனெக்ஷன் கொடுத்து கல்லா கட்டலாம். படிக்க வச்சுட்டா கேள்வி கேட்பாங்களேன்ற பயம்தான்.
Anonymous said…
என்ன சார், இப்படிக் கேட்டுட்டீங்க.. கூடிய சீக்கிரம் நாம வல்லரசாகப் போறோமே! அப்ப இதெல்லாம் சரி ஆகிடுமாமே! - கலாம் ஐயா சொல்லிருக்காரு
Jazeela said…
அரசினர் மேல்நிலை பள்ளிகளில் / அரசு கல்லூரிகளில் படித்தால் கட்டணம் எதுவுமே தேவையில்லையே? ஆமா, இப்பலாம் அந்த இலவச சத்துணவெல்லாம் இல்லையா? அந்த பசங்க எந்த பள்ளியில் படிக்கிறார்கள்?
selventhiran said…
வாங்க ஜெஸிலா எல்லாருக்குமா அரசுகல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. தவிரவும் விரும்பும் படிப்பு எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே படிக்க முடியும். சத்துணவுத்திட்டம் எல்லாம் மூன்று வேளை முட்டையுடன் அமோகமாகத்தான் இருக்கிறது ஆனால் ஒரு லாங் சைஸ் நோட்டு முப்பது ரூபாய்க்கு விற்கும் தேசத்தில் ஏழைகள் என்னதான் செய்வார்கள்..?!
ஆம் நீங்கள் சொல்வது போல் வசதியாக மறந்து விட்டோம் தான்!

ஸ்கூல் பஸ் , ஆட்டோவுக்கு ஏதும் நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும், இருக்கிற நேரத்தில் அறிக்கை விடுவார்களா இல்லை இதை எல்லாம் கவனிப்பார்களா?
Anonymous said…
கொடுமை :(

Popular Posts